ரத்த மகுடம்-92
பிரமாண்டமான சரித்திரத் தொடர்
நெகிழ்ந்த நரம்புகள் சட்டென பாறையைப் போல் கடினமாகின.‘‘என்ன கேட்டீர்கள்..?’’ கரிகாலனை உதறியபடியே சிவகாமி நாசி துடிக்கக் கேட்டாள். உதறியவளை இழுத்து அணைத்தான் கரிகாலன்: ‘‘ஒரு காத தொலைவில் இருந்தபடி ஒருவர் சுவாசித்தாலும் அந்த ஓசையை உள்வாங்கும் இயல்பு படைத்தவள் நீ என்பது உலகுக்கே தெரியும்... அப்படியிருக்க உன் செவியை வருடிய என் சொற்களின் அர்த்தம் உனக்குப் புரியவில்லையா..?’’ ‘‘இல்லை...’’‘‘நம்பும்படி இல்லையே..?’’‘‘இதுவரை எதைத்தான் நம்பியிருக்கிறீர்கள்..?’’
 ‘‘அனைத்தையும் நம்புவதால்தானே சகலத்தையும் நம்பாமல் இருக்கிறேன்!’’ ‘‘இந்த வார்த்தை ஜாலங்கள் என்னிடம் வேண்டாம்...’’ சீறியபடி அவனை விட்டு விலகினாள்: ‘‘முத்துக்கள் உதிர்ந்தாலும் பரவாயில்லை... சொல்லுங்கள்... என்ன கேட்டீர்கள்..?’’‘‘அதங்கோட்டாசான் உயிருடன் இருப்பதை சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரிடம் தெரிவித்து விட்டாயா என்று கேட்டேன்...’’‘‘இதை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்..?’’‘‘உன்னிடம் கேட்காமல் வேறு யாரிடம் வினவ முடியும்..?’’ ‘‘உரியவரிடம்...’’‘‘அவரிடம்தானே கேட்டுக் கொண்டிருக்கிறேன்!’’
எரித்து விடுவதுபோல் கரிகாலனைப் பார்த்தாள் சிவகாமி: ‘‘போதும்... விளையாடுவதற்கும் எல்லையிருக்கிறது...’’ ‘‘அந்த எல்லையை வகுத்தது யார் சிவகாமி..?’’‘‘நீங்கள்!’’‘‘நானா..?’’‘‘ஆம்... கணம்தோறும் எல்லையை விரிவுபடுத்திக்கொண்டே செல்கிறீர்கள். இதோ, இப்பொழுது சாளுக்கிய மன்னரிடம் ஏதோ தகவலைச் சொல்லிவிட்டாயா என்று கேட்டீர்களே... அப்படி!’’ ‘‘இது எல்லையை விரிவாக்கும் செயலா..?’’
‘‘இல்லையா..? சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தருக்கும் எனக்கும் என்ன தொடர்பிருக்கிறது..?’’ ‘‘அதைச் சொல்லாமல் நீதானே விளையாடிக் கொண்டிருக்கிறாய்!’’‘‘இன்னமும் என்னை நீங்கள் நம்பவில்லை... அப்படித்தானே..?’’ உதட்டைக் கடித்தபடி கேட்ட சிவகாமி, சட்டென திரும்பி நடக்கத் தொடங்கினாள்: ‘‘என் அண்ணன் என்னை நம்புகிறார்... அது போதும்...’’
அவளுடன் இணைந்தபடியே கரிகாலன் நடக்கத் தொடங்கினான்: ‘‘அண்ணனா..? அது யார் சிவகாமி... நான் அவரைச் சந்தித்ததேயில்லையே!’’ நின்ற சிவகாமி தன் காலை உயர்த்தி ஓங்கி தரையை அடித்தாள்: ‘‘பல்லவ இளவரசர் இராஜசிம்மர்தான் என் அண்ணன்... உங்கள் முன்னால்தானே என்னை தன் சகோதரி என்றார்... அதற்குள் மறந்துவிட்டீர்களா..?’’
‘‘குடிமக்கள் அனைவரையும் தன் உடன் பிறந்தவர்களாக நினைப்பது அவரது வழக்கம்... அப்படி...’’ ‘‘என்னையும் தன் சகோதரியாக ஏற்றுக்கொண்டார்... பூவை புஷ்பம் என்றும் சொல்லலாம்... மலர் என்றும் அழைக்கலாம்... எப்படியிருந்தாலும் அது பூதான்... நான் அவர் சகோதரிதான்... எனவே...’’
‘‘பல்லவ பிரஜை என்கிறாய்... சாளுக்கிய மன்னருக்கும் உனக்கும் தொடர்பேதும் இல்லை என்கிறாய்... அப்படி...’’ ‘‘...தான்! இப்பொழுது விளங்கிவிட்டதல்லவா..?’’
