அமீரக தாய்!



‘‘நாங்க ஒரு பத்து பேர் இருக்கோம்... எங்களைக் கூட்டிட்டு வந்த ஏஜென்ட் எங்களை ஏமாற்றிவிட்டு போயிட்டாரு... எங்களுக்கு ஏதாவது ஒரு வழி செய்ய முடியுமா?’’‘‘நானும் என் மகளும் துபாய்க்கு வந்தபிறகு வேலை இழப்பு ஏற்பட்டதால் திரும்பிச் செல்ல முடியாத சூழலில் இருக்கிறோம்...
எங்களுக்காக ஏதேனும் உதவ முடியுமா?’’ ‘‘நானும் என் கணவரும் பணிபுரிந்தோம்... என் கணவர் தாயகம் சென்று விட்டார்... நான் தனியாக இருக்கிறேன்... எனக்கும் வேலை இல்லை... ஏதேனும் ஒரு வகையில் எனக்கு உதவ இயலுமா..? நான் தங்கியிருந்த இடத்திலிருந்து என்னை மாறச் சொல்லி விட்டார்கள்...’’ இப்படி தினமும் 10 முதல் 20 அழைப்புகள் அவருக்கு வந்துகொண்டே இருக்கின்றன.  

எதையும் புறக்கணிக்காமல் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பதிலும் ஆறுதலும்  சொல்லி அவர்களுக்கு என்ன தேவை என்பதைப் புரிந்துகொண்டு அந்தத் தேவைகளுக்கு தன்னால் ஏதேனும் செய்ய முடியுமா என யோசிக்கிறார்... தன்னால் முடியாத பட்சத்தில் அதைச் செய்யக்கூடியவர்கள் எவரேனும் இருப்பார்களா எனக் கண்டறிந்து அவர்கள் மூலமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முயல்கிறார்...இவற்றை எல்லாம் செய்பவர் ஏதேனும் உயர் பொறுப்பில் இருப்பார்என்றுதானே நினைக்கிறீர்கள்..?

இல்லை. நேரம் காலம் பார்க்காமல் வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலும் ஆறுதலும் சொல்லி, வேண்டிய உதவிகளைச் செய்பவர் ஒரு குடும்பத் தலைவி!  வளைகுடா வாழ்வு என்பது ஒரு தனிமைச்சிறை! பணி சார்ந்த நெருக்கடிகள், குடும்பத்தின் பொருளாதார நெருக்கடிகளுக்கிடையில் அதை நோக்கி ஒரு தொடர் ஓட்டத்தில் இளைப்பாறுவதே பெரும்பாடு. கிடைக்கும் வார விடுமுறை நாட்களில் கூட மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர், நண்பர்களுடன் நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் வீடியோ கால்களில் பேசி ஆசுவாசப்படுவதே இயலும்.

இதில் மற்றவர்களின் கவலையைக் காது கொடுத்துக் கேட்பதற்கோ, பகிர்ந்து கொள்வதற்கோ மனமும், நேரமும் இல்லாத நிலையே எதார்த்தம்.இந்நிலையில் அறிமுகமில்லாதவர்களின் அழைப்பை ஏற்று அவர்களுக்கான உதவியைக் கேட்டறிந்து, அதற்காக தன் நேரத்தையும், உடலுழைப்பையும் கொடுத்து; சமூக அமைப்புகள், சமுதாயப் பெருந்தனக்காரர்கள், வணிக நிறுவனங்களுடன் இணைந்து கடந்து ஐந்து ஆண்டுகளாக தொடர்ச்சியாக சமூக சேவை புரிகிறார் அமீரகத்தில் வசிக்கும் ஜாஸ்மின். இவர் மதுரையைச் சார்ந்தவர்.

