கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்-50



உயர் கல்வியில் உயர்வு தரும் குருவருள் ‘ஸ்ரீ  குரு பாஹி மாம்! பரம கிருபாளோ பாஹி மாம்! சிருங்கேரி ஜகத் குரு பாஹி மாம்!’ கூடி இருந்த மக்கள் கூட்டம் ஒரே குரலில் உரக்க ஜபித்தபடி இருந்தது.

அந்த நாம ஜபம் ஏற்படுத்திய ஒரு தெய்வீக அமைதி, அந்த இடத்திற்கு மேலும் ஓர் அழகைச் சேர்த்தது.காவிரி பாய்ந்து வளம் சேர்க்கும் கரூர் பெரும் பதியை உய்விக்க சிருங்கேரி சாரதா மட பீடாதிபதி ஸ்ரீ  ஸ்ரீ  ஸ்ரீ சச்சிதானந்த சிவாபினவ நரசிம்ம பாரதி ஸ்வாமிகள் விஜயம் செய்கிறார் என்ற செய்தி கேட்டதும் அத்தனை மக்களும் கூடிவிட்டார்கள்.  ஒவ்வொருவரும் தன்னால் முடிந்த ஒரு பொருளை கையில் ஏந்தியபடி ஆச்சாரியாருக்காகக் காத்திருந்தார்கள்.

அவர்கள் அனைவரும் எதிர்பார்த்த அந்த சுபத் தருணமும் வந்தது. இரவின் மை இருளைப் போக்கியபடி கீழ்வானத்தில், இரவி உதிப்பது போலவும், அறியாமை என்னும் இருளைப் போக்கும் ஞான சூரியனைப் போலவும் இருந்தது அந்தப் பல்லக்கு. மெல்ல மெல்ல அது அசைந்து வரும் தோரணையே மனதை மயக்கியது. உள்ளிருந்த படி ஸ்வாமிகள், தனது வலது கையை உயர்த்தி ஆசி வழங்கிய படி இருந்தார்.

ஆசி வழங்க கையை உயர்த்தி இருக்கவே வேண்டாம் என்பது போல, அவரது திருக்கண்கள் அருளை மழையாகப் பொழிந்தன. அதில் திளைத்த பக்த கோடிகள் எல்லாம் ஆனந்தப் பரவசத்தை அடைந்தார்கள்.

ஆனால், பல்லக்கு தூக்கும் ஸ்ரீ பாதம் தாங்கிகளின் முகம் மட்டும் வஞ்சனை இல்லாமல் அவர்களது உடல் வலியைப் பிரதிபலித்தது.
அதிகமான பாரம் தோளை அழுத்த, விழி பிதுங்கி நின்றார்கள் அவர்கள்.

ஆச்சார்யாள் இவ்வளவு கனம் கனக்கவே மாட்டார். மாபெரும் துறவி! உண்ணாமல் உறங்காமல் விரதம் இருப்பவர். பல சமயங்களில் பேச்சைக் கூடத் தவிர்த்து மவுன விரதம் இருப்பவர். ஆதலால் அவரது உடல் மெலிந்தே இருக்கும். அதிக பாரம் இருக்காது. தவிர இதே சேவகர்கள் பல ஊர்களுக்கு சுவாமிகளைச் சுமந்து செல்லும் பாக்கியத்தைப் பெற்றவர்கள். ஆகவே, பலமுறை அவரைச் சுமந்திருக்கிறார்கள்.

எனவே, திடீரென்று ஏற்பட்ட இந்த பாரம், ஆச்சாரியாரின் உடல் பாரமும் இல்லை, பல்லக்கின் பாரமும் இல்லை என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். எப்படியும் இதைப் பொறுத்துக் கொள்ளலாம் என்று இருந்தவர்களின் பொறுமைக்கும், அந்த பாரம் பெரிய சவாலாக இருக்கவே அனைவரும் வாயை விட்டு அலறவே ஆரம்பித்து விட்டார்கள்.

