லவ் ஸ்டோரி-இன்னும் உங்களை நேசிக்கத்தான் செய்கிறேன் பாரதி!



இயக்குநர் பாபு யோகேஸ்வரன்

பத்திரிகையாளராக இருந்து யாரிடமும் உதவியாளராகப் பணியாற்றாமல் நேரடியாக திரைப்பட இயக்குநரானவர் பாபு யோகேஸ்வரன்.

2005ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘தாஸ்’ படத்தை எழுதி, இயக்கியவர் இவர்தான்.

15 ஆண்டுகளுக்குப் பிறகு இளையராஜா இசையில், ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில், விஜய் ஆண்டனி நடிப்பில் ‘தமிழரசன்’ படத்தை இப்போது எழுதி, இயக்கி வருகிறார். கூடவே வெப் சீரிஸ் ஒன்றும்.இவை இரண்டுமே 2020ல் வெளியாக இருக்கின்றன. குறிப்பிட வேண்டிய விஷயம், ‘தமிழரசன்’ இவரது 2வது படம் என்பது.

இந்த இடைப்பட்ட காலங்களில் ‘ராடன்’, ‘பாலாஜி டெலிவிஸ்டாஸ்’ உட்பட பல சின்னத்திரை தயாரிப்பு நிறுவனங்களில் கிரியேட்டிவ் ஹெட் ஆக பணிபுரிந்திருக்கிறார்.திரைப்படக் கனவுகளுடன் பயணப்படும் ஒவ்வொருவருக்குமே பல்வேறு புறக் காரணங்களால் இடைவெளி விழும். அப்படி விழும் இடைவெளியை எதிர்கொள்ள அசாத்தியமான மன உறுதி வேண்டும். பொங்கி வழியும் சினிமா கனவுகளைப் பொத்திப் பொத்தி பாதுகாக்கும் வல்லமை வேண்டும்.

இந்த வல்லமை பாபு யோகேஸ்வரனிடம் இருந்தது. குறிப்பாக, துவண்டுபோகும் போதெல்லாம் அவரை அள்ளி அணைக்க பாரதியின் இரு கரங்கள் இருந்தன.இதனால்தான் அவரால் இந்த 15 ஆண்டுகால இடைவெளியைக் கடக்க முடிந்தது. தன் திரைப்படக் கனவுகளையும் சிந்தாமல் சிதறாமல் பார்த்துக் கொள்ள முடிந்தது.அதனாலேயே மற்ற காதலர்களை விட பாபு யோகேஸ்வரன் - பாரதி தம்பதியினர் கம்பீரமாக நிற்கிறார்கள்.இனி அவர்களது லவ் ஸ்டோரி... அவர்களது வெர்ஷனிலேயே...

பாரதி:
காதல் - ஒரு நதி! அது ஒரு நபரிடம் நிலைகொள்வதில்லை. நான் ஒரு நபரிடம் மட்டும்தான் காதல் கொண்டேன் என்று யாராவது சொன்னால் அது பொய். ஆனால், வாழ்வு ஒரு நபரிடம் நிலைகொள்கிறது! அங்கே காதல் இன்னொரு பரிமாணம் கொள்கிறது… எங்கள் காதல் எங்களுடைய வாழ்விலிருந்து தொடங்குகிறது…

பாபு முதல்முறை தன் காதலைச் சொன்னபோது நான் ஏற்கவில்லை. அப்போது எனக்கு வேறு காதல் இருந்தது… ஒரு வருட இடைவெளியில் மீண்டும் தன் காதலைச் சொன்னபோதும் நான் ஏற்கவில்லை… அப்போதும் அந்தக் காதல் தொடர்ந்து கொண்டிருந்தது…

பாபுவிடமிருந்து 2001ம் ஆண்டு பிறந்தநாள் பரிசாக ரிச்சர்ட் பாகின் ‘ஜோனாதன் லிவிங்ஸ்டன் ஸீகல்’ புத்தகம் வந்திருந்தது. சில நாட்கள் கழித்து ஒரு கடிதம். அதில், ஸீகலைப் படித்தாயிற்றா என்று ஒரு கேள்வி. ‘பஷீரின் ‘மதிலுகளை’ டேவிட்டின் பைக்கிலிருந்து மறக்காமல் எடுத்துக்கொண்டேனா...’ என ஒரு கேள்வி.

பிறகு இப்படி ஒன்று: ‘ராதை என்னை நேசிக்காமல் போனால் என்ன… நான் ராதையை நேசிக்கத்தான் செய்கிறேன்!’ போன்ற விடலைத்தனமான வார்த்தைகள் அல்ல இவை:

‘இன்னமும் உங்களை நேசிக்கத்தான் செய்கிறேன் பாரதி!’
அப்போது எனது முந்தைய காதல் முறிந்துபோயிருந்தது…

பாபு:
விடலைப்பருவக் காதல்கள் பற்றி பெரிதாகச் சொல்ல ஒன்றுமில்லை. அவை இளையராஜாவின் பாடல்களால் உருவான புகைமண்டலங்கள்.
திருமணக்காலம் கனிந்தபோது அது காதலில் மலரவேண்டும் என்று நினைத்தேன். பாரதியுடனான காதலுக்கு முன் இன்னொரு காதல் எனக்கு வாய்த்தது. சென்னையில்தான். அது பாரதிக்குமே தெரியும்.

