60 வயது திருடர்கள் அதிகம்!



ஹிரோஷிமாவில் உள்ள ஒரு கடையில் எல்லோரும் பார்க்கும்படி பிஸ்கட் பாக்கெட்டையும், பால் பவுடரையும் திருடினார் டோஷியோ டகாட்டா.

தகவல் அறிந்து காவல்துறை கடைக்கு விரைந்து டோஷியோவை கைது செய்தது. எந்தவித பதற்றமும் இல்லாமல் மகிழ்ச்சியாக ‘நானும் ஜெயிலுக்குப் போறேன்’ என்று கடையில் இருப்பவர்களிடம் கையசைத்து விடைபெற்றார்.

இத்தனைக்கும் டோஷியாவின் வயது 65.ஜப்பானில் கடந்த இருபது வருடங்களில் சின்னச் சின்ன திருட்டு வழக்குகளில் கைதானவர்களில் 80% பேர் 60 வயதைக் கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘‘போதுமான வருமானம் இல்லை. பென்ஷன் பத்து நாட்களுக்குக் கூட வருவதில்லை. குழந்தைகளும் என்னைக் கவனிப்பதில்லை. வெளியே கஷ்டப்படுவதைக் காட்டிலும் சிறையில் நல்ல உணவும் தங்க இடமும் இலவசமாகக் கிடைக்கிறது. இதுபோக அங்கே என்னை மாதிரியே நிறைய பேர் இருக்கிறார்கள். அதனால் தனிமையும் இல்லை...’’ என்று கூலாக சொல்கிறார் டோஷியோ!   

த.சக்திவேல்