முகம் மறுமுகம்-தனுஷ் ரசிகர் மன்றத் தலைவர் இயக்குநர் சுப்ரமணியம் சிவா



இயக்குநர் சுப்ரமணியம் சிவா எழுதி இயக்கிய ‘திருடா திருடி’க்குப் பிறகுதான் ஃபேமிலி ஆடியன்ஸின் கவனம் தனுஷின் பக்கம் திரும்பியது.

அதன்பிறகு தெலுங்கில் மனோஜ் மஞ்சுவை வைத்து ‘தொங்கா தொங்கடி’யை ரீமேக்கிய சிவா, ஜீவாவிற்கு ‘பொறி’ கொடுத்தார். அமீரை, ‘யோகி’ ஆக்கினார். மீண்டும் தனுஷுடன் கைகோர்த்து ‘சீடன்’ பண்ணினார். இப்போது சமுத்திரக்கனி கூட்டணியோடு ‘வெள்ளை யானை’யில் வருகிறார்.
ஆனால், விஷயம் அதுவல்ல. ‘திருடா திருடி’யில் கிடைத்த தனுஷின் அன்பில் நெகிழ்ந்த சிவா, இன்று அகில இந்திய தனுஷ் ரசிகர் மன்றத் தலைவராகவும் கெத்து காட்டுகிறார்.

அசோக் நகரில் உள்ள அவரது அலுவலகத்திற்குச் சென்றால் ஒவ்வொரு மாவட்ட தலைமை மன்றத்தில் இருந்தும் ரெடியான தனுஷ் மிளிரும் இந்தாண்டுக்கான டெய்லி ஷீட் காலண்டர்கள் மலைபோல குவிந்திருக்கின்றன. அதன் மத்தியில் கழுத்து நிறைய சந்தனமாலையோடு மினி வினைல் கட் அவுட்டில் புன்னகைக்கிறார் தனுஷ்.‘‘மன்றத்துல தலைவர் பதவி வகிக்கிறேன்னு சொல்றதைவிட, சார் என்னை நம்பி ஒரு பொறுப்பு கொடுத்திருக்கார். அதை கண்ணும் கருத்துமா கருதி, பொறுப்போடு வேலை பாக்குறேன்னு சொல்லலாம்.

ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி ஒருநாள் தனுஷ் சார் என்னைக் கூப்பிட்டு, ‘ரசிகர் மன்றத்தை நீங்க பாத்துக்குங்க’ன் னார். சந்தோஷமாகிடுச்சு. எட்டாயிரம் மன்றங்கள், 15 லட்சம் ரசிகர்கள்னு அவரை ஃபாலோ பண்றவங்களின் எண்ணிக்கை அதிகரிச்சிட்டே இருக்கு. ஒரு விஷயம் கவனிச்சிருக்கீங்களா? தனுஷ் ரசிகர்னு இல்ல. எந்த ஒரு ஹீரோவின் ரசிகர்களும் சோஷியல் க்ரைம் பண்ணவே மாட்டாங்க. அவங்ககிட்ட அப்படி ஒரு டிசிப்ளின் இருக்கும். ‘நாம தப்பு பண்ணினா தலைவருக்குக் கெட்டபெயர் சேர்ந்திடும்’னு ரசிகர்கள் நினைப்பாங்க. அந்த நல்லெண்ணமே ஒருத்தரை தப்பு செய்யவிடாது.

சமீபத்துல தனுஷ் சார் மன்றத்தைச் சேர்ந்தவங்க பிரமாண்ட ரத்த தான முகாம் பண்ணினாங்க. இப்படி சேவைகள் நிறைய பண்றோம். சாரையும் அவரது ரசிகர்களையும் ஒருங்கிணைக்கற ஒரு வேலையா இதை பாக்குறேன். பதிவு செய்த மன்றங்களின் எண்ணிக்கையே ஏழாயிரத்தை தாண்டுது. ஒவ்வொரு மன்றத்திலும் 20லிருந்து 35 பேர் வரை இருக்காங்க...’’ எனப் பெருமிதம் கொள்பவர் தனுஷுக்கும் ரசிகர்களுக்குமான உறவு பற்றி பேசினார்.
‘‘எம்ஜிஆர் கட்சி தொடங்கினப்ப அவரது ரசிகர் மன்றத்தினர்தான் அவருக்கு வலுசேர்த்தாங்க. என்டிஆருக்கும் அப்படித்தான்.

