சீறு
பிரியப்பட்ட தங்கையைக் காப்பாற்றிய ரௌடிக்காக களமிறங்கும் கதாநாயகனே ‘சீறு’!மாயவரத்தில் கேபிள் டிவி நடத்தி வருகிறார் ஜீவா. சமையல் தொடங்கி உள்ளூர் பிரச்னை வரை வெளியிட்டு லோக்கல் எம்எல்ஏவின் கோபத்துக்கு இலக்காகிறார்.  சாமர்த்தியமாக எல்லாவற்றிலும் தப்பிக்கும் ஜீவாவை போட்டுத்தள்ள ரவுடி வருணை வரவழைக்கிறார்கள். ஆனால், பிரசவ வலியில் துடிக்கும் ஜீவாவின் தங்கையை வருண் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்க சூழ்நிலை எல்லாமே தலைகீழாக மாறுகிறது.
ஒரு கட்டத்தில் வெட்டுப்பட்டுக் கிடக்கும் வருணையே ஜீவா காப்பாற்ற இன்னும் திருப்பம். வில்லன் நவ்தீப் ஜீவாவை பழிவாங்கத் துடிக்க அவரிடமிருந்து ஜீவா தப்பித்தாரா இல்லையா என்பதே பின்கதை.
இடையில் மாணவியின் கதை ஒன்றை உள்ளோட்டமாகப் புகுத்தி மனதை உலுக்குவது புது ரகம்.நடுவில் காணாமல் போயிருந்த ஜீவா நல்லபடியாக வந்து சேர்ந்திருக்கிறார். ஆக்ஷன், எமோஷன், காதல் என அனைத்துத் தரப்பிலும் திறமை காட்ட வாய்ப்பு கிடைக்க அதை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார். தன்னை கொலை செய்யப் புறப்பட்டவன் தங்கையைக் காப்பாற்றினான் என்ற ஒரே காரணத்துக்காக மனம் மாறி அன்பைக் கொட்டுவது என பாசமலர் பதிப்பாகவே ஆகிவிடுகிறார். அவருக்கே எழுதிவைத்த கதாபாத்திரம் போல் பொருந்துகிறது.மணிப்பர்ஸ் உதட்டில் நல்ல உயரத்தில் ரியா சுமன் அறிமுகம் ஆகிறார். தொட்டுச் செல்கிற கதாபாத்திரமாகவே இருப்பதால் அவருக்கு அதிகம் வேலையில்லை.
இதுவரை ஹீரோவாகவே தட்டுப்பட்ட நவ்தீப், வில்லனாக அறிமுகம் ஆகிறார். உரத்த குரலில் உருட்டாமல் பார்வையிலேயே பதட்டம் தருகிறார். ஜீவாவின் தங்கையாக காயத்ரி அதிகமாக உழைத்திருக்கிறார். சிரிப்பு மூட்ட சதீஷ் படாதபாடுபட்டிருக்கிறார். அதையே ‘நீ காமெடி பண்ணா சிரிப்பே வரமாட்டேங்குது மச்சி’ என ஜீவா சிரிப்பாக்கியதில் தியேட்டர் குலுங்குகிறது.
மாணவிகளின் வடிவத்தில் அரசியல்வாதிகளையும், மோசடிக்காரர்களையும் சுளுக்கெடுக்கிறார்கள். எதிர்பாராத திருப்பங்கள் அடுத்தடுத்து வருவதில் ஆச்சர்யம் மிகுந்தாலும் சூழ்நிலைகள் நம்ப வைக்கின்றன.
வருண் நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகிக்கொண்டு வருவது கண்கூடு.டி.இமான் இசையில் ‘செவ்வந்தியே மதுவந்தியே...’ பாடல் உருக்கம். பின்னணி இசையிலும் பாய்ச்சல் காட்டுகிறார் இமான். பிரசன்னா எஸ்.குமாரின் கேமிரா மொத்த ஆக்ஷனையும் திரையில் கொண்டுவரப் பாடுபட்டிருக்கிறது. முதல் பாதியின் வேகத்துக்கு அடுத்த பகுதி சுணங்கி நிற்கிறது. இஷ்டத்துக்கு லாஜிக்கை மீறினாலும் கதையின் அம்சத்தில் மறக்கடிக்கப் பார்க்கிறார்கள். இரண்டாம் பாதிக்காக யோசித்ததில் தாராளம் காட்டியிருந்தால் இன்னும் பலமாகச் சீறி மனதில் உட்கார்ந்திருப்பான்.
குங்குமம் விமர்சனக் குழு
|