‘‘சுவாமி வலிக்கிறது... பாரம் தாங்கவில்லை...’’ என்று அனைத்து பாதம் தாங்கிகளும் ஒரேநேரத்தில் ஒரேகுரலில் அலறவே ஸ்வாமிகள் துடிதுடித்துப் போனார். ‘‘உடன் இறக்குங்கள் பல்லக்கை...’’ என்று ஸ்வாமிகள் கட்டளையிட்டார். பல்லக்கு இறக்கப்பட்டது. சரேல் என்று வெளிவந்த ஸ்வாமிகள், பாதம் தாங்கிகளின் தோள்களைப் பார்த்தார். பெரிதாக வீங்கி இருந்தது.

அதைக் கண்டதும் ஸ்வாமிகள் இடி கேட்ட சர்ப்பம் போல ஆனார். ‘‘பாழாய்ப் போன இந்த உடல், இப்படி இத்துணை பேருக்கு பாரமாகி விட்டதே...’’ என்று புலம்ப ஆரம்பித்து விட்டார். ‘‘சுவாமி உங்களை எத்தனை முறை இந்த எளியவர்கள் சுமந்திருப்போம்..? ஒருமுறைகூட தங்கள் உடலோ அல்லது இந்த பல்லக்கோ இப்படி கனத்ததில்லை. ஏன்... இந்த ஊருக்கு அடி எடுத்து வைக்கும் வரைக்கும் கூட வலி தெரியவில்லை, பாரமும் இல்லை.

எப்போது இந்த ஊரில் அடி எடுத்து வைத்தோமோ, அப்போதிலிருந்தே பல்லக்கு கனக்க ஆரம்பித்து விட்டது சுவாமி. இந்த ஊரில்தான் மர்மம் இருக்கிறது. நீங்கள் வருந்துவதைக் கண்டு எங்கள் குலையே நடுங்குகிறது. அமைதி அடையுங்கள்...’’ பாதம் தாங்கிகளின் தலைவன் ஆச்சாரியாரின் அருகில் வந்து வணங்கியபடியே மொழிந்தான்:

‘‘அது எல்லாம் பிறகு இருக்கட்டும்... முதலில் உங்கள் காயத்திற்கு மருத்துவம் பார்க்க வேண்டும். அந்த அம்பிகை உங்களுக்கு துணை இருப்பாள்...’’ நொடியில் தன்னைத் தேற்றிக்கொண்டு அடுத்து ஆகவேண்டிய காரியங்களுக்கான கட்டளையை சற்றும் தாமதிக்காமல் வழங்கினார் ஸ்வாமிகள்.

மருத்துவம் தொடங்கியது. அவர்களுக்கு நல்ல உடல் வலிமையைத் தர, ஸ்வாமிகள் சாரதாம்பாளை வேண்டினார். பிறகு, ‘‘இந்த ஊரில் ஏதாவது விசேஷம் உண்டா?’’ கனிவான குரலில் கூடி இருந்த கூட்டத்தைப் பார்த்துக் கேட்டார். கூட்டமே இந்தக் கேள்வியின் முன் திருதிருவென்று விழித்தது.

கூட்டத்தில் இருந்த ஒரு முதியவர் மட்டும், ஆச்சார்யாளின் அருகில் வந்து அவரை வணங்கினார்: ‘‘சுவாமி! இங்குதான் திகம்பர, அவதூத சன்யாசி,    சதாசிவ பிரும்மேந்திரரின் ஜீவசமாதி இருக்கிறது. நான் அறிந்த வரையில் கருவூர் அருகில் இருக்கும், நெரூர் என்னும் இந்த ஊருக்கு இதையும் தாண்டி பெரிய ஒரு மகத்துவம் வேறு இல்லை...’’ பக்தி சிரத்தையோடு கூறினார் அந்த முதியவர்.

அவர் இப்படி கூறியதைக் கேட்டதும் ஆச்சாரியார் தன்னையும் அறியாமல் தனது கைகளைக் குவித்தார். பெரும் புதையலைக் கண்ட மகிழ்ச்சி அவரது அருள் பொழியும் வதனத்தில் தெரிந்தது. ‘‘அவதூத திகம்பர சன்யாசியா! அந்த மகானைப் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை எனக்கு சொல்லுங்கள்...’’ என்று அவரையும் அறியாமல் அவரது இதழ்கள் அந்த முதியவரை வேண்டிக் கொண்டது.

