தேசிய கல்விக் கொள்கை வடவர் ஆதிக்கத்தின் புது வடிவம்!



தமிழகத்தில் வடவர் ஆதிக்கம் என்ற சொல்லாக்கம் உருவானதும், திராவிட நாடு கோரிக்கை எழுந்ததும் பள்ளிக்கல்வி சார்ந்த பிரச்னையால்தான்.
1937ம் ஆண்டு இரட்டையாட்சி முறையில் மெட்ராஸ் பிரெசிடென்சி பகுதியில் பதவியேற்ற ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி பள்ளிக்கல்வியில் இந்தியை கட்டாய பாடமாக புகுத்திய போதுதான் தமிழகம் கிளர்ந்து எழுந்தது.

ஆத்திகர், நாத்திகர், சைவர், வைணவர் எல்லாம் பெரியார் தலைமையில் இந்தி மொழித் திணிப்பை எதிர்க்கத் திரண்டனர். அடுத்த சில ஆண்டுகளில் இந்த ஆதிக்க எதிர்ப்பு உணர்வு திராவிட நாடு கோரிக்கையாக திட வடிவம் பெற்றது. அதுவே திராவிட அரசியல் என்ற பெயரில் நிலை பெற்றது.
அந்த அரசியலின் இலட்சியம் இறையாண்மை, தனி நாடு என்பதைவிட தன்னாட்சி, சுயாட்சி என்பதே பொருத்தமாக இருக்கும்.

அதாவது தமிழகம் தனது கலாசார வித்தியாசத்தை காத்துக்கொள்ளும் உரிமைப் போர். அதனால்தான் மத்திய அரசின் கலாசார தனித்துவத்திற்கு எதிரான செயல்களை வடவர் ஆதிக்கம் என்று குறிப்பிட நேர்கிறது.

இந்த வரலாற்றின் வெளிச்சத்தில் நாம் எழுப்ப வேண்டிய முதல் கேள்வி ஏன் “தேசிய கல்விக் கொள்கை” என்ற ஒன்று தேவைப்படுகிறது என்பதுதான்.
இந்தியா அளப்பரிய பன்மைத்துவம் கொண்ட பரந்து விரிந்த நாடு. ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள் தொகையும், உலகின் பல தேசங்களின் மக்கள் தொகையைக் கொண்டவை.

இந்த மாநிலங்கள் தனித்துவமான கலாசாரமும், நீண்ட நெடுங்கால வரலாற்றுப் பின்புலமும், அவற்றை வெளிப்படுத்தும் தொன்மையான மொழிகளும் கொண்டவை. அதனால்தான் அரசியல் நிர்ணய சட்டத்தில் கல்வி, மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பொருட்களின் பட்டியலில் இடம்பெற்றது. அந்தந்த மாநிலங்களின் கலாசாரம், வரலாற்றிற்கு ஏற்ப, சமூகவியல் தேவைகளுக்கு ஏற்ப மாநிலங்களே கல்வி முறைகளைத் தீர்மானித்துக்
கொள்ளட்டும் என்பதுதான் முதிர்ச்சியான அணுகுமுறை.

மாநிலங்களின் தனித்துவத்தை அங்கீகரிக்க மறுத்து இந்தியா முழுமையும் ஒற்றை கலாசாரமாக உருவகிக்கும் சிந்தனை, இந்தியா ஒரு வலுவான கூட்டாட்சியாக உருவாக விடாமல் தடுக்கும் பிற்போக்குச் சிந்தனை எனலாம். அப்படி ஒரு செயலை தேசபக்தி என்ற செயலால் இந்துத்துவர்கள் செய்கின்றனர். இது இந்திய கூட்டாட்சியின் ஒற்றுமையைக் குலைக்கக்கூடிய செயல் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை.

அப்படி என்ன பிரச்னை இந்த புதிய தேசிய கல்விக்கொள்கையில் என்று கேட்கத் தோன்றும். அதில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அவற்றில்
தலையான, தீவிர பிரச்னை என்பது பள்ளிகளில் மூன்று மொழிகள் கற்பிக்கப் படவேண்டும் என்று கூறும் மும்மொழிக் கொள்கைதான்.
இருமொழிக் கொள்கை என்றால் என்ன?

பள்ளிக் கல்வி என்பது வீட்டில் பேசும் மொழி அல்லது தாய்மொழியில் அமைய வேண்டும் என்பதில் இன்று கல்வியாளர்களிடையே மிகுந்த கருத்தொப்புமை இருக்கிறது. ஆனால் கல்லூரிப் படிப்பு, உயர்படிப்பு, நுண்திறன்களுக்கான படிப்பு ஆகியவற்றை ஆங்கிலத்தில் மேற்கொள்வதுதான் சாத்தியமாகவும், பயனுள்ளதாகவும் இருக்கிறது.

