அண்ணானு என்னைக் கூப்பிட்ட பெண்ணைத்தான் லவ் பண்ணி கல்யாணம் செய்துகிட்டேன்!



நாங்க ஐ லவ் யூ சொல்லிக்கிட்டதில்ல. வாலண்டைன்ஸ் டேக்கு ரோஸ் கொடுத்ததில்ல. சர்ப்ரைஸ் கிஃப்ட்ஸ் பகிர்ந்துகிட்டதில்ல. ஆனா, ரொம்ப ஸ்டிராங்கா லவ் பண்றோம். கல்யாணத்துக்குப் பிறகும் லவ் தொடருது. அவரவர் வேலை... அவரவர் சிறகுகள்!
ஆனாலும் ஒரே வானத்துல பறக்கறோம்...’’ இனிக்கும் காதலைத் தெறிக்க விடுகிறார்கள் அஷ்வத் - பவித்ரா ஜோடி.‘நளனும் நந்தினி’யும், ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’, விஷ்ணு விஷாலின் ‘எஃப்ஐஆர்’ படங்களின் இசை யமைப்பாளர் அஷ்வத். இவரது காதல் மனைவி பவித்ரா, ‘உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கா?’ என சின்ஸியராகக் கேட்கிற டென்டிஸ்ட்.

அஷ்வத்தின் அருகில் அமர்ந்தபடி பேச ஆரம்பித்தார் பவித்ரா: ‘‘நான் ஸ்கூல்ல படிச்சப்ப அஷ்வத், எனக்கு சீனியர். ‘அண்ணா அண்ணா’னுதான் கூப்பிடுவேன். பதிலுக்கு அவன் ‘ச்சீ போ...’னு ஜாலியா கலாய்ச்சிட்டு போயிடுவான். அடுத்தடுத்த வருஷங்கள்ல ஸ்கூல் மாறிட்டோம். அப்புறம் கான்டாக்ட் இல்ல. பத்து வருஷங்களுக்குப் பிறகு ரஹ்மான் மியூசிக் கன்சர்ட் பார்க்கப் போயிருந்தேன். அந்த கூட்ட நெரிசல்ல, அஷ்வத்தை பார்த்தேன். ஃப்ளாஷ் ஆச்சு. ‘ஏய் அஷ்வத்தண்ணா...’னு கூப்பிட்டேன். ரொம்பத் தொலைவுல அவன் இருந்ததால, நாங்க பேசிக்க முடியல.

அப்புறம் வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையா ஃபேஸ்புக்ல அவனுக்கு ரிக்வெஸ்ட் அனுப்பினேன். பேச ஆரம்பிச்சோம். நம்பர் ஷேர் பண்ணிக்கிட்டோம். ஆனா, ‘ஐ லவ் யூ’னு எல்லாம் ப்ரொபோஸ் பண்ணிக்கல. பட்... பரஸ்பரம் லவ்வுல விழுந்துட்டோம்.

ஒன் ஃபைன் டே... எங்க வீட்ல சொன்னேன். வீட்டுக்கு நான் ஒரே பொண்ணு. செல்லம் அதிகம். என்னை மாதிரியே அஷ்வத்தும் வீட்டுக்கு ஒரே பையன்.

அஷ்வத் சினிமால இருக்கான்னு தெரிஞ்சதும் எங்கப்பாவும் அம்மாவும் ஷாக் ஆகிட்டாங்க. ‘சினிமா ஒரு ப்ரொஃபஷன் இல்லையே’னு இழுத்தாங்க.
அவங்க பாயிண்ட் ஆஃப் வியூல அது சரிதான். ஏன்னா, அவங்க ரெண்டு பேருமே பேங்க் எம்ப்ளாயீஸ். எங்க நல்ல நேரம் அஷ்வத்தோட அம்மாவும் அதே பேங்க்குல வேலை பார்த்தாங்க. ஸோ, என் பேரன்ட்ஸ் கொஞ்சம் நிம்மதியானாங்க. பிறகு கன்வின்ஸ் பண்றது ஈஸியாகிடுச்சு. இப்ப ஜாலியா டூயட் பேட்டி கொடுத்துட்டிருக்கோம்...’’ கண்கள் படபடக்க புன்னகைக்கிற பவித்ராவை பார்வையால் பருகியபடி அஷ்வத் தொடர்ந்தார்:  

