காலம்தோறும் காதலர் தினம்...



காதல், மனிதனை மகத்தானவனாக்கும் மகோன்னதமான உணர்வு. தான், எனத் தன்னை உணரும் மானுடத் தன்னிலை, தன் அளவுக்கு மற்றமையையும் நேசிக்கக் கற்றுக்கொள்ளும் தளம் காதல்தான். அதனால்தான் காதல் வந்த மனிதன் முழு மனிதனாகிறான். மற்றமையை நேசிக்கும் விசாலத்தையும் மற்றமைக்காக உருகும் மாண்பையும் காதல் என்ற பேருணர்வுதான் ஒருவருக்குள் கிளர்த்துகிறது.

காதல், மனிதர்களுக்கு மட்டும் அல்ல... உலகில் உள்ள ஒவ்வொரு உயிருக்கும் உள்ள பொதுவான உணர்வு. பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் காமம்தானே உண்டு; காதல் உண்டா என்று கேட்பவர்கள் காதலின் தாத்பர்யம் புரியாதவர்கள். மற்ற உயிரைப் பொருட்படுத்தத் தொடங்கினாலே அது காதல்தான். எனவே, காக்கை, குருவிகூட காதலிக்கவே செய்கின்றன.

இந்தக் காதலைப் பாடாத இலக்கியங்களே உலகில் இல்லை. மனித மனதின் ஆதார உணர்வு என்பதால் உலகின் ஒவ்வொரு ஆதி மொழியிலும் காதல் ஆழங்கால்பட தன் சுவடைப் பதிந்தே வந்திருக்கிறது.

செம்மொழியான தமிழில் காதல் இரண்டாயிரம் வருடங்களாக இளமை கெடாத பாடுபொருளாகவே இருந்து வந்திருக்கிறது. காதலும் வீரமும் தமிழர்களின் அடையாளம் என்பார்கள் தமிழார்ந்த சான்றோர்கள். இலக்கியத்தையே அகம், புறம் என இரு பெரும் பிரிவாக வகுத்துக் கொண்ட மரபு நம்முடையது.

இதில், அகம் என்பது காதலேதான். இன்றிலிருந்து சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியங்களை சங்க இலக்கியம் என்கிறார்கள்.
இந்த ஆதி இலக்கியங்களில் அகத்திணைப் பாடல்கள் முழுதும் காதல்தான் கமழ்ந்து கிடக்கிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நிலங்களை ஐந்து திணைகளாக வகுத்த முன்னோர், அகத்திணைப் பாடல்களில் ஒவ்வொரு திணைக்கும் ஒவ்வொரு உரிப்பொருளைக் காதல் கவிதைகளுக்கு மையமாக்கினர்.

மலைப்பாங்கான குறிஞ்சியை புணர்தலும் புணர்தல் நிமித்தமுமான கவிதைகளுக்கு மையமாக்கினர். காடான முல்லையோ பிரிதலுக்கும், வயல் வெளிகள் நிறைந்த மருதம் ஊடலுக்கும், கடலோர நிலமான நெய்தல் இரங்கலுக்கும், வறண்ட பாலை பிரிதலுக்கும் உரிப்பொருள்களாயின.
கற்பு ஒழுக்கமும் களவு ஒழுக்கமும் நிறைந்த இந்த சங்க கால வாழ்வு படிக்கப் படிக்க போதையேற்றுவது. காதலின் பித்தம் தலைக்கேற காதலர்கள் ஊடலும் கூடலும் பிரிதலும் நோதலும் இரங்கலுமாகத் தம்முள் கொள்ளும் காதலுணர்வுகள் அபாரமானவை.

கரையோரப் புன்னை மரம் ஒன்றில் குருகுகள் என்னும் கொக்குகள் ஓய்வெடுக்கும் இரவில் தலைவனுக்காகக் காத்திருக்கிறாள் தலைவி. அலைகள் வந்து கரையின் மரத்தில் பட்பட்டென அறைய, மரத்தின் குருகுகள் எழுந்து பறப்பதும் மீண்டும் வந்து அமர்வதுமாக இருக்கின்றன.

கரை வந்து மோதும் அலைகள் அவளது ஓய்வற்ற எண்ண அலைகளாகின்றன. கரையின் இந்த நிம்மதியின்மை தலைவியின் அகத்தைச் சொல்லாமல் சொல்கிறது.

