காதல் என்பது அலங்காரம் செய்யப்பட்ட காமம்!விளக்குகிறார் மனநல மருத்துவர்

காதல் என்பது என்ன?

அதைப் புரிந்துகொள்ள, அதை வெற்றிகரமாகச் செயல்படுத்திக்கொள்ள காதலின் இயல்பையும், நுட்பத்தையும் நாம் புரிந்துகொள்வது நல்லது.
காதல் என்பது நாம் செய்யக்கூடிய ஏதோ ஒரு செயல் அல்ல. காதல் அல்லது அன்பு கொள்வது; எல்லோரிடமும் இயல்பாகவே இருக்கும் ஒன்று. இதைக்  குணாதிசயமாக வைத்துக்கொண்டால், அதன்பிறகு நம் தேவைகளுக்கேற்ப பல உறவுநிலைகள் தானாகவே நிகழும்.

சமீப காலமாக உடல் தொடர்பான உறவுமுறைகளைப் பற்றியே பேசுகிறோம். அந்த உறவுமுறைகளில்தான் அதிகபட்ச நெருக்கமும் நிகழும், எதிர்ப்பும் நிகழும்; பெரும்பாலானவர்களுக்கு. அனைவருக்கும் அல்ல.இந்நிலையில் இன்றைய தலைமுறையினரிடையே காதல் என்பது உளவியல் ரீதியாக என்னவாக இருக்கிறது என்பது பற்றி விளக்குகிறார், மனநல மருத்துவர் ராமானுஜம் கோவிந்தன்:  

“காதல் என்பது அலங்காரம் செய்யப்பட்ட காமம். மனிதனின் இயற்கைத் தேவையான பசியைப் போல், காமமும் ஒருவகையான பசிதான். மனிதனின் பரிணாம வளர்ச்சியில் எது சாப்பிட வேண்டும், எப்போது சாப்பிட வேண்டும் என்கிற வரைமுறை எப்போது வந்ததோ அப்போது காமத்திலும் சில கட்டுப்பாடுகள் உருவாகின. காதல் மலரத் தொடங்கியதும் இந்த இடத்தில்தான்.

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உள்ள வித்தியாசம் இங்கு துல்லியமாக மாறியது. மனிதர்களுக்கு காதல் எப்படி வெளிப்படும் என்பது சமூகத்தால் வடிவமைக்கப்பட்டது. அதன் பின் இதன் பன்முகத்தன்மையினால் புனிதமாகப் பார்க்கப்பட்டது.    

‘ஒருவனுக்கு ஒருத்தி, காதல் என்பது ஒரு முறைதான் வரும்’ என்றெல்லாம் நாயகர்கள் கூறிய வசனங்களைக் கேட்டிருப்போம். இந்த வசனங்கள் பேசப்பட்ட காலத்தில் காதல் தோல்வி அடைந்தால் தற்கொலை அல்லது வாழ்நாள் முழுவதும் அவர்கள் நினைவிலேயே வாழ்வது என்ற நடைமுறை சமூகத்தில் நிலவியதை நாம் மனதில் கொள்வது நல்லது.   

போலவே சமீப காலங்களாகக் காதலின் புனிதம் குறைந்து வருகிறது. இதற்கும் பொருளாதார மற்றும் தனி மனித தேவைகளின் அளவு அதிகமாகிவிட்டதற்கும் தொடர்பிருக்கிறது...’’ என்று சொல்லும் டாக்டர் ராமானுஜம் கோவிந்தன், ‘இதனால், என் சந்தோஷங்களுக்கும் விருப்பங்களுக்கும் குறுக்கே சமுதாயம் வரக் கூடாது என அனைவரும் எண்ணத் தொடங்கியுள்ளனர்...’ என்கிறார்.

‘‘தாழ்வு மனப்பான்மை உள்ள சிலர், காதலிக்கத் தொடங்கும்போது அவர்களது இமேஜ்தான் மற்றவர்கள் முன்னால் உயர்வாகத் தெரியும். இதற்காகவே சிலர் காதல் வயப்படுகின்றனர். இவர்களால் காதல் தோல்வியினைத் தாங்கிக்கொள்ள முடியாத போது, தற்கொலை - ஆசிட் வீச்சு போன்ற காரியங்களில் இறங்குகின்றனர். இதுவும் தனிமனித தேவையின் காரணமாக அதிகம் காணப்படுவதுதான்.   

இன்றிருக்கும் இளைஞர்களுக்கு பெரும் மன சந்தோஷத்தையும் அதே வேளையில் மன உளைச்சலையும் கொடுக்கும் விஷயமாக சமூக வலைத்தளங்கள் இருக்கின்றன.முன்னெல்லாம் ஒரு பெண்ணையோ, ஓர் ஆணையோ சந்தித்து காதல் சொல்வதென்றால் காலம் எடுக்கும்.

இந்த இடைவெளியில் பரஸ்பரம் ஒருவரைப் பற்றி மற்றவர் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் இருந்தன. இன்று முன் பின் தெரியாதவர்களிடம் காதல் வயப்பட்டு, யார் இவர்கள் என அறிவதற்கு முன்பே காதலிக்கத் தொடங்கி பிரேக் அப்பில் முடிந்து விடுகிறது. சமூக வலைத்தளங்கள் இந்த விஷயத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

அதேபோல் திருமண உறவை மீறிய காதல் இன்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதற்கும் தனிமனிதத்  தேவை மட்டுமே அடிப்படையாக அமைகிறது.எல்லோருக்கும் ஓர் எதிர்பார்ப்பு இருக்கிறது. வாழ்க்கைத் துணை நன்றாகப் பேச வேண்டும் என்பதில் தொடங்கி, பாலியல் தேவை உட்பட சகல எதிர்பார்ப்புகளும் சகலரிடமும் இருக்கின்றன.

தவிர நீண்ட நாட்களாக ஒரே துணையுடன் இருப்பதும் பலருக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது, ‘புதுசா ஏதாவது எனக்கு வேணும்...’ என்ற தனி மனித அவா, காதல் விஷயத்தில் எதிரொலிக்கிறது...’’ என்ற ராமானுஜம் கோவிந்தன், இப்படி தனி மனித தேவைகள் முன்னிலை வகிப்பதால் பலரும் இன்று நட்பு, காதல், காமம் ஆகியவற்றுக்கு இடையில் வித்தியாசம் காண முடியாமல் தவிக்கின்றனர் என்கிறார்.

‘‘சொல்லப்போனால் ஒருவனை / ஒருத்தியை காதலிக்க வேண்டும் என்றில்லாமல் பலரை ஒரே நேரத்தில் காதலித்து, இறுதியாக ஒருவரோடு வாழலாம் என முடிவு செய்கின்றனர். இந்த மனநிலைக்கும் உலகளாவிய பொருளாதார நிலைக்கும் நிச்சயம் தொடர்பிருக்கிறது... ஆம்... காதல் என்பதே சமூகப் பொருளாதார நிலையின் எதிரொலிதான்...’’ அழுத்தம்திருத்தமாகச்சொல்கிறார் ராமானுஜம்கோவிந்தன்.

அன்னம் அரசு