தொல்(லைக்) காப்பியம்



காதல் மொத்தமா மாறிடுச்சு... நாறிடுச்சு!

காசு இல்லாம கூட தமிழ் சினிமாவை எடுத்திடலாம். ஆனா, காதல் இல்லாம தமிழ் சினிமாவை எடுக்க முடியாது. கரண்டை வச்சு எடிசன் பல்ப் கண்டுபிடிக்க பண்ணின பரிசோதனைகளை விட, காதலை வச்சு தமிழ் சினிமா செஞ்ச பரிசோதனைகள் பல்லாயிரம். காதலுக்கு மட்டும் உருவம் இருந்திருந்தா பல தமிழ் சினிமா இயக்குநர்கள் காலைப் புடிச்சு ‘என்னைய விட்டுடுங்கய்யா’ன்னு கதறி கெஞ்சியிருக்கும். அந்தளவுக்கு நம்மாளுங்க அம்பது வருஷங்களா காதலுக்கே காதலிக்க சொல்லிக் கொடுத்திருக்காங்க!

கல்லுல வீசின பரோட்டாக்கள் ஒரே இடத்துல வெந்தாலும் ஒரே மாதிரி வேகாதது போல காதலை கதை முழுக்க வீசினாலும், எல்லா படங்களும் ஒரே மாதிரி ஓடாது. இருந்தாலும் ஆசையா அரைச்ச மாவு வீணாகக் கூடாதுன்னு ஆளாளுக்கு கரைச்சு கல்லுல தோசையா ஊத்திக்கிட்டுதான் இருக்காங்க.முந்நூறு அடி தூரத்துல நின்னுக்கிட்டு மேயாத மான் புள்ளி மேவாத மான்னு லவ்விய அந்தக் காலத்துல இருந்து திரிஷாவோ நயன்தாராவா எது கிடைக்குதோ அதை கவ்விக்கலாம்னு நினைக்கிற இந்தக் காலம் வரைக்கும் காதலும் கொேரானா வைரஸ் மாதிரி தமிழ் சினிமால பரிணாம வளர்ச்சி அடைஞ்சுக்கிட்டேதான் வருது.

60 / 70கள்ல வந்த தமிழ் சினிமா காதல்களை எழுத்துல கொண்டுவர முயற்சி செஞ்சா கம்ப்யூட்டர் கீபோர்டே கடுப்பாகி தூங்கிடும்.
அதுல இருந்த காதல் காட்சிகளை எல்லாம் இப்ப பார்க்கிறதுக்கு, நமக்கு ஃப்ரிஜ்ல வச்ச பிரியாணி மாதிரி இருக்கும். 1980களில் வந்த காதல் படங்கள் சைவ பிரியாணின்னா, 1990களில் வந்த காதல் படங்கள் சிக்கன் பிரியாணி!

தமிழர்கள் உணவே நக்கட்ஸ் சிக்கன், பக்கெட் சிக்கன்னு மாறிப் போன மாதிரி 2000க்குப் பிறகு வந்த படங்களிலும் காதல் மொத்தமா மாறிடுச்சுன்னு சொல்லலாம். ஏன், நாறிடுச்சுன்னும் சொல்லலாம்! வரலாற்றில் குப்தர்களின் ஆட்சி பொற்காலம் என சொல்வது போல, தமிழ் சினிமாவில் 1990களின் காலகட்டம்தான் காதலின் பொற்காலம்.

‘காதல் கோட்டை’, ‘காதல் தேசம்’, ‘காதல் மன்னன்’, ‘காதல் கடிதம்’, ‘காதல் கவிதை’, ‘காதல் ரோஜாவே’, ‘காதல் சடுகுடு’, ‘காதல் வேதம்’, ‘காதல் சாம்ராஜ்யம்’, ‘காதல் அழிவதில்லை’னு ஆரம்பிச்சு காதல் செருப்பு, காதல் ஜட்டி, காதல் லுங்கி, காதல் பேபி டயப்பர், காதல் விவாகரத்து, காதல் வெளக்கமாறு, காதல் குரூட் ஆயில், காதல் பாத்ரூம் ஆசிட், காதல் பூனை, காதல் நாய், காதல் காராபூந்தி, காதல் வாந்தி...னு காதலுக்குப் பின்னால் ஏதாவது ஒரு வார்த்தைய போட்டு வரிசையாக காதல் படங்கள் வந்த அற்புதமான கால கட்டம் 1990 - 2000தான்.

