ரத்த மகுடம்-72



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

‘‘மன்னா...’’ ஸ்ரீராமபுண்ய வல்லபர் மென்று விழுங்கினார். மேற்கொண்டு என்ன செய்வது அல்லது பேசுவது என்று அவருக்குத் தெரியவில்லை.

அதிர்ச்சியும் பிரமையும் சேர சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தரையே கண்கொட்டாமல் பார்த்தார்.
‘‘என்ன அமைச்சரே... அமைதியாகி விட்டீர்கள்..?’’ புன்னகைத்தார் விக்கிரமாதித்தர்.அந்தப் புன்னகை சாளுக்கிய போர் அமைச்சரை இயல்புக்குக் கொண்டு வந்தது. தலைக்கு மேல் அப்படி ஒன்றும் வெள்ளம் சென்றுவிடவில்லை என்பதையும் உணர்த்தியது. துணிவுடனேயே பேசத் தொடங்கினார்.

‘‘அமைதி என்று சொல்ல முடியாது மன்னா... குழப்பம் என்று வேண்டுமானால் வரையறுக்கலாம்...’’‘‘அதாவது சுருக்கமாக நான் இதுவரை சொன்னதை சற்றே விரிவாகச் சொல்லும்படி கேட்கிறீர்கள்... அப்படித்தானே..?’’மன்னரின் கேள்விக்கு தன் தலையை அசைத்து ‘ஆம்’ என்று பதிலளித்தார் ஸ்ரீராமபுண்ய வல்லபர்.தான், அமர்ந்திருந்த ஆசனத்தை விட்டு விக்கிரமாதித்தர் எழுந்தார். மெல்ல நடந்து தன் போர் அமைச்சரின் அருகில் வந்தார்.
‘‘ராமபுண்ய வல்லபரே...’’‘‘மன்னா...’’

‘‘என் தந்தையின் காலம் முதல் சாளுக்கியப் படைகளுக்கு நீங்கள் அமைச்சராக இருக்கிறீர்கள் அல்லவா..?’’
‘‘ஆம் மன்னா...’’‘‘நரசிம்மவர்ம பல்லவர் வாதாபியைக் கைப்பற்றி நம் தலைநகரை தீக்கிரையாக்கியபிறகு நடந்த சம்பவங்கள் உங்களுக்கு நினைவில் இருக்கும்...’’‘‘பசுமரத்தாணி போல் மனதில் பதிந்திருக்கிறது மன்னா... அதற்கு பழிவாங்கத்தானே இப்பொழுது நாம் வந்திருக்கிறோம்...’’ படபடவென ராமபுண்ய வல்லபர் பதிலளித்தார்.

விக்கிரமாதித்தர் அதைப் பொருட்படுத்தாமல் தன் பேச்சைத் தொடர்ந்தார்.‘‘என் தந்தையும் பாரதத்தின் மாபெரும் மன்னர்களில் ஒருவருமான இரண்டாம் புலிகேசி காலமானார்... இதனைத் தொடர்ந்து நம் நாட்டில் உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட்டது. ஆட்சியைக் கைப்பற்ற சகோதரர்களுக்குள் யுத்தம் நடந்தது... இறுதியில் சாளுக்கியர்களின் அரியணையில் நான் அமர்ந்தேன்... இந்த சம்பவங்கள் எல்லாம் நடந்து முடிய சில தசாப்தங்கள் ஆகின...’’
அமைதியாக தன் மன்னர் சொல்வதை சாளுக்கிய போர் அமைச்சர் கேட்டுக் கொண்டிருந்தார்.