ஒரு தலைவருக்கு அவரோட ரசிகர்கள் மிகப்பெரிய பலம். எங்க மன்றம் ரொம்பவே கட்டுக்கோப்பான மன்றம். நிர்வாகி, இளைஞரணி, மாவட்டம், வட்டம், ஒன்றியம், கிளைனு கட்சிக்கான அமைப்பு போல கட்டமைக்கப்பட்டிருக்கு! எங்க மன்றத்துல உள்ளவங்க படங்களின் ரிலீஸுக்கு போஸ்டர் ஒட்டுறதைத் தாண்டி, படிக்கற குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்குறது, குளம் தூர்வார்றது, கடற்கரையில்
குப்பையை அகற்றுவதுனு நிறைய சேவைகள் செய்யறாங்க.

ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தனுஷ் சாரை பார்க்கவும், தங்களோட கல்யாணம், புதுவீடு புகுவிழா, காதுகுத்துனு அவரை இன்வைட் பண்ணவும் ரசிகர்கள் வந்திட்டிருப்பாங்க. ஒவ்வொருத்தரும் சாருக்கு முக்கியமானவங்கதான். ஆனா, அவரால எல்லார் வீட்டுக்கும் போய் சிறப்பிக்க முடியாது. அதற்காகவே தலைவர் சார்பா நானோ, செயலாளர் ராஜாவோ (தனுஷின் மேக்கப்மேன்) செல்வோம்.

ஒவ்வொரு மாவட்டத் தலைவர் சொல்ற விஷயத்தையும், தனுஷ் சார்கிட்ட சொல்லிடுவேன். அதற்கு அவரோட வழிகாட்டுதலையும் பின்பற்றுவோம். ‘ரசிகர்கள்னாலே பாலாபிஷேகம் பண்றவங்க தானே’னு சொல்லிட முடியாது.சில ரசிகர்கள் தங்கள் தலைவர் மீது உள்ள அதீத அன்பில் அப்படி பண்ணிடறாங்க. அப்படி பண்றங்களை உடனே கூப்பிட்டு கண்டிப்போம். சில நேரங்கள்ல, ‘மன்ற போஸ்டர்ல எங்க பெயர் இடம்பெறல, போட்டோ இடம்பெறல, பெயரை சின்னது பண்ணிட்டாங்க’ என்கிற மாதிரியான புகார்களும் வரும். அப்புறம், அவங்கள கூப்பிட்டு பேசுவோம். கேட்டுக்குவாங்க.
 
சில மன்றத்துல இருந்து சாரோட போட்டோ எடுத்துக்கணும்னு விரும்புவாங்க. படப்பிடிப்பு இல்லாத நாட்கள்ல சார் அவங்கள வரச்சொல்லி, போட்டோஸ் எடுத்துக்குவார். சமீபத்துல குற்றாலத்துல ஷூட் நடந்தப்ப சில நாட்கள் ரசிகர்களுக்கு ஒதுக்கி, போட்டோவுக்கும் போஸ் கொடுத்து அனுப்பினார்.

ஆனா, பொதுவா அவர் ஷூட்டிங்ல ரசிகர்களை சந்திக்கிறதில்ல. போட்டோ ஷூட்டும் எடுப்பதை என்கரேஜ் பண்ண மாட்டார். ஏன்னா, பத்து பேருக்கு போட்டோவுக்கு போஸ் கொடுத்து அனுப்பினார்னா, அவங்க அடுத்த நாளே நூறு பேர்கிட்ட சொல்லி, பெரிய கூட்டத்தையே அழைச்சிட்டு வந்திடுவாங்க. அது அந்தப் பட இயக்குநர், தயாரிப்பாளருக்கு பெரிய தொல்லையா போயிடும்.

