விடிஞ்சா வேலன்டைன்ஸ் டே!ஒரு பெண்ணைக் கண்டுபிடித்து காதலிப்பதற்கு முன்பே, குடும்பத்தினர் பார்த்து ஏற்பாடு செய்த பெண்ணை மணமுடித்து வாழ்க்கையைத் தொடங்கிய சமயத்தில்தான் ‘காதலர் தினம்’ வந்தது. அலுவலக நண்பர்களின் பேச்சு என் காதில் விழுந்து குடைந்தது.அதுவரை காதலர் தினத்துக்கும், மணமானவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற எண்ணம் என்னுள் புதைந்திருந்தது.

‘‘திருமணமானவங்களுக்குத்தான் இது முக்கியம். உன் மேல, மனைவிக்கு மதிப்பு அதிகமாகணும்னா இந்த மாதிரி சந்தர்ப்பங்களை பயன்படுத்தி திடீர் பரிசுகள் கொடுத்து அசத்து. பரிசு கொடுக்கறதுல ஒரு சஸ்பென்ஸ் இருக்கணும். எந்த இடையூறுகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு சஸ்பென்ஸை காப்பாத்தணும்...’’ இலவச அறிவுரைகள் அடிக்கடி என் காதுகளைத் தாக்கின.“உனக்கு தலை வேலன்டைன்ஸ்டே வேற...” தலை தீபாவளி ரேஞ்சுக்கு ஒருவன் உசுப்பேத்தி விட்டான்.

“பரிசை கொடுக்கறது மட்டும் சர்ப்ரைஸ் இல்ல. அந்த பரிசு அவங்க எதிர்பார்க்காததா இருக்கணும். அப்புறம் பாரு அன்னியோன்யத்தை...” காற்றடித்து ஊதினான் மற்றொருவன்.“மிஸ் பண்ணிடாதே... அப்புறம் வருத்தப்படுவே...” மற்றொரு உசுப்பல் கேட்டு அடங்கியது. மொத்தத்தில் அமல் படுத்தித்தான் பார்க்கலாமே என மூளையில் ஆணி அடித்து உட்கார்ந்தது.எதையும் ரகசியமாக வைத்துக் கொள்ளும் பழக்கமில்லாத எனக்கு இது பெரும் சவாலாகத் தெரிந்தது.தீவிர யோசனைக்குப் பிறகு ஆபீஸில் லோன் போட்டு காதலர் தினப் பரிசாக மனைவிக்கு ஒரு தங்க மோதிரம் வாங்க முடிவு செய்தேன்.
கல்யாணத்துக்குப் பிறகு குண்டாகி விட்டதாக அவள் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்ததால் மோதிரத்துக்கான லேட்டஸ்ட் அளவை எடுப்பதற்கான திட்டம் உருவானது.

அவள் விரலை நேரடியாக அளவு எடுத்தால் சர்ப்ரைஸ் நழுவிவிடும் என்பதால் இரவு தூங்கும்போது ஒரு நூலை அவளுடைய மோதிர விரலில் சுற்றி அளவெடுக்கும் படலத்தை வெற்றிகரமாக முடித்தேன். அந்த நூலை குப்பைத் தொட்டியில் ஒளித்தேன்.காலையில் வழக்கத்துக்கு மாறாக எனக்கு முன்பாக எழுந்தவளின் கூரிய பார்வையில் குப்பைத் தொட்டியில் கிடந்த விரல் அளவுக்கு சுருக்குப் போட்ட நூல்,  தட்டுப்பட்டது.

“யாருக்கு மோதிரம்..? என்ன இதெல்லாம்..?” நெத்தியடி கேள்வியுடன் என்னை இரண்டு தட்டு தட்டி எழுப்பினாள்.
“மோதிரமா... அப்படின்னா..?’’

அவளுடைய முறைப்பு பார்வையில் விளைந்த பயத்தில் சஸ்பென்ஸ் உடைந்து விடும் போல் இருந்தது.“அது வந்து... எனக்கு தூக்கத்துல தும்பி பிடிக்கிற பழக்கம்... ராத்திரி இங்க ஒரு தும்பி சுத்திக் கிட்டு இருந்துச்சு... அதைப் பிடிக்க நூலால சுருக்குப் போட்டேன்...’’ என் கற்பனைத் திறனை முழுவதும் பயன்படுத்தி நூல் விட்டேன்.என் பதில் திருப்தியாக இல்லை என்பது அவளுடைய முக பாவங்களில் வெளிப்பட்டது.அதற்குள், அவள் அம்மாவிடமிருந்து போன் வந்ததால் தப்பித்தேன்.

