நான்... மயில்சாமி அண்ணாதுரை



தமிழாசிரியர் என்று என்னை சொல்லிக் கொள்ளவே ஒரு காலத்தில் ஆசைப்பட்டேன். என்ன செய்ய... கால மாற்றம் என்னை அறிவியல், விஞ்ஞானம், இஸ்ரோ... என கொண்டு வந்துவிட்டது!

‘புத்தகத்தை கிழியாம பாதுகாப்பா வைச்சுக்கணும்...’ படிக்கும் காலத்தில் எங்கப்பா சொன்ன முதல் அறிவுரை இதுதான். ஒரே செட் புத்தகம்தான். அதையே நான் படித்துவிட்டு அடுத்த வருடம் என் தம்பி, பிறகு தங்கை என பகிர்ந்து கொண்டோம். இந்த சிக்கனம்தான் செலவு குறைவான செயற்கைக்கோள் உருவாக்கம் வரை கை கொடுத்தது! பிறந்தது பொள்ளாச்சி அருகில் உள்ள கோதவாடி கிராமத்தில்.

படித்ததும் அந்தக் கிராம ஆரம்பப் பள்ளியில்தான். அப்பா, அரசுப்பள்ளி ஆசிரியர். வருடம்தோறும் அவருக்கு மாற்றம் வரும். அப்பா செல்லும் பள்ளிகளுக்கு எல்லாம் நாங்களும் உடன் செல்வோம். எனவே ஆறாவது ஒரு பள்ளி, ஏழாவது இன்னொரு பள்ளி, எட்டாவது வேறொரு பள்ளி என நகர்ந்தது. எல்லாமே தமிழ் மீடியம்தான்.

எனக்கு இரு தம்பிகள்; இரு தங்கைகள். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் அப்பா தையல் வேலை செய்வார். அவருக்கு உதவியாக நான் காஜா தைப்பேன். செய்தித்தாள் படிக்க வேண்டும்... ரேடியோ செய்திகள் கேட்க வேண்டும் என்பது அப்பாவின் கட்டளை. நாட்டு நடப்புகளை அறிய இவை உதவின.இதுதவிர ‘அம்புலிமாமா’, தமிழ் இலக்கிய நூல்கள், திருக்குறள், தேவாரம்... எல்லாம் படிப்போம். 10வது படிக்கும்போது ‘பொன்னியின் செல்வன்’ படித்து முடித்துவிட்டேன்!

பதினோராம் வகுப்பு வரை தமிழ் மீடியத்தில் படித்தவன், பொள்ளாச்சி கல்லூரியில் பியுசி சேர்ந்தேன். அங்கு ஆங்கில வழிக் கல்விதான் இருந்தது. சிரமமாக இருந்தபோதும் படித்து முடித்தேன்.அப்பாவைப் போல் ஆசிரியராக முயற்சிக்கலாம் என்று நினைக்கையில் நண்பர்கள் இன்ஜினியரிங் படிக்க விண்ணப்பிப்பதைப் பார்த்தேன். அப்போதெல்லாம் பொறியியல் கல்லூரிகள் ரொம்பவும் குறைவு. வருடத்துக்கு 1250 மாணவர்களைத்தான் தேர்வு செய்வார்கள். இதற்கு தேர்வு, நேர்முகத் தேர்வு எல்லாம் உண்டு.

8ம் வகுப்பு முதலே மெரிட் ஸ்காலர்ஷிப்பில் படித்து வந்தேன். எனவே கல்லூரியிலும் ஸ்காலர்ஷிப் கிடைக்க வேண்டும். அப்போதுதான் படிக்க முடியும். ஒருவேளை பொறியியல் கிடைக்கவில்லை என்றால் ஆர்ட்ஸ் காலேஜில் சேர வேண்டும். அதற்கு ஃபீஸ் கட்ட வேண்டி வரலாம். அப்பாவிடம் அந்தளவு வசதி இல்லை.

ஆக, இன்ஜினியரிங் சீட் கிடைத்தால் மட்டுமே படிக்க முடியும் என்ற நிலையில் நுழைவுத் தேர்வுக்கு தயார் செய்து எழுதினேன். இடம் கிடைத்தது.
எனக்கு கணினி சார்ந்து படிக்க ஆசை. ஆனால், அதற்கு பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் இல்லை. ‘பரவாயில்லை... நாங்களே படித்துக் கொள்கிறோம்...’ எனச் சேர்ந்தோம்.