சொல்லப்போனால் ஒரு கட்டத்திற்கு மேல் காதலுக்குப் பின்னால் எழுத வார்த்தைகள் கிடைக்காமல் போக, ஏதாவது வாக்கியத்துக்குள் காதலைப் போட்டு படத்துக்கு டைட்டில் வைக்க ஆரம்பிச்சுட்டாங்க. காலமெல்லாம் காதல் வாழ்க, காலையில் காதல் வரும், ஒரு காதல் பொடி தோசை, கடன் காதலை முறிக்கும் என பல படங்கள் வந்தன.

பர்ஸ்ல காசு இருந்தா பெட்ரூம்ல ஏசி போட்டு தூங்கலாம், பொட்டி நிறையா காசு இருந்தா பென்ஸ் கார்ல ஏசி போட்டு தூங்கலாங்கிற கதையா, காட்டை வித்து வீட்டை வித்து கிடைச்ச காசையெல்லாம் காதல் படமெடுக்கவே கொட்டுன காலகட்டம் அது.

கண்டவுடனே காதல் வர்றதெல்லாம் கம்பராமாயண காலத்துல இருந்தே இருக்கு. அதெல்லாம் எருமைப் பால்ல போடுற டீ மாதிரி. ஆனா, நம்மாளுங்க எருக்கம்பால்ல போட்டாங்க பாருங்க டீ... அதெல்லாம் அண்டர்வேர் போட்டுக்கிட்டு அண்ணாசாலைல ஓடுற மாதிரியான அட்ராசிட்டி!
பல வருஷங்களா பார்த்துப் பார்த்தே காதலிச்சுட்டீங்க, ஒரு ஆறுதலுக்கும் மாறுதலுக்கும் பார்க்காம காதல் செய்யற ‘காதல் கோட்டை’ன்னு ஒரு படம் வந்ததுதான் வந்துச்சு, அதுக்கப்புறம் தமிழ் சினிமால காதல் கிரில் சிக்கன் மாதிரி சுத்தி சுத்தி வெந்துச்சு.

அதுக்கப்புறம் வந்த படங்களில் எல்லாம் எதுவும் பேசாமலே காதல், ஏதாவது பேசுற காதல், போனில் பேசியே வளர்த்த காதல், புரளி பேசி வளர்த்த காதலென பலப்பல வகை காதல்களைக் காட்டி காதலையே கதறடித்தது தமிழ் சினிமா. கடைசி வரை சொல்லாத காதல், காதலியின் காதலை சேர்த்து வைக்கும் காதல், காதலுக்குள் நட்பு, நட்புக்குள் காதலென, கடல்ல இருந்து வர நீர் மட்டுமா உப்பா இருக்கும், கண்ல இருந்து வர நீரும்தான்டா உப்பா இருக்கும்னு ரூம் போட்டு யோசித்து பலப் பல வகைகளில் காதலைக் காட்டினர், கலை என்னும் செவுத்துல தங்கள் காதல் காலண்டரை மாட்டினர் 90களின் இயக்குநர்கள்.

இதுதான் இந்தியா - சீனா எல்லை; இதைத் தாண்டினா ரெண்டு சைடுக்கும் தொல்லைன்னு புரிஞ்சுக்கிட்டு, காதல்ல ஒன்சைட் லவ், டூ சைட் லவ்வுன்னு இருந்த தமிழ் சினிமா, இந்தக் காலகட்டத்துலதான் சூசைட் லவ்வுக்கு ஷிஃப்ட் ஆனது.

அது வரைக்கும் ஒரு கோண, இரு கோண, முக்கோணக் காதல் கதைகளை மட்டுமே கப்புல காபி மாதிரி வாங்கி குடிச்சுக்கிட்டு இருந்த தமிழ் சினிமா காதல்கள், 90களில்தான் நாற்கோணம், ஐந்து கோணம், ஆறு கோணம், அரக்கோணம், தலக்கோணம், கும்பகோணம்னு கம்பி ஜன்னலுக்குள்ள கைய விட்டு குவாட்டர் வாங்க ஆரம்பிச்சுது.