காரணங்கள் இரண்டு. ஒன்று, சர்வதேச வர்த்தகம், தொழில், அறிவுலக பரிவர்த்தனை ஆகியவற்றில் ஆங்கிலம் வகிக்கும் பங்கு. இரண்டு, ஆங்கிலத்திலே சேகரிக்கப்பட்டுள்ள உலகளாவிய அறிவும், தகவல்களும். இதனால் அத்தகைய மேற்படிப்பு முயற்சிகளுக்கு மாணவர்களைத் தயார் செய்ய பள்ளி
யிலேயே ஆங்கில வழிக் கல்வியை, அதாவது அனைத்துப் பாடங்களையும் ஆங்கிலத்தில் பயில்வதை பெற்றோர் விரும்புகின்ற நிலை எண்பதுகளுக்குப் பிறகு தமிழகத்தில் பள்ளிக்கல்வியில் தனியார் பங்கேற்பு மிகுந்த பிறகு துவங்கியது.

இங்கிலீஷ் மீடியம் எனப்படும் ஆங்கில மொழியில் பாடங்களைப் படித்தாலும் தமிழை ஒரு மொழிப்பாடமாகப் படிப்பதும், தமிழ் மீடியம் எனப்படும் தமிழ் மொழியில் பாடங்களைப் படித்தாலும் ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாகப் படிப்பதும் இன்றியமையாதவை. ஒன்று தாய்மொழி, மற்றொன்று தொடர்பு மொழி. இதுதான் இருமொழிக் கொள்கை. இந்திய அரசின் அலுவல் மொழியும், மும்மொழிக் கொள்கையும்இந்திய நடுவண் அரசு இந்தியாவிற்குள் இந்தியை அலுவல் மொழியாகவும், தொடர்பு மொழியாகவும் மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தை தொடக்கம் முதலே கொண்டுள்ளது.

அரசியல் நிர்ணய சட்டம் உருவானபோது, வடநாட்டு அரசியல்வாதிகள் ஆங்கிலம் அலுவல் மொழியாக நீடிக்கக் கூடாது, அது காலனியாதிக்கத்தின் அடையாளம், இந்திதான் நம் தேசத்தின் அடையாளம் என வாதிட்டனர். தென்னிந்தியாவிலிருந்து, குறிப்பாக தமிழகத்திலிருந்து சென்றவர்கள் அதற்கு ஒப்பவில்லை. சமரசத் தீர்வாக பதினைந்து ஆண்டுகள் ஆங்கிலம் அரசின் அலுவல் மொழியாக நீடிக்கும்; அதன் பின் இந்தி ஆங்கிலத்தின் இடத்தில் அலுவல் மொழியாக மாறும் என்று கூறப்பட்டது.  

தமிழகத்தில் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டுமே தொடர்ந்து இந்தி மட்டுமே அலுவல் மொழியாக, இந்தியாவிற்குள் தொடர்பு மொழியாக மாறுவதை எதிர்த்தனர். உலக அளவில் தொடர்பு மொழியாக விளங்கும் ஆங்கிலமே இந்திய அளவிலும் தொடர்பு மொழியாக விளங்குவது பொருத்தம் என்றும், பள்ளி மாணவர்கள் தாய்மொழி தவிர இரண்டு தொடர்பு மொழிகளைக் கற்பது தேவையற்ற கல்விச்சுமை என்றும் வலியுறுத்தினார்கள்.

இன்றைய பாரதீய ஜனதா கட்சியின் அன்றைய வடிவமான ஜனசங்கம் ஆங்கிலம் அலுவல் மொழியாக இருப்பதை கடுமையாக எதிர்த்தது.
நேரு, அனைத்து மாநிலங்கள் ஏற்கும் வரை ஆங்கிலம் அரசின் அலுவல் மொழியாக தொடரும் என்று உறுதிமொழி அளித்தார். அப்படி தொடர வகை செய்யும் சட்ட சீர்திருத்தமும் நிறைவேற்றப்பட்டது.

