ரியல் லைஃப்ல காதலை சேர்த்து வைச்சிருக்கீங்களா..திரையில் காதலை அழகாகச் சொல்லும் இயக்குநர்கள் சிலரிடம், ‘‘நீங்க உங்க ரியல் லைஃப்ல யாருடைய காதலுக்காவது உதவினதுண்டா? காதல் ஜோடிகளை சேர்த்து வச்சிருக்கீங்களா?’’ எனச் சீண்டினோம்.சின்ஸியரும், சிரிப்புமாக பதில்களைப்பகிர்கிறார்கள் நம் இயக்குநர்கள்.

தன் படங்களைப் போலவே, காமெடியாக ஓப்பனிங்கை ஆரம்பிக்கிறார் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ இயக்குநர் எழில்: ‘‘ஒரு இன்ஸிடென்ட்டை மறக்கவே முடியாது. சாட்சிக் கையெழுத்து போடுறதுக்கு என்கூட வந்த பாலாஜி சக்திவேல் மாட்டிக்கிட்டார்...’’ என்ற சஸ்பென்ஸோடு ஆரம்பித்தார் எழில்:

‘‘நான் அசிஸ்டென்ட் டைரக்டரா இருக்கும் போது, ஃப்ரெண்ட் ஒருத்தரோட கல்யாணம் ஒரு கோயில்ல நடந்தது.
அப்பவெல்லாம் காதல் படங்கள் பார்த்து கிறுகிறுத்துப் போயிருப்போம் இல்லையா! வீரமும், வேகமும் அதிகம். கல்யாண ரிஜிஸ்டர்ல சாட்சிக் கையெழுத்து போட கிளம்பிட்டிருந்தேன். அப்ப என்னைப் பார்க்க பாலாஜி சக்திவேல் வந்திருந்தார். அவரும் அசிஸ்டென்டா இருந்த டைம் அது. சாட்சிக் கையெழுத்து போட அவரையும் அழைச்சிட்டு கிளம்பிட்டேன்.

யாருக்கு கல்யாணம்... என்ன ஏதுனு கேட்காம என் கூட வந்துட்டார். கல்யாணத்துல பொண்ணு மாப்பிள்ளையோட எல்லாரும் க்ரூப் போட்டோ பிடிச்சிட்டிருந்தாங்க.போட்டோன்னதும் நான் ஜர்க் ஆகி, ஒதுங்கிட்டேன். ஆனா, பாலாஜி சக்திவேல் வாலண்டரியா போய் விதவிதமா போட்டோவுக்கு போஸ் கொடுத்துட்டார். மறுநாள் பொண்ணு வீட்டுல அந்த போட்டோஸை பார்த்துட்டு பாலாஜி சக்திவேல்தான் அந்த கல்யாணத்தை நடத்தி வச்சார்னு நினைச்சு ஆவேசப்பட்டாங்க. இப்ப வரை விழுந்து விழுந்து அதைப்பத்தி பேசிச்சிரிப்போம்...’’ அதிர அதிர சிரிக்கிறார் எழில்.

‘‘எழில் சொன்ன விஷயம்... மறக்கவே முடியாதது. ஆனா, ஒரு நல்ல காதலை நானும் சேர்த்து வச்சிருக்கேன். அது சொந்த தங்கையோட காதல். மாப்பிள்ளையின் மதம் வேற..! இப்ப அவங்க ஹேப்பி ஃபேமிலியா இருக்காங்க...’’ - சந்தோஷத்தில் பூரிக்கிறார் பாலாஜி சக்திவேல். நடிகராகவும் கெத்து காட்டும் ‘காதல்’ இயக்குநர்:

‘‘எங்க ஊர் திண்டுக்கல்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். தங்கை மதுரைல படிச்சிட்டிருந்தாங்க. அவங்க திண்டுக்கல்ல இருந்து மதுரைக்கு டிரெயின்லதான் காலேஜுக்கு போயிட்டு வருவாங்க.காலேஜ்ல ஜஸ்டின்னு ஒருத்தர் என் தங்கையை ‘திண்டுக்கல்லு திண்டுக்கல்லு’னு கிண்டல் பண்ணியிருக்கார். இதை என் தங்கை என்கிட்ட சொல்லவும் ‘ரட்சகன்’ படத்துல நாகார்ஜுனாவுக்கு நரம்புகள் முறுக்கேறி ட்ராவல் ஆகறா மாதிரி எனக்கும் உடம்புல எஃபெக்ட் ஆகிடுச்சு. உடனே என் நண்பர்கள் சிலரையும் அழைச்சிட்டு அவங்க காலேஜுக்கு போய் கிண்டல் பண்ணிட்டிருந்தவங்கள செமையா மிரட்டிட்டு திரும்பிட்டேன்.