‘‘போன வருஷம் ஸ்கூல் ஃபங்ஷனுக்கு ஒண்ணா போனோம். அங்க பிரின்ஸிபல் என்னை பார்த்துட்டு, ‘பவியை ஆறாம் கிளாஸ்ல இருந்து லவ் பண்ணினியா’னு அதிர்ச்சியோடு கேட்டாங்க!என்னையும் பவித்ராவையும் இணைச்சது இசைதான். எனக்கு ஒரு பழக்கம் உண்டு. அதிகம் ஹிட் ஆகாத நல்ல பாடல்களை தொடர்ந்து கேட்பேன். முதன் முதல்ல பவித்ராகிட்ட போன்ல பேசறப்ப அப்படியொரு ரேர் ஸாங்கை அவங்க காலர் டியூனா வைச்சிருந்ததைக் கேட்டு இன்ப அதிர்ச்சில திக்குமுக்காடிட்டேன்!

அப்புறம் பேசறப்ப ‘மகாநதி’ படத்துல இடம்பெறாத, ஆனா, கேசட்ல இருக்கற ஒரு பாட்டை பவி பாடினாங்களா... அப்படியே விழுந்துட்டேன்!
இன்னொரு ஒற்றுமை... நாங்க ரெண்டு பேருமே பிரஷாந்த், சவுரவ் கங்குலி ஃபேன்ஸ்...’’ தலையைச் சிலுப்பி அஷ்வத் சிரிக்க, ஆமோதிப்பாக தலையசைக்கிறார் பவித்ரா:

‘‘நான் கமல் ஃபேன். அஷ்வத், பக்கா ரஜினி ரசிகர். இப்ப நானும் ரஜினி ஃபேனாகிட்டேன்! ஹாஸ்பிட்டல்ல டியூட்டி முடிஞ்சு டெய்லி வீட்டுக்கு வர நைட் பத்தரை ஆகிடும். வந்ததுமே ‘நைட் ஷோவுக்கு புக் பண்ணியிருக் கேன்’னு தியேட்டருக்கு கூட்டிட்டுப் போயிடுவார் (எஸ்... அஷ்வத்தை இப்போது பவித்ரா, ‘ர்’ விகுதியுடன்தான் அழைக்கிறார்!).

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஹாலிவுட்னு இந்த ரெண்டு வருஷத்துல 150 படங்கள் வரை பார்த்திருக்கோம்...’’ என பவித்ரா சொல்லும்போதே இடைமறித்தார் அஷ்வத்: ‘‘பின்னணி இசை எப்படி அமைச்சிருக்காங்கனு கவனிக்க எனக்குப் பிடிக்கும். இதுக்காகவே எல்லா மொழிப் படங்களையும் தவறாமப் பார்ப்பேன்.

அண்ணா யுனிவர்சிட்டில படிச்சப்ப ஃபிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்களின் நட்பு கிடைச்சது. அவங்க ஷார்ட் ஃபிலிம்ஸுக்கு இசையமைக்க ஆரம்பிச்சேன். அதுல ஒரு ஃப்ரெண்ட்தான் ‘நளனும் நந்தினி’யும் இயக்கினார். ஒரு முழுப்படத்துக்கும் என்னால இசையமைக்க முடியும்னு கான்ஃபிடன்ட் கொடுத்த படம் அது.

‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ல பின்னணி சிறப்பா இருக்குனு எல்லாரும் பாராட்டினப்ப இனம் புரியாத ஃபீலிங்குல தத்தளிச்சேன். இப்ப விஷ்ணு விஷால் சாரோட ‘எஃப்ஐஆர்’ படத்துக்கு இசையமைச்சிட்டு இருக்கேன். இதோட டைரக்டர் மனு ஆனந்த், கௌதம் மேனன் சாரோட உதவியாளர்...’’ என ஷார்ட் அண்ட் ஸ்வீட் ஆக தன் ஹிஸ்டரியை சொல்லி முடித்தார் அஷ்வத்.  

