தல புராணம்-ஜெமினியும் ஏவிஎம்மும்



இயக்குநர் ேக.சுப்ரமணியம், ‘மோஷன் பிக்சர் புரொடியூஸர்ஸ் கம்பைன்ஸ்’ ஸ்டூடியோ வழியே பல்வேறு படங்களை எடுத்து வந்தார்.
இந்நிலையில், 1936ல் கோவையைச் சேர்ந்த ஏ.என்.மருதாசல செட்டியார் தயாரிப்பில் எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கத்தில் ‘சதிலீலாவதி’ படம் வெளியானது.

இதில் எம்.கே.ராதா, டி.எஸ்.பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோருடன் எம்ஜிஆர் போலீஸ் வேடத்தில் அறிமுகமானார்.

இந்தப் படத்தின் கதை, ‘ஆனந்த விகடனி’ல் தொடராக வெளிவந்த ஒன்று. இதை எழுதியவர் எஸ்.எஸ்.வாசன். அதைத்தான் மருதாசல செட்டியார் வாங்கி படத்தைத் தயாரித்தார்.இப்படம் பெரிய வெற்றியைக் குவிக்க, அது வாசனுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்தது. அதுமட்டுமல்ல; அவரைத் திரைத்துறைக்குள் விநியோகஸ்தராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் உருவெடுக்கச் செய்தது.    

முதலில், ‘ஜெமினி பிக்சர்ஸ் சர்க்யூட்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கி திரைப்படங்களை விநியோகம் செய்தார். 1938ல் இந்தி எழுத்தாளர் முன்சி பிரேம்சந்த் எழுதிய கதை, தமிழாக்கம் செய்யப்பட்டு ‘விகடனி’ல் தொடராக வந்து கொண்டிருந்தது.இதை வாசனிடம் விலைக்கு வாங்கி ‘ஸேவாஸதனம்’ என்ற பெயரில் படமாக்கினார் இயக்குநர் கே.சுப்ரமணியம். இந்தப் படத்தில்தான் இசைமேதை எம்.எஸ்.சுப்புலட்சுமி அறிமுகமானார்.

தொடர்ந்து எழுத்தாளர் கல்கி, ‘ஆனந்த விகடனி’ல் எழுதிய ‘தியாக பூமி’ கதையையும் படமாக எடுத்தார். இதற்கு ஃபைனான்சியராகவும், விநியோகஸ்தராகவும் இருந்தார் வாசன். இந்தப் படம் அன்றைய பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்டது. அரசுக்கு எதிராக கருத்துக்கள் கொண்டிருந்ததாகக் காரணம் சொல்லப்பட்டது. இதனால், கே.சுப்ரமணியம் பெரும் நஷ்டத்திற்கு ஆளானார்.

இதன்பிறகு, 1940ல் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் புகழ்பெற்ற ‘இன்பசாகரன்’ நாடகத்தை படமாக்கினார் கே.சுப்ரமணியம். ஆனால், படம் முடிந்த நிலையில் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீவிபத்தில் படச்சுருள்கள் உள்பட அனைத்தும் எரிந்து சாம்பலாயின.இதனால் பெருத்த நஷ்டம் ஏற்பட, அவரின் ஸ்டூடியோ ஏலத்திற்கு வந்தது. இதை எஸ்.எஸ்.வாசன், 80 ஆயிரத்து 427 ரூபாய் 11 அணாக்களுக்கு எடுத்தார். பிறகு, சில மாற்றங்கள் செய்து ‘ஜெமினி ஸ்டூடியோஸ் மூவிலேண்ட்’ எனப் பெயர் மாற்றினார்.

இப்படியாக ஜெமினி ஸ்டூடியோ உருவானது. இரண்டு குழந்தைகள் கையில் பீப்பி ஊதுவது போல அமைந்த ஜெமினியின் லோகோ அன்று மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.இதன் தயாரிப்பில் முதன்முதலில் வௌிவந்த படம், ‘மதனகாமராஜன்’. இதை திண்டுக்கல்லைச் சேர்ந்த அமிர்தம் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வெளியிட்டார் வாசன்.