முதல் கட்டத்திலேயே எதிர் கொண்ட இடையூறை அனுபவித்ததும் கடைசி வரை சஸ்பென்ஸ் காப்பது கடினம் என்று புரிந்தது.
பல் தேய்த்துக் கொண்டிருக்கும்போது வாயோடு காதையும் திறந்து வைத்திருந்ததால் மனைவி, அவள் அம்மாவிடம் பேசிய வார்த்தைகள் என் அனுமதி இல்லாமல் காதுக்குள் நுழைந்தன.“ஆமா... நீ சொல்லிக் கொடுத்தா மாதிரி வீட்டு குப்பைத்தொட்டியைக்கூட அப்பப்ப செக் பண்றேன். இன்னைக்கு காலைல கூட மோதிர அளவுக்கான நூல் முடிச்சு ஒண்ணைப் பார்த்து விசாரிச்சேன்...”வீட்டில் நடக்கும் ஒவ்வொரு அசைவும் மாமியாரின் மேலான கவனத்துக்கு கொண்டு செல்லப்படுவது புரிந்தது.

பாதி பல் தேய்ப்பில் பல்லி மாதிரி சுவரோடு ஒட்டி நகர்ந்து அறையில் அந்த நூலைத் தேடினேன். குப்பைத் தொட்டியில் இல்லை. அது அவளுடைய கஸ்டடிக்கு மாறியிருக்கலாம்.நடப்பது நடக்கட்டும் என அந்த விஷயத்தை மறந்தேன். அவள் மறந்தாளா என்பது போகப் போகத்தான் தெரியும்!
பெட்ரோல் விலை போல் தங்கம் விலை ஏறிக் கொண்டிருப்பதால் பரிசுப் பொருளை உடனே கொள்முதல் செய்ய முடிவு செய்தேன்.

மோதிர அளவை எப்படியாவது சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கையில் நகைக் கடைக்குள் நுழைந்தேன். மோதிர கவுன்டரில் இளசுகள் கூட்டம் அலை மோதிக் கொண்டிருந்தது. ‘என் ஆளுக்கு பொருத்தமானதா கொடுங்க...’ என்று விற்பனைப் பிரதிநிதியிடம் கேட்க, அவர்கள் அசடு வழிந்து கொண்டிருந்தார்கள்.

பெரும்பாலானவர்கள் என்னைப் போல் விரல் அளவு இல்லாமல் விழித்துக் கொண்டிருந்தனர்!துணைக்கு கூட்டம் சேர்ந்துவிட்ட தைரியத்தில் ‘என் ஆளு’க்கான மோதிர செலக்‌ஷனில் இறங்கினேன். விரல் அளவு ஒப்பீட்டுக்கு கடைக்கு விஜயம் செய்த பெண்களில் ஒருவரை ஆழ்ந்த ஆராய்ச்சிக்குப் பிறகு தேர்ந்தெடுத்து, அவரை உதவிக்கு அழைத்தேன்.நீலக் கல் பொதிந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மோதிரத்தை அங்கு மாட்டியிருந்த ஆஞ்ச
நேயர் படத்திற்குக் கீழ் வைத்து, கண் மூடி பிரார்த்தனை செய்து கடை முதலாளி என்னிடம் ஒப்படைத்தார்.  

பரிசாகக் காட்டிய சில தம்மாத்தூண்டு பர்ஸுகளில் இருந்து என் மனைவிக்குப் பிடித்த செந்தூரக் கலரில் ஒரு பர்ஸைத் தேர்ந்தெடுத்தேன்.
விரல் அளவு கொடுத்து செலக்‌ஷனுக்கு உதவிய பெண்ணுக்கு நன்றி சொன்னேன். “நன்றி எல்லாம் எதுக்கு சார்... என் அக்கா தங்கைக்கு செய்வதில்லையா..?’’ என்றவர் ஏதோ யோசனையில் ஆழ்ந்தார்: “உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே..?’’ கூலிங் கிளாஸை தலைக்கு மேல் உயர்த்தி, என்னை உற்றுப் பார்த்தார்.