‘‘அந்தக் காலகட்டத்தில் நானும் சரி... நீங்களும் சரி... ஏன், ஒவ்வொரு சாளுக்கிய தேசத்து குடிமகனும் சரி... என்ன செய்தோம்..?’’ கேள்வி கேட்ட விக்கிரமாதித்தர், தானே பதில் அளிக்கவும் தொடங்கினார்.‘‘நம் தேசத்தை காப்பாற்றத்தான் முழுமூச்சாக இறங்கினோம். சாளுக்கிய தேசத்தை வேறு யாரும் கைப்பற்றி விடக் கூடாது... நம் பிரதேசங்களை எடுத்துக்கொள்ளக் கூடாது என மெனக்கெட்டோம்.

அப்போதும் நமக்குள் பல்லவர்கள் மீது பகை இருந்தது. பகை உணர்ச்சி நாடி நரம்பெல்லாம் ஊடுருவி இருந்தது. நம் தலைநகரை தீக்கிரையாக்கிய பல்லவர்களை வேரோடு சாய்க்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு சாளுக்கிய வீரனும் துடித்துக் கொண்டிருந்தான்...’’ஆமோதிப்பதற்கு அறிகுறியாக ராமபுண்ய வல்லபர் தலையசைத்தார்.

‘‘ஆனாலும் பல்லவர்களுடன் போர் புரியவோ, காஞ்சியைக் கைப்பற்றவோ நாம் மெனக்கெடவில்லை... அதற்கான எந்த நடவடிக்கைகளிலும் இறங்கவில்லை... ஏன்..? நம் தேசம் மட்டுமே நமக்கு அப்போது பிரதானமாக இருந்தது. அதைக் காப்பாற்றவே நம் சக்தியை எல்லாம் அக்காலகட்டத்தில் செல்வழித்தோம். சாளுக்கிய தேசம் ஸ்திரப்படும்வரை நம் ஆற்றல்கள் அனைத்தையும் தேச பக்தியிலேயே குவித்தோம்...’’

உணர்ச்சியுடன் பேசிய விக்கிரமாதித்தர், சில கணங்கள் அமைதியாக இருந்தார்.மன்னரைத் தொந்தரவு செய்யாமல் சாளுக்கிய போர் அமைச்சரும் சலனமின்றி நின்றார்.கணங்கள் யுகங்களானதும் விட்ட இடத்தில் இருந்து சாளுக்கிய மன்னர் தொடர்ந்தார்.

‘‘அதுதான் இயல்பு. அதுவேதான் உலக நியதி. தனது நிலத்தையும் நிலப்பகுதியையும் காப்பாற்றத்தான் எந்தவொரு மனிதனும் முதலில் முற்படுவான். அதன் பிறகுதான்... தன் பிரதேசத்துக்கு இனி எந்த ஆபத்தும் இல்லை என்பது உறுதியானதும்தான்... அருகில் இருக்கும் நிலங்களை, பிரதேசங்களைக் கைப்பற்றும் நடவடிக்கைகளில் இறங்குவான்...

ஆனால், இப்பொழுது நடந்திருப்பது என்ன..?
உலக நியதிக்கு மாறானது மட்டுமல்ல... மனித இயல்புக்கே அப்பாற்பட்ட காரியம் நடந்திருக்கிறது! இதை என்னால் சாதாரணமாகக் கருத முடியவில்லை.சாளுக்கிய தேசம் முழுக்க முழுக்க நம் கட்டுப்பாட்டில், நமது பாதுகாப்பில் இருக்கிறது. வடக்கிலிருந்தும் நம் நாட்டைக் கைப்பற்ற முற்படலாம் என்பதால் வடக்கு எல்லையிலும் படைகளை நிறுத்தியிருக்கிறோம்; கோட்டைகள் அனைத்தையும் ஆயுதம் தாங்கிய வீரர்களால் நிரப்பியிருக்கிறோம்.