நான் ‘திருடா திருடி’யில் இருந்து சாரோட ட்ராவல் பண்றதால, மன்றத்துல உள்ளவங்க நான் தலைவர்ங்கறதை தாண்டியும் தனி அன்பா இருக்காங்க. இந்த வருஷம் எல்லா மன்றத்துல இருந்தும் டெய்லி ஷீட் காலண்டர் அச்சிட்டிருந்தாங்க. ஒவ்வொரு வீட்டிலும் தனுஷ் சார் இருக்கார், இருப்பார்...’’ மகிழும் சுப்ரமணியம் சிவா, இயக்குநர் ஆவதற்கு முன்பு, தஞ்சாவூரில் உரக்கடை வைத்திருந்தாராம்!‘‘நான் தஞ்சை வாசி. ஒரு பூச்சிக்கொல்லி மருந்துக் கம்பெனியோட விற்பனைப் பிரதிநிதியா வேலை பார்த்திருக்கேன். தஞ்சைல நெல், பருத்தி, கரும்பு சாகுபடி அதிகம். விவசாயிகளோட நேரடி தொடர்பு இருந்தது.

என் கம்பெனியோட டார்கெட்டுக்காக குறிப்பிட்ட பூச்சிக்கொல்லியை விற்க வேண்டிய சூழலுக்கு ஆளானேன். வேலை பிடிக்காம அப்புறம் சொந்தமா உரக்கடை வச்சேன். ஒரு கட்டத்துக்கு மேல அதிலும் ஆர்வம் இல்ல. சென்னை வரலாம்னு முடிவு பண்ணினேன். இங்க பாரதிராஜா சாரோட நண்பர் ஒருத்தரோட டச்ல இருந்ததால, சென்னைக்கு வந்துட்டேன். பிரசாத் ஸ்டூடியோவின் சவுண்ட் என்ஜினியர் அரசுவின் நட்பு கிடைச்சது.

சென்னை வந்த ஒரு மாசத்துலயே அசிஸ்டெண்ட் டைரக்டர் ஆகிட்டேன். ‘அசுரன்’ ரைட்டர் பூமணி சாரோட ‘கருவேலம் பூக்கள்’ல ஒர்க் பண்ணினேன். அந்தப் படம் முடிச்சதும் ‘முகவரி’ துரை சார், ‘தயா’ செந்தில்குமார், ‘சாக்லெட்’ வெங்கடேஷ் சார்னு பலர்கிட்ட ஒர்க் பண்ணினேன். தயாரிப்பாளர் எஸ்.கே.கிருஷ்ணகாந்த் பழக்கமானார். அவர்கிட்ட ஒரு கதை சொன்னேன். ‘யார் ஹீரோ’னு கேட்டார்.

அப்ப, ‘துள்ளுவதோ இளமை’ ரிலீஸ் ஆகி, ஐம்பதாவது நாள் தாண்டி ஓடிட்டிருந்தது. ‘சாக்லெட்’ தயாரிச்ச மாதேஷ் சார், ‘துள்ளுவதோ இளமை’யையும் ரிலீஸ் பண்ணியிருந்ததால, அந்தப் படத்தை உடனே பார்த்தேன். தனுஷ் சாரின் நடிப்பு பிடிச்சுப்போச்சு.

கிருஷ்ணகாந்த் சாருக்கு கஸ்தூரிராஜா சார் பழக்கம். அதனால தனுஷ் சாரை ஈஸியா சந்திச்சு, கதை சொல்லிட்டேன். ‘திருடா திருடி’ல மறக்க முடியாத விஷயங்கள் நிறைய இருக்கு. ‘காதல் கொண்டேன்’ ஷூட் போகும் போதுதான் என் படமும் ஆரம்பிச்சது. ரெண்டு படத்திலும் தனுஷ் சார் மாறிமாறி நடிச்சுக் கொடுத்தார்.

