OH MY கடவுளே



முக்கியமான திருமண விஷயத்தில் தவறு செய்துவிட்டதாகக் கருதும் அசோக் செல்வனுக்கு ‘கடவுள்’ மறுவாய்ப்பு வழங்கி மாற்றத்தை ஏற்படுத்துவதே ‘Oh My கடவுளே’.அசோக்செல்வன், ரித்திகா, ஷாரா மூவரும் நெருங்கிய நண்பர்கள். ஒரு நாள் பேச்சு வாக்கில் ‘என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா’ என ரித்திகா கேட்க, அசோக்கும் சரி என்று சொல்கிறார். ஆனால், நண்பர்களாகப் பழகியதால் அதை ரொமான்ஸாக மாற்ற முடியாமல் தவிக்கிறார் அசோக். இத்தகைய நிலையை ரித்திகாவும் ஏற்றுக்கொண்டு காத்திருக்கிறார்.

இடையில் பழைய சீனியர் வாணி போஜன் சந்திப்பு நடக்க அசோக் கொஞ்சம் சலனமடைகிறார். விளைவாக சந்தேகம், பிரச்னை, சண்டைகள் எழ விவாகரத்துக்கு கோர்ட்டுக்கு போகிறார்கள். அசோக்கிற்கு ஒரு மறு வாய்ப்பை கடவுள்(!) தர அதை அவர் எப்படி பயன்படுத்துகிறார் என்பதே மீதிக் கதை.எதையோ தேடும்போது எதேச்சையாக குடும்ப ஆல்பம் கண்ணில் படும். ‘அட’ என எல்லாவற்றையும் மறந்துவிட்டு நிம்மதியாக அதைப் புரட்டிப் பார்க்க கலவையாக உணர்வுகள் கலந்துகட்டி வருமே… அப்படி ஒரு படம். அசால்ட்டான ஒன் லைனர்கள், வித்தியாசமான கடவுளர்கள் வருகை… இன்றைய நட்பை, காதலைக் காட்டிய விதத்தில் கவனமாக பளீச் டிக் அடிக்கிறார் அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து.

கதை மாந்தர்களின் குணாதிசயங்கள் எல்லாமே இயல்பு. தாம்பத்தியத்தை இரண்டாம் பட்சமாக்கி நட்பை முதல் இடத்துக்கு அழைத்து வந்து சிரமப்படுபவராக அசோக் சிறப்பு. நண்பனாக ஷாரா சரியாகப் பொருந்துகிறார்.‘இறுதிச் சுற்றி'ல் பிரமாதமாக வெளிப்பட்ட ரித்திகா, இதில் முதல் சுற்றிலேயே ஜெயித்திருக்கிறார். முடியை அடிக்கடி கோதிக்கொண்டு வருகிற அந்த ‘நூடுல்ஸ் மண்டை’யை படம் முழுவதும் ரசிக்க முடிகிறது.

வாணி போஜன் அருமையான அறிமுகம். ஸ்லீவ்லெஸ் புடவையில் தேவதையாக வசீகரம். எம்.எஸ்.பாஸ்கர், கஜராஜ், சந்தோஷ் பிரதாப் போன்றவர்களை ப்ராப்பர்ட்டி மாதிரி ஆக்கிவிடாமல் சரியாகப் பயன்படுத்தியிருப்பது பெரிய ரிலாக்ஸ்.ஆச்சரிய என்ட்ரி விஜய் சேதுபதி. கூடவே ரமேஷ் திலக். கடவுளாக கொஞ்ச நேரமே வந்தாலும் திருப்பத்தையும் சுவாரசியத்தையும் தந்து ‘நான் ரொம்ப ஸ்பெஷலாக்கும்’ என முரசறைகிறார் சேதுபதி.

வாணியின் சாதாரண நெருக்கத்துக்கு ரித்திகா சந்தேகப்படுவது நம்பகமாக இல்லை. சேர்ந்து படித்த ரித்திகா - ஷாரா இருவருக்கும் வாணி மட்டும் ஞாபகத்துக்கு வராமல் போவது ஏன்?விது அய்யண்ணாவின் கேமிராவில் மொத்த கேன்வாஸும் அழகு. லியோன் ஜேம்ஸ் நல்லிசை பாடல்களில் தெரிகிறது. ‘துறுதுறுவென ஒரு காதல் படத்தை குடும்பத்தோடு பார்க்க வேண்டும்’ என்று குரல் எழுப்பிய வர்க்கத்தை குறி வைத்திருக்கிறார்கள்.வைத்த குறி தப்பவில்லை. இந்தக் கடவுள் இனிக்கிறார்.

குங்குமம் விமர்சனக் குழு