உண்மையில் எங்கள் செட்தான் அந்த வகுப்பையே கொண்டு வந்தது! பிஈ முடித்ததும் பிபிஎல் ரீடிங் வேலை கிடைத்தது. ஒருநாள் சென்றேன். வேலை பிடிக்கவில்லை. மேற்கொண்டு எம்ஈ படிக்க விரும்பினேன். அதற்கு ஸ்காலர்ஷிப் மாதம் ரூ.600 வரும். வேலைக்குச் சென்றாலும் அவ்வளவுதான் சம்பளம் கிடைக்கும்.

எனவே மேலே படிப்பதென்று முடிவு செய்தேன். நாங்கள் சேர்ந்த பாடம் எலெக்ட்ரானிக்ஸ், மைக்ரோ புராசசர் மற்றும் அப்ளிகேஷன். இதற்கு புத்தகமே அப்போது இல்லை! பரவாயில்லை படிக்கிறோம் என்று படித்தோம்.

படித்து முடித்ததும் அட்டாமிக் எனர்ஜி அல்லது ஸ்பேஸ் வேலைக்கு அப்ளை செய்யும்படி அப்பா சொன்னார். விண்ணப்பித்தேன்.
இடையில் புதுச்சேரி பிரெஞ்சு குழு ஒரு ப்ராஜெக்ட் செய்தார்கள். அதில் அப்பா என்னை சேர்த்துவிட்டார். இந்த நேரத்தில் எனக்கு பெங்களூரில் ஸ்பேஸ் வேலை கிடைத்தது. அப்பொழுது இஸ்ரோ அமைப்பு உருவாகவில்லை. பிபிஎல் நிறுவனத்தில் முன்பு எப்படி ரீடிங் எடுத்தேனோ அதேபோல் இங்கு செயற்கைக்கோள் ரீடிங் வேலை!

சரி... நாமாக ஏதாவது செய்யலாம் என யோசித்து செயற்கைக்கோளை கணினியில் செய்து பார்த்து புரிந்து பின் உருவாக்கலாம் என்பதை ஒரு திட்டமாக கையில் எழுதி ஒரு வெள்ளிக்கிழமையில் சமர்ப்பித்தேன். ‘நீயே பொறுப்பெடுத்து செய்’ என திங்கட்கிழமை அறிவித்தார்கள்!

37 வருடங்களுக்கு முன் ரூ.700 சம்பளம் வாங்கியவன், ஏழரை லட்சம் ரூபாய்க்கு பட்ஜெட் கொடுத்தேன்! அப்போது அது பெரிய தொகை.
செயற்கைக்கோள்களை இந்த தூரத்தில் இருந்து இந்த தூரம் அனுப்பினால் என்ன ஆகும்... குளிர், வெப்பத்தில் என்ன மாதிரியான சிக்கல்களைச் சந்திக்கும் என்பதை எல்லாம் கணினி வழியாகப் புரிந்து அதற்கேற்ப செயற்கைக்கோளில் மாற்றங்கள் செய்ய முற்பட்டேன். இதை சிமுலேஷன் என்று சொல்லுவோம்.

‘மிஷன் மங்கல்யான்’ வெற்றிபெற்றதும் அவர்கள் வெளியிட்ட படம், இப்படி தயாரித்ததுதான். இந்த ப்ராஜெக்ட்டை எடுத்து செய்ய ஆரம்பித்ததும் போஸ்டிங் கிடைக்கத் தொடங்கின. 1988ல் ஸ்பேஸ் கிராஃப்ட் ஆபரேஷன்ஸ் மேனேஜராக IRS -1ஏ, INSAT -1ஏ, 2பி, 1994ல INSAT -2சிக்கு டெபுட்டி ப்ராஜெக்ட் டைரக்டர் என வளர்ந்து 1996ல் மிஷன் டைரக்டராகி INSAT 2சி, 2டி, 3பி, ஜிசாட் - 1 என உருவாக்கி 2003ல் EDUSAT ப்ராஜெக்ட்டின் அசோசியேட் டைரக்டர் என வளர்ந்தேன்.

