நான்கு குழந்தைகளைப் பெற்றால் வரி இல்லை!மத்திய ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஹங்கேரியின் மக்கள் தொகை ஒரு கோடிக்கும் குறைவு. ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்குள் வெறுமனே 105 பேர்தான் வசிக்கின்றனர். அந்தளவுக்கு அங்கே குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துவிட்டது.

இதனால் ஆண்டுதோறும் மக்கள் தொகையில் வீழ்ச்சியைக் கண்டுவருகிறது ஹங்கேரி. இது பல்வேறு பிரச்னைகளைக் கிளப்பியிருக்கிறது. முதன்மையாக ஹங்கேரியில் வேலை செய்வதற்கான ஆட்கள் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது.

மக்கள் தொகையை அதிகரிப்பதற்காக ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஆர்பன், அதிரடியான திட்டங்களை அறிவித்துவருகிறார். அதில் ஒன்றுதான் இது.

நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு வருமானவரி செலுத்துவதில் இருந்து வாழ்நாள் முழுவதும் விலக்கு!தவிர, இளம் தம்பதியருக்கு 36 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வரை வட்டி இல்லாத கடன் வழங்கப்படும். அந்த தம்பதி 3 குழந்தைகளைப் பெற்றுக்கொண்டால் அந்தக் கடனும் ரத்து!இந்த சலுகை ஹங்கேரிய குடிமக்களுக்கு மட்டுமே!

த.சக்திவேல்