லாக் டௌன்



தீக்கங்குகளை தண்ணீர் ஊற்றி அணைத்தாள் கெங்கம்மா. தினமும் மாலை நேரத்து வழக்கம்தான். ஆனால், சமீபமாக பெரும் சுணக்கமாக இருந்தது.

திருமணமாகி 20 ஆண்டுகளுக்கு முன் ஆந்திராவில் இருந்து வந்தவள். தன் தாய்வீடு தெலுங்கானாவாகிப் போன பின்னும் போய் பார்க்கவில்லை.
இந்த அடுக்குமாடி குடியிருப்பே கதி என்று கிடக்கிறாள்.கணவன் இந்த குடியிருப்பின் வாட்ச் மேன். சொற்ப சம்பளம். ஆனால், அடுக்குமாடிக் குடியிருப்பின் பின்னால் இருந்த மோட்டார் ரூமில் தங்கிக் கொள்ள அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. எனவே இங்கேதான் வாசம்.

பிள்ளைகள் வளர வளர வருமானம் போதாமையால் தன் குடும்பத் தொழிலான இஸ்திரி போடும் தொழிலைச் செய்ய ஆரம்பித்தாள் கெங்கம்மா.
சிறிய குறுக்குத்தெருவான அந்தத் தெருவில் அவள் வசிக்கும் குடியிருப்பு, பக்கத்து அக்கத்து குடியிருப்பு என அவர்களுக்கு இஸ்திரி போடவே நேரம் சரியாக இருக்கும் அவளுக்கு.

இஸ்திரிக்கு துணி கொடுப்பது, வாங்குவது, நல்ல நாட்களில் ஏதேனும் காசு, பொருள் தருவது, எதிரில் பார்த்தால் சிறு புன்னகை, சிறு நலம் விசாரித்தல் என அவள் குடும்பத்தை அளவுடனேயே வைத்திருந்தனர் அந்தக் குடியிருப்புவாசிகள்.அடுக்குமாடியின் முன்பக்க ப்ளாட்ஃபார்மில் இஸ்திரி போடும் அவளைத் தாண்டி யாரும் வரமுடியாது. எனவே, குறைந்த செலவில் நிறைந்த பாதுகாப்பு என்றளவில் அவர்கள் அங்கே தேவையாக இருந்தார்கள்.

பன்னிரெண்டாவது படிக்கும் நாகேஸ்வரம்மா, ஆறாவது படிக்கும் ஷ்ராவனி என இரு மகள்களும் கூட பள்ளி நேரம் போக அம்மாவுக்குத் துணையாக இருக்கிறார்கள். எதிரில் இருந்த ப்ளாட் இடித்து புதிதாகக் கட்ட ஆரம்பிக்கும் போது, தினமும் ‘துணிகளில் தூசி படிகிறது’ என கெங்கம்மா திட்டிக் கொண்டே இருப்பாள்.

ஒருநாள் முதன் முதலில் திக்கித் திணறும் தமிழில் ஏதோ கேட்ட அந்த பீகாரியை அடித்து விரட்டாத குறையாகத் துரத்தி விட்டாள். அப்புறம்தான் அவன் தண்ணீர் கேட்டது புரிந்தது. அதன்பிறகு பாவப்பட்டு எப்போதாவது அவர்களுக்குத் தேவையான சிறுசிறு உதவிகள் செய்வாள். அவர்களும் இவளைப் பார்த்தால் வாஞ்சையோடு புன்னகைப்பார்கள்.

இரவில் கடைக்கு எங்காவது போய் வரும் போது பார்ப்பாள். கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் அந்தக் கட்டடத்தில் அமர்ந்து சிறிய வெளிச்சத்தில் அவர்கள் சமைத்துக்கொண்டோ, சாப்பிட்டுக்கொண்டோ இருப்பார்கள்.இதோ, நான்கு மாதங்கள் ஆகின்றன, அவர்கள் சமைப்பதைக் கைவிட்டு. இவளும் இஸ்திரி தொழிலை ஏரக்கட்டி விட்டாள். கொரோனாவும் அதனால் போடப்பட்ட லாக் டௌனும் எல்லாருடைய வாழ்வையும் தலைகீழாக மாற்றிக் கொண்டிருக்கின்றன.

