குடும்பக் கட்டுப்பாடு திட்டம் வெற்றிகரமாக இயங்குகிறதா?



இந்தியாவின் பலம், பலவீனம் இரண்டுமே அதன் மக்கள் தொகைதான். இன்றைய தேதிக்கு உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு நாம் என்பது அனைவருக்குமே தெரிந்ததுதான். இந்த அபரிமிதமான மனிதவளம் தொழில் வளர்ச்சி முதல் சமூக மறுமலர்ச்சி வரை பல்வேறு விஷயங்களை கடுமையாகப் பாதித்துக் கொண்டிருக்கிறது.

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த ஆரம்ப வருடங்களில் மக்கள்தொகைதான் நமது அரசியல்வாதிகளுக்குக் கடும் சவாலான விஷயமாக இருந்தது.
எனவே, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதற்காக குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் தீவிரமாக அமலாகின. ஆனால், சமீப ஆண்டுகளில் இந்தக் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் வெறும் சடங்கைப் போல் மாறிவிட்டதாக குறிப்பிட்டு தன் கவலையை தெரிவித்திருக்கிறது யுனெஸ்கோ.

‘இந்தியாவின் தேசிய மக்கள் தொகைக் கொள்கை 2000’ இந்தியக் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் போதாமைகளை களைவதைக் குறித்து முக்கியமாகப் பேசினாலும் கடந்த 2015 - 16ம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையின் தகவல்கள் அது எப்படி ஏட்டளவிலேயே உள்ளன என அம்பலப்படுத்தி இருக்கிறது.

உதாரணமாக சுமார் 13%க்கும் மேற்பட்ட இந்தியர்கள் குடும்பக்கட்டுப்பாட்டு சாதனங்களைப் பயன்படுத்த விரும்பினாலும் அவை தங்களுக்குக் கிடைப்பதில்லை என்கிற பதிலைச் சொல்லியிருக்கிறார்கள். மேலும், பலர் அடுத்த குழந்தைப் பிறப்பை விரும்பாதவர்களாகவும் ஒத்திப்போட விரும்புகிறவர்களாகவும் இருக்க, அதற்கான முயற்சிகள் எதையும் செய்யாதவர்களாக இருக்கிறார்கள்.

இவர்களில் யாரையுமே அரசோ அல்லது தன்னார்வலர்களோ சந்திப்பதுமில்லை; கருத்தடை சாதனங்களை இவர்களுக்கு முறையாக அறிமுகம் செய்யவோ, அதைப் பயன்படுத்த ஊக்கப்படுத்தவோ முயற்சிக்கவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.கடந்த 1950ம் ஆண்டு ஒருங்கிணைந்த வளர்ச்சியின் ஒரு பகுதியாக நம் நாட்டில் குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

மிகக் குறைவான வேகத்தில் இது ஆரம்பத்தில் இயங்கினாலும் போகப் போக இதன் வேகம் அதிகமெடுத்தது. நவ மால்தூஸ்ய ஆதரவு சிந்தனைகள் இந்திய அரசில் கோலோச்சிய அந்நாட்களில் நம் அரசு நாடு முழுதும் இலவச கருத்தடை சாதனங்களை வாரி வழங்கியது.
1960களில் நிகழ்ந்த உணவுப் பஞ்சம் மக்கள் தொகை கட்டுப்பாட்டைப் பற்றிய எச்சரிக்கையை இந்திய அரசிடம் ஆழமாக விதைத்திருந்ததும் இதற்கொரு காரணமாகச் சொல்லலாம்.  

புதிய புதிய கருத்தடை சாதனங்களைக் கண்டுபிடிப்பது; விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்துவது; கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துபவர்கள், குடும்பக்கட்டுப்பாடு செய்துகொள்பவர்கள், இதற்கான ஆட்களைத் திரட்டித் தருகிறவர்களுக்கு பணச் சலுகைகள், இலவசங்கள், பரிசுகள் வழங்குதல் ஆகிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

1976ம் ஆண்டு எமர்ஜென்சி காலங்களில் இந்தக் குடும்பக் கட்டுப்பாட்டு நடைமுறைகள் உச்சம் தொட்டன. ஆனால், அதன் பிறகு ஆட்சிக்கு வந்த அரசுகளிடம் இது சார்ந்த நடைமுறைகள் மந்தமாகத் தொடங்கின. இதனை ஒரு வற்புறுத்தலாக அல்லாமல் விருப்பத் தேர்வாக செய்யவே அரசுகள் விரும்பின. நம் அரசு குடும்பக் கட்டுப்பாடு என்பதை இன்று முற்றிலும் கைவிடவில்லை. சமூக நலம் என்ற பெயர் மாற்றத்தோடு அதனை ஓரளவு நடைமுறைப்படுத்தியே வருகிறது.

1960 மற்றும் 70களில் மக்கள் தொகைப் பெருக்கம் சமூக - அரசியல் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடக்கூடியது என்ற பார்வை மக்கள் மற்றும் அரசு ஆகிய இரு தரப்பிடமும் இருந்தது. ஆனால், 1990களில் இந்த மனநிலை இரு தரப்புக்குமே மாறியது. சொல்லப்போனால் நம் நாட்டில் மட்டுமல்ல... உலகம் முழுவதுமே இந்த மனநிலை மாற்றம் உருவானது.

