சிறந்த தமிழ் காதல் திரைப்படங்கள்



தேவதாஸ்

சரத் சந்திரரின் நாவலைப் பின்பற்றி எடுத்த படம். நாகேஸ்வரராவும், சாவித்திரியும் படத்தில் வாழ்ந்த விதம் கண்டு மக்கள் மருகிப் போனார்கள்.
காதல் கதைகளுக்கெல்லாம் ‘தேவதாஸ்’தான் ஆரம்ப அடையாளம். இந்திய மொழிகளில் அநேக தடவைகள் திரும்பத் திரும்ப எடுக்கப்பட்டு இன்னமும் மக்கள் தேவதாஸை மறந்தபாடில்லை. இதில் வந்த ‘உலகே மாயம், வாழ்வே மாயம்...’ என்ற பாடல் இன்றைக்கு ஒலித்தாலும் சோகத்தை மீட்டும். தேவதாஸ், பார்வதி என்று பெயரிடுதல் நாகரீகமாக இருந்த காலம்கூட இருந்தது.

மிஸ்ஸியம்மா

ஐம்பதுகளின் மக்களுக்கு ‘மிஸ்ஸியம்மா’வை மறக்க இயலாது.  எதிர் எதிர் அலைவரிசைகளில் இருக்கும் ஒரு பெண்ணும், ஆணும் ஒரே இடத்தில் சேர்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை. அவர்களை அந்த வீட்டின் சூழ்நிலைகளே சேர்த்து வைப்பதுதான் திரைக்கதை.

கணவன், மனைவியாக பொய் சொல்ல வேண்டிய ஓர் அமைப்பில் வந்துவிட்ட நிலை. கொஞ்சம் பிசகினாலும் தவறாகப் போய் முடிய வேண்டிய படம். ஆனால், வடிவம் இன்னும் பல விதங்களில் மாறி மாறி தமிழ்ப்படங்களில் வடிவெடுக்கிறது. மென்மை நாயகன் ஜெமினி - சாவித்திரிக்கு பெயர் சேர்த்த படம்.

அன்பே வா

பார்க்கத் தெவிட்டாத காதல் படம். ஓய்வுக்காக மலைப்பிரதேசத்திற்கு வரும் எம்ஜிஆர்... அங்கே அவருக்குக் கிடைக்கிற அனுபவங்கள்... இப்போது வரை ரீமேக்கிலும் இனிக்கும் காதல். ஏவிஎம் நிறுவனத்திற்காக எம்ஜிஆர் அன்போடு செய்து கொடுத்த ஒரே படம். எம்ஜிஆரின் துடிப்பும், சரோஜாதேவியின் வனப்பும், எம்.எஸ்.விஸ்வநாதனின் தேன் சொட்டும் பாடல்களும், மெல்லிய காதல் சரசங்களும், இழையோடிய நகைச்சுவையும் படத்தை ஆகப்பெரிய வெற்றிக்கு அழைத்துச் சென்றன.

ஒருதலை ராகம்

 முற்றிலும் புதுமுகங்கள். உணரப்படாத காதல், புரிந்துகொள்ள மறுக்கும் மனிதர்கள், கல்லூரி பின்புலம் என திகட்டத்திகட்ட காதல் பேசியது படம்.
படத்தை இப்ராகிம் இயக்கினார், இல்லை டி.ராஜேந்தர் இயக்கினார், இல்லை ஒளிப்பதிவாளர் ராபர்ட் - ராஜசேகர் இயக்கினர் என்ற சர்ச்சை ஒரு வருடத்திற்கு மேல் விடை காணாமல் நின்றது.

சங்கர், ரூபா காவியக் காதலர்கள் ஆனார்கள். ‘‘பத்து நாளைத் தாண்டுமா?’’ என்று வெளிவந்த படம், வெள்ளிவிழாவைத் தாண்டியது.
டி.ராஜேந்தரின் பாடல்கள் காதல் தோல்விக்கு மருந்தாகின. காதல், நட்பு என அறியப்பட்ட பக்கமெல்லாம் ‘ஒருதலை ராகம்’தான் பேச்சானது.

பயணங்கள் முடிவதில்லை

மோகன் இன்னும் பலமாக தமிழ் சினிமாவில் காலூன்ற வைத்த படம். எதுவானாலும் எங்களுக்கு இளையராஜாவின் இசை வேண்டும் என்று கேட்ட ரசிகர்களுக்கு அவரும் திகட்டத்திகட்ட கொடுத்தார். படம் பார்க்கப் போனவர்களோடு, பாட்டு கேட்கப்போனவர்களும் பாதிக்கு மேல் இருந்தார்கள்.
ஆர்.சுந்தர்ராஜன் அப்படியே வெற்றித் திலகத்தோடு கோலிவுட்டில் உட்கார்ந்தார்.