‘‘எங்க ஹாஸ்பிட் டல்ல எல்லாருமே ‘உங்க வீட்டுக்காரர் கம்மியான படங்கள் பண்ணியிருந்தாலும், நல்ல படங்களா பண்ணிட்டிருக்கார்’னு சொல்வாங்க. அது உண்மையும் கூட.அஷ்வத்கிட்ட நிறைய விஷயங்கள் பிடிக்கும். எந்த ஒரு சின்ன கமிட்மென்ட்னாலும் அதை சரியா கடைப்பிடிப்பார். அவரால வரமுடியலைனா அதையும் முகத்துக்கு நேர சொல்லிடுவார். பெருசா பொய் சொல்ல மாட்டார். முடிஞ்சவரை நேர்மையா இருப்பார். அவரோட மியூசிக் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

பிடிக்காத விஷயம்னா... பாதி நேரம் வேற ஒரு உலகத்துல இருப்பார். ஒரு படத்துல வர்ற காமெடி மாதிரி ‘கோட்டைச்சாமி...’னு உலுக்கி எழுப்ப வேண்டியிருக்கும். என்னை மாதிரி அவர் random கிடையாது. ரொம்பவும் ஆர்கனைஸ்ட் பர்சன். காலைல எழுந்திரிக்கும்போதே அன்றைய நாளுக்கான முழு ப்ளானிங்கும் அவர் மனசுல இருக்கும். ஒரு காலத்துல அவர் மீடியாவுல இருந்தார். ஸோ, இப்பவும் நியூஸ்ல அப்டேட்டா இருப்பார். அது நல்ல விஷயம்தான். ஆனா, நமக்கே காண்டாகறா மாதிரி மொபைலும் கையுமா நியூஸை படிச்சிட்டு இருப்பார்!

ஷாப்பிங் எல்லாம் வருவார். ஆனா, எங்க அப்பா மாதிரி பொறுமையா கூட இருக்கமாட்டார்...’’ என பவித்ரா சிணுங்க, கண்களைச் சிமிட்டிவிட்டு பேச ஆரம்பித்தார் அஷ்வத்:‘‘பவித்ரா அருமையா பாடுவாங்க. ஸ்கூல் கோயர்ல பாடியிருக்காங்க. நானும் ஆரம்பத்துல நிறைய ஜிங்கிள்ஸ் பாட வைச்சிருக்கேன். இப்ப ஹாஸ்பிட்டல் ஒர்க் ஹெவியா இருக்கறதால பாடுறதில்ல. என் ஃப்ரெண்ட்ஸ், என் ஃபேமிலினு எல்லாருக்குமே முக்கியத்துவம் கொடுப்பாங்க.

பிடிக்காத விஷயம்னா... சீரியஸா ஒரு விஷயம் பேசறப்ப நம்மை மீறி இங்கிலீஷ்ல கத்துவோம் இல்லையா... அப்ப அதுல சின்சியரா க்ராமர் மிஸ்டேக் கண்டுபிடிப்பாங்க! மத்தபடி சமத்துப் பொண்ணு! அப்புறம் இன்னொரு விஷயம்... இப்ப என்னை செல்லமா ‘ப்ரோ’னு கூப்பிடறாங்க. கேட்டா, ‘‘ராஜா ராணி’ல நஸ்ரியா ‘ப்ரோ’னு சொல்வாங்களே... அந்த ப்ரோ’னு விளக்கம் தர்றாங்க!

என்னை மட்டுமில்ல... எங்கம்மாகிட்ட பேசறப்பவும் ‘செம ப்ரோ’னு சொல்றாங்க. பதிலுக்கு எங்கம்மாவும், ‘ஆமா ப்ரோ’னு பதில் சொல்றாங்க!
அப்புறம் என்ன... ப்ரோ ஃபேமிலியா ஆனந்தமா இருக்கோம்...’’ சொல்லிவிட்டு பவித்ராவை அணைக்கிறார் அஷ்வத்.

செய்தி: மை.பாரதிராஜா

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்