நேரு 1964ம் ஆண்டு இறந்தபிறகு, பதினைந்து ஆண்டு கெடு 1965ம் ஆண்டு முடிந்தபோது, இந்தி மட்டுமே ஆட்சிமொழியாக மாறிவிடும் என்ற அச்சம் பரவியது. தமிழகத்தில் மாணவர் போராட்டமும், வெகுஜனக் கிளர்ச்சியும் வெடித்தன. பல தியாகிகள் தங்களையே தமிழுக்காக எரித்துக் கொண்டனர்.
அரசின் கணக்குப்படி 36 பேர் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியானார்கள். உள்ளபடி ஏராளமானோர் உயிரிழந்தனர்.

ஆங்கிலத்தை அகற்றிவிட்டு இந்தியை மட்டும் ஆட்சிமொழி யாக்குவது சாத்தியமில்லை என்பதை நடுவண் அரசு உணர்ந்தது. அடுத்து நடந்த 1967 பொதுத்தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அதன் பிறகும் மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

அந்தச் சூழலில்தான் முதல்வர் அண்ணா விசேஷ சட்டமன்ற தொடரைக் கூட்டினார். அந்தத் தொடரில் தமிழக பள்ளிகளில் இருமொழித் திட்டமே கடைப்பிடிக்கப்படும்; தாய்மொழி தமிழ், தொடர்பு மொழி ஆங்கிலம் மட்டுமே பயிற்றுவிக்கப்படும் என்று சட்டமன்றம் தீர்மானம் இயற்றியது. அதன்பிறகே போராட்டங்கள் ஓய்ந்தன.

இந்த வரலாற்றிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், மத்திய அரசின் அலுவல் மொழியாக, தொடர்பு மொழியாக இந்தியுடன் சேர்ந்து ஆங்கிலமும் நீடிப்பதற்கும், தமிழக அரசின் இருமொழிக் கொள்கைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதுதான். இப்போது ஆட்சி மொழியாக இந்தியை தமிழகத்தை ஏற்கச்செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே பள்ளிக் கல்வியில் மும்மொழித் திட்டம் மீண்டும் முன்வைக்கப்படுகிறது.

முதலில் மூன்றாவது மொழியாக இந்தியைப் பயிலவேண்டும் என்று கூறப்பட்டது. பலத்த எதிர்ப்பிற்குப் பிறகு மூன்றாவது மொழியாக ஏதோவொரு இந்திய மொழியைப் பயிலவேண்டும் என்று கூறப்படுகிறது. நலிவடைந்த பிரிவுகளிலிருந்து வரும் குழந்தைகள் தமிழ் மற்றும் ஆங்கிலம் பயில்வதையே கடினமாக உணரும்போது, மூன்றாவது மொழி என்று கூடுதல் சுமை ஏற்றுவது சமூக நீதியாகாது.

மேட்டுக்குடியினருக்கு அடித்தள மக்களின், நலிவுற்ற மக்களின், ஏழைகளின் வாழ்வியலும், சவால்களும் புரிவதில்லை என்பதற்கு சிறந்த உதாரணம்தான் தேசிய கல்விக் கொள்கையின் மும்மொழிக் கொள்கை எனலாம். இதை மேலும் துல்லியமாக உணர்த்துவது பள்ளியில் சமஸ்கிருதம் பயிற்றுவிக்கும் விருப்பம். சமஸ்கிருதம் இந்தியாவின் செம்மொழிகளில் ஒன்று என்பதிலும், அதை தொடர்ந்து விருப்பமுள்ள சிலர் பயில்வதும் அந்த மொழியின் இலக்கிய சிந்தனை வளங்களை ஆராய்வதும் அவசியம்தான்.

அதற்கான உயர்கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்களை உருவாக்குவது, அவற்றில் பயில, ஆய்வு மேற்கொள்ள ஊக்கத்தொகை மற்றும் ஊதியம் வழங்குவது போன்றவற்றை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமே தவிர பள்ளிகளில் சமஸ்கிருதம் போதிப்பது என்பது காலத்திற்குப் பொருந்தாத, மாணவர்களை இடர்களுக்கு ஆளாக்கும் முயற்சி என்பதை அரசு உணரவேண்டும்.

கடந்த ஐம்பதாண்டு களில் தமிழகம் இருமொழிக் கொள்கையைக் கடைப்பிடித்ததால் எந்த இழப்பையும் நம் மாநிலமோ, இந்திய நாடோ சந்திக்கவில்லை. தேவையில்லாமல் அதை மாற்றியமைப்பது வடவர் ஆதிக்க நோக்கே தவிர வேறல்ல. கல்வி என்பது முற்றிலும் மாநிலங்களின் கட்டுப்பாட்டிலே இருப்பதே பயனுள்ளது என்பதையே தமிழக உதாரணம் உணர்த்துகிறது.    

ராஜன் குறை