மூன்றாம் பிறை

சிறந்த நடிப்பு, மிகவும் அடங்கி வெளிப்பட்ட உணர்ச்சிகள், அருமையாக உணரப்பட்ட படத்தின் தொடர்ச்சி, நம்பகமான காதல் என ‘மூன்றாம் பிறை’ ஏற்படுத்திய பாதிப்பு அநேகம். பாலுமகேந்திராவுக்கு இளையராஜாவின் பாடல்கள் அவ்வளவு கை கொடுத்தன. கமல்ஹாசனும், தேவியும் மறக்க முடியாமல் நடித்து வைத்தார்கள்.

கண்ணதாசனுக்கு கடைசி பாட்டு அமைந்த படம். ‘கண்ணே கலைமானே’ இன்றும் நம்மை மீட்கிறது. கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்க, பாலுவிற்கும் விருது கிடைத்தது. அதையெல்லாம் விடுங்கள். சில்க்கின் ‘பொன் மேனி உருகுதே’ சும்மாவா! யம்மா!

இதயத்தைத் திருடாதே

1989ல் வெளிவந்த ‘இதயத்தைத் திருடாதே’ மணிரத்னத்தின் மெல்லிய காதல் வகையைச் சேர்ந்ததாகும். நாகார்ஜுனா - கிரிஜா ஜோடி ஒரே இரவில் புகழ் பெற்றார்கள். பி.சி.ஸ்ரீ ராம் ஒளிப்பதிவில் காதல் காவியமாக உச்சம் பெற்றது. படத்தின் பாடல்கள் வெற்றிக்கு பக்கபலம். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு இரண்டிலும் மிகப்பெரிய வெற்றி. பெரிய புரட்சிகரமான காதல் கதையில்லை. ஆனாலும் எடுக்கப்பட்ட விதம், உள்நுழைந்த காதல் உணர்வு என இன்றும் ஞாபகத்தில் நிற்கிறது.

இதயம்

கல்லூரிக் காதல். இரண்டு நிமிடத்தில் கதை சொல்லி, தயாரிப்பாளரின் கவனத்தைத் திருப்பி எடுத்த படம் என்பார்கள். முரளி - ஹீரா காதல் திகட்டாத காவியம். இயக்குநர் கதிர் எழுதிய இதயத்தை ஒரு திரைப்படம் என்ற வட்டத்திற்குள் சுருக்க முடியாது. இப்படியும் ஒரு தலைமுறை காதலித்தது என்பதை வருங்காலத் தலைமுறையினர் அறிந்து கொண்டார்கள். ராஜாவின் இதயம் தொட்ட பாடல்கள் படத்தின் உயிர்.

அலைகள் ஓய்வதில்லை

மதம் கடந்த காதல் பற்றிய படம். திரைக்கதையில் பாரதிராஜாவோடு மணிவண்ணனும் இருந்தார். இளையராஜாவின் தயாரிப்பு வேறு. அதனால் பாடல்களுக்கு குறைவில்லை. கார்த்திக்கும், ராதாவும் புதுமுகங்களாக அறிமுகமான அமர்க்களம்.  காதல் எங்கேயும் துளிர்விடும். அதன் பயணத்தை நிச்சயப்படுத்த முடியாது என்பதை சொல்லியிருந்தார்கள். கிளைமேக்ஸ் காட்சி பேசப்பட்டது. கார்த்திக்கும், ராதாவும் அதற்குப்பிறகு தம் கேரியரில் சதம் அடித்தார்கள். ராஜா, வைரமுத்து காம்பினேஷனுக்கு மிகச்சிறந்த உதாரணம்.

காதல் கோட்டை

பார்க்காமலேயே காதல் என்ற புதுவகையில் அமைந்த காதல். ஒரு தமிழ்ப்படத்திற்கு சிறந்த இயக்குநர் என்ற தேசிய விருதை முதல் தடவையாக அகத்தியன் பெற்றார். தேவயானி திருடனிடம் தொலைத்த முக்கியமான சர்டிபிகேட்களை கண்டெடுத்த அஜித் அவருக்கு அனுப்பி வைக்க, நன்றி
யுடன் ஆரம்பிக்கிற தொடர்பு காதலாகிறது. 1996ல் வெளிவந்த ‘காதல் கோட்டை’ அஜித்தை உச்சிக்கு கொண்டுபோனது. தேவாவின் பாடல்கள் கூடுதல் வெற்றிக்கு உறுதுணை. பாக்ஸ் ஆபீஸில் தாறுமாறு
வசூலான படம்.

காதலுக்கு மரியாதை

மெல்லிய உணர்வுகளோடு காதல் பரப்பும் பாசிலின் படைப்பு. 1997ல் வெளிவந்த ஆல்டைம் காதல் ஹிட். இதன் கிளைமேக்ஸுக்கு இப்போதும் மரியாதை. விஜய்க்கு பெரும் மரியாதையும், ராஜாவின் இசைக்கு ஏகோபித்த வரவேற்பும் தந்த படம். ஃபேமிலி ஆடியன்ஸுக்கும் விஜய்யை பிடிக்க ஆரம்பித்த படம். அவரும் பெரிய ஹீரோக்கள் பட்டியலில் கவனம் பெறக் காரணமாக இருந்த படம்.