2004ம் ஆண்டு ஒருநாள் காலை என்னை அழைத்து ‘சந்திராயன் - 1’ ப்ராஜெக்ட்டை கொடுத்தார்கள். பெரிய செயற்கைக்கோள்கள் நம்மிடம் இல்லை. துருவ செயற்கைக்கோளான பி.எஸ்.எல்.வி மட்டும்தான். அதை வைத்து சந்திராயனை நிலவுக்கு அனுப்ப வேண்டும். எனக்கு வழங்கப்பட்ட காலம் 10 ஆண்டுகள்.நிறைய ஐடி நிறுவனங்கள் வரத் தொடங்கிய காலமும் அதுதான். இந்தியாவில் எந்தவொரு நவீன கணினியும் டெக்னாலஜியும் முதலில் ஸ்பேஸ் துறையில்தான் நுழையும்.

இதை எதற்கு சொல்கிறேன் என்றால் இந்தியாவில் ஐடி துறை நுழைய ஆரம்பித்தபோது கம்ப்யூட்டர் பற்றித் தெரிந்த பலர் ஸ்பேஸ் துறையில் இருந்தார்கள். அவர்களை எல்லாம் அதிக சம்பளத்துக்கு ஐடி நிறுவனங்கள் அழைக்க ஆரம்பித்தன. எனக்கும் நினைத்துப் பார்க்க முடியாத சம்பளத்தை தருவதாக பல நிறுவனங்கள் ஆசை காட்டின. எனக்கு விருப்பமில்லை. சந்திராயன்தான் என் இலக்காக இருந்தது.  

பல நாடுகள் நிலவுக்கு ராக்கெட் அனுப்பி அங்கு தண்ணீர் இல்லை என அறிவித்திருக்கிறார்கள். எங்கள் திட்டம், ஒருவேளை நிலவின் மறுபகுதியில் நீர் இருந்தால்..? தவிர மற்ற நாடுகள் நிலவுக்கு சென்ற நேரத்தில் அங்கு நீர்நிலை தென்படாமல் போகவும் வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் விண்
வெளியில் அதிக வெப்பம் அல்லது அதிக குளிர்தான் இருக்கும். எனவே நீர் இருக்கும்பட்சத்தில் அவை ஆவியாகி இருக்கலாம் அல்லது உறைந்து பனியாக காட்சி அளிக்கலாம்.

எனவே, மொத்த நிலவையும் முப்பரிமாணமாக சுற்றி வந்தால்தான் எங்கு நீர் இருக்கும் என்றே தெரியும். இந்த அடிப்படையில் ‘சந்திராயன் - 1’ உருவாக்கப்பட்டு நிலவுக்கு அனுப்பப்பட்டது. தன் சுற்றுப்பாதை வழியே ‘நிலவு மோதல்’ மூலமாக நிலவின் பரப்பை ஆராய்ந்து படமாக எடுத்து அனுப்பியது.

இதன் வழியாக சந்திரனில் அதிக அளவில் நீர் இருப்பதை இந்தியாதான் முதன்முதலில் கண்டுபிடித்தது! ‘சந்திராயன் - 1’ல் பல நாடுகளின் கருவிகள் நமக்குப் பயன்பட்டன.‘சந்திராயன் - 2’ ஆரம்பிக்கும்போது அது இந்திய - ரஷ்ய கூட்டு செயற்கைக்கோளாக இருந்தது. ஆனால், இடையில் அனுப்பப்பட்ட ரஷ்ய - சீன செயற்கைக்கோள் தோல்வி அடையவே ரஷ்யா பின்வாங்கி நம்முடன் இருந்த கூட்டினை முறித்துக் கொண்டது. இதனால் பட்ஜெட்டில் ஏகக் குளறுபடி.

இந்த இடைவெளியில் ‘ஏன் மார்ஸ் போகக் கூடாது’ என யோசித்தோம். பி.எஸ்.எல்.வி ஏவுகலத்தை வைத்து செவ்வாய் போவதா என்ற கேள்வி எழுந்தது. ஏனெனில் செவ்வாய்க்குச்செல்ல என்றே மற்ற நாடுகள் வடிவமைத்த ஏவுகலங்கள் தோல்வியில் முடிந்திருக்கின்றன. இந்நிலையில் இந்தியாவில் இருந்து செவ்வாய்க்கு விண்கலமா என பலர் கேலி செய்தார்கள்.