இன்னொரு கவிதையில் தங்கள் காதலை அன்றிலுக்கு உவமை சொல்கிறாள் ஒருத்தி. அன்றில் பறவை ஜோடியாகவே வசிக்கும் இயல்புடையது. குளத்து நீரில் ஒன்றோடு ஒன்றாக நீந்தி இன்புறும் அன்றில்கள் தங்களுக்கு இடையே ஒரு தாமரைப் பூ வரும் போது பிரியும் சில விநாடிகள்கூட தாங்க இயலாமல் வருந்துமாம்.

அப்படி அன்றில் போல கண நேரமும் உன்னைப் பிரிய முடியாது என்கிறது ஒரு சங்க காலக் காதல்.இப்படி, சங்க இலக்கியம் எங்கு நோக்கினும் காதல் ததும்பி வழிகிறது. அங்கிருந்து கொஞ்சம் நகர்ந்து காப்பிய காலத்துக்குள் வந்தால் சிலப்பதிகாரம் காதலைக் கொண்டாடித் தீர்ப்பதைக் காணலாம். நம் ஆதித் தமிழர்கள் காதலர் தினம் கொண்டாடியிருக்கிறார்கள் என்றால் இன்று பலருக்கும் அது புது செய்தியாக இருக்கும்.

ஆமாம்! நம் பழந்தமிழகத்தில் காதலர் தினம் இருந்தது. அப்போது அதன் பெயர் ‘காமன் பண்டிகை’ அல்லது ‘இந்திர விழா’. சோழர் தலைநகரான புகாரிலும் பாண்டியர் தலைநகரான மதுரையிலும் இந்திர விழா கோலாகலமாய்க் கொண்டாடப்பட்டிருக்கிறது.

அதுவும் எப்படி..? ஒருநாள் இருநாள் அல்ல... இருபத்தெட்டு நாட்கள் நீண்ட பெருவிழாவாக இது இருந்திருக்கிறது!இதனை, ‘நாளேழ் நாளினும் நன்கறிந்தீர்’ என்ற வரிகளால் அறியலாம். தூங்கெயில் எறிந்த தொடிதோள் செம்பியன் என்ற சோழ மன்னன்தான் இந்திர விழாவைத் தொடங்கினான் என்பார்கள்.

இறுதி நாளான இருபத்தெட்டாம் நாள்தான் இந்திர விழா. ஆண்களும் பெண்களுமாக இளைய சமுதாயம் கொண்டாடித் தீர்த்திருக்கிறது.
முந்தைய இருபத்தேழு நாள்களும் முக்கியமானவை. கற்பகக் கோட்டத்தில் வெள்ளைக் கொடியேற்றி விழாவைத் தொடங்குவார்கள். பல கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கும். இசையும் கூத்தும் பாட்டும் விண் பிளக்கும். கோலாகலம் மிகுந்திருக்கும்.

ஒருபுறம் ஆடல் பாடல் என்றால் மறுபுறம் தமிழறிஞர், தத்துவ அறிஞர் பட்டி மண்டபங்களில் சொற் சிலம்பமாடுவார்கள். இதன் நிறைவு நாளான இந்திர விழாதான் காமன் விழா. கொண்டாட்டம் உச்சத்துக்குப் போகும். தமக்குரிய இணையோடு இளையோர் உலாவி மகிழ்வர்.

பின்னாளில் உருவான கட்டுக்கோப்பான நிலப்பிரபுத்துவமும் சாதியமும் இந்த இந்திர விழாவை அழித்தொழித்துவிட்டன. இந்திர விழா பற்றிய சுவையான தகவல்களைச் சொல்லும் சிலப்பதிகாரத்தின் தொடக்கத்திலேயே முதலிரவில் மஞ்சத்தின் மேல் கோவலனும் கண்ணகியும் அமர்ந்திருக்கும் காட்சிதான் இருக்கிறது.