அப்புறம் சில மாசங்கள் கழிச்சு என் தங்கை, ‘என் க்ளாஸ்மேட் ஜஸ்டினை லவ் பண்றேன்’ னாங்க. நீங்கதான் நம்ம அம்மா, அப்பாகிட்ட சொல்லி சேர்த்து வைக்கணும்... மதமும் மாறப்போறேன்’னு சொன்னாங்க.ஆரம்பத்துல எனக்கு கொஞ்சம் ஷாக்கா இருந்துச்சு. அப்புறம், வீட்ல சொல்லி, தங்கைக்கு கல்யாணமும் பண்ணி வச்சிட்டேன். அவங்க கல்யாணத்துக்கு லிங்குசாமில இருந்து இயக்குநர் நண்பர்கள் பலரும் வந்து வாழ்த்தினாங்க.
என் தங்கையோட பையன், இப்ப காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் படிக்கறான். ஒருநாள் என் தங்கையோட வீட்டுக்காரர்கிட்ட யதேச்சையாக பேசிட்டு இருக்கும்போது அவர் ஒரு டவுட் கேட்டார்.

‘உங்க தங்கச்சி காலேஜ் படிக்கும்போது, யாரோ கிண்டல் பண்றாங்கனு மிரட்டுனீங்களே? எந்த டிபார்ட்மென்ட் பையன் அவன்? யாரை அப்படி மிரட்டிட்டு போனீங்க?’னு வெகுளியா கேட்டார்.‘நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்’ மொமண்ட் அது! நாம மிரட்டுனதே அவருக்குத் தெரியலையே... காமெடி பீஸாகிட்டோமே’னு சிரிச்சுட்டேன்.

ஆனாலும், நல்ல விஷயம். நான் சேர்த்து வச்ச ஜோடி, எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்றதைப் பார்க்கும்போது, மனசுக்குள் மத்தாப்பு தெறிக்கிறது நிஜம்தான்...’’ என கலகலக்கிறார் பாலாஜி சக்திவேல்.‘‘காதல் ஜோடியை சேர்த்தும் வச்சிருக்கேன். அதே வேகத்துல அவங்கள பிரிச்சும் வச்சிருக்கேன்..’’ என வெடிகுண்டைத் தூக்கிப்போடுகிறார் ‘தேவ்’ இயக்குநர் ரஜத் ரவிஷங்கர்.

‘‘டீன் ஏஜ்ல சினிமாக்கள் பார்த்துதான் காதலைப் புரிஞ்சுக்குவோம். ஒவ்வொரு படக் காதலும் எங்காவது ஒரு ரெஃபரன்ஸ் மாதிரி அமைஞ்சிடும். அதைத்தான் ரியல் லைஃப்லயும் பொருத்திப் பார்ப்போம்.என் ஃப்ரெண்ட் ஒருத்தர் ஒரு பொண்ணை லவ் பண்ணிட்டிருந்தார். ஒரு கட்டத்துக்கு மேல அது ஒன்சைட் லவ்னு புரிஞ்சிடுச்சு. அந்தப் பொண்ணு அவரைக் கண்டுக்காததால இவர் தாடி, தம், தண்ணினு சோகமாகிட்டார்.

நண்பரை அப்படிப் பார்க்க பிடிக்கல. அவர் சார்பா நானே அந்தப் பொண்ணுகிட்ட பேசி, பில்டப் பண்ணி இன்ட்ரோ கொடுத்து அவங்கள சேர்த்து வச்சேன்.ஆரம்பத்துல அவங்க நட்பா பழக ஆரம்பிச்சாங்க. அப்புறம், அவங்க ரெண்டு பேருக்கும் இடைல லவ் ஸ்டார்ட் ஆகும்போது, நண்பர் என்னை கண்டுக்கவே இல்ல. அந்தப் பொண்ணும் என்கிட்ட எதுவும் பேசல.

ஆறு மாசம் கழிச்சு, அந்தப் பொண்ணுகிட்ட இருந்து ஒரு மெசேஜ் வந்துச்சு: ‘என் வாழ்க்கை வீணாப்போனதுக்கு நீதான் காரணம்..!’
எனக்கு தூக்கி வாரிப் போட்டிடுச்சு. உடனே அந்தப் பொண்ணைக் கூப்பிட்டு விசாரிச்சேன். அவங்க சொன்ன தகவல் இன்னும் ஷாக். என் நண்பன் லவ்வுங்கற பெயர்ல ஒரு சைக்கோ மாதிரி அவங்கள மென்டல் டார்ச்சர் பண்ணியிருக்கான். அவன் எண்ணமும் ஒழுக்கமானதா இல்ல.

அந்தப் பொண்ணு மனசு நொந்து சொன்னதும், அவங்கள காப்பாத்த வேண்டிய பொறுப்பு வந்தது. அந்தப் பொண்ணை அவன்கிட்ட இருந்து பிரிச்சு அவளுக்கு பாதுகாப்பு பண்ணினேன். நல்ல காதல் இல்லைனு தெரிஞ்சதும், அவங்கள பிரிச்சதுல ஹேப்பியாகிடுச்சு. இப்ப அந்தப் பொண்ணு என் பெஸ்ட் தோழி! இந்த போர்ஷனை ‘தேவ்’ல கூட சொல்லியிருப்பேன். என் தோழிக்கு நல்ல இடத்துல மாப்பிள்ளை பார்த்து, கல்யாணமும் பண்ணி வச்சேன். இப்ப அவங்க ஃபாரீன்ல சந்தோஷமா இருக்காங்க...!’’ என்கிறார் ரஜத் ரவிஷங்கர்.