‘‘விளங்காததால்தான் விளக்கம் கேட்டுக் கொண்டிருக்கிறேன்!’’ நேருக்கு நேராக கரிகாலனை உற்றுப் பார்த்தாள் சிவகாமி: ‘‘உங்கள் பிரச்னை என்ன..?’’ ‘‘சிக்கலை அறிவதுதான்...’’‘‘சிக்க வைத்தா..?’’ ‘‘சிக்குகளை அவிழ்த்து..!’’
‘‘அவிழ்ப்பது போல் தெரியவில்லை...’’ தலையைச் சிலுப்பிக் கொண்டாள் சிவகாமி: ‘‘மேலும் மேலும் முடிச்சிடுபவராகத்தான் இருக்கிறீர்கள்...’’ ‘‘முடிச்சுப் போடுவதே அவிழ்ப்பதற்குத்தான்...’’ ‘‘அதாவது..?’’ ‘‘பொறியை வைப்பதே பிடிக்கத்தான்!’’ ‘‘பிடித்துவிட்டதாகக் கருதுகிறீர்களா..?’’ ‘‘இல்லை என்கிறாயா..?’’
‘‘பிடிபட்டது அப்பாவி என்கிறேன்!’’ ‘‘எந்த விதத்தில்..?’’ ‘‘எல்லா வகையிலும்!’’ சொல்லும்போதே சிவகாமிக்கு மூச்சு வாங்கியது. எந்தளவுக்கு அவள் உள்ளுக்குள் வெந்து சாம்பலாகிறாள் என்பதை அனலாக வெளிப்பட்ட அவளது சுவாசம் உணர்த்தியது: ‘‘எப்படி வளைத்து வளைத்து நீங்கள் கேட்டாலும் பதில் ஒன்றுதான். சாளுக்கிய மன்னருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை... இல்லை... இல்லை... இதுதான் உண்மை..!’’ ‘‘யாருக்கு..?’’ ‘‘என்ன..?’’
‘‘யாருக்கு உண்மை என்று கேட்டேன்!’’‘‘நபருக்கு நபர் உண்மை மாறுமா..?’’‘‘மாறும்... அதற்கு நாம் இருவருமே உதாரணம்! சிவகாமி... தொடக்கம் முதலே நாம் இருவர் மட்டுமல்ல... நாம் சந்தித்த அனைவருமே - சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர், சாளுக்கிய போர் அமைச்சர் ராமபுண்ய வல்லபர், கடிகை பாலகன், பல்லவ இளவரசர்... என சகலரும் அவரவருக்கான உண்மைகளுடன்தான் நடமாடிக் கொண்டிருக்கிறோம்... அதனாலேயே நம் கதையை பிற்காலத்தில் யார் சொன்னாலும் எழுதினாலும் அதை யார் பார்வையில்... யாரது கண்ணோட்டத்தில் சொல்வது எனத் தடுமாறுவார்கள்... ஏனெனில் பலரது பார்வையில் பலவாறாக கிளை பரப்பும் வல்லமை படைத்தது நம் கதை..!’’
‘‘நல்ல கதை!’’ இகழ்ச்சியுடன் சொன்ன சிவகாமி நகர முற்பட்டாள்.கரிகாலன் அவளது கரங்களைப் பிடித்து தடுத்து நிறுத்தினான்: ‘‘எங்கு செல்கிறாய்..?’’ ‘‘எனக்கான உண்மையைத் தேடி!’’‘‘அதற்கு எனக்கான உண்மையின் வழியேதான் நீ பயணப்பட்டாக வேண்டும்...’’ ‘‘கட்டளையா..?’’‘‘தண்டனை!’’ அழுத்தம்திருத்தமாகச் சொன்ன கரிகாலன், சட்டென சிவகாமியை இழுத்து தன் மார்பில் சாய்த்தான். அவள் சுதாரித்து விலகுவதற்குள் அவள் இதழ்களில் தன் உதட்டைப் பதித்தான்:
‘‘சிவகாமி... கவனி... சற்று நேரத்துக்கு முன் நிலவறையில் ஒரு முதியவரைச் சந்தித்தாயே... ம்... ம்... இளைஞர்களுக்கு எல்லாம் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தாரே... அவரேதான்... அவர்தான் அதங்கோட்டாசான்! அவர் உயிருடன் இருக்கும் தகவலை... ம்ஹும்... புருவத்தை இப்படி உயர்த்தாதே...’’ என்றபடி தன் ஒரு கரத்தால் அவளது புருவங்களை நீவினான் கரிகாலன்: ‘‘நீ எழுதுவது போலவே எழுதி... அந்த ஓலைக்குழலுக்கு உனது முத்திரையையிட்டு... அதை சாளுக்கிய ஒற்றனிடம் கொடுத்துவிட்டேன்... இந்நேரம் சாளுக்கிய மன்னருக்கு அந்த விவரம் போய்ச் சேர்ந்திருக்கும்!’’ ‘‘எதற்காக இப்படிச் செய்தீர்கள்..?’’
