லவ் ஸ்டோரி-ஒரு கையெழுத்தோ, சடங்கோ காதலை தீர்மானிக்கப் போவதில்லை!
மூடர்கூடம் நவீன்
ஆண் என்கிறவன் பெண்ணின் இயல்புகளையும் அதேபோல பெண் என்பவள் ஆணின் குணாதி சயங்களையும் உணர்ந்து தேர்ந்துகொள்ள இந்தக் காதல் பரிந்துரை செய்ய வேண்டிய ஒரு நல்ல சாதனமே. நாம் நமக்குள் துளிர்க்கும் காதல் அனுபவத்திற்கு நன்றி கூறிக்கொள்வோம்.
வாழ்க்கையில் காதல் அனுபவத்திற்கும், கல்யாணத்திற்கும் நேரடியான சம்பந்தமில்லை. புரிதலில் வருவது காதல். ஒப்பந்தத்தில் துளிர்ப்பது கல்யாணம். எனக்கு காதல் எல்கேஜி படிக்கும் போதே வந்துவிட்டது. அது அப்படித்தான் வரும். அதுவே இயற்கை. ஐ லவ் யூ சொன்னதில்லை. ஆனால், ஏதோ ஒன்று நடுவில் ஓடிக்கொண்டிருந்தது.
அக்காவின் கிளாஸ்மேட் மீதான காதல் மறக்க முடியாதது. அது ஹார்மோன்களின் வேலை. ஆதி மனிதனின் காமம்தான். வளர்ந்த பிறகு அன்பும், அறிவும், உறுதியும் கலந்திருக்கும் ஒவ்வொரு பெண்ணையும் சந்திக்க நேரும் போதெல்லாம் நான் காதலனாகி விடுவேன். காதல் என்பது உள்ளுக்குள் இருப்பது.
நான் பார்த்த மிகச்சிறந்த காதலர்கள் என் அம்மாவும் அப்பாவும். அம்மா orthodox இஸ்லாமிய குடும்பத்திலிருந்து வந்தவர். திருமணத்திற்குப் பிறகுதான் தியேட்டருக்குப் போய் படம் பார்த்திருக்கிறார்கள். அப்படியே அம்மாவிற்கு இந்த உலகத்தைக் காண்பித்தார் அப்பா. அம்மாவை உள்ளங்கையில் வைத்து தாங்கினார்.
சின்னச்சின்ன சண்டைகள், ஏச்சு என ஒரு வார்த்தை பேசிக் கேட்டதில்லை. வாம்மா, போம்மா என வார்த்தைகளில் அன்பு கசியும். யார் இருக்கிறார்கள், இல்லையென பார்க்க மாட்டார்… அம்மாவை கட்டிப்பிடிப்பார். கன்னம் வழித்து கொஞ்சுவார். அவ்வளவு அன்பு. உடல் தொட்டதும் காதலை இழந்துவிடுகிறவர்கள் அதிகம். காதலைத் தொட்டு உடலை அடைபவர்கள் குறைவு, மிகமிகக் குறைவு. இதையெல்லாம் பார்த்து வந்தவன் நான்.
அம்மா தைரியசாலி. என் பதினோரு வயதில் அப்பா இறந்து போனார். என்னையும், அக்காவையும் தனியாகக் கூட்டி வந்து 850 ரூபாய் பென்ஷனில் இரவெல்லாம் பீடி சுற்றிக் காப்பாற்றினார். அப்பா திடீரென்று பக்கவாதம் தாக்கி படுத்துக்கொண்டபோது அங்கே இங்கே நகராமல், தினம் உடம்பு துடைத்து, குளிப்பாட்டி, எப்போதும் போல அவரை சகஜமாக்கினார். கொண்டாடியதற்கு அப்போதே பதில் மரியாதையும் செலுத்தினார். இதையும் பார்த்துத்தான் வளர்ந்தேன்.