‘‘இல்லைங்க. ஒரு சமூக சேவகியா இப்பதான் முதல் முதலா உங்களைப் பார்க்கிறேன்...” இது இடையூறாக உருவெடுக்காமல் இருக்க வேண்டுமே என்ற வேண்டுதலுடன் அவசர அவசரமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.மோதிரம் வாங்கிவிட்டேனே தவிர காதலர் தினம் வரை அதை எப்படி ரகசியமாக பாதுகாப்பது என்று தெரியாமல் விழித்தேன்.

ஆபீஸில் அவ்வளவு பாதுகாப்பான இடம் எதுவும் இல்லை. நண்பர்களிடம் கொடுத்து அவர்களிடம் சஸ்பென்ஸை உடைக்க மனமில்லை. வீட்டில் பீரோ, பெட்டி ஆகிய இடங்களில் பதுக்கிப் பார்த்தேன். அவளுடைய கண்களிலிருந்து மறைக்க முடியும் என்று தோன்றவில்லை.
கடைசியில் மனைவி இல்லாத சமயத்தில் வீட்டில் வேலை செய்யும் அஞ்சலையிடம் ரகசியமாக சரண்டர் ஆனேன். “இது என் தங்கைக்கு வாங்கினது... மனைவிக்குத் தெரிஞ்சா கோபப்படுவா.

அக்காவா நினைச்சு உன்கிட்ட கொடுத்து வைக்கலாம்னு பார்க்கறேன்...”அந்த பளபளப்பான மஞ்சள் நிற உலோகத்தைக் கண்டதும் அவள் கண்கள் அகல விரிந்தன. “தங்கம் எப்படி இருக்குனு கூட மறந்து போச்சுய்யா... கழுத்துல, கைல, காதுல இருந்ததெல்லாம் இப்ப அடகுல...” என்று வருத்தப்பட்டாள்.“அதுதான் இப்ப பார்த்துட்டியே... உனக்கு அதிர்ஷ்டம்னு நினைச்சுக்கோ...”“உங்க வூட்ல இல்லாத எடமா..? இந்த விவகாரம்லாம்  நமக்கு வேணாம்...” சற்று யோசித்தபிறகு முதல் சுற்றிலேயே மோதிரத்திற்கு புகலிடம் வழங்க அஞ்சலை அஞ்சினாள்.

“அடுத்த பத்தாவது நாள்தான் இது எனக்கு தேவைப்படும். அது வரை கல்யாணம், காது குத்தலுக்கெல்லாம் நீ போட்டுக்கிட்டு போகலாம்...” சலுகை யுக்திகளைத் தொடங்கினேன்.“நெசமாத்தான் சொல்றீங்களாய்யா..?’’ கோர்ட் போல் சத்தியம் வாங்காத குறையாகக் கேட்டாள்.
அவள், சலுகை வலையில் விழுந்து விட்டது புரிந்தது. “சரிங்கய்யா, உங்களுக்காக இம்மாம் பெரிய பொறுப்பை ஏத்துக்கறேன்... திரும்ப வேணுங்கும்போது எனக்கு ரெண்டு நாள் நோட்டீஸ் வேணும். சம்மதமா..?” சம்மதித்து மோதிரத்தை அவளிடம் ஒப்படைத்து நிம்மதிப் பெரு மூச்சு விட்டேன்.

ஆனாலும் தினமும் ஆபீசுக்கு நேரமாகி விட்டாலும் அஞ்சலையின் வருகைக்காகக் காத்திருந்தேன்.“அஞ்சலை நல்லா வேலை செய்யறா இல்ல..?” மனைவியிடம் இது போட்டு வாங்கும் முயற்சி.“திடீர்னு இப்ப எதுக்கு இந்த அனாவசிய கேள்வி? நீங்க ஆபீஸ் கிளம்பற வழியைப் பாருங்க. இன்னைக்கு வரமாட்டா. .ஏதோ காது குத்தலுக்கு போகணும்னு சொன்னா...” டிரஸ்ஸை மாட்டிக் கொண்டு, பிரசவ வார்டு போல்,  குறுக்கும் நெடுக்குமாக நடந்து மறு நாளும் காத்திருந்தேன்.