தம்பதிகளை குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று சொல்வது அறமற்ற செயல் என்ற மனநிலை பரவலாகத் தொடங்கியது. 1994ம் ஆண்டில் சுவாமிநாதன் கமிட்டி மற்றும் அதே ஆண்டில் கெய்ரோவில் நடைபெற்ற உலக மக்கள் தொகை மாநாடு ஆகியவற்றின் அறிக்கைகளில் இக்கருத்து வலுவாக முன்வைக்கப்பட்டது.இதே காலகட்டத்தில்தான் சமூகத்தின் எல்லா தரப்பிலும் சிறிய குடும்பங்கள் உருவாகத் தொடங்கின.

தனிக்குடித்தனம் என்பது அம்மா, அப்பா, ஒரு குழந்தை கொண்ட நியூக்ளியர் குடும்பம் என்பதை நோக்கிச் சுருங்கத் தொடங்கியது. யாரும் சொல்லாமலே உலகம் முழுதும் பரவலான கலாசாரமாக இது உருவாகியது. விலைவாசி ஏற்றம் தொடங்கி, சமூக அரசியல் சூழல்கள் வரை இதற்குப் பல காரணங்களை ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

இப்படியான சிறு குடும்ப அமைப்புகள் கொண்ட சமூகத்துக்கு கருத்தடை சாதனங்கள் அவசியத் தேவையாக இருக்கின்றன. ஆனால், இதுவும் போதுமான அளவு நிறைவேற்றப்படவில்லை என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. கடந்த 1992 - 93ம் ஆண்டின் தேசிய குடும்ப நல கணக்கெடுப்பிலேயே கருத்தடைச் சாதனங்கள் தேவைப்படும் ஐந்தில் ஒரு ஜோடிக்கு அவை கிடைப்பதில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையின் அடிப்படையிலேயே புதிய மக்கள் தொகைக் கொள்கை ஒன்று கடந்த 2000ம் ஆண்டில் வகுக்கப்பட்டது. இன்று இந்த நிலை இன்னமும் அதிகரிக்கவே செய்திருக்கும் என்கிறார்கள் சமூக விஞ்ஞானிகள்.

கடந்த 1980ம் ஆண்டில்தான் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களில் உள்ள போதாமைகள் பற்றி முதன் முதலாக விவாதிக்கப்பட்டது.
சி.எஃப்.வெஸ்டாஃப் என்ற அறிஞரின் ஆய்வுகளின் அடிப்படையில் இந்தப் போதாமை (Unmet) என்ற கலைச் சொல் விவாதிக்கப்பட்டது.
நம் நாட்டைப் பொறுத்தவரை மக்கள்தொகை மற்றும் ஆரோக்கியம் (Demographic and Health) தொடர்பான கணக்கெடுப்புகள் வழியாக இதற்கான தரவுகள் திரட்டப்பட்டன.

குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்துக்கான போதாமை என்பது குழந்தைப் பேற்றை ஒத்திப்போட விரும்புபவர்கள், குழந்தைப் பேற்றைத் தடுத்து நிறுத்த விரும்புபவர்கள் என்ற இரண்டு பிரிவினர்களுக்கான தேவைகேற்ற கருத்தடை சாதனங்களை வழங்குவதில் ஏற்படும் குறைபாடுகள்தான்.
1992 - 93 முதல் ஒவ்வோர் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறையும் தேசிய குடும்ப நல சர்வே வெளியிடப்படுகிறது. கடைசியாக 2015 - 16ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

இந்த ஐந்து சர்வேக்களையும் ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டால் இந்தியாவில் இப்போது கருத்தடை சாதனங்கள் வழங்குதல் எப்படி இருக்கிறது என்கிற பொதுப் புரிதலுக்கு வரலாம்.1992 - 93ம் ஆண்டின்படி குழந்தைப் பிறப்பை தள்ளிப்போட விரும்புபவர்களுக்கான கருத்தடை சாதனங்கள் வழங்குதல் என்பது வெறும் 3.4% ஆக இருந்தது. இது 1998 - 99ல் 3.5%, 2005 - 06ல் 4.8%, 2015 - 16ல் 5.4% என வளர்ந்து செல்கிறது.

இதுவே, குழந்தைப் பிறப்பை தள்ளிப்போட விரும்பியும் கருத்தடை சாதனங்கள் கிடைக்காதவர்களுக்கான சதவீதமோ இதே ஆண்டின் அறிக்கைகளின்படி முறையே, 11, 8.3, 6.2, 6.1, 5.6 என்ற விகிதத்தில் இருக்கின்றன.அதாவது கருத்தடை சாதனங்கள் கிடைத்தவர்களை விடவும் கிடைக்காதவர்கள் விகிதம் அதிகம்!ஆனால், குழந்தைப் பேற்றை தடுக்க விரும்புபவர்கள் விகிதம் இதற்கு நேர்மாறாக உள்ளது. அதாவது, அவர்களில் கருத்தடை சாதனங்கள் கிடைக்காதவர்களை விடவும் கிடைத்தவர்கள் அதிகம்!

நமது அரசும், குடும்பக் கட்டுப்பாட்டு அமைப்புகளும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களைத் தேடிக்கண்டுபிடித்து குடும்பக் கட்டுப்பாடு செய்வதில் கணிசமான வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றே இதன்மூலம் அறியலாம். ஆனால், குழந்தைப் பிறப்பை ஒத்திப் போட விரும்புபவர்களை நோக்கியும் நமது குடும்பக் கட்டுப்பாடு அமைப்புகள் செல்ல வேண்டும். இதையே இந்த சர்வே நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

இளங்கோ கிருஷ்ணன்