டாப் 10 உலக 10 காதல் படங்கள்!Titanic

உலகமெங்கும் காதலின் பெருமையைச் சொல்லி வசூலையும் அள்ளிக்குவித்த படம். அந்தஸ்திலும் அழகிலும் உச்சத்தில் இருக்கிற யுவதி, அதே அழகுடன் ஏழையாக இருக்கிற ஓவியன் ஜாக் இருவரையும் சந்திக்க வைத்து, காவியக் காதலை கண்ணீர் மல்க சொல்ல வைத்த சினிமா. இன்றைக்கும் காதலின் அடையாளமாக கசிந்துருகிப் பார்க்கிறார்கள். காதலின் அடர்த்தியும், ஆழமும் கூடி ஒரு கேமரூன் என்னும் கதை சொல்லி, கலைஞன் ஆனது இப்படத்தில்தான்.

Amour

ஆஸ்கருக்குப் போய் பரிசை அள்ளி வந்தது ஒரு விஷயம் கிடையாது. வயது முதிர்ந்த, கனிந்த பழம்போல் இருக்கிற இருவரின் மீதி வாழ்க்கையை இந்தப்படம், பனிக்கும் கண்களோடு பார்க்கத் தூண்டியது. படத்தைப் பார்த்த இளைஞர்கள், தங்கள் பெற்றோர்களைப் பார்த்துக் கொள்ள அயல்தேசங்களிலிருந்து கூடு திரும்பினார்கள். வாழ்வின் திறப்பாகவும், அன்பை பிரத்யேகமாக சொல்லித்தருவதாகவும் விளங்கும் படம் இது.

City Lights

மகா கலைஞன் சார்லி சாப்ளினின் படம்தான். மிகுதியும் காதல் உணர்வை சுத்தபத்தமாக, யதார்த்தத்தில் கொண்டு வந்து நிறுத்தியது.
படத்தின் தொடக்கத்தில் கையேந்தி நிற்கும் சிலையில் படுத்துறங்கும் சாப்ளினின் எளிமையைப் போல் வேறு யார்தான் காதலின் சுகந்தத்தை, ஓர் அனுபவமாக சொல்லிக்கொடுக்க முடியும்! வசனமே பேசப்படாமல் காதலின் கூர்மையைத் தரமுடியுமா? இப்பவும் பாருங்கள், காதலின் அருமை புரியும்.

The Notebook

இன்றைக்கும் காதல் படமென்றால் ரசிகர்கள் அனைவருக்கும் ‘நோட்புக்’ கட்டாயம் ஞாபகத்திற்கு வந்துவிடும். 2004க்குப் பிறகு காதல் கதையின் வல்லமைக்கு இதுதான் சான்று. நாம் ஈடுபட்டிருந்த பல காதல் ஞாபகங்களை விட்டுத் தள்ளுங்கள். நமக்கே நம்மீது அன்பு நிறைந்து வழியும்.
பிரிகிறார்கள், சந்திக்கிறார்கள்தான். ஆனால், கடைசியில் உங்கள் அகந்தையெல்லாம் போய் காதலில் நிறைகிற இடம் சும்மாவா!

A Walk to Remember

காதலில் மயங்கும் இடங்கள், காதலை விடவும் காமம் தூக்கலாகத் தெரியும் இடங்கள் என எல்லாவற்றையும் நாம் எளிதில் கடந்து செல்ல முடியும்.
அப்படி உணர வைக்கவும் முடியும். ஷான், மான்டிமூர் என அப்படியே நினைத்தால் மனதிற்குள் வந்து விடுவார்கள். இயக்குநர் ஆடம்மை கொண்டாட மறக்க மாட்டோம்.

Love with Proper Stranger

45 ஆண்டுகளுக்கு முன்பு வந்த படம்தான். காதல் ஒன்றுபோல் இல்லை என்பார்கள். எப்போது யார் மீது மனம் கவ்வும் என யாருக்கும் தெரியாது. ஏதோ ஒரு பாவனை, மனப்பாங்கு, அழகு எதிர்பாலினத்தின் கண்களில் தீபாவளி காட்டி நம்மை இழுத்துக்கொள்ளும். பிறகென்ன, அவர்கள் இழுத்த திசைக்கெல்லாம் அலை பாய்வதுதான் காதலனின் வேலையாகிறது. காதல் புது வடிவத்தை வைத்துக்கொண்டு வேடிக்கை காட்டி மிரள வைக்கிற படம்.

Endless Love

மறுக்கவே முடியாது... கண்ணால் பார்த்து இதயத்தால் உணர வைக்கிற படம். ஓராயிரம் எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்து ப்ரூக் ஷீல்ட்ஸ் தருகிற காதல் அட்டகாசத்தை எல்லாம் நம்ம ஊர் காதல் கதை களில் தந்துவிட முடியுமா!அப்படி பக்குவ நிலை காதலில் முடிவில்லா காதல் சேர்ந்திருக்கிறது. படம் பார்க்கிற முழு நேரத்திலும் இது பொய்யில்லை. இந்தக் காதலைச் சொல்லிக்கொள்ளலாம். சினிமா அறிந்தவர்களுக்கும், முதன் முதலாகத் தெரிந்தவர்களுக்கும் சேர்த்தே எடுத்த படம்.

Cold War

உண்மையான காதலுக்கு இலக்கணமேயில்லை. தாறுமாறாக நடிகர்களை வைத்துக்கொண்டு, இந்த காதல் மாதிரி எந்த வட்டத்திற்குள்ளும் சிக்காமல் திரைக் கதையை அமைத்துத் தருவதெல்லாம் நாட் ஈஸி. யாருக்கும் எந்த வகையிலும் கட்டுப் படாமல், இப்படித்தான் போகும் என எண்ண வைக்காமல் உங்களை அசத்திப்போடும் படம். பார்த்துப் பார்த்துக் கொண்டாட வைக்கும் காதலை உணர ‘Cold war’தான் சரி.

Heavenly Forest

‘காதல்’ என முணுமுணுத்தாலே பல உலக சினிமா ரசிகர்களுக்கு ‘ஹெவன்லி ஃபாரஸ்ட்’ ஞாபகம் வந்துவிடும். காதலுக்கு யார் சொன்ன வரைமுறைகளும் சரிப்பட்டு வராது. கணிக்க முடியாமல் ஒரு பயணம் தொடங்கி, எங்கெங்கோ போய் முடியும். காதல் ஏற்றுக்கொள்ளப்படுவதும், கல்யாணத்தில் போய் முடிவதெல்லாம் விஷயமே இல்லை. காதல் மட்டும்தான் என சொல்கிற படம். ஆத்மார்த்தமான க்ளைமேக்ஸ் எல்லாம் மறக்கவே முடியாத கனவு.

Love Story

1970ல் வெளிவந்து cult classic ஆக அப்படியே அச்சாரம் போட்டு நிற்கிறது. அகாதமி விருதுகள் பெற்றதில் ஆச்சர்யமில்லை. தன்னைத்தானே உயிருடன் வைத்துக்கொள்ள நம் ஞாபகங்களும் தேவை. கூடவே காதலும் அவசியம் எனச் சொல்கிற படம். ஆண், பெண் உறவை அதனதன் போக்கிலேயே கையாள ஒரு மனது வேண்டும். அதையும் சொல்லும் ‘லவ் ஸ்டோரி’.

தொகுப்பு: நன்மதி