‘‘சொந்த ஊர்ல ஏதோ திருவிழாவாம். இன்னும் ரெண்டு நாளைக்கு வரமாட்டேன்னு சொல்லி அனுப்பியிருக்கா...” என்ற மனைவி என்னை சந்தேகத்துடன் பார்ப்பது போல் தோன்றியதால் நேருக்கு நேரான பார்வைகளைத் தவிர்க்க தலையைக் குனிந்து கொண்டேன்.
இரவு சாப்பிட்டபிறகு மனைவி என் எதிரில் வந்து உட்கார்ந்தாள்.அவள் எதிரில் உட்கார்ந்தாலே ஏதோ குறுக்கு விசாரணை தொடங்கப் போகிறாள் என்பது குறுகிய காலத்தில் நான் கற்ற பாடம்.

“ஆஞ்சநேயரைப் பார்த்தீங்களா..?” கடைசி ஸ்டெப்பை முதல் கேள்வியாக அவள் கேட்டதும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.
“உன்னை விட்டுட்டு கோயிலுக்குப் போவேனா..?” ஆச்சரியத்தை மறைத்து பதிலை கஷ்டப்பட்டு அவிழ்த்தேன்.“என் தோழி ஒருத்தி உங்களை நகைக்கடைல பார்த்ததா சொன்னாளே... அவ ஊருக்கு கிளம்பிப் போயிட்டதால நேர வரச் சொல்ல முடியல. யாருக்கு, என்ன நகை வாங்கினீங்க..?”
“சே... சே... உனக்கு யாரோ தவறா தகவல் சொல்லியிருக்காங்க. நகை வாங்க என்கிட்ட ஏது அவ்வளவு பணம்..?”
விளக்கத்தின் இரண்டாவது பகுதியை அவள் நம்பியது போல் இருந்தது.

‘‘ஒரு கண் என்ன... ரெண்டு கண்களையும் வச்சு கண் கொத்திப் பாம்பாக கவனிச்சுட்டுதான் இருக்கேன். நூல் இழைல தப்பிச்சுடறார்...” என்று தன் அம்மாவிடம் அவள் புலம்பியதை பின்னர் மறைந்திருந்து கேட்டேன்!இரண்டு நாள் லீவு சொல்லிவிட்டு ஒன்பது நாட்களுக்குப் பிறகு வீட்டு வேலைக்கு வந்த அஞ்சலையைப் பார்த்ததும் என் முகம் மலர்ந்தது. இதை, மனைவியும் பார்த்துவிட்டாள் போல. இல்லையென்றால், பற்களை ஏன் நறநறவென்று கடித்து, தலையில் அடித்துக் கொள்ள வேண்டும்..?

அஞ்சலை பத்து தேய்க்கும் அழகை ஓரக் கண்களால் ரசித்துக் கொண்டிருந்தேன். பளபளவென்று அவள் தேய்த்து வைத்த பித்தளைப் பாத்திரம் எனக்கு தங்கமாகத் தெரிந்தது.காய் வாங்குவதற்கு, மனைவி வாசலை நோக்கிப் போனதை பயன்படுத்தி, அஞ்சலையின் நலன் பற்றி விசாரித்தேன்.
“செம்ம...’’ என்றாள்.எனக்குப் புரியவில்லை.“நீ கொடுத்த மோதிரத்தை போட்டுக்கினு, போக நினைக்காத எல்லா காதுகுத்தல், கண்ணாலத்துக்கும் போயிட்டு வந்துக்கினு இருக்கேன். ஊர் திருவிழாவுக்குக் கூட போயாந்துட்டேன்னா பார்த்துக்கோயேன். சொந்த பந்தங்க எல்லாம் கண்ணு வேற போட்டுடுச்சுங்க... அதான் திருஷ்டி மாரி ஆயிடுச்சு...” அஞ்சலை தலை நிமிராமல் பேசினாள்.