பள்ளி, கல்லூரி, அலுவலகம் என இல்லாததால் யாரும் அயர்னிங்குக்கு துணி கொடுப்பதில்லை என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்.
இவளைப் பார்த்தாலே, எங்கே கொரோனா வந்துவிடுமோ என்ற பயத்தில் அனைத்து அடுக்குமாடிக் குடியிருப்பின் கதவுகளும் சாத்தப்படு கின்றன என்பதுதான் முக்கியக் காரணம்.

இதோ அவளும் தெருவுக்கு வந்துவிட்டாள். ஆம். வேறென்ன செய்ய. வேலை எதுவும் இல்லை. பிள்ளைகள் வீட்டில் இருப்பதால் கூடமாட உதவி என வீட்டு வேலைகளும் சீக்கிரம் முடிந்துவிடும். அதன்பிறகு வேறு வழி இல்லாமல் அனைவரும் மாலை ஆறேழு மணிக்கு குடியிருப்புக்கு வெளியில் வந்து உட்கார்ந்தால் உள்ளே போக மணி ஒன்பதாகி விடும். குடியிருப்புவாசிகள் யாரும் அந்நேரத்திற்கு வெளியில் வராததால் இவர்களை எதுவும் கேட்பதில்லை.

இந்த நான்கு மாதங்களாகத்தான் அந்த வடமாநிலத்தொழிலாளர்களுடன் பழக ஆரம்பித்தார்கள் கெங்கம்மா குடும்பத்தினர். இப்போதெல்லாம் அந்த வடமாநிலத்தவர்கள் தினமும் அடுப்பு பற்ற வைப்பதில்லை. எப்போதேனும் யாராவது இலவச அரிசி, பருப்பு கொடுக்கும்போது மட்டும் அடுப்பெரியும்.
வேலை இல்லாத காரணத்தால், பெரும்பாலும் எங்கேயோ, வெளியில் யாராவது தரும் இலவச உணவுப் பொட்டலங்களோடு அவர்கள் திரும்பிக் கொண்டிருந்தார்கள். அல்லது அம்மா உணவகத்தில் இருந்து உணவு வாங்கிக்கொண்டோ, சென்று சாப்பிட்டோ வர ஆரம்பித்தார்கள்.

அதிலும் கொஞ்ச பங்கை அவர்களோடு ஒட்டி இருந்த நாய்க்குட்டி ஒன்றுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். மூன்று வேளை, இரண்டு வேளை என அவர்களின் சாப்பாட்டு வேளை குறைந்து வந்தது.இவளுக்கும் சரியான வருமானமில்லைதான். இதற்குமுன் தன் கடும் உழைப்பால் மகள்களை ராஜாத்தி போல் வைத்திருந்தவள் இப்போது கணவனின் சொற்ப சம்பளத்திலும் ரேசன் பொருட்களிலும் காலத்தை ஓட்டி வருகிறாள்.

ஆனாலும் அவள் செய்யும் வெஞ்சனத்தில் ஏதேனும் கொஞ்சத்தை தன் மகள்களிடம் அந்த வடமாநிலத்தவர்க்காக கொடுத்து அனுப்புவாள். முதலில் வாங்க மறுத்த அவர்கள் கெங்கம்மாவின் அன்பினாலும், வாங்கிக் கொள்ளும்படி வற்புறுத்தும் இச்சிறு பெண்களின் வெள்ளந்தி தனத்திற்காகவும் பெற்றுக்கொண்டார்கள்.

அப்போதுதான் அவர்கள் குழந்தைத்தனமான தமிழில் தமது வாழ்வைப் பற்றி இவர்களோடு பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தார்கள்.
கட்டின புது மனைவியை விட்டு வந்த ஒருவர், நோயாளி மனைவி, சிறு பிள்ளைகளை விட்டு வந்த ஒருவர், வயதான தாய் தகப்பனை விட்டு வந்த ஒருவர் என ஒவ்வொருவருக்கும் ஒரு துயரக் கதை இருந்தது. காசுக்காக உறவுகளை எங்கேயோ விட்டுவிட்டு வந்து வெறும் செல்
போனில் குடும்பம் நடத்தும் இவர்கள் வாழ்வை என்னவென்று சொல்வது?

இவர்களின் ஒரே ஆறுதல், எவ்வளவோ கவலைகள் இருந்தாலும் அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு சுறுசுறுப்பாகவும், கலகலப்பாகவும் இருந்த
அவ்விளைஞனை எல்லாருக்கும் பிடித்திருந்தது. எல்லாருக்கும் செல்லப்பிள்ளை அவன். செல்லில் அவர்கள் மொழிப் பாடலை வைத்துக்கொண்டு கூடவே பாடிக்கொண்டு எல்லாரையும் குஷிப்படுத்துவான். எல்லா வேலைகளையும் எடுத்துப்போட்டு செய்வான்.