இந்த நடவடிக்கைகள் எல்லாம் திருப்திகரமாக முடிந்தபிறகே பல்லவர்களை பழிக்குப்பழிவாங்க நாம் புறப்பட்டு வந்தோம்... எண்ணியது போலவே பல்லவர்களின் தலைநகரான காஞ்சியையும் கைப்பற்றி விட்டோம்.நம்மை எதிர்க்காமல், நம்முடன் எந்தப் போரிலும் ஈடுபடாமல், நாம் வருவதை அறிந்ததும் பல்லவ மன்னர் பரமேஸ்வரவர்மர், தன் வீரர்களுடன் காஞ்சியை விட்டு வெளியேறி விட்டார்.

இப்பொழுது பல்லவ மன்னர் நாடு இழந்தவர். பிடி மண்ணுக்குக் கூட சொந்தமில்லாதவர். இதுபோன்ற சூழலில் சிக்கிய ஒரு மன்னன் என்ன செய்வான்..? ரகசிய இடத்தில் இருந்தபடி படைகளைத் திரட்டி தன் நாட்டை மீட்க முற்படுவான்.

ஆனால், பல்லவ மன்னர் பரமேஸ்வரவர்மர் என்ன செய்திருக்கிறார்..? தன் நாட்டைக் கைப்பற்றும் எந்த நடவடிக்கைகளிலும் இறங்காமல், தன் படைகளையும் முழுமையாகத் திரட்டாமல், சாளுக்கிய தேசத்தை வெற்றி கொள்ளப் புறப்பட்டிருக்கிறார்.

இதை அறிந்து நாம் கங்க மன்னரை அனுப்பி அப்படைகளைச் சிதறடித்து மீண்டும் பல்லவ மன்னரை ஓடி ஒளிய வைத்திருக்கிறோம்... இவை எல்லாம் மர்மமாக உங்களுக்குத் தெரியவில்லையா..?’’ அழுத்தம் திருத்தமாகக் கேட்டார் விக்கிரமாதித்தர்.சட்டென இதற்கு பதில் அளிக்க ஸ்ரீராமபுண்ய வல்லபர் வாய் திறந்தார்.கையை உயர்த்தி அவரைத் தடுத்துவிட்டு, தானே தொடர்ந்தார் சாளுக்கிய மன்னர்.

‘‘யோசித்துப் பாருங்கள். காஞ்சியைக் கைப்பற்ற நாம் ரகசியமாக படை திரட்டினோம்; அதே ரகசியத்துடனேயே வணிகர்களின் போர்வையில் நம் வீரர்களை நடமாட வைத்து காஞ்சியை நோக்கி வந்தோம்.பல்லவ ஒற்றர்களால் கூட நம் நடவடிக்கைகளை அறிய முடியவில்லை. எனவேதான் பல்லவ மன்னர் பரமேஸ்வரவர்மனால் நம்மை எதிர்கொள்ள முடியாமல் போயிற்று. தற்காத்துக் கொள்ளவும், தன் மக்களையும், படைகளையும், கலைப் பொக்கிஷங்களையும் காப்பாற்றவும் அவர் காஞ்சியை விட்டு வெளியேறினார்.

இதுவரை சரி. ஆனால், இதற்குப் பிறகும் பல்லவ ஒற்றர்கள் அமைதியாக எதையும் அறியாமலேயே காலத்தைக் கழிப்பார்கள் என்று நினைக்கிறீர்களா..?
நமக்குள் எப்படி சாளுக்கிய தேச வெறி பெருக்கெடுத்து ஓடுகிறதோ அப்படி பல்லவர்களுக்குள்ளும் தேச பக்தி வெறி ஆறாக பெருக்கெடுத்து ஓடவே செய்யும். எதிரிகளை எடை போடுவதில் தவறில்லை.

ஆனால், தவறாக எடை போடுவது நம் தலையை நாமே கொய்து கொள்வதற்குச் சமம்!நிச்சயம் போதுமான படைகளை நம் எல்லைகள் முழுக்க நிறுத்திவிட்டே நாம் காஞ்சிக்கு வந்திருக்கிறோம் என்பதை பல்லவ ஒற்றர்கள் உறுதி செய்திருப்பார்கள். அதை தங்கள் மன்னரிடமும் தெரிவித்திருப்பார்கள்.