முதல் மரியாதை

இயக்குநர் பாரதிராஜா, நடிகர் திலகத்தின் அற்புத கலைத்தன்மைக்கு கொடுத்த மரியாதை. ‘அன்னக்கிளி’ செல்வராஜின் கதை, வசனம் சிறப்பு.நடுவயதின் காதலைச் சொன்ன வகையில் முக்கியமான படம். இதற்கு முன் பார்த்திராத சிவாஜியின் மிகவும் நுணுக்கமான நடிப்பு இன்றைக்கும் நம்மை வசீகரிக்கும். இளையராஜாவின் இசையும், வைரமுத்துவின் பாடல்களும் தாலாட்டுதான். நடிகர் திலகத்தின் திரை வாழ்விலும் இந்தப் படம் முக்கியமான படம்.

விண்ணைத் தாண்டி வருவாயா

இளைய தலைமுறையின் காதலை, நடைமுறையை, பக்குவத்தை, தனக்கே உரிய விதத்தில் சொன்னார் இயக்குநர் கௌதம் மேனன்.
இளைஞர்கள் இன்றைக்கும் இதைத்தான் தங்களின் படமாகக் கருதுகிறார்கள். காதல் குருவாகவே அடையாளம் காணப்பட்டார் கௌதம்.
சிம்பு, த்ரிஷா இருவருக்கும் நடிப்பு வகையில் பெரும் மரியாதையைக் கொடுத்த படம். ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களும் ஆல்டைம் ஃபேவரைட் ரகம்.

அலைபாயுதே

2000த்தின் பெரிய காதல் பதிவு. மாதவன் நாயகனாகி, இளம் பெண்களின் மனசிற்குள் வந்தார். பேசப்பட்ட திரைக்கதையில் மணிரத்னத்தோடு ‘அன்னக்கிளி’ செல்வராஜ் இணைந்த படம். பி.சி.ராமின் ஒளிப்பதிவும், ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களு–்ம் தமிழ் தேசத்திற்கு புதுவகை இசையைக் கொண்டுவந்து சேர்த்தன.

காதல்

மிகச்சாதாரண நிலையில் இருக்கும் மெக்கானிக், பள்ளி செல்லும் மாணவி என எளிய காதல். இயக்குநர் ஷங்கர் தன் சிஷ்யர் பாலாஜி சக்திவேலுக்காக தயாரித்த படம். காதலின் தன்மையையும், அதை சமூகம் எதிர்கொள்ளும் விதத்தையும் முகத்தில் அறைந்து சொன்னது. காதலில் சாதி வகிக்கும் இடம் பற்றி ஆழமாக பேசிய படம். ஷங்கரின் ‘எஸ்’ பிக்சர்ஸ் நிலைநிறுத்தப்பட்டது. வசூலில் பெரும் வெற்றி. தயாரிப்புச் செலவோ ஆகக்குறைவுதான்.

மௌன ராகம்

திருமண வாழ்வை பெண் ஒருத்தி மேற்கொள்வதும், முந்தைய காதலின் நினைவுகள் துரத்துவதுமாக அமைந்த கதை. அனைத்துத் தரப்பினரும் மிகுந்த தோழமையுடனும், உணர்ச்சியோடும் ரசித்துப் பார்த்த படம். மணிரத்னத்திற்கு பெருவாரியான ரசிகர்களை சேர்த்துத் தந்தது. 

இளையராஜாவின் பாடல்கள் படத்தின் வெற்றிக்கு வலுவூட்டின. பி.சி.ஸ்ரீ ராமின் கேமரா மக்களை கைபிடித்து அழைத்துச்சென்றது. படம் முழுக்க நடிப்பில் பிரமாதப்படுத்தியிருந்த மோகன் - ரேவதி ஜோடி புகழ் பெற்ற அளவிற்கு, கொஞ்ச நேரமே வந்துபோன கார்த்திக்கும் மக்கள் மனதில் நின்றார்.

96

90களின் இளைஞர்களுக்கு காதல் கதை சொல்லப்போக அது மொத்தத் தமிழ்நாட்டிற்கும் பிடித்துப்போனது.  இசையமைப்பாளர் கோவிந்த் வஸந்தா தன் ஈடு இணையற்ற பாடல்களில் இளைஞர்களின் மனங்களை தூண்டில் போட்டு தூக்கினார். ஒளிப்பதிவாளராக இருந்த பிரேம்குமார் ஒரே இரவில் மக்களின் பெரும் கவனத்திற்கு வந்தார்.

விஜய்சேதுபதியின் பிரதியெடுக்க முடியாத இயல்பான நடிப்பு வகையில் இன்னும் காதலின் ஆழத்திற்குச் சென்ற படம். சோஷியல் மீடியாக்களில் ஆழ, அகலமாக பேசப்பட்ட படம்.  காதலின் மையத்தை முழுதாகக் கடத்தியதே இதன் வெற்றி.

செய்தி: நா.கதிர்வேலன்

படங்கள் உதவி: ஞானம்