“ரொம்ப சந்தோஷம் அஞ்சலை... விடிஞ்சா வேலன்டைன்ஸ் டே. அந்த மோதிரம் எனக்கு இன்னைக்கு அவசியம் வேணும்...”
“ஆங்... திருஷ்டி விழுந்துடுச்சுன்னு சொல்றேன்ல...”எனக்குப் புரியவில்லை. அவளே விளக்கினாள்.“என் மருமக நேத்து ஒரு கண்ணாலத்துக்கு அத போட்டுக்கினு போயிட்டு வீட்ல கொண்டாந்து வச்சுட்டு தூங்கியிருக்கா. அப்ப...”“அப்ப..?’’ டேன்ஜர் சிக்னல் விழுந்து எனக்கு வயிற்றைக் கலக்கியது.“என் வூட்டுக்காரர் வாங்குன கடனுக்காக யாரோ கதவைத் தட்டியிருக்காங்க...”“ம்...” என் குரலின் டெசிபல் குறைந்து கொண்டு வந்தது.“அப்ப வூட்டுக்காரரும் எதேச்சையா உள்ளே வந்திருக்கார்...”“வந்து..?”“மனுஷனுக்கு மானம்தான் முக்கியம்... பொருள் அப்புறம் வாங்கிக்கலாம்னு ரோஷத்தோட மோதிரத்தை அடகு வைக்க சேட்டுகிட்ட எடுத்துட்டு போயிருக்கார்...”

“அப்புறம்...” என் குரல் ஈன ஸ்தாயிக்கு மாறியது.
“அவரை போலீஸ் இட்டுக்குனு போயிடுச்சு...”
“எதுக்கு அவரை போலீஸ் இட்டுக்கணும்..?” அழாத குறையாகக் கேட்டேன்.
“அதான் எனக்கும் புரியல..”நான் தலையில் கை வைத்து அங்கேயே உட்கார்ந்தேன்.
“நீங்க பேசியதையெல்லாம் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன். அதுக்கு அப்புறம் நான் சொல்றேன்...”
எனக்கு நன்கு பழக்கப்பட்ட அதிகாரக் குரல் கேட்டுத் திரும்பினேன்.

“ஏன்னா... அது தங்க மோதிரம் இல்ல... டூப்ளிகேட்!”
“எப்படி உனக்குத் தெரியும்..?”“அந்த நகைக் கடைக்காரர் ஆஞ்சநேய பக்தர். ஆஞ்சநேயர் கோயில்ல உங்களையும் என்னையும் சேர்த்து எப்பவோ பார்த்திருப்பார் போலிருக்கு. அதை ஞாபகத்துல வச்சு, சமீபத்துல என்னைக் கோயில்ல பார்த்தப்ப நீங்க நீலக் கல் மோதிரம் வாங்கினதையும், செந்தூர நிற பர்ஸை பரிசா அவர் கொடுத்ததையும் சொல்லி வாழ்த்தினார்..!”

“வாழ்த்து சொன்னதற்கும், போலீசுக்கும் என்ன சம்பந்தம்..?”என் மண்டை குழம்பியது.“குட்டி போட்ட பூனை மாதிரி மோதிரத்தை நீங்க பீரோலயும், பெட்டிலயும் மாத்தி மாத்தி வைச்சதையும், மோதிரத்துக்கான நூல் அளவையும் முடிச்சுப் போட்டு பார்த்தேன்... என் சந்தேகம் வலுத்தது...’’“வலுத்து..?”
“என் குருநாதரான அம்மாவின் ஆலோசனைப்படி தங்க மோதிரத்துக்குப் பதிலா, டூப்ளிகேட் மோதிரத்தை மாத்தி வச்சேன். அந்த டூப்ளிகேட் மோதிரத்தைத்தான் அஞ்சலைகிட்ட நீங்க கொடுத்திருக்கீங்க...’’மனைவி சொல்லச் சொல்ல எல்லாம் தெளிவாகப் புரிந்தது.
“இந்தாங்க. விடிஞ்சா தலை வேலன்டைன்ஸ் டே. உங்க கையால இன்னைக்கே இந்த மோதிரத்தை என் விரல்ல மாட்டி விடுங்க...” ஒரிஜினல் மோதிரத்தை மனைவி என் கையில் கொடுத்தாள்.

