நியூஸ் சாண்ட்விச்காதலர் தினத்தன்று, மாணவர்கள் பெற்றோர்களுக்குப் பூஜை

குஜராத் மாநிலம் சூரத் நகர மாவட்ட கல்வி அலுவலர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி,  நகரத்திலுள்ள பள்ளிகளில் எல்லாம் பிப்ரவரி 14 அன்று மாணவர்கள் பெற்றோரை  வழிபடும் ‘மாத்ரு - பித்ரு பூஜன் திவாஸ்’ எனப்படும் நிகழ்ச்சி ஏற்பாடு  செய்யவேண்டுமாம். இதன் வழியாக கலாசாரத்தை வளர்க்க வேண்டுமாம்.சுற்றறிக்கையில் உள்ள இந்த விஷயம், மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்கர் - கவனிக்கத் தவறிய பெண் இயக்குநர்கள்

2020 ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார், ஹாலிவுட் நடிகை நடாலி போர்ட்மன். காரணம், அவரது அழகையும் தாண்டி, அவர் ஆடையில் பொறிக்கப்பட்டிருந்த பெயர்கள்! அவை அனைத்துமே கடந்தாண்டில் வெற்றிப் படங்கள் தந்து அதிகம் பாராட்டப்பட்ட பெண் இயக்குநர்களின் பெயர்கள்!இவர்களை ஆஸ்கர் அமைப்பு கவனிக்கத் தவறியதைச் சுட்டிக்காட்டும் விதத்தில், அவர்களது பெயர்களை தன் ஆடையில் பொறித்து உலக ரசிகர்களின்  கவனத்தைப் பெற்றுள்ளார்.

ரேஷன் கடைகளில் போலி விரல் ரேகைகளால் நூதன மோசடி

அகமதாபாத்தில் போலி ஆவணங்கள் மூலம் ரேஷன் உணவுப் பொருட்களைத் திருடி வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். விஷயம் இதுவல்ல. அவர்களிடமிருந்து 1100க்கும் அதிகமான, சிலிக்கான் போன்ற பொருளைக்கொண்டு செய்யப்பட்ட 1100 போலி விரல் ரேகைகளையும் போலீசார் கைப்பற்றியிருக்கிறார்களே... அதுதான் மேட்டர்.

ரேஷனில் உணவுப் பொருட்கள் திருட உபயோகிக்கப்பட்ட இவ்விரல் ரேகைகளைக் கொண்டு, முக்கியமான ஆவணங்களையும், மொபைல் ஆப்களையும், கைரேகைகளை மட்டுமே சார்ந்திருக்கும் பல பயோமெட்ரிக் பாதுகாப்பையும் தகர்த்து, தகவல்களைத் திருடலாமாம்.
உஷாரா இருங்க... என போலீசார் எச்சரிக்கிறார்கள்.

தண்ணீர்க் குழாயில் மதுபானம்

கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தில் வசிக்கும் சாலமன் அவென்யூவைச் சேர்ந்த மக்கள், வழக்கம்போல் அன்றும் காலையில் தங்கள் வீட்டின் தண்ணீர்க் குழாயை திறந்தார்கள்.பார்த்தால், குடிநீருக்குப் பதில் சாராயம் வந்தது!அப்பகுதியில் இருந்த 18 வீடுகளிலும் இதேதான் நிலை!

விசாரித்ததில், சட்டவிரோத மதுபானத்தைக் கைப்பற்றிய அதிகாரிகள், அதை எப்படி அப்புறப்படுத்துவது எனத்தெரியாமல், குழி தோண்டி அவற்றைக் கொட்டியுள்ளனர். அது கொஞ்சம் கொஞ்சமாக நிலத்தடி நீருக்குள் கலந்து அப்பகுதி மக்களின் வீட்டுக் குழாயில் வந்திருக்கிறது!l

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்