கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்-51



குபேர வாழ்வருளும் திரு ஆப்புடையார்!

அந்த ஒரு வீட்டில் மட்டும் அடுப்பு புகைந்து கொண்டிருந்தது. ஆம். தென் பாண்டி நாடே கடும் பஞ்சத்தில் இருக்கும் சமயம் அது. யாரிடமும் ஒரு மணி நெல் கூட  இல்லை. நெல் என்ன... ஒரு பொட்டுத் தண்ணீர் கூட இல்லை. ஆனால், இவர் இல்லத்தில் மட்டும் அடுப்பு நித்தமும் புகைகிறது. அதைப் பார்த்த பலரின் வயிறும் கூடவே சேர்ந்து புகைந்தது. என்ன செய்ய... ஒன்றும் செய்யத்தான் முடியவில்லை. காரணம், ஊருக்கே அந்த அடுப்புதான் சோறு போடுகிறது.

சாதி மத பேதமின்றி அனைவருக்கும் அன்னம் பாலித்தார், அந்த இல்லத்தில் இருந்த ஒரு வேதியர். இத்தனைக்கும் அவர் பெரிய பணக்காரர் எல்லாம் இல்லை. செல்லூரில் இருக்கும் ஈசனை பூஜிப்பதையே தன் தலையாய கடனாகக் கொண்ட ஏழை வேதியர். ஒரு நாள் ஒரு பொழுதும் தனது அந்தக்  கடமையில் இருந்து அவர் விலகியதில்லை. ‘முப்பொழுதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்...’ என்று சுந்தர மூர்த்தி சுவாமிகள் இவரைத்தான் சொல்லி இருக்க வேண்டும் என்று ஊரில் பலரும் புகழ்ந்தார்கள். அவர் ஈசனைப் பூஜிக்கும் முறையும், அதில் சொரியும் பக்தியும் பார்ப்பவர்களை எல்லாம் உருக்கும் போது, ஈசனைப் பற்றி கேட்கவா வேண்டும்?

மூன்று வேளையும் ஈசனை குளிரக் குளிர நீராட்டி, வண்ண வண்ண மலர்களால் விதவிதமாக அலங்கரித்து, ரகம் ரகமாக பல விளக்குகளை ஏற்றி, வகை வகையாக பல நிவேதனங்களைப் படைத்து அவர் செய்யும் பூஜையைப் பார்த்தால் கைலாசம் பூமிக்கே வந்துவிட்டதோ என்று தோன்றும்.
கண்ணார அந்த முக் கண்ணனை சேவித்துவிட்டு வந்தால் அனைவருக்கும் பாரபட்சம் இன்றி வயிறார பிரசாதம் பரிமாறப்படும். அனைவரும் உண்டது போக எஞ்சி இருப்பதையே அவர் தனக்கும் தனது குடும்பத்துக்கும் எடுத்துக் கொள்வார்.

ஆனால், பொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல் பஞ்சம் தலை விரித்து ஆடும்போது எங்கிருந்து இவருக்கு பூக்கள், பால், தயிர் இன்னபிற அபிஷேக திரவியங்கள், சமையலுக்கு வேண்டிய பொருட்கள் எல்லாம் கிடைக்கின்றன..? யாருக்கும் விளங்காத மர்மமாகவே இது இருந்தது. அவ்வளவு ஏன்... அவரது மனைவி மக்களுக்குக் கூட இது புரியாத புதிர்தான்.

சூரியன் உதிப்பதற்கு முன்பே எழுந்து விடுவார் அவர். முதல் வேலையாக வைகைக்குத்தான் செல்வார். வரும்போது ஒரு மூட்டை நிறைய எதையோ சுமந்து வருவார். அதில் என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெரியாதபடி எச்சரிக்கையுடன் சுமந்து வருவார். நேராக வீட்டுக்குள் நுழைந்து சமையல் அறைக்குச் செல்வார். தாழிட்டுக் கொள்வார். அடுப்பும் புகைய ஆரம்பித்துவிடும்.

வெளியில் வரும்போது விதவிதமான நைவேத்தியங்கள், பூஜைப் பொருட்கள், இன்ன பிற பொருட்கள் என அனைத்தையும் எடுத்து வருவார்.
முதலில் இந்த அதிசயத்தைக் கண்டபோது அவரது மனைவி வாயடைத்துப் போனாள். என்ன நடக்கிறது என்று அறியும் ஆவலில் அவரைக் கேட்கவும் செய்தாள்..‘‘நமது ஆப்புடையாரின் சினத்தைப் பற்றி நீ அறிவாய்தானே? வீணாக அதற்கு ஆளாகாதே!’’ என பட்டென்று பதிலளித்தார் அந்த வேதியர்.
இதன் பிறகு கேட்பதை நிறுத்திவிட்டாள் அவரது மனைவி.