‘‘உண்மையை நோக்கிப் பயணப்பட... அதாவது... எனக்கான உண்மையை நோக்கி நீ செல்ல!’’ ‘‘மறுத்தால்..?’’‘‘எந்த நோக்கத்துக்காக ‘சிவகாமி’யைப் போல் நீ நாடகமாடிக் கொண்டிருக்கிறாயோ... அந்த நோக்கம் நிறைவேறாமல் போகும்..!’’ ‘‘மிரட்டுகிறீர்களா..?’’‘‘சேச்சே... உனக்கு உதவி செய்கிறேன்..!’’ அவள் கன்னத்தை அழுத்தமாகக் கடித்துவிட்டு இமைக்கும் நேரத்தில் கரிகாலன் விலகினான்: ‘‘இன்று இரவு பாண்டிய இளவரசனுக்கு விருந்தளிக்கப் போகிறான் சாளுக்கிய இளவரசன்... அதற்கு உனக்கும் அழைப்பு வரும். மறுக்காமல் செல். தனிமையில் பாண்டிய இளவரசன் உன்னிடம் ஓலை ஒன்றைக் கொடுப்பான்... அதை அப்படியே கொண்டு வந்து என்னிடம் கொடு!’’
சிவகாமியின் கன்னத்தில் தட்டிவிட்டு கரிகாலன் அகன்றான்.வெறித்தபடி எத்தனை கணங்கள் சிவகாமி அங்கு நின்றாளோ... சுயநினைவுக்கு அவள் வந்தபோது கதிரவன் உச்சியில் இருந்தான்.முகமெல்லாம் இறுக மெல்ல அந்த நந்தவனத்தைவிட்டு வெளியே வந்தாள். வணிகர் வீதியைக் கடந்து, தான் தங்கியிருந்த சத்திரத்துக்கு வந்தாள். எதிர்பார்த்ததுபோலவே இரவு விருந்துக்கு அழைப்பு வந்திருந்தது.
தலையசைத்துவிட்டு ஸ்நான அறைக்குள் நுழைந்தாள். கதவை இறுகத் தாழிட்டுவிட்டு தன் இடுப்பில் இருந்து ஓலைக்குழல் ஒன்றை எடுத்து முத்திரையை உடைத்தாள். பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த ஓலையை எடுத்துப் படித்தாள்: ‘அதங்கோட்டாசான் உயிருடன் இருக்கிறார்...’ அவளது கையெழுத்தில், அவளைப் போலவே கரிகாலன் எழுதியிருந்தான்!
சிவகாமியின் உதட்டில் புன்முறுவல் பூத்தது. தன் இடுப்பில் இருந்த சுருக்குப் பையை எடுத்தாள். அதனுள் இருந்த சிக்கிமுக்கிக் கல்லை எடுத்து உரசி, நெருப்பை வரவழைத்தாள். அந்த ஓலையைப் பஸ்பமாக்கினாள்.பின்னர் அலுப்புத்தீர வாசனைப் பொடிகளைப் பூசியபடி குளித்து முடித்தாள். அறுசுவை உணவு காத்திருந்தது. சாப்பிட்டாள்.
அறைக்குச் சென்று படுத்தாள்.உறக்கம் கலைந்தபோது இருட்டத் தொடங்கியிருந்தது.தன்னை அலங்கரித்துக்கொண்டு வெளியே வந்தவள், சாளுக்கிய இளவரசர் தங்கியிருந்த மாளிகையை நோக்கி நிதானமாக நடந்தாள்.வாசலில் காத்திருந்த ராமபுண்ய வல்லபர், பார்வையாலேயே அவளை வரவேற்று அழைத்துச் சென்றார்.
மாளிகை நந்தவனத்தில் பந்தல் போடப்பட்டிருந்தது. சற்றுத் தள்ளி கூத்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. தனக்குரிய ஆசனத்தில் அமர்ந்திருந்த பாண்டிய இளவரசன் கோச்சடையன் இரணதீரன், எழுந்து நின்று சிவகாமியை வணங்கினான்.
பதிலுக்கு வணக்கம் தெரிவிக்காமல் சிலையென நின்றாள் சிவகாமி. அவள் பார்வை பாண்டிய இளவரசனின் மீது படியவில்லை. பதிலாக கோச்சடையன் இரணதீரனுக்குப் பக்கத்தில், பாண்டிய இளவரசனின் தோழனாக நின்றிருந்த வாலிபனின் மீது படிந்தது. அந்த வாலிபன், கரிகாலன்தான்!
(தொடரும்)
செய்தி: கே.என்.சிவராமன்
ஓவியம்: ஸ்யாம்
|