தொடர்ந்து ஜெமினி ஸ்டூடியோஸ், ‘ஜீவன் முக்தி’, ‘நந்தனார்’, ‘மங்கம்மா சபதம்’, ‘சந்திரலேகா’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘அவ்வையார்’, ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’, ‘மோட்டார் சுந்தரம்பிள்ளை’ எனப் பல்வேறு படங்களைத் தயாரித்து வெற்றிக் கொடி நாட்டியது.
பிறகு, 1970களில் பல்வேறு காரணங்களால் ஸ்டூடியோ மூடும்நிலைக்கு வந்தது. நாளடைவில் ஜெமினி பார்சன் காம்ப்ளக்ஸாகவும், அடுக்குமாடி குடியிருப்புகளாகவும், பார்க் ஹோட்டலாகவும் மாறியது இந்த ஸ்டூடியோ.

இதனருகே நுங்கம்பாக்கமும், கதீட்ரல் சாைலயும் இணையும் அண்ணா சாலை சந்திப்பில் மேம்பாலம் கட்டியது தமிழக அரசு. இதற்கு அண்ணா மேம்பாலம் எனப் பெயர் இடப்பட்டிருந்தாலும் கூட மக்களால் இன்றும் ஜெமினி பிரிட்ஜ் என்றே அழைக்கப்படுகிறது.

காரணம், அன்றைய ஜெமினி ஸ்டூடியோவின் நினைவுதான்! எஸ்.எஸ்.வாசன் திரைத்துறைக்குள் நுழைந்த அதே காலகட்டத்தில் காரைக்குடியிலிருந்து ஒருவர் திரைத்தொழிலை ஆர்வமாகச் செய்துகொண்டிருந்தார். அவர் ஏவி.மெய்யப்பச் செட்டியார்.

ஆரம்பத்தில், காரைக்குடியில் தந்தை ஆவிச்சி செட்டியார் ஆரம்பித்த ஏவி அண்ட் சன்ஸ் என்ற சிறிய டிபார்ட்மென்டல் ஸ்டோரில் தந்தைக்கு உதவியாக இருந்தார் மெய்யப்பச் செட்டியார்.  1928ல் கிட்டப்பா, சுந்தராம்பாள் ஆகியோரின் இசைத் தட்டுகளை ஐந்து தென்மாவட்டங்களுக்கு விநியோக உரிமை பெற்று விற்பனை செய்யத் ெதாடங்கியது ‘ஏவி அண்ட் சன்ஸ்’.

இதனால், அடிக்கடி சென்னை வந்தார். அப்போது அவருடன் நாராயண அய்யங்கார், சிவம்செட்டியார் என இரண்டு நண்பர்கள் இணைய, ‘சரஸ்வதி ஸ்டோர்ஸ்’ என்ற நிறுவனத்தை மெட்ராஸில் துவங்கினார்.  இதன்வழியே ஜெர்மன் ஓடியன் கம்பெனியுடன் ரிக்கார்டுகள் தயாரிக்க ஒப்பந்தம் செய்துகொண்டு, அதைத் தென்இந்தியா முழுவதும் விற்க ஆரம்பித்தார்.

இந்நேரம் பேசும் படம் தொடங்க, இதில் இறங்க தீர்மானித்தார் ஏவி மெய்யப்பச் செட்டியார். 1934ம் வருடம் ‘சரஸ்வதி சவுண்ட் புரொடக்‌ஷன்’ என்ற பெயரில் ஒரு கம்பெனி ஆரம்பித்து, ‘அல்லி அர்ஜுனா’ என்ற படத்தைத் துவக்கினார்.அப்போது மெட்ராஸில் ஸ்டூடியோக்கள் இல்லை. அதனால், நடிகர்களை அழைத்துக் கொண்டு கல்கத்தாவில் இருந்த நியூ தியேட்டர்ஸ் ஸ்டூடியோவில் ஒரு மாதம் தங்கியிருந்து படத்தை எடுத்தார்.  

ஆனால், படத்தின் ஹீரோவான கே.எஸ்.அனந்தநாராயண அய்யர் வெளிச்சத்தின் கூச்சத்தால் கண்களை முக்கால் பாகம் மூடிக்கொண்டே நடித்துள்ளார். இந்த விஷயம் படம் தயாராகி போட்டுப் பார்க்கும்போதே தெரிந்திருக்கிறது. அப்போது உடனுக்குடன் படத்தைப் போட்டுப் பார்க்கும் வசதியும் இருக்கவில்லை. இதனால், பெருத்த நஷ்டம்.