‘மாசறு பொன்னே, வலம்புரி முத்தே, காசறுவிரையே, கரும்பே, தேனே...’ என இளங்கோ அடிகள் கோவலனின் சொல்லாக கண்ணகியின் அழகை வர்ணிக்கும் கவிதை உலகின் முக்கியமான காதல் கவிதைகளில் ஒன்று.காப்பிய காலத்தைவிட்டுத் தொடர்ந்து வந்தால் பக்தி இலக்கியக் காலம் வருகிறது.
பக்தி இலக்கியத்தில் காதலுக்கு ஏது இடம் என்று எண்ண வேண்டாம். ஆண்டாளையும், காரைக்கால் அம்மையாரையும், மாணிக்கவாசகரையும் படியுங்கள். அதில் காதல் பக்தி வடிவெடுத்ததா, பக்தி காதல் வடிவெடுத்ததா என்று திக்குமுக்காடிப் போவோம்.

தமிழின் இந்த பக்தி இயக்கம்தான் பின்னாளில் வட இந்தியா வழியாக பாரசீகம் மற்றும் மத்திய கிழக்கை அடைந்து கபீர் முதல் சூஃபி ஞானிகளான ரூமி, உமர்கய்யாம் உள்ளிட்டவர்களையும் உருவாக்கியது. கிறிஸ்துவத்தின் சாலமோன் பாடல்களின் நாயகன் நாயகி ‘பா’வத்தின் ரிஷி மூலமும் நம் பக்தி இயக்கக் கவிதைகள்தான் என்பதையும் இந்த இடத்தில் பெருமிதமாகச் சொல்லலாம்.

பக்தி இலக்கியத்தைவிட்டு காவிய காலத்துக்கு வந்தால் கம்பன் என்னும் பெருங்கவிஞன் நிற்பதைப் பார்க்கலாம். கம்பன் சொல்பட்டு காதல் தளிர்த்ததா, காதல் என்னும் உணர்வுபட்டு கம்பன் கவி தளிர்த்ததா என்பதைச் சொல்வது கடினம். ‘அண்ணலும் நோக்கினார்; அவளும் நோக்கினார்’ என்பது உட்பட பல அழகிய காதல் நயங்களை எல்லாம் கம்பன் நமக்கு எழுதிக் காட்டியிருக்கிறார்.அங்கிருந்து கிளம்பி சிற்றிலக்கிய காலத்துக்குள் நுழைந்தால் அங்கும் காதல் ஆல்போல் தழைத்திருப்பதைக் காணலாம்.

சிற்றிலக்கியங்களில் காதல் ரசம் சொட்டும் இலக்கியங்கள் கொட்டிக்கிடக்கின்றன. கலிங்கத்துப்பரணி, நந்திக்கலம்பகம், குற்றாலக்குறவஞ்சி போன்றவற்றில் காதலின் ஆனந்தத் தாண்டவத்தைக் காணலாம்.மறுமலர்ச்சிக் காலம் அல்லது நவீன காலத்தில் பாரதிதான் காதலின் உச்சம்.

ஆண்டாள் உள்ளிட்ட மரபின் வேர்களை உள்வாங்கிக்கொண்ட பாரதியால் படைக்கப்பட்ட கண்ணன் பாட்டு, குயில்பாட்டு இரண்டுமே உச்சமான காதல் கவிதைகளைக் கொண்டிருக்கின்றன. ‘தாளம் படுமோ தறிபடுமோ’ என்று காதலின் தவிப்பில் புலம்பிய பாரதிக்குக் கொஞ்சமும் குறைவில்லாதது பாரதிதாசனின் காதல்.

‘ஆடை திருத்தி நின்றாள் அவன்தான் ஆயிரம் ஏடு புரட்டுகின்றான்’ என்ற ஒற்றை வரியில் ஷேக்ஸ்பியருக்கு சவால்விடுவார் பாரதிதாசன். ‘பாடம் படித்து நிமிர்ந்த விழிதனில் பட்டுத் தெறித்தது மானின் விழி’ என்ற காட்சி எந்த உலகப்பட இயக்குநரும் இதுவரை வைத்திராதது.

இப்படி, காலங்காலமாக காதல் தமிழோடு தொடர்ந்து வருவது; தமிழோ காதலால் தழைத்து வாழ்வது!காதலர் தினத்தைக் கொண்டாடுவதும் தமிழைக் கொண்டாடுவதும் வேறு வேறு அல்ல. ஒரு நல்ல காதல் கவிதையுடன் காதலைக் கொண்டாடுவது நூறு வகைப் பூக்களோடு கொண்டாடுவதற்கு இணையானதன்றோ!

இளங்கோ கிருஷ்ணன்