துல்கர் 25... கௌதம் 12 கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் கணக்கு



‘‘இந்தப் படத்தோட டைட்டில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. உடனே இது டிபிக்கலான லவ் ஸ்டோரினு தோணும். ஆனா, காதலைத் தாண்டியும், குட்டிக் குட்டி சஸ்பென்ஸ் நிறைய வச்சிருக்கோம்! இந்த 2020 இளைஞர்களின் பல்ஸை கேட்ச் பண்ற படமா கொண்டு வந்திருக்கோம்.

படத்தோட ஹீரோ துல்கர்சல்மான். அவருக்கு இது 25வது படம். ஸோ, இன்னும் ஸ்பெஷல். ‘மகாநடி’க்கு பிறகு தெலுங்கிலும் துல்கருக்கு ரசிகர்கள் அதிகரிச்சிருக்காங்க. அதனால அவரே தெலுங்கிலும் டப்பிங் பேசி அசத்தியிருக்கார்.
என்னோட முதல்படம், எப்படி அமையணும்னு நினைச்சிருந்தேனோ, அப்படி ஒரு படமா இது இருக்கும்!’’ முழு திருப்தியோடு பேசுகிறார் அறிமுக இயக்குநர் தேசிங் பெரியசாமி.முதல் படமே, துல்கருக்கான ஸ்கிரிப்ட்..?

அப்படி அமைஞ்சிடுச்சு. இந்தக் கதையை எழுதி முடிச்சதும் பொருத்தமான ஹீரோ தேவைப்பட்டார். உடனே துல்கர்தான் என் நினைவில் வந்தார்.
சின்ன ஃபாலோஅப்பிற்குப் பின் துல்கரை சந்திச்சு கதையை சொன்னேன். எனக்கு மிமிக்ரி நல்லா பண்ண வரும்.

75 குரல்களுக்கு மேல பேசுவேன். நான் கதை சொல்லும்போது கூட, அந்தந்த கேரக்டர் மாடுலேஷன்லேயே பேசிடுவேன். பல புரொட்யூசர்களும் இதை என்கிட்ட சொல்லி ஆச்சரியப்பட்டிருக்காங்க.

ஆனா, அப்படி துல்கர்கிட்ட கதை சொல்லும் போது, அவர் முகத்துல சின்ன ரியாக்‌ஷன் கூட வரலை. எனக்கு ஷாக் ஆகிடுச்சு. சாருக்கு ஸ்டோரி பிடிக்கலை போலனு பயந்துட்டேன். ஆனா, அடுத்தநாளே அவர்கிட்ட இருந்து போன். ‘பண்ணுவோம் பாஸ்’னு ஓகே சொன்னதோடு நல்ல தயாரிப்பாளரையும் பிடிச்சுக் கொடுத்தார்.

மலையாளத்துல நாற்பது படங்களுக்கு மேல தயாரிச்ச ஆன்டோ ஜோசப், இந்த படத்தை புரொட்யூஸ் பண்ணியிருக்கார். பாலிவுட் கம்பெனியான ‘வயா 18’ இதை ரிலீஸ் பண்றாங்க. ஹேப்பியா இருக்கு.படத்துல கௌதம்மேனனும் இருக்கார் போலிருக்கு..?ஆமா. நடிப்புல அவருக்கு இது 7வது படம். என் முதல் படம் நான் நினைச்ச மாதிரி அமையும்னு ஆசைப்பட்டேன். துல்கர் சார் ஓகே சொன்னாலும் கூட, அவரோட கமிட்மென்ட்ஸ் எல்லாம் முடிச்சிட்டு இந்த படத்துக்குள் வர கொஞ்சம் டைம் ஆச்சு.

ஸ்கிரிப்ட் எழுதும்போதே, இந்தக் கேரக்டருக்கு கௌதம்மேனன் சார்தான் வேணும்னு உறுதியா இருந்தேன். ஒன்றரை வருஷ ஃபாலோ அப்பிற்குப் பின் அவர் நடிக்க சம்மதிச்சார். அவரோட போர்ஷன் ஷூட் பண்ற டைம்ல எல்லாம், அவருக்கு அவ்ளோ பிரச்னைகள். சூழல் அப்படி. ஆனாலும் ‘ஒன்றரை வருஷமா கேட்டுக்கிட்டிருக்கானே’ என்ற ஒரே காரணத்துக்காக தன்னோட எல்லா பிரச்னைகளையும் ஒதுக்கி வச்சிட்டு நடிச்சுக் கொடுத்தார்.

படத்தோட எடிட் ஸூட்ல உட்காரும்போதுதான், அவர்கிட்ட எவ்வளவு டேக் வாங்கியிருக்கேன்னு எனக்கு உறைச்சது! நேர்த்திக்காக அவர் அவ்ளோ மெனக்கெட்டார்.ரொமான்டிக் த்ரில்லர் படமா இது..?

அப்படியும் எடுத்துக்கலாம். ஓஎம்ஆர்ல ஜாலியா சுத்துற ஒரு ஸ்மார்ட்டான டெக்கி பையனுக்கும், பாசிட்டிவிட்டியோட மின்னும் க்யூட்டான ஒரு பொண்ணுக்குமிடைல காதல்.ஜாலியா பார்ட்டி கொண்டாடப் போற இடத்துல ஒரு பிரச்னையை சந்திக்கிறாங்க. அதுல இருந்து எப்படி மீண்டு வந்தாங்கனு விறுவிறுப்பா சொல்லியிருக்கோம்.