‘பியார் பிரே மா காதல்’ இயக்குநர் இளனும், ஹார்ட்டீன் விடுகிறார்: ‘‘நான் லவ்வை சேர்த்தும் வச்சதில்ல, பிரிச்சும் வச்சதில்ல. ஆனா, எங்க அம்மா அப்பா லவ்வே அவ்ளோ அழகான லவ் ஸ்டோரி. என்னை நெகிழ வச்ச காதல் அவங்களோடது. அதை அழகான ஸ்கிரிப்ட்டாகவும் ரெடி பண்ணி வச்சிருக்கேன்...’’ என உற்சாகமாகிறார் இளன்:

‘‘எங்க அம்மா, அப்பா ரெண்டு பேருமே கஷ்டப்பட்ட ஃபேமிலில இருந்து வந்தவங்கதான். அம்மா, எக்ஸ்போர்ட் கம்பெனில வேலைக்கு போயிட்டு இருந்தாங்க. அப்பா, ஒரு போட்டோகிராபரோட அசிஸ்டென்ட்டா இருந்தார். ரெண்டு பேரும் வேலைக்கு ஒரே பஸ்ல, ஒரே ரூட்ல டிராவல் ஆகியிருக்காங்க.அப்ப ஒருத்தருக்கொருத்தர் பழக்கமாகி இருக்காங்க. பஸ்ல அம்மாவோட எப்பவும் அவங்க அக்காவும் கூட இருப்பாங்க. பெரியம்மாவுக்கும் அப்ப எக்ஸ்போர்ட் கம்பெனிலதான் வேலை.

அப்பா எங்க அம்மாவுக்கு பழக்கமானதும் மெதுவா அது காதலாக மலர்ந்திருக்கு. அந்த டைம்ல அப்பா மதியம் சாப்பாடு கொண்டு போக மாட்டார். பட்டினியா இருப்பார். இது தெரிஞ்சதும் எங்கம்மா, தன் அக்காவுக்குத் தெரியாம சாப்பாட்டு நேரத்துல அப்பாவோட ஸ்டூடியோவுக்கு போய் தன்னோட லன்ச்சை அவர்கிட்ட கொடுத்துட்டு வர ஆரம்பிச்சாங்க. இங்க எங்கம்மாவுக்கு அவங்க ஃப்ரெண்ட்ஸ் தங்களோட சாப்பாட்டை கொஞ்சம் கொஞ்சம் பகிர்ந்து கொடுக்கத் தொடங்கினாங்க.

ரொம்பவும் உருக வைக்கற லவ் ஸ்டோரி... ஒவ்வொரு இன்ஸிடென்டையும் கேட்டு, ஒரு அழகான காதல் கதையா எழுதி வச்சிருக்கேன். அடுத்த படத்துல இந்த ஸ்டோரியை எதிர்பார்க்கலாம்...’’ என்கிறார் இளன்!நம்மிடம் ‘டாபிக்’ கேட்டதுமே உற்சாகமாகிறார் ‘த்ரிஷா இல்லேனா நயன்தாரா’
ஆதிக் ரவிச்சந்திரன்:

‘‘ஸ்கூல்ல, காலேஜ்ல மட்டுமில்ல... இண்டஸ்ட்ரீயிலயும் நிறைய ஜோடிகளைச் சேர்த்து வச்சிருக்கேன். அவங்க யாருனு பெயர்களைச் சொன்னா டேஞ்ஜர்! சில ஃப்ரெண்ட்ஸுக்காக அவங்க லவ் பண்ற பொண்ணு வீட்டுக்கு பெண் குரல்ல கூட பேசி உதவியிருக்கேன்.

அப்படி ஒரு லவ்வை மறக்கவே முடியாது. ‘நாடோடிகள்’ படத்துல சசிகுமார் சார் மாதிரி டபுள் மடங்கு ரன்னிங், சேஸிங், ரன்னிங் சேஸிங்னு பண்ணி ஒரு ஜோடியைச் சேர்த்து வைச்சோம். பொண்ணைத் தூக்கிட்டு அம்பாஸிடர்ல போறோம். பின்னாடி சுமோல அவங்க துரத்தினாங்க. திக்குதிக்குனு சேஸிங். மறக்கவே முடியாது.

அந்த ஜோடியோட பெயர் மனோஜ் - நந்தினி. எல்லா பிரச்னைகளும் சுபம் ஆகி, இப்ப சந்தோஷமா இருக்காங்க...’’ என பெருமிதப்படும் ஆதிக், இன்னொரு விஷயத்தையும் சொன்னார்:

‘‘எனக்கு கல்யாணம் பண்ற ஐடியா இல்ல. லவ்வும் வேணாம். அரேஞ்சும் வேணாம். காதல் காத்து அதுவா அடிக்கிறப்ப பார்த்துக்கலாம்...’’
என்கிறார்!

மை.பாரதிராஜா