வெள்ளையாய் பிறந்திருப்பான் போல... மாநிறத்தில் இருப்பான். ஒரு மாதிரி உடைந்த முகம் அவனுக்கு. அதாவது கடினமான சதையோடு கூடிய சுமாரான முகம். ஆனால், அவன் சிரிக்கும் போது எல்லாரையும் கவர்ந்துவிடக்கூடிய வசீகரிப்பு அந்தப் புன்னகையில் இருந்தது. அந்த இளைஞனோடு கள்ளங்கபடமின்றி பேசி சிரித்துக்கொண்டிருக்கும் தன் மகளைக் கண்டிக்கும் துணிவு கெங்கம்மாவிற்கு வரவில்லை. ‘அதுகளும் நம்மைப்போல் இல்லாதப்பட்டதுகள்... என்ன செய்ய... ஏதோ பேசி மகிழ்ந்து கிடக்கட்டும்’ என விட்டுவிடுவாள்.

சமீப நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக தன் மகள் அவன் வசம் தன் மனதை இழக்கிறாள் என்பது தெரிய வரும் போது எவ்வாறு தடுப்பது என கெங்கம்மாவிற்கு புரிபடவில்லை. அவனும்தான் இவளைக் கண்டால் முகம் மலர்ந்து போகிறான். நான்கு மாதங்களுக்குள்ளா… என ஆச்சரியமெல்லாம்
அவளுக்குத் தோன்றவில்லை. காதல் கணத்திலும் ஏற்படக்கூடிய ஒன்றுதானே என்பதை அறிந்த கெங்கம்மா பெரிய சித்தாந்தவாதியுமல்ல, முட்டாளுமில்லை, சாதாரண மனுஷி. அன்பின் உணர்வுகளைப் புரிந்த மிகச் சாதாரணமான ஒரு ஜீவன்.

கெங்கம்மா குழப்பத்தில் இருக்கும் வேளையில்தான், நாளாக நாளாக அந்த வடமாநிலத்தவர்கள் முகங்களில் இருந்த புன்னகை குறைய ஆரம்பித்ததை கவனிக்க ஆரம்பித்தாள். ஆட்களும் சரியான உணவில்லாமல் இளைக்க ஆரம்பித்திருந்தனர். முன்பெல்லாம் எப்போதாவது செல் பேசுபவர்கள் இப்போது எந்நேரமும் எதோ சீரியஸாக பேசிக்கொண்டிருந்தார்கள்.

ஊருக்குப் போவதைக் குறித்து அவர்கள் பேசுகிறார்கள் என்பது மட்டும் புரிந்தது. தன் வாழ்வில் மட்டுமல்ல, அவர்களின் வாழ்விலும் மாற்றங்கள் ஏற்படுவதைப் புரிந்துகொள்ள முடிந்த அவளால் ஏற்றுக்கொள்ளத்தான் முடியவில்லை.அன்று ரேசன் அரிசியில் மாவரைத்து உப்புக்கொழுக்கட்டை செய்தவள் தன் மகளை அனுப்பாமல் தானே அவர்களுக்குக் கொடுக்க எடுத்துச் சென்றாள்.

நாகேஸ்வரம்மாவின் முகம் சற்று வாடியதைப் பார்த்ததும், தான் செய்வது சரியா தவறா என்பது கெங்கம்மாவிற்கு யோசனையாக இருந்தது. ஆனால், பின்னாளில் ஏற்படும் மாற்றங்களை தன் மகள் தாங்க நேருமா என்பதால், சட்டென அவ்விடத்தை விட்டு விரைந்து அவர்களிடம் சென்றாள்.

அவள் நினைத்தது நடந்தே விட்டது. அவர்கள் ஊர் செல்ல மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டிருந்தார்கள். என்ன பெரிதாக இருக்கிறது கட்டுவதற்கு என்றாலும் ஏதோ இருப்பவற்றைக் கட்டி எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்கள்.