சில சமூகக் காரணங்கள், எதிர்கால முரண்பாடுகளைக் கருத்தில்கொண்டு அந்தக் காதலிலிருந்து விலகினேன். பாரதியுடனான காதல் தன்னியல்பாய் உருவானது… அப்போதுதான் அந்தக் கடிதத்தை பாரதிக்கு எழுதினேன் - ‘இன்னமும்…’

பாரதி:
அப்போது சென்னைப் பல்கலைக்கழகத்தில் மாஸ் கம்யூனிகேஷன் படித்துக்கொண்டிருந்தேன். தமிழ் சினிமா பற்றிய இரண்டுநாள் கருத்தரங்கு ஒன்றிற்காக தங்கர்பச்சானை சந்திப்பதற்காக அப்பாவோடு சென்னை வந்தபோதுதான் பாபுவை முதன்முதலாகப் பார்த்தேன்.
பிறகு இதே ‘குங்குமம்’ வார இதழில் நான் எடுத்துக் கொடுத்த புகைப்படங்களுடன் செய்தியாளராக இருந்த பாபு எழுதிய கட்டுரை வெளிவந்தது.
பத்திரிகையில் முதன் முதலில் என்னுடைய பெயர் பாபுவின் பெயருடன் சேர்த்துத்தான் பிரசுரமானது! அப்போதெல்லாம் எங்களுக்குள் எந்தப் பட்டாம்பூச்சியும் பறக்கவில்லை…

எங்கள் வீடு நிறைய காதல்கள் மலர்ந்த இடம். எப்போதுமே என் அப்பா, அ,மார்க்ஸின் சிந்தனைகள் ஒரு தலைமுறையைக் கடந்தவை… காதலுக்கு எதிரானவராக அப்பாவைக் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியாது. அக்காவுடையதும் காதல் திருமணம்தான். ஆனால், என் தேர்வு யார் என்பதில்தான் மர்மம் நீடித்துக்கொண்டிருந்தது… ஆனால், பாபுவை யாருமே முதலில் எதிர்பார்க்கவில்லை. காரணம் - பாபு அப்போது
அப்பாவின் ‘ஃப்ரெண்ட்!’

பாபு:
அதுதான் சிக்கலே! ‘அம்மா நம்பவே மாட்டேங்கறாங்க பாபு… மொதல்ல அப்பாகிட்டே பேசச்சொல்றாங்க… நீங்க ஒருதடவை அப்பாவைப் பார்த்துப் பேசிடறீங்களா…’ என்று பாரதி கேட்டபோது ஒருகணம் திகைத்தேன். இதை எப்படி அ.மார்க்ஸிடம் பேசுவது? நாற்பதாண்டுப் பழக்கம் என்றாலும் நான்கு நிமிடப் பழக்கம் என்றாலும் அவரளவில் ஒன்றுதான். எல்லோரும் நண்பர்களே. இந்தக் காதல் அந்த நட்பைக் குலைத்துவிடாதா என்னும் குழப்பத்துடனேயே அவரைச் சந்தித்தேன்.‘என்ன... மாலி என்னவோ சொல்லுச்சு..?’ என்று மார்க்ஸ் மணிரத்னம் போல் கேட்க - (மாலி என்பது பாரதியின் செல்லப் பெயர்) நானும், ‘ஆமாம் மார்க்ஸ்..!’ என்றேன்.

சில விநாடிகள் அமைதிக்குப் பிறகு ‘சரி, இதுபத்தி உங்க சைட்ல உங்க ஃபேமிலில பேசணும்னா யார்கிட்டே பேசணும்..? யார் வந்து பேசுவாங்க..?’ என்றார்.

பாரதி:
எந்த மதநம்பிக்கையின் கீழும் நாங்கள் திருமணம் செய்து கொள்வதில்லை என்பதில் உறுதியாக இருந்தோம். காதல் வாழ்வில் வெற்று நம்பிக்கைகளுக்கு இடம் இல்லை. காதல் என்பது உணர்வு அல்ல - வாழ்வு என்பதுதான் எங்களின் இத்தனை வருட குடும்ப வாழ்வில் நாங்கள் அறிந்து கொண்ட உண்மை. உண்மையில் காதல் இனிப்பு அல்ல. கசப்பு. ஆனால், அந்த கசப்புதான் அன்பை உணர வைக்கிறது. புரிதலைக் கொண்டு வருகிறது. பிரிதலை அகற்றுகிறது. மரியாதையைக் கொடுக்கிறது. இந்தக் கசப்பை உள்வாங்க உள்வாங்க வாழ்வு இனிக்கிறது.