பிறகு, ‘ரத்னாவளி’ என்ற படத்தை எடுத்தார். இதற்கு கல்கத்தா பயனீர் ஸ்டூடியோவிற்குச் சென்றார். இப்போது நிறுவனத்தின் பெயர், ‘சரஸ்வதி டாக்கி புரொடியூசிங் கம்பெனி’ என மாறியிருந்தது.இப்போது புது கேமிராவால் படம் நஷ்டமானது. கேமிரா ஸ்பீடும், சவுண்ட் ஸ்பீடும் ஒத்துப் போகவில்லை. இதனால், படத்திற்கும், டைலாகிற்கும் சம்பந்தம் இல்லாமல் போனது.

‘‘இந்தப் படம் 1936 தீபாவளி ரிலீசாக வெளியானது. டேப் ரிகார்டரில் ‘ஸ்லோ ஸ்பீடில்’ ரிக்கார்டு பண்ணியதை ‘பாஸ்ட் ஸ்பீடில்’ ஓடவிட்டால் எப்படி ‘கிக்கி பிக்கி’ என்ற ஒலி வருமோ அதைப்போல அந்தப் படத்தில் சில இடங்கள் ஆகிவிட்டன...’’ என ‘எனது வாழ்க்கை அனுபவங்கள் ஏவி.எம்’ நூலில் குறிப்பிடுகிறார் ஏவி.மெய்யப்பச் செட்டியார்.

தொடர்ந்து ‘நந்தகுமார்’ என்ற படத்தை 1937ம் வருடம் எடுத்தார். அப்போது புனேவில் பிரபலமாக இருந்த ஸ்டூடியோக்களில் இதன் படப்பிடிப்பு வேலைகள் நடந்தன. இதில் டி.ஆர்.மகாலிங்கம் கிருஷ்ணனாக நடித்தார். இதுவே அவர் நடித்த முதல் படம். இந்நேரம், சில புதிய பங்குதாரர்களைச் சேர்த்துக் கொண்டு ‘பிரகதி பிக்சர்ஸ் பெங்களூர் லிமிடெட்’ என்ற பெயரில் ஒரு கம்பெனியை ஆரம்பிக்க எண்ணினார்.

கூடவே, பெங்களூரில் ஒரு ஸ்டூடியோவை ஆரம்பிப்பது என்றும் தீர்மானித்திருந்தார். காரணம், அடுத்தடுத்து எடுத்த மூன்று படங்களுமே அவ்வளவாக சோபிக்கவில்லை. பெரும் நஷ்டம். இதற்கு ஸ்டூடியோ இல்லாததே முக்கியக் காரணம். நடிகர்களையும், மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு கல்கத்தா, பம்பாய் என அலையாமல் இங்கேயே ஒரு ஸ்டூடியோவை அமைத்தால் செலவு குறையும் என நினைத்தார்.

உடனடியாக, ‘பிரகதி பிக்சர்ஸ் பெங்களூர் லிமிடெட்’ கம்பெனியை ஆரம்பித்தும்விட்டார். இதில், ஏ.சுப்பையா என்பவரும், பெங்களூரில் அலங்கார், பிரபாத், அப்சரா தியேட்டர்கள் வைத்திருந்த ெஜயந்திலால் தாகூரும் பார்ட்னர்களாக இருந்தனர்.இந்நேரம், சரஸ்வதி ஸ்டோர்ஸை கவனித்து வந்த நாராயண அய்யங்கார் அதன் பார்ட்னர்ஷிப்பில் இருந்து பிரிந்து போக நினைத்தார்.

இதனால், அவருக்கான பணத்தை செட்டில்மென்ட் செய்த மெய்யப்பச் செட்டியார், சரஸ்வதி ஸ்டோர்ஸை கவனிக்க வேண்டியதானது. அதனால், பெங்களூர் வரமுடியாதென பங்குதாரர்களிடம் தெரிவித்தார். பின்னர், மந்தைவெளியில் இருந்த அட்மிரால்டி ஹவுஸை வாடகைக்கு எடுத்தார். சில பங்குதாரர்களுடன் 1940ல் ‘பிரகதி ஸ்டூடியோ’வைத் தொடங்கினார்.

இதில் எடுக்கப்பட்ட முதல் படம் ‘பூகைலாஸ்’. தெலுங்கில் எடுக்கப்பட்ட இந்தப் படம் வெற்றிகரமாக ஓடியது. 1941ல் ‘பிரகதி பிக்சர்ஸ்’ சார்பில் ‘சபாபதி’ படத்தை இயக்கினார்.