எந்த இடத்திலும் டூயட் ஸாங் இல்லாததால, ஒரு பாடல் சேர்க்கலாம்னு நினைச்சேன். அப்புறம் கோலார் தங்க வயல் போய் ‘மன்மத ராசா...’ பாடலை ஷூட் பண்ணிட்டு வந்துட்டேன். யாருக்கும் அந்தப் பாட்டு பிடிக்கல. வேண்டாம்னு சொன்னாங்க. படத்துல அந்த பொண்ணுக்கு லவ் வந்த இடத்துல ஒரு ஸாங் கண்டிப்பா வேணும்னு உறுதியா இருந்தேன். ஆனா, எந்த பாடல் வேண்டாம்னு சொன்னாங்களோ, ‘அந்தப் பாட்டாலதான் படம் ஓடுது’னு படம் ரிலீசானதும் பேச ஆரம்பிச்சிட்டாங்க.

அதுல தனுஷ் சார் ஒரு டயலாக் பேசுவார். ‘இன்னும் பத்து வருஷம் கழிச்சு பாருங்க. பெரிய நடிகராகி, நேஷனல் அவார்டெல்லாம் வாங்குவேன்’னு சொல்லுவார். ஒரு மிராக்கிள் மாதிரி பத்து வருஷம் கழிச்சு, ‘ஆடுகள’த்துக்காக அவர் தேசிய விருது வாங்கினார்...’’ பூரிக்கும் சுப்ரமணியம் சிவாவின் பேச்சு, இப்போது அவர் இயக்கி வரும் ‘வெள்ளை யானை’ பக்கம் திரும்பியது.

‘‘டைட்டில் ஒரு குறியீடுதான். இது விவசாயிகளைப் பத்தின உணர்வுபூர்வமான கதை. ஆனாலும் எல்லா சீன்லயும் நகைச்சுவை இழையோடும்.
செழிப்பான ஒரு கிராமம். அங்க நிறைவா வாழற மக்கள் மத்தியில ஒரு திருடனும் இருக்கான். ஊர்ல முப்போகமும் விளைஞ்சு, மக்கள் சந்தோஷமா இருக்கிறப்ப திருடனை அடிச்சுத் துரத்திடறாங்க.

சில காலத்துக்குப்பிறகு அந்த கிராமம் வறட்சியின் பிடியில சிக்குது. அந்த நேரத்துல அவங்களால அடிச்சு விரட்டப்பட்ட விவசாயி வேற ஊர்ல வசதியா வாழ்றதா கேள்விப்படறாங்க. இப்ப அவங்க அத்தனை பேரும் அந்த திருடன்கிட்டயே போய் தீர்வு கேட்கறாங்க. அதுக்கு அந்தத் திருடன் விதிக்கும் நிபந்தனை என்ன... கிராமத்து மக்கள் அவன் கண்டிஷனுக்கு சம்மதிச்சாங்களா... என்பதெல்லாம் மீதிக்கதை.

திருடனா யோகிபாபு நடிச்சிருக்கார். சமுத்திரக்கனி, ‘மனம் கொத்திப்பறவை’ ஆத்மிகா, சரண்யா ரவிச்சந்திரன், இயக்குநர்கள் மூர்த்தி, செந்தில், இ.ராமதாஸ்னு பலரும் நடிச்சிருக்காங்க. கிராமத்தின் அழகையும், எளிய மக்களின் வாழ்க்கையையும் அப்படியே அள்ளிக்கொண்டு வந்திருக்கார் ஒளிப்பதிவாளர் விஷ்ணு ரங்கசாமி. எடிட்டிங்கை ஏ.எல்.ரமேஷ் பண்றார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கறார். இப்ப பின்னணி இசை வேலைகள் பரபரப்பா போயிட்டிருக்கு...’’ என்கிறார் சுப்ரமணியம் சிவா.

செய்தி: மை.பாரதிராஜா

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்