அப்படியிருந்தும் எந்த துணிச்சலில் சாளுக்கிய தேசத்தை நோக்கி பல்லவ மன்னர் தன் படைகளுடன் சென்றிருப்பார் என்று நினைக்கிறீர்கள்..?’’
‘‘யுத்த தந்திரம்தான் மன்னா..!’’ பட்டென்று ஸ்ரீராமபுண்ய வல்லபர் பதிலளித்தார். ‘‘சாளுக்கிய தேசத்தைக் கைப்பற்ற, தான் சென்றால் அதைத் தடுக்க நாம் காஞ்சியை விட்டு வெளியேறுவோம்...

வாதாபியைப் பாதுகாக்க முற்படுவோம்... என பரமேஸ்வரவர்மர் நினைத்திருக்கலாம்...’’ ‘‘ம்...’’‘‘அப்படி நாம் காஞ்சியை விட்டு வெளியேறும் பட்சத்தில் உடனடியாக தனது படையின் இன்னொரு பகுதியைக் கொண்டு பல்லவ நாட்டைக் கைப்பற்ற திட்டமிட்டிருக்கலாம்...’’‘‘இதன் காரணமாகவே தனது படைத்தளபதியான சோழ மன்னரையும், அசுவ சாஸ்திரியான கரிகாலனையும், தனது மகனான இராஜசிம்மனையும் பல்லவ மன்னர் தன்னுடன் அழைத்துச் செல்லவில்லை என்கிறீர்களா..?’’‘‘ஆம்... மன்னா...’’

‘‘ஒரு வாதத்துக்கு நீங்கள் சொல்வது சரி என்றே வைத்துக் கொள்வோம்... இவ்வளவு பிரச்னைகள் நடக்கையில்... தனது நாடே எதிரி
வசம் சிக்கியிருக்கையில், கரிகாலன் எதற்காக சிவகாமியுடன் காடு மேடு எல்லாம் அலைந்து கொண்டிருந்தான்..? காஞ்சி மாநகரத்துக்கும் எதற்காக வந்து சேர்ந்தான்..?’’‘‘தனது தந்தையை சிறையில் இருந்து மீட்க மன்னா...’’

‘‘அதாவது காஞ்சி மாநகர சிறையில் இருந்து... அப்படித்தானே..? அமைச்சரே... இந்த நகரம் அவர்களுடைய தலைநகரம்... இங்குள்ள ஒவ்வொரு பகுதியும் இடமும் அவர்களுக்குத்தான் நம்மை விட அத்துப்படி. நாம் அறியாத சுரங்கங்கள் இங்கு அநேகம் இருக்கலாம்; இருக்கும்.

இவை எல்லாம் சோழ மன்னருக்குத் தெரியாதா..? அவரால் தன்னந்தனியாக நம் சிறையில் இருந்து - அதாவது தன் நாட்டுச் சிறையிலிருந்து - தப்பிக்க முடியாதா..? இதற்காகவா கரிகாலன் வேலை மெனக்கெட்டு வந்தான்..?’’

‘‘மன்னா..?’’
‘‘உண்மையில் நமக்கு போக்கு காட்டிக் கொண்டிருக்கிறார்கள். காஞ்சிக்கு வந்த கரிகாலனை நான் சந்தித்ததோ அல்லது அவன் என்னைச் சந்தித்ததோ தற்செயலாக நடந்தது. ஆனால், அவன் காஞ்சிக்கு வந்தது தற்செயல் அல்ல! ஏதோ ஒரு காரியத்தை முன்னிட்டே வந்திருக்கிறான். அது என்ன..?’’
‘‘மன்னா..?’’

