24 மணி நேரத்தில் 9.5 கோடிப் பேர் பார்த்த படம்!



தோனியாக நடித்து கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். அவரது தற்கொலை பெரும் அதிர்வை உண்டாக்கியது.

இந்நிலையில் அவர் நடித்த கடைசிப்படமான ‘தில் பேச்சாரா’ ஹாட் ஸ்டாரில் ரிலீசாகி கலக்கிக் கொண்டிருக்கிறது. இலவசமாக யார் வேண்டுமானாலும் பார்க்கலாம்.கடந்த நவம்பர் மாதமே ரிலீசாக வேண்டிய படம் இது. ரீலிசாகாமல் மே மாதத்துக்குத் தள்ளிப்போனது. தியேட்டர் மூடிக்கிடப்பதால் மீண்டும் தள்ளிப்போனது. அதற்குள் துரதிர்ஷ்டவசமாக சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டார்.

அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவே இப்படம் OTTயில் ரிலீசாகியுள்ளது. படம் வெளியாகிய 24 மணி நேரத்தில் 9.5 கோடிப்பேர் பார்த்திருப்பது புது சாதனை.இன்னும் சில மாதங்களில் இறந்துபோகும் நிலையில் உள்ள ஆணும் பெண்ணும் சந்தித்துக்கொண்டால்... அவர்களுக்குள் காதல் மலர்ந்தால்... அதுதான் ‘தில் பேச்சாரா’.

தைராய்டு புற்றுநோயால் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இருக்கிறாள் கிஸி. ஆக்சிஜன் சிலிண்டர் உதவியில்லாமல் அவளால் சுவாசிப்பது சிரமம். அதனால் எங்கே போனாலும் அதையும் தூக்கிக்கொண்டு போக வேண்டிய நிலை. எலும்பு புற்றுநோயால் ஒரு காலை இழந்த பிறகும் கூட ஜாலியாக இருப்பவன் இம்மானுவேல் ராஜ்குமார் ஜூனியர் என்கிற மேனி.

ரஜினி வெறியனான மேனியின் வாழ்க்கையும் கடைசிகட்டத்தில் தான் இருக்கிறது. சாவை எதிர்நோக்கி காத்திருக்கும் கிஸியும் மேனியும் சந்திக்கிறார்கள். ஆரம்பத்தில் மேனியை கிஸிக்குப் பிடிக்கவில்லை. ஆனால், தன்னைப்போலவே நோயினால் கஷ்டப்பட்டாலும் எதையும் வெளிக்காட்டாமல் இருக்கும் மேனி மீது கிஸிக்கு மெல்ல மெல்ல இனம்புரியாத ஈர்ப்பு ஏற்பட்டு அது காதலாக மலர்கிறது.

மேனிக்கு ரஜினியைப் போல் கிஸிக்கு அபிமன்யூ வீர் என்ற இசையமைப்பாளரின் பாடல்கள் என்றால் உயிர். அவரது ஒரு பாடல் முழுமை பெறாமல் பாதியில் நின்றுவிடுகிறது. அபிமன்யூவைச் சந்தித்து ‘‘ஏன் அந்தப் பாடலை அப்படியே பாதியில் விட்டுவிட்டீர்கள்...?’’ என்று கேட்க வேண்டும் என்பதே கிஸியின் வாழ்நாள் ஆசை. ஆனால், அவர் இருப்பதோ பாரிஸில்.

இதற்கிடையில் கிஸியின் உடல்நிலை மோசமடைகிறது. தவிர, மேனியின் நண்பன் ஜேபி இயக்கும் படத்தில் இருவரும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
குளூகோமாவால் ஒரு கண்ணை இழந்த ஜேபி இன்னொரு கண்ணையும் இழக்கிறார். நண்பர்களின் உதவியுடன் தொடர்ந்து படத்தை இயக்குகிறார்.
கிஸியின் ஆசையை மேனி நிறைவேற்றினானா? கிஸி - மேனி காதல் என்னவானது? ஜேபி இயக்கிய படம் முடிவுபெற்று வெளியானாதா..? இதையெல்லாம் நெகிழ்ச்சி ததும்ப படமாக்கியிருக்கிறார் இயக்குநர் முகேஷ் சாப்ரா.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, அழகான காதல், சுவாரஸ்யமான திரைக்கதையைத் தாண்டி சுஷாந்த் சிங்கே படம் முழுவதும் தெரிகிறார்.
இப்போது அவர் நம்முடன் இல்லாமல் இருப்பது கூட அதற்கு காரணமாக இருக்கலாம்.

தொகுப்பு: த.சக்திவேல்