நாங்கள் கசந்த பொழுதுகள் ஏராளம். எங்களுக்குத் தெரியும் அடுத்த இரவோ அல்லது பகலோ இனிப்பாக மலரும் என்று!
திருமணப்பதிவுப் புத்தகத்தில் பாபுவுக்கு மனைவியாக மட்டுமில்லை… ஒரு தாயாகவும் இருப்பேன் என்னும் சங்கல்பத்தோடுதான் கையெழுத்திட்டேன்!
அம்மா இல்லாத ஓர் உலகத்தை என்னால் கற்பனை செய்தும் பார்த்திருக்க முடியவில்லை. ஆனால், பாபுவின் வாழ்விலோ அம்மா என்னும் மணித்துளிகளே இல்லை!

பாபு:
ஆனால், என் பால்யம் அம்மாவால் நிறைந்ததுதான். அம்மாவோடுதான் ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படம் பார்த்தேன். அம்மாவோடுதான் சாமியார்க்கரடு குளத்துக்குத் துணிகள் துவைக்கப் போனேன். அம்மாவோடுதான் தாத்தாவின் ஊருக்குப் பேருந்தில் பயணித்திருக்கிறேன். அம்மாவோடுதான் ‘உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல…’ வை சேர்ந்து பாடியிருக்கிறேன்… அம்மாவோடுதான் எதிர்வீட்டு சண்டைக்காக காவல்நிலையத்துக்குப் புகார் கொடுக்கச்சென்று ஒரு பகல் முழுவதும் நின்றிருக்கிறேன்.

அம்மாவோடுதான் காஃபி தம்ளரைக் கழுவாதே என்று சண்டையிட்டு மீண்டும் மண் அள்ளிக்கொட்டி காஃபி ஊற்றிக் குடித்திருக்கிறேன்… அம்மாவோடுதான் பதியனிட்டு மல்லிகைச் செடிகள் வளர்த்திருக்கிறேன்.. அம்மாவோடுதான்…
சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வரை மீண்டும் இப்படியான அம்மா - குழந்தைச் சண்டையை வேறு வடிவங்களில் பாரதியோடு போட்டுக் கொண்டிருக்கிறேன்…

பாரதி:
பாபுவுடன் குடும்பம் நடத்துவது ஒரு சவால். அதில் என்னைத் தவிர வேறு ஒரு பெண்ணால் வென்றிருக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. அதுபோலவே பாபுவைத் தவிர வேறு எந்த ஓர் ஆணாலும் என்னை - என் மனநிலையைப் புரிந்துகொண்டிருக்க முடியாது.
சென்ற திருமண தினத்தின்போதுதான் அந்த ‘இன்னமும்…’ கடிதத்தை நான் லேமினேட் செய்து வைத்திருப்பதை எடுத்து பாபுவிடம் காண்பித்தேன்!
பாபுவுக்கு அதிர்ச்சி. ‘சொன்னபேச்சு கேக்காம முரண்டு பிடிச்சிக்கிட்டிருந்தா ஜோகிட்டயும் ஹனிகிட்டயும் இந்த லெட்டரை காமிச்சிருவேன்...

பாத்துக்கங்க!’ என்று ப்ளாக்மெய்ல் செய்து ஒருநாள் முழுவதும் என்னோடும் பிள்ளைகளோடும் இருக்க வைத்தேன்.
காதலித்தோம், திருமணம் செய்தோம் என்பதோடு காதல் முடிந்து விடுமா என்ன..? குழந்தைகளுடனான கொண்டாட்டத்தில்தானே அந்தக் காதல் பூரணத்துவம் பெறுகிறது..? அது என்ன பாட்டு பாபு..?
உன்னியோடது… அடிக்கடி நீங்க கேப்பீங்களே..?

பாபு:
குரல்தான் உன்னிகிருஷ்ணன். வரிகள் பாரதி. ‘விட்டு விடுதலையாகி நிற்பாய்…’ ஒரு சிட்டுக்குருவியை முன்னிருத்தி காதல் வாழ்வுக்கான பொருளைச் சொல்லியிருப்பார் அவர். குறிப்பாக அந்த நான்கு வரிகள்
பெட்டையினோடின்பம் பேசிக் களிப்புற்றுப்பீடையில்லாதோர் கூடு கட்டிக் கொண்டு
முட்டை தருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்திமுந்த உணவு கொடுத்தன்பு செய்து…

- இதைவிட காதலை காதலாய் வேறு யாரால் சொல்லிவிடமுடியும்?

பாரதி:
இப்போதுகூட எங்கள் வீட்டு சிட்-அவுட்டில் ஒரு தாய்ப்புறா தன்னைப்போல கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சு பொரித்திருக்க - தந்தைப்புறாபோல ஒன்று தானியங்கள் கொண்டுவந்து ஊட்டிவிட்டுச் செல்கிறது… அவற்றுக்குத் தொல்லை கொடுக்காமல் அந்தக் காதலை ரசித்தபடியே துணி உலர்த்திக் கொண்டிருக்கிறோம்… இதனால்தான்…

பாபு:
இன்னமும் உங்களை நேசிக்கத்தான் செய்கிறேன் பாரதி!

 செய்தி: நா.கதிர்வேலன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்