நம் சமூகத்தின் பாரவையில் ஆண் / பெண் பாலின பாகுபாடு பல மட்டங்களில் வெளிப்படையாகத் தொடர்ந்தாலும், சமூகப் பணிகளில் தன்னை இணைத்துக் கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை மிகச் சொற்பமே, அதிலும் கூட இஸ்லாமிய சமூகத்தில் இன்னும் பெண்களுக்கான பாகுபாடுகள் முழுமையாக மறையாவிட்டாலும், தம்முடைய சமூகச் செயல்பாடு களை எந்தவித வெளிச்சமும் இல்லாமல் அமைதியாகவும் நேர்மையாகவும் தொடர்ந்து கொண்டே, தாம் வளைகுடாவில் வசித்தாலும், விடுமுறைக்காகத் தாயகம் வருகின்ற போதும் தாம் இருக்கும் இடத்தில் தம்மை நோக்கி வருகின்ற உதவிகளை புவி எல்லைகளைக் கருத்தில் கொள்ளாமல் முடிந்தவரை நிறைவேற்றி வருகிறார் ஜாஸ்மின்.

GREENGLOBE என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பை நிறுவி, தனது சமுதாயப் பணியை அமீரகத்தில் மிகச்சிறப்பான முறையில் செய்து வருகிறார்.
அமீரகப் பெண்கள் மற்றும் சமுதாய அமைப்புகளோடு சேர்ந்து மார்பகப்  புற்றுநோய், மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும்; அமீரகத்தில்  வீட்டில் வேலை செய்யும் பெண்களுக்குப் பல்வேறு உதவிகளையும், ஆலோசனைகளையும்  வழங்கி வருவதுடன், புனித ரமலான் நோன்பு மாதத்தில் அமீரகத்தில் தொழிலாளர்கள்  பகுதியில் உள்ள தொழிலாளர்கள் விடுதியில் நேரடியாக உணவுகளை வழங்கி வருகிறது இந்த  ‘க்ரீன்க்ளோப்’ அமைப்பு.

தவிர மாணவர்களின் விழிப்புணர்வுக்காக அமீரகத்தின் பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து, அமீரகப் பொதுத் துறைகளுடன் இணைந்து சுற்றுப்புறத் தூய்மைப் பணிகளையும், தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் மதுவிலிருந்து விடுபட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் வருடந்தோறும் நடத்தி வருகிறார் ஜாஸ்மின்.

இந்தக் கொரோனா தொற்றுநோய் காலத்திலும் சமூக இடைவெளியை ஏற்படுத்தி அமீரகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் பல்வேறு மக்களுக்கு உணவு,  தேவையான சமையல்பொருட்கள், சமையல் செய்யத் தேவைப்படும் சமையல் வாயு உருளைகள், கிருமிநாசினி பொருட்கள், சில தொழிலாளர்களுக்குத் தங்குமிடம் + தேவையான பண உதவி மற்றும் அவர்களின் அலுவலகத்தில் ஏற்படும் விசா மற்றும் வழிமுறைகளை அமீரகத்தின் சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் ஆலோசனைகளைப் பெற்று சரிசெய்வது... என ஜாஸ்மினின் பணிகள் தொடர்கின்றன.

குறிப்பாக, வேலை இழந்தவர்களுக்கு  வேலை வாய்ப்பையும் அவர்கள் தாயகத்துக்குச் செல்வதற்கு விமானப் பயணச்சீட்டும் எடுத்துக் கொடுக்கிறார்.
‘‘கொரோனா ஆரம்பித்த பிறகு என்னால் 5 மணி நேரம் மட்டுமே உறங்க முடிகிறது. எப்படியோ என் தொலைபேசி எண் யாருக்காவது யார் மூலமாகவாவது தெரியவந்து அவர்கள் என் மூலமாக அவர்களது இன்னல்கள் தீர்ந்துவிடாதா என்ற ஏக்கத்தோடும் பரிதவிப்போடும் என்னைத் தொடர்பு கொள்கின்றனர்.

எனது தூக்கத்தை விடவும் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதே முக்கியமாக இருக்கிறது...’’ அமைதியாக அதேநேரம் அழுத்தமாகச் சொல்கிறார் ஜாஸ்மின்.தன்னலம் கருதாது அடுத்தவர்கள் துயர் துடைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் இவரைப் போன்ற நல்ல உள்ளங்கள் போற்றப்பட வேண்டுமென்பதே இங்குள்ள அமீரகத் தமிழர்களின் எண்ணம்.

துபாயிலிருந்து பிலால் அலியார் / ஆசிப் மீரான்