‘‘வந்தவனை கடிகைக்கு அனுப்பி வைத்தேன்... அர்த்த சாஸ்திர சுவடிகளில் மர்மம் இருப்பதாகத் தெரிவித்தேன்... ஆனால், கடிகையில் இருந்து அவன் எடுத்துச் சென்றது அர்த்த சாஸ்திர சுவடிகளைத்தானா..?’’சட்டென்று சாளுக்கிய போர் அமைச்சர் சிரித்துவிட்டார்.

விக்கிரமாதித்தர் அவரைக் கூர்ந்து பார்த்தார்.மன்னர் முன், தான் அப்படி சிரித்திருக்கக் கூடாது என்பதை உணர்ந்த ராமபுண்ய வல்லபர், ‘‘மன்னிக்க வேண்டும் மன்னா...’’ என மனமார மன்னிப்புக் கேட்டார்.

‘‘பாதகமில்லை. எதற்காக அப்படிச் சிரித்தீர்கள்..?’’
‘‘உண்மையைச் சொல்லலாமா மன்னா..?’’
‘‘உண்மையை மட்டும் சொல்லுங்கள்!’’
‘‘பல்லவர்கள் நமக்கு போக்குகாட்டவில்லை... அவகாசமும் பெறவில்லை...’’
‘‘பிறகு..?’’

‘‘சாளுக்கிய மன்னரான நீங்கள்தான் பல்லவர்களுக்கு போக்கு காட்டியிருக்கிறீர்கள்! சாளுக்கியர்களான நாம்தான் போதுமான அவகாசத்தைப் பெற்றிருக்கிறோம்!’’‘‘...’’‘‘கரிகாலனாக காஞ்சிக்கு வரவில்லை... நீங்கள் அவனை வரவைத்திருக்கிறீர்கள்! நம் கவனம் முழுக்க அவன் மீது குவியவில்லை... மாறாக அவனது கவனத்தை சிவகாமியின் மீதே குவியும்படி பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்!’’

‘‘என்ன சொல்கிறீர்கள் அமைச்சரே... எனக்கு எதுவும் புரியவில்லை... இதுவரை உங்களிடம் நான் விளக்கி வந்தது என்ன... ஆமோதித்தபடியே அதைக் கேட்டு வந்த நீங்கள் திடீரென்று இப்பொழுது சொல்லிக் கொண்டிருப்பது என்ன..?’’ விக்கிரமாதித்தர் தன் முகத்தில் வியப்பைக் காட்டினார்.
‘‘உண்மையிலேயே உங்களை மன்னராகப் பெற இந்த சாளுக்கிய நாடு தவம் செய்திருக்க வேண்டும் மன்னா...

உங்கள் அளவுக்கு ராஜ தந்திரியை பாரத தேசத்தில் இன்று காண்பது அரிது... கச்சிதமாக என்ன அழகாக திட்டமிட்டு பரமேஸ்வரவர்மரை நம் நாட்டை நோக்கி படையுடன் தன்னந்தனியாகச் செல்ல வைத்திருக்கிறீர்கள்... அப்போரில் அவரைப் படுதோல்வி அடைய வைத்திருக்கிறீர்கள்... இதனால் நமக்கு என்ன லாபம் மன்னா..? தயவுசெய்து மூடி மறைக்காமல் இனியாவது சொல்லுங்கள்...’’ சொல்வதற்காக விக்கிரமாதித்தர் வாயைத் திறந்தார்.

அப்பொழுது அவரது அறைக் கதவு தட்டப்பட்டது.‘‘வரலாம்...’’ என சாளுக்கிய மன்னர் குரல் கொடுத்தார்.இதனைத் தொடர்ந்து வந்து நின்றவனைப் பார்த்ததும் ஸ்ரீராமபுண்ய வல்லபருக்கு தலையே சுற்றியது.காரணம், வந்து நின்று மன்னருக்கு தலை வணங்கியவன் வேறு யாருமல்ல... கடிகை பாலகன்தான்!

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்