அந்தப் பெரியவர், பிரும்மேந்திரரின் பெருமைகளை ஒவ்வொன்றாக விளக்க விளக்க, சுவாமிகளின் முகத்தில் பிரகாசம் கூடிக் கொண்டே போனது. குவிந்துவிட்ட அவரது கைக ளும், நீர் சொரியும் கண்களும், பக்தியைப் பிரதிபலிக்கும் முகமும், ஸ்வாமிகளின் உள்ளம் என்னும் கோயிலின் ராஜ சிம்மாசனத்தில் சதாசிவர் அனாயாசமாக ஏறி அமர்ந்துவிட்டதை சொல்லாமல் சொல்லியது.

‘‘அவரை நான் தரிசிக்க வேண்டுமே!’’ ஆர்வ மிகுதியில் கதை சொல்லிக் கொண்டிருந்த பெரியவரை இடைமறித்துக் கேட்டே விட்டார் ஸ்வாமிகள்.
‘‘சுவாமி! அம் மாபெரும் மகான் கண்ணனோடு இரண்டறக் கலந்து பல வருடங்களாகி விட்டன.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவர் ஒரே நேரத்தில் தனது யோக பலத்தால் ஐந்து இடங்களில் சமாதி அடைந்தார் என்பதுதான்! இந்த ஐந்தில் பாகிஸ்தானில் இருக்கும் கராச்சியும் அடங்கும்!’’ அசாதாரணமான விஷயத்தை சர்வ சாதாரணமாகச் சொல்லிவிட்டு பணிவாக சுவாமிகள் இடப்போகும் அடுத்த கட்டளைக்காகக் காத்திருந்தார் பெரியவர்.

கேட்ட ஸ்வாமிகள் பல கணங்கள் மவுனமாகி விட்டார். அவரே பேசட்டும் என்று கூடியிருந்த அனைவரும் காத்திருந்தார்கள்.

‘‘பரவாயில்லை! என்னை அவரது சமாதிக்காவது அழைத்துச் செல்லுங்கள். இறைவனுக்கு அழிவில்லை என்றால், இறைவனோடு இரண்டறக் கலந்த நல்லுள்ளங்களுக்கும் அழிவில்லை. அவர் நிச்சயம் நமக்கு அருள் செய்வார்!’’ ஸ்வாமிகளின் குரலில் நம்பிக்கை பொங்கி வழிந்தது.

அந்த நம்பிக்கை என்னும் வெள்ளத்தில் சூரியனும் மூழ்கிவிட்டான் போலும். ஆம். இரவி மறைந்து இரவு தலை காட்டிவிட்டது.அனைவரும் சேர்ந்து ஸ்வாமி களுடன் சதாசிவரின் சமாதிக்குச் சென்றார்கள். பயபக்தியோடு சதாசிவரின் சமாதியை வணங்கிய ஸ்வாமிகள் மோனத்தில் ஆழ்ந்துவிட்டார்.

கோயில் பட்டரும் இரவு பூஜைகளைச் செய்தார். ஸ்வாமிகள் ஆழ்ந்த மோனத்தில் இருப்பதால் அவரது தியானத்தைக் கலைக்காமல் சன்னதியின் கதவைச் சாத்தினார். தாள் போடக் கூடாது என்பதில் வெகு கவனமாக இருந்தார் அவர்.

ஸ்வாமிகள் எப்போது கண் திறப்பார் என்று காத்திருந்த மக்களில் பலர் அங்கேயே கண்ணயர்ந்து விட்டார்கள். உறங்காதவர்கள் ஸ்வாமிகளின் கட்டளைக்காகக் காத்திருந்தார்கள். நொடிகள் நிமிடங்களாகி, நிமிடங்கள்மணிக்கணக்காகின.

திடீரென்று சாத்தப்பட்ட சன்னதியில் இருந்து யாரோ இருவர் பேசும் குரல் மட்டும் கேட்டது. அதில் ஒரு குரல் ஸ்வாமிகளினுடையது என்பதை அவரது பக்தர்கள் நொடியில் இனம் கண்டு விட்டார்கள். மற்றொரு குரல்தான் யாருடையது என்று தெரியவில்லை. பேசுவதும் விளங்கவில்லை.