சிந்துவைப் பார்த்ததும் பிடித்தது. வெள்ளைத்தோல் பார்த்து, உயரம் கண்டு வந்ததல்ல. சாதி மத நம்பிக்கை இல்லாத, கராத்தே கிளாஸ் போகிற, தைரியமான பெண்ணாகப் பார்க்கையில் பிடித்தது. ‘எனக்கும் திருமண வயது. உங்களுக்கும் நெருங்குகிறது. உங்களைத் திருமணம் புரிய விரும்புகிறேன். நீங்கள் சம்மதித்தால் மட்டும் உங்கள் வீட்டில் பேசுகிறேன்’ என ஒரு நாள் மூச்சுவிடாமல் சொன்னேன். இரண்டு நாளில் யோசித்துச் சொல்கிறேன் என்றவள், பிறகு ‘சரி’ என்றாள்.
நாங்கள் இருவரும் லிவிங் டுகெதராக ஒரு வருஷம் சேர்ந்து வாழ்ந்தோம். அப்புறம் சமூகத்திற்கு இணங்கி வாழ்கிறோம் என்பதற்காக பதிவுத் திருமணம் செய்தோம். ஒரு கையெழுத்தோ, சடங்கோ எனக்கும் சிந்துவிற்குமான சடங்கை தீர்மானிக்கப் போவதில்லை. ஒரு வருட புரிதல் அருமையானது. இப்படி சேர்ந்து இருந்து பழகும் நாட்கள் இன்னும் பலருக்கு அமையவில்லை. கற்பிக்கப்பட்ட மனோபாவங்களில் வளர்ந்ததில் நமக்கு அது பழகியிருக்கவில்லை.
இப்போது மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். சிந்து குழந்தைகளோடு காட்பாடிக்கு காரில் போனால் தவித்துப்போகிறேன். படபடப்பு இறங்கி ஏறுகிறது. அலைபேசியில், பத்திரமாகப் போய்ச் சேர்ந்தீர்களா என அடிக்கொரு தரம் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். ஏதோ பயம். விபத்து, சாலைப்பயணம், பிற வண்டிகளின் வேகம்... இப்படியான பயம்.
அவள் இல்லாத வாழ்க்கையைக் கற்பனை செய்யவே முடியாது. அது என்னாகும் என சொல்ல முடியாது. என்னிடம் பதிலே இல்லாத கேள்வி இது மட்டும்தான். சோறு போட்டு, சண்டை போட்டு, கட்டிப்போட்டு, கட்டிப்பிடித்து, அடித்துக்கொண்டு, பிடித்துக்கொண்டு... இழையும் பெருமூச்சுகளில் மட்டும் பேசிக்கொண்டு இருந்திருக்கிறீர்களா நீங்கள்? அப்போது தெரியுமய்யா தெரியும்! பேசப் பேசப் பேசத் தெவிட்டாமல் பேசியிருந்தால் இது புரியும்!
காதலில் சிறப்பானதை மட்டும் காட்டுவோம். ஆனால், சேர்ந்து வாழ்ந்து பார்த்தால் பொய்யாகவே இருக்க முடியாது. சேர்ந்து படுக்கிறீர்கள். நிர்வாணம் பழகுகிறது. முற்றிலும் துறந்து இதுவே நாமென ஆகிறோம். காதலில் பெண் செய்வது உங்களுக்குப் பிடிக்காது. ஆனாலும் ‘பரவாயில்லடா’ என்போம்.
சேர்ந்து வாழும்போது இதுதான் உலகம். இதுதான் சரி. இரண்டு குணாதிசயங்கள் சேர்ந்து வாழமுடியுமா என பார்க்கிற நிலை. கெட்ட வார்த்தை பேசுவது தெரியப்போகிறது, சரக்கு அடிப்பேனா என்பது தெரியப்போகிறது, எவ்வளவு வக்கிரமான ஆள் என தெரியப்போகிறது, நல்லவனா, கெட்டவனா… என எல்லாமே தெரியப் போகிறது.