கலர்ஃபுல்லான இளமையும் இனிமையுமான கொண்டாட்டமா படம் வந்திருக்கு. துல்கர் சல்மான் ஜோடியா ரிது வர்மா நடிச்சிருக்காங்க. தெலுங்கில் ‘பெல்லிசூப்புலு’ல ஹிட் அடிச்ச பொண்ணு. முக்கியமான கேரக்டர்ல காஸ்ட்யூம் டிசைனரான நிரஞ்சனி அகத்தியன் நடிச்சிருக்காங்க. படத்துல காமெடிக்கு ரக்‌ஷன்னு சின்னத்திரைல இருந்து ஒருவரை அறிமுகப்படுத்தியிருக்கேன்.

பாடல்களை ‘மசாலா காஃபி’னு ஒரு மியூசிக் பேண்ட் டீம் அமைச்சிருக்காங்க. துல்கரின் ‘சோலோ’ல ஒரு பாடலுக்கு அவங்க இசையமைச்சிருக்காங்க. மியூசிக்ல ஃபோக், ராக்னு பிச்சு உதறக்கூடிய பேண்ட் அது. பின்னணி இசையை ‘அர்ஜுன் ரெட்டி’க்கு ஆர்ஆர் பண்ணின ஹர்ஷவர்த்தன் பண்றார். ‘குற்றம் 23’ கே.எம்.பாஸ்கரன், ஒளிப்பதிவு பண்றார். என்னோட ‘99’ என்ற குறும்படத்துக்கு ஒளிப்பதிவு பண்ணினவர் அவர்.

படப்பிடிப்பை சென்னை, பாண்டிச்சேரி, மேகாலயா, தில்லினு பல இடங்கள்ல நடத்தினோம். ஒரு முக்கியமான சீக்குவென்ஸுக்காக மேகாலயா போயிருந்தோம். மொத்த யூனிட்டோட போய் நின்னா... அங்க மூடுபனி சீஸன்! எதிரே நிற்கறவங்களே தெரியல.

போன வேகத்துல ரிட்டர்னாகி திரும்ப மூடுபனி இல்லாத டைம்ல போய் ஷூட் பண்ணிட்டு வந்தோம்.பர்சனலா துல்கர் ஜாலி ரகமா? சீரியஸ்மேனா..?

சின்ஸியரானவர்! கதை சொல்லி, மூணு வருஷத்துக்குப் பிறகுதான் மறுபடியும் அவரை சந்திச்சேன். இந்தப் படத்தோட அத்தனை சீன்ஸையும் நினைவில் வச்சிருந்தார். ‘நாம க்ளாப்ஸ் வாங்க வேண்டிய இடத்துல இன்னொருத்தர் ஸ்கோர் பண்றாரே’னு இமேஜ் பார்க்காமல், நடிப்பார். எந்த தலையீடும் பண்ணாம நடிச்சுக் கொடுத்தார். தமிழ்ல நிறைய படங்கள் பண்ணணும்னு விரும்புறவர் அவர்.

அதைப்போல ரிதுவர்மா, எல்லா டயலாக்கையும் மைண்ட்ல ஏத்தி வச்சிருப்பாங்க. ஏதாவது ஒரு டயலாக்ல சின்ன கரெக்‌ஷன் பண்ணியிருந்தாலும் அவங்க அதை கரெக்ட்டா கண்டுபிடிச்சுடுவாங்க. டேலன்டட் பொண்ணு. நீங்க, குறும்படம் வழியா சினிமாவுக்கு வந்திருக்கீங்களா..?

இல்ல. ஆனா, குறும்படமும் இயக்கியிருக்கேன். விஜய் மில்டன் சார்கிட்ட ‘கோலிசோடா’, ‘பத்து எண்றதுக்குள்ளே’ படங்கள்ல ஒர்க் பண்ணியிருக்கேன். உதவி இயக்குநர்களை அன்பா டீல் பண்றவர். நான் தனியா படம் பண்ணப் போறேன்னதும், ‘நாம எடுக்கற படம் எல்லா ஆடியன்ஸுக்கும் நெருக்கமான படமா இருக்கணும்’னு அட்வைஸ் பண்ணி வாழ்த்தினார்.

சொந்த ஊர் கடலூர். காலேஜ் படிக்கறப்பவே மிமிக்ரி பண்ணுவேன். கல்ச்சுரல்ல கிடைத்த கைதட்டல், சினிமா கனவை ஸ்டிராங் ஆக்குச்சு. சென்னை வந்துட்டேன். உதவி இயக்குநரா இருந்தப்ப நான் இயக்கிய ‘99’ ஷார்ட் ஃபிலிமுக்கு ஒரு யூ டியூப் சேனல், கோல்டு மெடல் அவார்ட் கொடுத்தாங்க.
இந்த அனுபவங்களோடு ஒரு பக்கா யூத்ஃபுல் என்டர்டெயினர் கொடுத்திருக்கேன்!

மை.பாரதிராஜா