உள்ளே  சென்று பார்க்கலாம் என்றால் ஸ்வாமிகளின் தியானத்தைக் கலைத்த பாவம் வருமோ என்ற பயம். என்ன செய்வதென்று விளங்காமல் எல்லாரும் விழித்தபடி இருந்தார்கள். பொழுது விடியும்போது சன்னதியை எப்படியும் திறக்க வேண்டி இருக்கும்.

அப்போது ஆச்சாரியார் சதாசிவரைப்பற்றிய கவிதை ஒன்றைச் செய்திருந்தால், அவரை ஸ்வாமிகள் தரிசித்து விட்டார் என்பது நூற்றுக்கு நூறு உறுதி. ஆகவே, நாளைக் காலை வரைக்கும் காத்திருப்போம் என்று தீர்மானிக்கப்பட்டது.

ஆனால், ஆச்சாரியார் தனது சீடர்களை அதிகம் காக்க வைக்கவில்லை. சிறிது நேரத்திற்கெல்லாம் கதவைத் திறந்தார். ‘‘என்னதான் ஆச்சு தாத்தா..?’’ இம்முறை ஆர்வம் தாங்காமல் துள்ளியது கிருஷ்ணன்! ‘‘எல்லாரும் எதிர்பார்த்த மாதிரியே சுவாமிகள் சதாசிவரை தரிசனம் செய்திருந்தார். அதற்கு சாட்சியாக ‘சதாசிவேந்திரஸ்தவம்’ என்ற கவிதையை அவர் மேல பாடியிருக்கார்...’’ பக்தியுடன் சொன்னாள் ஆனந்தவல்லி.  

‘‘ஆச்சார்யாருக்கு இருந்த சில சந்தேகங்களுக்கு விளக்கம் தந்தார் சதாசிவர்னு சொல்லுவாங்க. அதனால எல்லா சிருங்கேரி ஸ்வாமிகளும், பீடம் ஏறின பிறகு நெரூருக்கு வந்து சதாசிவரை தரிசிச்சுட்டு போவாங்க.

இப்படி ஒரு பெரிய மகானுக்கே, ஆன்மீக முன்னேற்றத்தில இருந்த சந்தேகத்தைத் தீர்த்து வைத்தவர் சதாசிவர். அதனாலதான் உன் உயர் படிப்புக்கும் அவர் உதவி செய்வார்னு சொன்னேன்...’’ தன்னருகில் இருந்த கண்ணனை அணைத்தபடியே எதிரில் அமர்ந்திருந்த கிருஷ்ணனைப் பார்த்துச் சொன்னார் நாகராஜன்.  

தனது கஷ்டங்கள் அனைத்தும் விலகிவிடும் என அந்தக் கணமே கிருஷ்ணனுக்குத் தெரிந்தது. ‘‘தள்ளுடா...’’ கண்ணனை விலகச் சொல்லிவிட்டு ‘‘பாட்டி... இப்படி தாத்தா பக்கத்துல வந்து நில்லுங்க...’’ என்றான்.நாகராஜனின் அருகில் வந்து புன்னகையுடன் நின்றாள் ஆனந்தவல்லி.சாஷ்டாங்கமாக அவர்களை கிருஷ்ணன் நமஸ்கரித்தான்.அவன் எழுந்ததுமே கண்ணனும் தன் பங்குக்கு அவர்களை வணங்கினான்!

(கஷ்டங்கள் தீரும்)

கோயிலின் பெயர்:
நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரும்மேந்திரர் கோயில்
சிறப்பு:
உயர் கல்வியில் உயர்வு மற்றும் நிம்மதியான வாழ்வு.
எப்படிச் செல்வது:  
கரூர் பேருந்து நிலையத்திலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது.
நேரம்:
காலை 7 மணி
முதல் மதியம் 1 மணி வரை
மாலை 4:30 மணி
முதல் 7 மணி வரை

செய்தி: ஜி.மகேஷ்

ஓவியம்: ஸ்யாம்