ஒரு மெண்டல் பெண்ணை காதலித்து கடைசியில் காதலன் மெண்டலான ‘சேது’ மாதிரியான லவ் ஃபிலிம் ஊருக்குள்ள ஒரு தியேட்டர்ல ஓடுச்சுன்னா, ஒரு மெண்டல், ஒரு பெண்ணை காதலித்து பெண்ணை மெண்டலாக்கிய கதையுள்ள படம் ஊருக்கு வெளிய ஒரு தியேட்டர்ல ஓடிக்கிட்டு இருந்துச்சு.

மெண்டலும் மெண்டலும் காதலித்து மெண்டலான காதல் படத்தை தூக்கிட்டு காதலிக்கிறதையே மெண்டலாட்டம் பண்ற படத்தை போடுவாங்க. அந்தளவுக்கு தீபாவளி நேரத்து தி.நகர் கும்பல் மாதிரி, காதல் படங்களா குவிஞ்சு கிடந்த காலம்தான் 90கள்.
சந்தோஷமா போற வாழ்க்கைல சனி பகவான் சல்யூட் வச்சுக்கிட்டு வர மாதிரி, தொண்ணூறுகளின் மத்தியில், தமிழ் சினிமா ஒரு பூகம்பத்தைக் கண்டது.
அதுவரை, காதலுக்காக காதலையோ காதலியையோ காசையோ தியாகம் செய்து வந்த தமிழ் சினிமா ஹீரோக்கள் தங்கள் காதலுக்காக தங்கள் உடல் உறுப்புகளை தியாகம் செய்ய ஆரம்பித்தார்கள்!ஒரு படத்துல ஹீரோ காதலுக்காக மூணு இன்ச் பிளேடு வச்சு மூக்கை அறுத்துக்கிட்டு இருந்தா, இன்னொரு பக்கம் இன்னொரு ஹீரோ நாலு இன்ச் கத்திய வச்சு நாக்கை அறுத்துக்கிட்டு இருக்காரு.

முதல் வாரம் ரிலீசான படத்துல ஹீரோ தன்னோட காதலுக்காக வாய் வழியா கைய விட்டு கிட்னியை எடுத்துக்கிட்டு இருந்தா, அடுத்த வாரம் ரிலீசான படத்துல காதலுக்காக ஹீரோ தனது வயித்தைக் கிழிச்சு குடலை உருவிக்கிட்டு இருக்காரு. அதுக்குப் பிறகு வந்த படங்களில் எல்லாம் கண், மூக்கு, காது, இதயம்னு ஆரம்பித்து கடைசியில் கல்லீரல்,  நுரையீரல்,  கடைவாய் பல்லுன்னு உடம்பில் இருக்கும் ஒவ்வொரு ஸ்பேர் பார்ட்டையும் காதலுக்காக கதாநாயகர்கள் தானம் செய்ததைக் காட்டியது 90களின் தமிழ் சினிமா.

தாலின்னா என்னன்னு தெரியாது, கல்யாணம்னா என்னன்னு தெரியாது ஆனா, காதல் மட்டும் நல்லாவே செய்யத் தெரியும் என பல சின்ன தம்பிகளை சில்மிஷ தம்பிகளாகக் காட்டிய படங்கள் பல பொங்கலுக்கு ஓடின. காதலிக்கும் தன் பெண்ணையோ, பேத்தியையோ, தங்கச்சியையோ எப்படியெல்லாம் துன்புறுத்தி கொடுமைப்படுத்தலாம் என பலப்பல ஐடியாக்களை வில்லன்களின் மூளைகள் விக்கிப்பீடியாவில் தேடின.

இப்படியாக காதலை வளர்த்த, காதலுக்காக வளர்ந்த தமிழ் சினிமாவின் பொற்காலம் மீண்டும் தமிழ் சினிமாவில் வர வேண்டும்.
பணக்காரரோட பையன் பூ விக்கிற பொண்ணைக் காதலிப்பது, தொழிலதிபர் பொண்ணு தொழிலாளி மகனைக் காதலிப்பது போன்ற இதுவரை வந்திடாத கதையம்சம் கொண்ட காதல் படங்களை இன்றைய இயக்குநர்கள் தரவேண்டும்!

 - தோட்டா ஜெகன்