வானம் கொட்டட்டும்



பகை உணர்வு வளர்ந்து பழி தீர்த்ததா... பாசம் மேலோங்கியதா என்பதே ‘வானம் கொட்டட்டும்’.மனைவி ராதிகா, இரண்டு குழந்தைகள், சகோதரன், அம்மாவோடு கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் சரத்குமார். மகிழ்ச்சியாகப் போகும் வாழ்க்கையில் தேர்தல் பிரச்னையையொட்டி சகோதரன் பாலாஜி சக்திவேல் வெட்டப்படுகிறார்.

வெகுண்ட சரத், பதிலாக இரண்டு பேரை வெட்டிச் சாய்த்துவிட நீதிமன்றம் பதினாறு ஆண்டுகள் தண்டனை விதிக்கிறது. மகனும் அவ்வண்ணம் வளர்ந்துவிடுவானோ என்ற பயத்தில் சென்னைக்கு கூட்டி வந்து காப்பாற்றுகிறார் ராதிகா. தண்டனை முடிந்து திரும்பிய சரத்திற்கு மனைவியின் அன்பும், குழந்தைகளின் பாராமுகமும் கிடைக்கிறது.

இன்னொரு பக்கம் கொல்லப்பட்டவரின் மகன் அவரை பழிவாங்கத் துடிக்கிறான். சரத் பகைவர்களிடமிருந்து மீண்டாரா… மறுபடியும் குடும்பத்தின் அன்புக்கு உரியவராக ஆனாரா என்பதை அவிழ்க்கிறது திரைக்கதை. இயக்குநராக தனா களமிறங்கி இருக்கிறார்.படத்தின் பலமே எட்டிப் பார்க்கும் நட்சத்திரப் பட்டாளம்தான். முரட்டுத்தனமும் குடும்பத்தின் மீதான அக்கறையும் கொண்ட மகனாக விக்ரம் பிரபு. பாசமும் வேடிக்கையும் கலகலப்பும் கொண்ட தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் செம ஃபிட்.

ஆரம்பத்தில் அடாவடித் தனத்தில் உருவெடுக்கும் விக்ரம் பிரபு பின்பு பொறுப்பாக மாறுவது இயல்பு. ஆனால், சாந்தனு, அமிதாஸ் இருவரையும் காதலிக்கும் விதத்திலேயே ஐஸ்வர்யா கதாபாத்திரத்தைக் கொண்டு செல்வது ஏன்? சரத்தும் ராதிகாவும் அருமையான குடும்பப் பாங்கை மிகை இல்லாமல் செய்திருக்கிறார்கள். சற்றே இடைவெளிக்குப் பிறகு கட்டுடல் சிதையாமல் தனித்துத் தெரிகிறார் சரத். கிடைத்த இடங்களில் மடோனா செபாஸ்டியன், சாந்தனு, நந்தா என ஸ்கோர் செய்கிறார்கள்.

கேரக்டர் ரோலில் இன்னும் கொஞ்சமே பக்குவப்பட்டால் ரங்காராவ் ரேஞ்சுக்கு உயர்ந்துவிடுவார் பாலாஜி சக்திவேல். அந்த முரட்டு உருவத்துக்குள் அழகிய பாசமும் கோபமும் கிண்டலும் அப்படியே நிறைந்திருக்கிறது! கோயம்பேடு மார்க்கெட், தேனி வாழைத் தோப்பு, உசேன் அலி தெரு குடியிருப்பு எல்லாம் வித்தியாசம்.கிராமமோ, நகரமோ கேமிராவை அருமையான தரத்தில் கையாண்டிருக்கிறார் ப்ரீதா ஜெயராமன். ஆங்காங்கே ஒலிக்கிறது சித் ராமின் குரல். ஆனால், இசையமைப்பாளராக அவர் இன்னும் அனுபவம் சேர்க்க வேண்டும்.

படம் மொத்தமும் சரத் - ராதிகா தவிர்த்து கொஞ்சம் செயற்கைத்தனம் இழைந்தோடுவது ஏன்? எதேச்சையாக நடந்த சம்பவத்தில் தந்தை சிறைக்குப் போக அப்படி ஒரு வெறுப்பிற்கு சரத் செய்த பாவம் என்ன? தங்கையின் கதாபாத்திரம் செதுக்கப்படாதது ஏன்? விக்ரம் பிரபு, மடோனா காதல் ஒட்டவில்லையே! ரெட்டி குடும்பத்தின் திடீர் நெருக்கமெல்லாம் பார்த்த கொஞ்ச நேரத்திலேயே சாத்தியம்தானா?இவ்வளவு நட்சத்திர பலத்தைக் கொண்டு விறுவிறுப்பான கதைக்கு முயற்சி செய்திருந்தால் வானம் கொட்டுவதை இன்னும் ரசித்திருக்கலாம்.

குங்குமம் விமர்சனக் குழு