பின்னே... பயம் இல்லாமால் போகுமா? முதலில் ஆப்புடையார் கோயில், செல்லூரில் இல்லை. ஆப்பனூர் என்ற வேறொரு கிராமத்தில் இருந்தது. அங்கு கோயிலுக்கு இருந்த நிலத்தை உழுது, அதிலிருந்து வரும் நெல்லைக் கொண்டு கோயில் நிர்வாகத்தைச் செவ்வனே செய்து வந்தார் இந்த வேதியர்.
ஊரில் பஞ்சம் வந்த போதும், நெஞ்சார ஈசனுக்கு செய்து வந்த சேவையை செவ்வனே தொடர்ந்தார். கோயில் வயலில் விளைச்சலும் ஈசன் அருளால் அமோகமாக இருக்கவே சேவைக்கு ஒரு குறையும் இல்லை.

அருகில் இருந்த ஏரியில், அடி ஆழத்தில் ஒரு பள்ளத்தில் இருந்த நீரைப் பயன்படுத்தித்தான் இத்தனையும் நடந்தது. ஆனால், சில துஷ்டர்களுக்கு வேதியரின் வயலில் மட்டும் விளைச்சல் இருப்பது கண்டு வயிற்றெரிச்சலாக இருந்தது.‘‘மனிதர்களாகிய நாங்கள் உணவுக்கு கஷ்டப்படும்போது, சாதாரண ஒரு கல்லுக்கு படையல் கேட்கிறதா படையல்?’’ என்று வேதியரை அடித்து உதைத்து கோயில் நெல்லை பிடுங்கிக்கொண்டதுடன் அவர் விவசாயம் செய்யவும் பல இடைஞ்சல்கள் தந்தார்கள்.

துன்புற்ற வேதியர் ஈசன் அடியைத் தஞ்சம் புகுந்தார். பீறிட்டு அவர் சன்னிதானத்தில் அழுத குரலுக்கு செவிசாய்க்கும் விதமாக லிங்கத்தின் உள்ளிருந்து ஒரு குரல் ஒலித்தது:‘‘அன்பனே! வருந்தாதே! வஞ்சகர் குடி கொண்ட இந்த ஊரில் நான் குடியிருக்க விரும்பவில்லை. ஆகவே நான் புறப்படப் போகிறேன். நீயும் புறப்படு.

நாளைக் காலை உன் மூட்டை முடிச்சுகள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு இல்லத்தின் வாயிலில் காத்திரு. மற்றவை உனக்கு பிறகு புலப்படும். வஞ்சக எண்ணம் பெருகி விட்ட இந்த ஊரும், நாம் இதை விட்டு நீங்கிய உடனே அழிந்து விடும். ஆசிகள்!’’திக்பிரமை பிடித்து நின்றார் வேதியர். நினைவு வந்ததும் முதல் வேலையாக இல்லம் திரும்பி, தனது உடைமைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு, மனைவி மக்களையும் கூட்டிக் கொண்டு வீட்டு வாசலில் நின்றார்.

எங்கிருந்தோ ‘ஜல் ஜல்’ என்ற சதங்கை ஒலி கேட்டது. வேதியரும் அவரது மனைவி, குழந்தைகளும் முதலில் பயந்தார்கள். மனம் ஒரு நிலைக்கு வந்ததும் சத்தம் கேட்ட திசையைத் தேட ஆரம்பித்தார் வேதியர்.தனது சிரத்தைச் சுழற்றி சுற்றிலும் நோக்கிய வேதியர், தரையைப் பார்த்தபின் ஆச்சரியத்தின் விளிம்பிற்கே சென்றார். ஒருவாறு தன்னைத் தேற்றிக் கொண்டு, தரையில் விழுந்து வணங்கினார்.

அவர் எதை வணங்குகிறார் என்று அறியாமல் விழித்த அவரது மனைவி நொடியில், தரையில் சிந்தியிருந்த கொன்றை மலரையும் ஒரு இடபத்தின் காலடித் தடத்தையும் கண்டாள். அந்த மலர்கள் ஈசன் தனது ஜடையில் சூடியது என்றும், அந்தக் காலடித் தடம் சாட்சாத் நந்தி பகவானுடையது என்பதையும் நொடியில் உணர்ந்தார்கள்.  

வேதியரின் மனைவி சற்றும் தாமதிக்காமல் சிந்தியிருந்த கொன்றை மலரை எடுத்து தன் கண்களில் ஒற்றிக்கொண்டு, அதில் ஒன்றை தன் தலையில் சூடினாள்.  மற்றொன்றை வேதியரின் செவியில் செருகினாள். மீதி இருந்தவற்றை தன் குழந்தைகளுக்குச் சூட்டி அழகு பார்த்தாள்.
வேதியரும் ஒன்றும் சும்மா இல்லை. நந்தி தேவரின் திருவடித் துகளை எடுத்து, தானும் சூடிக் கொண்டு தன் குடும்பத்துக்கும் கொடுத்தார்.

