நான் சிரித்தால்
பிரச்னையான நேரங்களிலும் சிரித்துவிடும் நோய்கொண்ட நாயகன், காதலியிடமும் வில்லனிடமும் படும் பாடுகளே ‘நான் சிரித்தால்’. ஐடியில் வேலை பார்க்கும் ஆதிக்கு வேலை போய்விட பல பிரச்னைகள், சிக்கல்களில் அவர் சிக்கிக் கொள்ள மன அழுத்தத்தில் துக்கப் படுவதற்கு பதிலாக சிரித்துவிடும் மனப்பாங்கில் ஆழ்ந்துவிடுகிறார்.
இப்படி ஒரு நோய் இருக்கிறதென தெரியாத அல்லது உணர முடியாத கே.எஸ்.ரவிக்குமார் அவரைத் தொலைத்துக்கட்ட தீர்மானிக்கிறார். அதற்கான முன் முயற்சிகளில் அவர் தீவிரமாக ஈடுபட, கொலை முயற்சிகளிலிருந்து ஆதி தப்பித்தாரா என்பதே கதை. எப்படியும் எல்லாவற்றையும் மீறி ஐஸ்வர்யா மேனனை ஆதி கரம்பிடித்துவிடுவார் என்பது உங்களுக்கே தெரியும். ஆனால், எப்படி பிடித்தார் என்பது கதை.
காமெடியே சரணம் என்று முழு பயன்பாட்டில் விளையாடி இருக்க வேண்டிய கதை. வழக்கமான காமெடியுடன் மாறாத அதே ஸ்டைலுடன் ஆதி இந்தத் தடவை அறிமுக இயக்குநர் ராணாவுடன் கை கோர்த்திருக்கிறார். ஆனால், வெகு சில இடங்களில் மட்டுமே வெடிச் சிரிப்பு. ரைமிங் பன்ச்கள், டைமிங் டிவிஸ்ட்டுகள், ட்ராமா திரைக்கதை என எல்லாமே கொஞ்சம் ரிப்பீட்டு!
ஆதியிடம் புதிதாக செய்வதற்கு எதுவும் இல்லை. இதுவரை நடித்த படங்களில் என்ன செய்தாரோ அதையே கொஞ்சம் பெட்டராக செய்திருக்கிறார். அடிக்கடி மெசேஜ் சொல்லித்தரும் பாணியைக் குறைக்கலாம். அதிகம் உறுத்தாமல் பொருந்துகிறது நடிப்பு. காதலில் ஏற்படும் பிரச்னைகள், ஆதிக்கு வேலை பறிபோவதெல்லாம் நல்ல முறையில் செய்திருக்கிறார் இயக்குநர்.ஐஸ்வர்யா மேனன் பார்ப்பதற்கு அழகில் குறைவில்லாமல் படபட பேச்சில் களைகட்டுகிறார். ரவி மரியா, முனீஸ்காந்த் போன்றவர்கள் துணை கதாபாத்திரங்களில் நெகிழ்ச்சி ஊட்டி கலகலக்கவும் வைக்கிறார்கள்.
காமிக் வில்லனாக கே.எஸ்.ரவிக் குமாரும், அப்பாவாக படவா கோபியும் சிறப்பு. ரவிமரியா காமெடியில் முன்னுக்கு வருவதை உணர முடிகிறது. ஓரளவு பாஸிட்டிவ் காமெடிகளே படத்தைக் கொண்டு போக பிறகேன் பெண்களை டீஸ் செய்யும் காமெடிகள்! ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிற நேரம் போக மீதி நேரங்களில் இசையமைத்திருக்கிறார் ஹிப் ஆப் ஆதி. பாடல்களில் அதிகமாக அவரின் டெம்ப்ளேட் வகைதான்.
வாஞ்சிநாதன் ஒளிப்பதிவு ஜாலியான காமெடிக்கு இடைஞ்சல் இல்லாமல் செயல்படுகிறது. வசனங்கள் எல்லாமே இளைஞர்களை குறி வைக்கின்றன. முன்பகுதி யின் சுவாரசியம் பின் பகுதியிலும் தொடர்ந்திருக்க வேண்டும்.கதை, லாஜிக் இவற்றில் சில சறுக்கல்கள் இருந்தாலும் திரைக்கதையின் காமெடி ட்ரீட்மென்ட் நம்மை உள்ளே இழுத்து உட்கார வைக்கிறது.
குங்குமம் விமர்சனக் குழு
|