ஒரு பெண்ணும், ஆணும் சேர்ந்திருக்க அங்கே பொய்யே இல்லை. இந்தக் காதல் கலப்படமில்லாத சுகம். இந்தக் காதல் சேர்ந்து வாழ்ந்த பிறகே வரும். அதற்கு முன்னால் இந்தக் காதல் சுத்தப் பேத்தல். வெறும் பயாலஜி. அது உயரமாக, சிவப்பாக, கட்டுத்திட்டாக, நன்றாக பேசினாலே வந்துவிடும். ஆனால், அருமையான காதல், சேர்ந்து வாழ்ந்து, முழு சுயத்தைக் கண்டுபிடிக்கிறோமே... அங்கேதான் வரும்.
நான் ஆணாதிக்கவாதி இல்லை. ஷூட்டிங்கின் மிச்சத்தில் கோபம் வரும். சிந்துவிடம் ஆணாதிக்கம் செல்லவே செல்லாது. கோபத்தில் என் கை ஓங்கினால், ஓங்கிய கை தாழ்வதற்குள் என் முகத்தில் நாலைந்து அறைகள் விழுந்திருக்கும்!
நான் புருஷன், நான் சொன்ன படிதான் கேட்கணும் என்றால் ‘போடா நாயே’ என்று போய்க் கொண்டே இருப்பாள். என் பெண்களும் அப்படித்தான் வளரவேண்டும். கல்யாணம் என்கிற பெயரில் ஒருத்தருக்கு அடிமையாக இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. வாழ வேண்டும் என்கிற கடமை இருக்கையில் அதை யாருக்காகவும் தியாகம் செய்ய வேண்டிய அவசியமில்லை.
சிந்து இல்லாமல் இருக்க முடியாது என நினைக்கிறேன் இல்லையா… அது வாழ்க்கை... அது காதல். இந்நிலையில் சிந்துவின் மேலிருக்கிற காதலில் காமத்தின் அடிப்படை இல்லை. ஏதோ ஒரு விதத்தில் இனி தாம்பத்ய உறவே இல்லையென்றாலும் கூட இதுதான் என் வாழ்க்கை. வாழ்க்கையும், அன்பும், காதலும் எங்கோ ஓரிடத்தில் இருக்கிறது.
ஆரம்பத்தில் காமம் இல்லாமல் காதல் இல்லவே இல்லை. ஒரு கட்டத்தில் காமம் நீங்கி, காதல் அருமையான சுடராய் ஒளிரும்… நிர்வாணம் எல்லாம் தாண்டி… இனிமேல் மறைப்பதற்கு ஒன்றுமே இல்லை என ஓர் இடம் வருமே... அங்கே ஒரு காதல் வரும். அது கற்றுத்தரும். எல்லாம் தரும். அப்பாவும் அம்மாவும் கட்டிப்பிடித்து அன்பு செய்வதை நாங்கள் பார்த்ததுபோல் எங்களை எங்கள் பிள்ளைகள் பார்க்கிறார்கள்.
இதை நான் எந்நாளும் சிதைத்துக் கொள்ளமாட்டேன். இந்த உலக வரலாற்றில் கணக்குப் பார்த்தால் நம் வாழ்க்கை ஒரு மைக்ரோ செகண்ட் கூட இல்லை. இதில் ஒளிவு மறைவு, வஞ்சகம், துரோகம் எல்லாம் ஏன்? இது என் சிந்துவோடு அழகாக அமைந்த ஒரு வாழ்க்கை. இதற்காக நான் எதை வேண்டுமானாலும் இழப்பேனே தவிர இவர்களை இழக்க மாட்டேன்!
எழுதிக் கொண்டில்லாமல் ஒரு படைப்பாளி இருக்கமுடியாது. விரல் நுனிவரை இருந்து நகம் போல் மேலும் வளர்ந்து விடுவதல்ல காதல். நாங்கள் இருவரும் சேர்ந்தே மனம் கேட்டு, மனம் புரிந்து காதல் வளர்த்தோம். காதலைப் புரியாது தொலைத்தவர்களுக்காக நான் இரக்கம் கொள்கிறேன். காதலால் புரிந்த வாழ்க்கையை இன்னும் கூடப் பேசலாம். ஆனால், உணர்ந்து கொண்டதை..?! இறுகப் பற்றுவதுதான் இதற்கு பதில்!
நா.கதிர்வேலன்
|