ஆனால், மார்ஸ் ஆர்பிட் மிஷன் செய்து காட்டி வெற்றி பெற்றோம்! உலகிலேயே குறைவான செலவில் அதுவும் குறுகிய காலத்தில் செவ்வாய்க்கு செயற்கைக்கோளை அனுப்பிய நாடு இந்தியாதான்! இந்தநேரத்தில் செயற்கைக்கோளுக்கான பாகங்களை தனியார் கார் நிறுவனங்களை செய்யச் சொன்னால் என்னவென்று தோன்றியது.

அரசும் ஒப்புக் கொண்டு அனுமதி வழங்கியது. இதனால் 12 மாதங்களில் 13 செயற்கைக்கோள்களைச் செய்ய முடிந்தது. பின்னர் மாணவர்களையும் உள்ளே கொண்டு வந்தோம். அதாவது ஒரேநேரத்தில் பல செயற்கைக்கோள்களை உருவாக்கும் வேலையில் இறங்கி ஒவ்வொன்றாக லான்ச் செய்வது!

இந்தியா மாதிரியான ஒரு வளரும் நாடு, இன்று உலகத்துக்கே விண்வெளியில் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது! ஓர் இந்தியனாக இதைப் பார்த்து பெருமைப்படுகிறேன்.ஒன்று தெரியுமா..? இன்றும் அப்பாவின் நிழலில்தான் இளைப்பாறுகிறேன். அவர் பெயர் மயில்சாமி. தமிழ்ப் பற்று மற்றும் அறிஞர் அண்ணா மீதுள்ள ஈடுபாடு காரணமாக எனக்கு அண்ணாதுரை என்று பெயர் வைத்தார். அப்பாவின் மீது நான் வைத்துள்ள அன்பின் காரணமாக என் பெயரை மயில்சாமி அண்ணாதுரை என மாற்றிக் கொண்டேன்.

அம்மா பாலசரஸ்வதி எல்லாவகையிலும் என் உயர்வுக்குக் காரணமாக இருந்தார்.இலக்கியம் படிப்பதிலும் கவிதை எழுதுவதிலும் எனக்கு ஈடுபாடு உண்டு. பாதி வாழ்க்கையை ஸ்பேஸ், ஸ்பேஸ் மையம் என நான் செலவழிக்க குடும்பத்தை தூணாகத் தாங்கியவர் என் மனைவி வசந்தி. என் மகன் ஓர் ஆளாக வளர்ந்து நிற்கவும் வசந்திதான் காரணம். அவனுக்கு அமெரிக்காவில் படிக்க விருப்பம். எனவே குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்று கல்லூரியைத் தேர்வு செய்தோம்.

அப்போது நான் வந்திருக்கும் தகவலை அறிந்து நாசாவுக்கு நான் வரவேண்டும் என்று அழைப்புவிடுத்தார்கள். குடும்ப வேலையாக வந்திருப்பதாகச்
சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. குடும்பமாகவே நாசா சென்றோம்.

அங்கிருந்த பெரிய எல்.சி.டி மானிட்டரில் ‘வெல்கம் மயில்சாமி அண்ணாதுரை மற்றும் குடும்பத்தார்’ என வந்தது!இதைப் பார்த்த என் மகன் கோகுல் கண்ணன், ‘அமெரிக்காவுக்கு இனி சுற்றுலாப் பயணியாகத்தான் வருவேன்...’ என முடிவு செய்தார்! மகன் என்ன படிக்க வேண்டும் என்பதை அவரே முடிவு செய்தார். அதன்படியே படித்து இன்று BOSCH கம்பெனியில் நல்ல வேலையில் இருக்கிறார்.தயவுசெய்து படியுங்கள். கல்வி ஒரு மனிதனை எந்த உயரத்துக்கு அழைத்துச் செல்லும் என்பதற்கு நானே உதாரணம்!          

ஷாலினி நியூட்டன்

ஆ.வின்சென்ட் பால்