தல! sixers story -11



விக்கெட் கீப்பர் ஆனார் கோல் கீப்பர்!

அப்பாவுக்கு கிரிக்கெட் பிடிக்காது என்பது மட்டுமல்ல. சுட்டி தோனிக்கும் அப்போதெல்லாம் பிடித்த விளையாட்டு கால்பந்துதான்.கால்பந்திலும் கோல் போஸ்ட்டை காவல் காப்பதே அவருக்குப் பிடித்த வேலை.ஒருவேளை கேஷப் ரஞ்சன் பானர்ஜி அவர் வாழ்வில் குறுக்கிடாமல் இருந்திருந்தால் இன்று விக்கெட் கீப்பராக இல்லாமல், பிரபலமான கோல் கீப்பராக இருந்திருப்பார்.
ராஞ்சி டிஏவி ஷ்யாமளி பள்ளியில் கேஷப் ரஞ்சன் பானர்ஜிதான் PT மாஸ்டர்.

மைதானத்தில் பள்ளி கால்பந்து அணிக்காக தோனி பயிற்சியில் ஈடுப்பட்டிருந்ததைப் பார்த்தார் பானர்ஜி.அப்போது பள்ளியின் கிரிக்கெட் அணிக்கு ஒரு நல்ல விக்கெட் கீப்பர் தேவைப்பட்டார்.கோல் கீப்பரை விக்கெட் கீப்பர் ஆக்கினால் என்னவென்று அவரது விளையாட்டு மூளை விளையாட்டுத்தனமாக யோசித்தது.“கிரிக்கெட் ஆடுகிறாயா?” பானர்ஜி கேட்டார்.

“ஏன் சார்? நான் சரியாக கால்பந்து ஆடவில்லையா?”

“ரொம்ப சிறப்பாக ஆடுகிறாய். அதைவிட சிறப்பாக உன்னால் கிரிக்கெட் ஆடமுடியுமென நினைக்கிறேன்…”
தோனியால் உடனே ‘யெஸ்’ சொல்ல முடியவில்லை.“கிரிக்கெட் மட்டையை எப்படிப் பிடிப்பது என்றுகூட எனக்குத் தெரியாதே..?”
“பிரச்னையில்லை. இங்கே கிளவுஸ் அணிந்துகொண்டு வலைக்குள் பந்து விழாமல் காக்கிறாய் அல்லவா? அங்கேயும் உனக்கு அதே வேலைதான். கிளவுஸ் போட்டுக் கொண்டு மூன்று குச்சிகளுக்குப் பின்னால் நிற்க வேண்டும்…”தோனி தயங்கி நின்றார்.

அந்தத் தயக்கத்தையே சம்மதமாக எடுத்துக் கொண்டார் பானர்ஜி.தன்னுடைய நண்பர் சன்சால் பட்டாச்சார்யாவிடம் தோனியைப் பற்றிச் சொன்னார்.பட்டாச்சார்யா, அடிப்படையில் பத்திரிகையாளர்.‘ராஞ்சி எக்ஸ்பிரஸ்’ என்கிற உள்ளூர் பத்திரிகையில் வேலை பார்த்து வந்தார். எனினும் அவருக்கு கிரிக்கெட்டில்தான் ஆர்வம். பாட்டியாலா நகரில் இருக்கும் தேசிய விளையாட்டு அகாடமியில் பயிற்சியாளராகவும் பணியாற்றி வந்தார்.
டிஏவி பள்ளிகளின் கிழக்கு மண்டலங்களில் தகுதியான மாணவர்களைக் கண்டறிந்து பயிற்சியளித்து கிரிக்கெட் வீரர்களாக உருவாக்குவதே அவரது பணி.

பட்டாச்சார்யாவின் முயற்சியால் தோனிக்கு விக்கெட் கீப்பிங் பயிற்சி வழங்கப்பட்டது.1994ல் முதல் போட்டி. ராஞ்சி மாவட்டப் பள்ளிகளுக்கு இடையேயான டோர்னமெண்ட்.இதுபோன்ற பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகளிலும் விக்கெட் கீப்பரைத் தாண்டி பந்து ஓடி பவுண்டரியை தஞ்சமடைந்து ஏராளமான எக்ஸ்ட்ரா ரன்களை எதிரணிகளுக்கு அள்ளித் தரும்.

தோனி முதன்முதலாக விக்கெட் கீப்பிங் செய்த அந்தப் போட்டியில் ‘பைஸ்’ முறையில் எக்ஸ்ட்ராவாக போன ரன்கள் வெறும் நான்கு மட்டுமே.
தோனியின் அணி வென்றது.அவருடைய விக்கெட் கீப்பிங் திறமை பரவலாகப் பேசப்பட்டது. தொடர்ந்து ‘கமாண்டோ லெவன்’ என்கிற உள்ளூர் கிரிக்கெட் அணிக்கு விளையாட தேர்வானார்.

பள்ளி அணியில் அவர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். எனினும் ‘கமாண்டோ லெவன்’ பங்கேற்ற போட்டிகளில் வால் வீரராகவே கடைசியில் பேட்டிங் செய்ய அழைக்கப்பட்டார்.அப்போதெல்லாம் விக்கெட் கீப்பரை பொதுவாக பேட்ஸ்மேனாகக் கருதமாட்டார்கள் என்பதுதான் காரணம். இருப்பினும் தனக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொள்ள தோனி தவறவே இல்லை.வால் வீரர்களைப் பொறுத்தவரை பெரிய ஷாட்டுகள் ஆட மாட்டார்கள். விக்கெட்டைத் தக்கவைத்து அணி ‘ஆல் அவுட்’ ஆகாமல் இருப்பதற்காகவே முயற்சிப்பார்கள்.