இதுவே, மெய்யப்பச் செட்டியார் இயக்கிய முதல் படம். பம்மல் சம்பந்த முதலியாரின் கதையான இதுவும் பெரிய வெற்றியைப் பெற்றது.அப்போது யுத்தகால ெநருக்கடியால் 11 ஆயிரம் அடிக்குமேல் படம் இருக்கக்கூடாது என்று கட்டுப்பாடு. இந்தக் கட்டுப்பாட்டில் எடுத்த படமே ‘வள்ளி’.இதுவும் மாபெரும் வெற்றி அடைந்தது.

இப்போது ஏவிஎம்மிற்கு எதிர்பாராத ஒரு பிரச்னை. அவர் காஷ்மீர் போன நேரம், பிரகதி ஸ்டூடியோவின் பங்குதாரர்கள் அதை விற்றுவிடத் தீர்மானித்து விலை பேசிவிட்டனர்.இதனால், சோர்ந்துபோன ஏவிஎம்  பிறகு நம்பிக்கையுடன் தனியொருவராக ஸ்டூடியோ ஆரம்பிக்கத் தீர்மானித்தார். இதற்கான பொருட்களை பம்பாயில் இருந்து தருவித்தார்.


அந்த இடம் தேவகோட்டை ஜமீன்தாருக்குச் சொந்தமானது. அவர், ஏற்கனவே அங்கே ஒரு டிராமா கொட்டகையை ஏற்படுத்தியிருந்தார். இதை மாதம் 3 ஆயிரம் ரூபாய் என வாடகைக்கு எடுத்தார் ஏவிஎம் செட்டியார்.நாற்பது ஐம்பது கீற்றுக் கொட்டகைகள் போடப்பட்டன.

மெட்ராஸில் இருந்து வரும் ஆண் நடிகர்களுக்கும், பெண் நடிகைகளுக்கும் தனிக் கொட்டகைகள். இப்படியாக ஏவி.எம்.ஸ்டூடியோஸ் தயாரானது. காரைக்குடி ஸ்டூடியோவில் எடுக்கப்பட்டு, ஏவிஎம் பேனரில் வெளிவந்த முதல் படம் ‘நாம் இருவர்’. இது ஏவிஎம்மிற்கு பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது.

இந்தப் படத்தின் கதை பின்னாளில் சிறந்த இயக்குநராக வலம் வந்த ப.நீலகண்டனுடையது. இதை ஏவிஎம் செட்டியார் தயாரித்து இயக்கினார்.
பிறகு ‘வேதாள உலகம்’ மாபெரும் வெற்றியைத் தந்தது.

இந்நிலையில் தேவகோட்டை ஜமீன்தார் வாடகைப் பணத்தை அதிகரிக்க ஏவிஎம் மெட்ராஸில் இடம் தேடினார்.இப்போது மெட்ராஸில் மின்சப்ளை பிரச்னை இருக்கவில்லை. இந்நேரம், இந்தியா சுதந்திரம் அடைந்திருந்தது. ஏவிஎம்மின் நிர்வாகி ஒருவர் ஸ்டூடியோவிற்கான இடத்தைப் பார்த்து வந்தார்.

‘‘அந்நேரம், வடபழனியில் பத்து ஏக்கர் பரப்பில் ஒரு காலி இடம் இருந்தது. இந்த இடத்தில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவர் தோல் கிடங்கு வைத்திருந்தார். பாகிஸ்தான் பிரிந்தபோது அவர் அதை விட்டுவிட்டுபாகிஸ்தான் போய்விட்டார்.

அது அகதி ப்ராப்பர்ட்டியாக இருப்பதனால் அதை மலிவாக வாங்கிவிடலாமே என்பதாக காரியஸ்தர் கேட்டார். உடனே, அதை வாங்கிவிடச் சொன்னேன்...’’ என ‘எனது வாழ்க்கை அனுபவங்கள்’ நூலில் குறிப்பிடுகிறார் ஏவிஎம்.இப்படியாக வடபழனியில் ஏவிஎம் ஸ்டூடியோ உதயமானது. இங்கே வந்ததும் ஏவிஎம் தயாரித்து இயக்கிய முதல் படம் ‘வாழ்க்கை’. இதுவும் சூப்பர் டூப்பர் ஹிட்!                               

பேராச்சி கண்ணன்