“ம்... என் திட்டப்படி சர்ப்ரைஸ் மிஸ் ஆயிடுச்சே...” நண்பர்களிடம் கற்ற சர்ப்ரைஸ் கிஃப்ட் திட்டத்தைப் பற்றி அவளிடம் விவரித்தேன்.
“அதுக்கு பதிலா போலீஸ் உட்பட எவ்வளவு சர்ப்ரைஸ் பார்த்துட்டீங்க..!” மனைவி கண்ணடித்தாள்.“டூப்ளிகேட் மோதிரத்த கொடுத்து என்ன செம்மையா ஏமாத்திட்டீங்க இல்ல...’’ அஞ்சலை கோபமாகக் கத்தினாள்.அவளுக்கு வாங்கியிருந்த வெள்ளி கொலுசைக் காட்டியதும் அவள் கோபம் கொஞ்சம் தணிந்தது.“அப்ப என் வீட்டுக்காரர்..?’’

“அவருக்கு எதுக்கும்மா கொலுசெல்லாம்..?!’’
“விடிஞ்சா வேலன்டீயாமே..! அந்த நல்ல நாள்ல இந்த கொலுசு சத்தத்தை கேக்க அவர் வீட்டோட இருக்கணும்...” அஞ்சலை வெட்கப்பட்டாள்.
அஞ்சலைக்கு ஹாப்பி வேலன்டைன்ஸ் டே சொல்லி, அவளுடைய வீட்டுக்காரரை வெளியில் கொண்டுவர போலீஸ் ஸ்டேஷனுக்கு நானும் என் மனைவியும் விரைந்தோம்!

பர பர

ஆண்ட்ரியா பக்கம் காத்து வீசுகிறது. நயன்தாரா, த்ரிஷா மறுக்கும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் பல, இப்போது இவர் வசம்.
தமிழில் மூன்று படங்களில் பரபரக்கும் பேபி, மியூசிக் பேண்டிலும் கவனம் செலுத்துகிறார். சென்ற ஆண்டில் அமெரிக்காவில் லைவ் கன்சர்ட்டில் பாடியது போல, இந்தாண்டும் வெளிநாடுகளில் கன்சர்ட் நடத்த திட்டமிட்டுள்ளார் ஆண்ட்ரியா!

ஜொலிஜொலிக்க

‘‘தெலுங்கில்தான் கவனம் செலுத்துறீங்க போல..?’’ என ‘தர்பார்’ நிவேதா தாமஸிடம் கேட்டால், கண்கள் ஜிவ்விடுகிறார்.
‘‘டோலிவுட்ல ஒரே டைம்ல நிறைய படங்கள் வந்தது. ‘பாபநாசம்’ படத்துக்குப் பிறகு என் காலேஜ் எக்ஸாம் வந்திடுச்சு. அதனால ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு ‘தர்பார்’ பண்ணினேன். கேப் இனி விழாது. தமிழ்ல கவனம் செலுத்துவேன்...’’ என்கிறார் கண்கள் ஜொலிக்க!

பளபள

இந்த ஆண்டு பளபளவென மின்னப்போகிறாராம் சுபிக்‌ஷா. ‘அன்னக்கொடி’க்காக பாரதிராஜா கண்டுபிடித்த பொண்ணு. இப்போது உதயநிதியின் படத்தில் நடித்து வரும் சுபி, பாலாஜி சக்திவேலின் ‘யார் இவர்கள்’ ரிலீஸை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.

ஐஸ் ஐஸா

‘‘எனக்குப் பிடிச்ச நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..’’ என ராதிகா சரத்குமார் சொன்னாலும் சொன்னார், ஹேப்பியில் துள்ளுகிறார் ஐஸ்.
‘‘ராதிகா மேம் நடிச்ச படங்கள் பார்த்து வளர்ந்திருக்கேன். ‘தர்மதுரை’க்குப் பிறகு ‘வானம் கொட்டட்டும்’ல அவங்களோட நடிச்சிருக்கேன். அவங்ககிட்ட நிறைய கத்துக்க முடியும். அவ்ளோ டேலன்டட் அவங்க!’’ என டன் கணக்கில் ஐஸ் மழை பொழிந்தார் ஐஸ்!

எஸ்.ராமன்