பந்தை லேசாகத் தட்டிவிட்டு, சிங்கிள் எடுத்து எதிரில் நிற்கும் பேட்ஸ்மேன் ரன் குவிக்க வகை செய்வார்கள்.தோனியைப் பொறுத்தவரை ‘லொட்டு’ வைத்து ஆடுவது ஆகவே ஆகாது. மொத்தமாகவே ஏழு ரன்கள் அடித்தாலும், அதில் ஒரு சிக்ஸராவது இருப்பதைப் போல பார்த்துக் கொள்வார்.
இதுமாதிரி டோர்னமெண்டுகளில் அதிரடி சிக்ஸர்கள் விளாசி, உள்ளூரில் பிரபலமாகிக் கொண்டிருந்தார்.

அப்பா பான்சிங்குக்கோ கிரிக்கெட்டெல்லாம் தேவையில்லாத ஆணியென்று தோன்றியது. பேட்டும், கிளவுஸுமாக தோனியைப் பார்த்தாலே அவருக்கு கோபம் எட்டிப் பார்க்கும்.“இந்தச் சமயத்தில் ஏதாவது படிக்கலாமே? பரீட்சைக்குத் தயார் ஆகலாமே?” என்று கேட்பார்.கல்வி மட்டுமே தன் குழந்தைகளைக் கரை சேர்க்கும் என்று உறுதியாக நம்பிய எண்பதுகளின் சராசரி தகப்பன் அவர்.அப்பாவின் எதிர்பார்ப்பை தோனி புரிந்து கொண்டார்.

அந்த வயதிலேயே கிரிக்கெட்டையும், படிப்பையும் தனித்தனி டிபார்ட்மெண்டாகப் பிரித்து வைத்துக் கொண்டார்.போட்டிக்குக் கிளம்பும்போது பல நேரங்களில் வீரர்களை அழைத்துச் செல்லும் பஸ், தோனிக்காக அவரது பள்ளி வாசலில் காத்திருக்கும்.படிப்பு முடிந்தபிறகே கிரிக்கெட் என்பதில் உறுதியாக இருந்தார். கிரிக்கெட் களத்தில் படிப்பு உள்ளிட்ட மற்ற விஷயங்களை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார். எந்த சமயத்தில் எதை ‘ஃபோக்கஸ்’ செய்ய வேண்டும் என்கிற தெளிவு அவருக்கு இருந்தது.

பின்னாளில் டி20, ஒன் டே கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட் என்று கிரிக்கெட்டின் மூன்று வகைப் போட்டிகளிலும் இந்தியாவை நெம்பர் ஒன்னாக அவர் வழிநடத்தியதற்கு இந்தத் தெளிவும் ஒரு காரணம்.அளந்து அளந்துதான் பேசுவார். ‘மகிக்கு பேச்சே வராதே’ என்று கூட விளையாடும் மாணவர்கள் கிண்டலடிப்பார்கள்.ஆயினும் தோனி ஒரு வார்த்தை பேசினாலும் அது திருவார்த்தையாக இருக்கும்.

ஒரு விக்கெட் கீப்பராக எதிரணி பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவரின் பலம், பலவீனத்தை மிகவும் உன்னிப்பாகக் கவனிப்பார்.அவர் கொடுக்கும் டிப்ஸ்களின் மூலமாக பவுலர்களால் சுலபமாக விக்கெட்டுகளை அள்ள முடியும்.டீன் ஏஜ் சமயத்தில் தோனியின் கூச்ச சுபாவம், அவருடைய சகவயதுத் தோழர்களிடம் கொஞ்சம் இடைவெளியை ஏற்படுத்தியது என்றும் சொல்லலாம்.

எல்லோரும் சைட் அடிக்கச் செல்லும்போது இவர் மட்டும் மைதானத்தில் மாங்கு மாங்குவென்று ஓடிக் கொண்டிருப்பார்.‘டேய் சாமியார்’ என்றுகூட அவரை கலாய்ப்பார்கள். ஆனால், தோனிக்கும் பெண்களை சைட் அடிக்கப் பிடிக்கும். அவரும் எல்லோரையும் போல டீன் ஏஜ் இளைஞர்தானே?குறிப்பாக குட்டைமுடிப் பெண்களென்றால் சட்டென்று அம்பு மாதிரி பார்வையை வீசி சைலண்டாக சைட் அடிப்பார்.பெண்களிடம் பேசக்கூட அச்சம்.

நண்பர்கள் தோனியின் மறைமுக சைட் அடிக்கும் ஆசையைப் புரிந்து கொண்டு, தங்கள் தோழிகளை அவருக்கு அறிமுகப்படுத்துவார்கள்.
அவர்களிடம் அதிகபட்சம் ஓரிரு வார்த்தைகளில் பேச்சை முடித்துக் கொள்வார். ‘சாப்பிட்டீங்களா?’, ‘நல்லாருக்கீங்களா?’ அவ்வளவுதான்!இப்படிப்பட்டவர் அந்த நாட்களில் ராஞ்சியின் இளம்பெண்கள் மத்தியில் ஃபேமஸாகத்தான் இருந்தார்.
காரணம், மைதானத்தை விட்டு பறக்கும் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் சிக்ஸர்கள்!

(அடித்து ஆடுவோம்)  

யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்