இது எல்லாம் நடக்கும் வரை காத்திருந்த நந்தி தேவர், மெல்ல நடக்க ஆரம்பித்தார். அதை அவரது காலடித் தடங்கள் நன்கு காட்டிக் கொடுத்தன. நந்திதேவரின் திருவுருவமோ அதன் மீது அமர்ந்து பயணம் செய்யும் அம்மையப்பனின் உருவமோ கிஞ்சிற்றும் வேதியருக்கோ அவரது மனைவிக்கோ குழந்தைகளுக்கோ தெரியவில்லை. முதலில் இது வருத்தத்தை தந்தாலும் குறைந்தபட்சம் நந்தியின் திருவடி தடத்தை பார்க்கும் பாக்கியமும், ஈசன் சூடிய வாச மலரை சூடும் பாக்கியமும் தங்களுக்கு கிடைத்ததே என சமாதானம் அடைந்தார்கள்.

வேதியரும் அவரது குடும்பமும் அந்தத் தடங்களையும், பூக்களையும் பின்பற்றிச் சென்றார்கள். சரியாக இந்த செல்லூர் வந்ததும் அந்த தடங்களும் பூக்களும் நகர்வதை நிறுத்தின. வேதியருக்கும் அவரது மனைவிக்கும், ஈசன் இங்கேயே தங்கத் திருவுள்ளம் செய்து விட்டார் என்பது விளங்கியது. அவர்களும் இங்கேயே ஈசனோடு தங்கிவிட்டார்கள்.

பல நாட்களுக்கு முன் நடந்துவிட்ட இந்த சம்பவம் வேதியரின் மனதிலும் அவரது மனைவியின் மனதிலும் பசுமரத்தாணி போல பதிந்து விட்டது.
அதனால்தான், ‘‘நமது ஆப்புடையாரின் சினம் பற்றி அறிவாய்தானே?’’ என்று வேதியர் கேட்டதுமே மறுவார்த்தை பேசாமல் அவர் மனைவி அமைதி
யானாள். மேற்கொண்டு எதையும் அவள் கேட்கவில்லை.

‘‘மைகாட்... ஏதோ ஃபேன்டஸி ஸ்டோரி கேட்கறா மாதிரியே இருக்கு தாத்தா..!’’ சட்டென்று சொன்னான் கண்ணன்.மெய்மறந்து கதை சொல்லிக் கொண்டிருந்த நாகராஜன், இதனால் நடப்புக்கு வந்தார். ஆமோதிப்பாக குறுநகை பூத்தார்:‘‘அதனாலதானே மாணிக்க வாசகர், ‘முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே! பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே!’னு சொல்றார்...’’ வாஞ்சையோடு கண்ணனின் தலையைக் கோதிய படியே சொன்னாள் நாகராஜனின் மனைவியான ஆனந்தவல்லி.

எதிரில் அமர்ந்து இதையெல்லாம் பார்த்துக் கொண்டும் நாகராஜன் சொல்லும் கதையைக் கேட்டுக் கொண்டும் இருந்தாள் ஈஸ்வரி.
அந்த வீட்டின் பணிப்பெண்ணான அவளுக்கு திடீரென்று பணக் கஷ்டம். இத்தனைக்கும் அவள் கணவன் நல்லவன். மிக மிக நல்லவன். குடிக்க மாட்டான். சீட்டாட மாட்டான். வாங்கிய சம்பளத்தை அப்படியே கொண்டு வந்து ஈஸ்வரியிடம் கொடுத்துவிடுவான்.நன்றாகத்தான் இருந்தார்கள். யார் கண்பட்டதோ... இப்போது தாளாத பணக் கஷ்டம்.இதை நாகராஜனிடமும் ஆனந்தியிடமும் சற்று நேரத்துக்கு முன் சொல்லி ஓவென்று அழுதாள் ஈஸ்வரி .

மெல்ல ஈஸ்வரியை சமாதானப்படுத்தி விட்டு அவளது பிரச்னைக்கு தீர்வு இருக்கிறது என நாகராஜன் தொடங்கியபோது, சரியாக ஹோம் ஒர்க் முடித்துவிட்டு அவர்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தான் எதிர்வீட்டு கண்ணன்.

இதனை அடுத்து நாகராஜன் கதை சொல்லத் தொடங்க... மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்த கண்ணன் தன்னையும் மீறி ‘ஃபேன்டஸி கதை’ என்றான்.
அமைதியாக இருந்த ஈஸ்வரி, சட்டென்று கேட்டாள்: ‘‘அந்த பஞ்சத்துலயும் எப்படி அவரால செழிப்பா பூஜை செய்ய முடிஞ்சுது மாமா..?’’
‘‘சொல்றேன்மா...’’ என்றபடி நாகராஜன் தொடர்ந்தார்.

(கஷ்டங்கள் தீரும்)

ஜி.மகேஷ்

ஓவியம்: ஸ்யாம்