பசியால் வாடி பாணிபூரி விற்றவர்தான் யஷாஸ்வி!



பசியால் வாடி பாணிபூரி விற்றவர்தான் Under 19 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் தொடர் நாயகன் விருது வென்ற யஷாஸ்வி!

யஷாஸ்வி ஜெய்ஸ்வால்… இப்போது இந்திய கிரிக்கெட் உலகம் உச்சரிக்கும் பெயர். கடந்த வாரம் நடந்த அண்டர் 19 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் வங்காளதேசத்திடம் இந்திய அணி வீழ்ந்தது. இருந்தும், இதில் தொடர் நாயகன் விருதைத் தட்டிச் சென்று எல்லோர் மனதையும் கவர்ந்தார் தொடக்க ஆட்டக்காரரும் ஆல்ரவுண்டருமான யஷாஸ்வி ஜெய்ஸ்வால்.

இறுதி ஆட்டத்தில் 88 ரன்கள் குவித்தவர், அதற்குமுன் நடந்த அரையிறுதியில் சதம் அடித்து பாகிஸ்தானை மண்ணைக் கவ்வச் செய்தார். மட்டுமல்ல. ஒட்டு மொத்தமாக இந்தத் தொடரில் நானூறு ரன்கள் குவித்து கிரிக்கெட் ஆளுமைகளையும் ரசிகர்களையும் புருவம் உயர்த்தச் செய்தார்.
இதனால், இந்திய அண்டர் 19 வரலாற்றில் ஷிகர் தவானுக்குப் பிறகு அதிக ரன்கள் குவித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். உத்தரப்பிரதேச மாநிலத்தை பூர்வீகமாகக் ெகாண்ட இந்த இளம் வீரர் இன்று மும்பை அணிக்காக ஆடிவருகிறார். இதன் பின்னணியில் ஒரு சோகக் கதை உள்ளது.

ஆம். கிரிக்கெட்டில் பிரகாசிக்க தன் 11 வயதில் மும்பை வந்தவர் யஷாஸ்வி. இன்று இந்த நிலையை எட்ட அவர்பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.  
உ.பி. மாநிலம் பதோகி அருகே சூரியவான் நகரில் 2001ல் யஷாஸ்வி பிறந்தார். இவரின் தந்தை பூபேந்திர ஜெய்ஸ்வால் சிறுவியாபாரி. குடும்பத்தை நடத்தவே சிரமப்பட்டார். இதனால், அந்தச் சிறுவயதில் யஷாஸ்வி மும்பை செல்ல அவர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
அங்கிருந்த தன் மாமா சந்தோஷின் வீட்டிற்குச் சென்றார்.   

ஆனால், அங்கு தங்குவதற்கு இடம் இல்லாததால் அவர் மூலம் ஆசாத் மைதானத்திலிருந்த முஸ்லிம் யுனைடெட் கிளப் கூடாரத்தில் தங்கினார்.    இதற்கிடையே ஒரு பால் பூத்தில் பணிக்குச் சேர்ந்தார். ஆனால், விளையாடிய களைப்பால் அவர் தூங்கி வழிய, அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டார். பல நாட்கள் பட்டினியால் வாழ்க்கை கழிய, ஒருகட்டத்தில் பாணிபூரியும், பழங்களும் விற்று தன் வயிற்றைக் கழுவினார்.

அப்போது தற்செயலாக கிரிக்கெட் அகடமி நடத்தும் ஜுவாலா சிங் கண்ணில் யஷாஸ்வி பட,  தங்குவதற்கு இடம் அளித்ததுடன் தன் குழுவிலும் சேர்த்து பயிற்சி கொடுத்தார். இதனால், 2015ல் பள்ளி அளவிலான போட்டியில் 319 ரன்கள் குவித்து லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார் யஷாஸ்வி.

பின்னர், ரஞ்சி அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்து, விஜய் ஹசாரே போட்டியில் ஜார்க்கண்ட் அணிக்கு எதிராக 154 பந்துகளில் 203 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். போதாதா..? இந்திய அண்டர் 19 அணியில் விளையாட இடம் கிடைத்தது. ‘‘சூழ்நிலைக்குத் தகுந்தாற் போல் விளையாடக் கூடிய சிறந்த வீரர் யஷாஸ்வி. பொதுவா, அண்டர் 19 வீரர்கள் பலரும் பதட்டத்துல தேவையில்லாத ஷாட்கள ஆடிடுவாங்க. ஆனா, பந்துவீச்சாளரின் மனநிலையை கணிச்சு ஆடுறதுல திறமையானவர் யஷாஸ்வி.

அவர்கிட்ட ஸ்மார்ட்போன் கிடையாது. அதனால, எந்த சோஷியல் மீடியாவிலும் அவர் இல்ல. இப்படி கிரிக்கெட்டே கதினு இருந்தா நிச்சயம் மும்பையிலிருந்து இன்னொரு பெரிய வீரர் இந்திய அணிக்குக் கிடைப்பார்...’’ நம்பிக்கையாகச் சொல்கிறார் மும்பை அண்டர் 19 அணியின் பயிற்சியாளர் சதீஷ் சமந்த். இப்போது ஐபிஎல்லுக்காக ரூ.2.40 கோடிக்கு அவரை ஏலத்தில் எடுத்திருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி!

பி.கே.