“எப்போது?” என்றவளுக்கு “காலையில...” என்ற அவர்களின் பதில் சற்றே திகிலாக இருந்தது. இந்த பதிலை அவர்கள் சொல்லும்போது அவ்விளைஞன் இவளை சோகத்தோடு பார்த்ததை இவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

முதன் முதலாக அவன் முகத்தில் தெரிந்த சோகமும் கண்ணில் தேங்கி நின்ற கண்ணீரும் இவளை என்னவோ செய்தது. அவர்களோடு நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தாள். கடைசியாக அவன் தம்வசம் இருந்த நாயை கெங்கம்மாவிடம் பார்த்துக்கொள்ளச் சொல்லி ஒப்படைத்தான்.

வீட்டுக்கு விரைந்து சென்றவள் அழுது அழுது தூங்கியிருந்த மகளின் முகம் பார்த்தபடி சுவர் ஓரம் அமர்ந்துகொண்டாள். காலையில் இவளை எழுப்பி எவ்வாறு இந்த விஷயத்தைத் தெரிவிப்பது... இந்தத் துயரை தன் மகள் எப்படி தாங்கிக் கொள்ளப்போகிறாள்... என்று நினைத்தபடி மனதை அழுத்தும் பாரத்தோடு எழுந்து அந்த நாய்க்குட்டிக்கு பால் எடுத்துவர உள்ளே சென்றாள்.

கவிதாயினி டிசைனர்!

நீரஜா கோனா, டோலிவுட்டின் செம பிஸி காஸ்ட்யூம் அண்ட் ஸ்டைலிஸ்ட் டிசைனர். சமந்தாவிலிருந்து ரகுல் ப்ரீத் சிங் வரை பல டாப் ஹீரோயின்களின் தோஸ்த் லேடி. இப்போது ஆங்கிலத்தில் ‘வேவ்ஸ், சேண்ட் & மேஜிக்’ என்ற பெயரில் தனது கவிதைகளை விஷுவலான புத்தகமாகக் கொண்டு வந்திருக்கிறார். நீரஜாவின் கவிதைகளைப் படித்த லாவண்யா திரிபாதி (‘மாயவன்’ ஹீரோயின்) ‘‘நீரஜா, உன்னுடைய சமையல்கலை பத்தி யும் புக்ஸ் கொண்டுவா’’ என வாழ்த்தியிருக்கிறார் ஹேப்பியாக!

டுவிட்டரில் வேலைவாய்ப்பு

‘தேவி’ பட வில்லன் சோனு சூட்டிலிருந்து பல பாலிவுட் நடிகர்களின் சமூகப் பொறுப்பும், சேவையும் ஹாலிவுட் வரை புருவம் உயர்த்த வைத்துள்ளது. அதில் லேட்டஸ்ட், கியரா அத்வானி. ‘‘வாழ்வாதாரம் சிறப்பா இருக்கணும்னா வேலை ரொம்ப முக்கியம். உங்க யாருக்கேனும் வேலை தேவையா? உங்க விபரங்களை எனக்கு டுவிட்டர்ல கமெண்ட் பண்ணுங்க. அதைப்போல, ஆட்கள் தேவையுள்ள நிறுவனமும் உங்க டீட்டெயில்களை என் பதிவில் ஷேர் பண்ணுங்க...’’ என பெருந்தன்மையுடன் டுவிட்டி இருக்கிறார் கியரா அத்வானி. ராகவா லாரன்ஸ் இந்தியில் இயக்கிய ‘லட்சுமி பாம்’ படத்தின் ஹீரோயின் இவர்.

காஜல் ஏரியா!

சூர்யாவின் பர்த்டே போஸ்டர்களை அவரது திரையுலக நட்புவட்டங்கள் டுவிட்டரில் தெறிக்கவிட்டதைப் போல, சமீபத்தில் காஜல் அகர்வாலின் பிறந்தநாளும் கொண்டாடப்பட்டிருக்கிறது. காஜலின் சக ஹீரோயின்கள் பலரும் அவரது பர்த்டே போஸ்டரை தங்கள் டுவிட்டர் பக்கங்களில் ஷேர் செய்திருந்தனர். இதில் ஆச்சரியம், ‘சவுத் சூப்பர் ஸ்டார் காஜல்’ என்று காஜலைப் புகழ்ந்து தள்ளியதுதான். நீங்களாகவே எல்லாரும் பேசி முடிவுக்கு வந்திட்டீங்க போல என கலகலக்கிறது கோலிவுட்டின் நம்பர் ஒன் ஏரியா!
ஸ்ரீதேவி மோகன்