Shooting QUEEN அபூர்வி!



இணைய வசதி பரவலான பிறகு கிரிக்கெட்டுக்கு இருக்கும் மவுசு மற்ற விளையாட்டுகளுக்கும் கிடைக்க ஆரம்பித்துள்ளது.

அதற்கு உதாரணம்தான் இணையத்தில் அபூர்வி சந்தேலாவுக்குக் கிடைத்து வரும் பாராட்டு மழையும், புகழ் வாழ்த்துகளும்.சில மாதங்களுக்கு முன் புதுதில்லியில் ‘இன்டர்நேஷனல் ஷூட்டிங் ஸ்போர்ட்ஸ் ஃபெடரேஷன்’ சார்பாக உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி கோலாகலமாக நடந்தது. ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறுவதற்கான நுழைவுச் சீட்டாகவும் இப்போட்டி பார்க்கப்பட்டது.
இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் தங்கம் வென்றார் அபூர்வி சந்தேலா.

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் ‘10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில்’ தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையும் தன் வசமாக்கினார். தவிர, 252.9 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனையையும் படைத்தார். இதற்கு முன்பு சீன வீராங்கனை ஒருவர் 252.4 புள்ளிகள் பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது.

ஜெய்ப்பூரில் பிறந்து வளர்ந்த அபூர்விக்கு சிறு வயதில் இருந்தே துப்பாக்கி சுடுதலில் தீராத ஆர்வம். 19 வயதிலேயே தேசிய அளவில் நடந்த 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் தங்கத்தை தட்டியிருக்கிறார். 2014ல் நடந்த காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் தட்டிய வீராங்கனை இவர்.

‘‘ரொம்ப நாளாகவே பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். இறுதியாட்டம் கொஞ்சம் கடினமாக இருந்தது. மனதுக்குள் ஒருவித நடுக்கம் என்றுகூட சொல்லலாம். ஆனால், நான் செய்த பயிற்சிக்கு உரிய பலன் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து இதுபோன்ற ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்த என்னை தயார் செய்து வருகிறேன்.

மக்களின் ஆதரவும் பதக்கமும் மகிழ்ச்சிப் படுத்துகிறது. 2020ல் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் தங்கத்தை தட்டுவதே என் இலக்கு...’’ என்று கட்டை விரலை உயர்த்திக் காட்டும் அபூர்வி, ஜனவரி இறுதியில் மூனிச் மற்றும் ஆஸ்திரியாவில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் தங்கத்தைத் தட்டியிருக்கிறார்!

த.சக்திவேல்