Face to Face குஷ்பூ பதில்கள்



எனது தங்கத் தலைவன் கவுண்டமணி அண்ணன்தான்!

சில்க் ஸ்மிதாவுடன் பழகிய அனுபவத்தை சொல்லுங்கள்..?
- கே.ராமநாதன், மதுரை; ஜெ.ஆனந்தி, விழுப்புரம்.

எனக்குத் தெரிஞ்சு மிகக் கவர்ச்சி நடிகைனா அது சில்க் ஸ்மிதாதான். அவங்க நடிச்ச கேரக்டர்ஸ வச்சு இதைச் சொல்லல.

அவங்க கண்கள வச்சு சொல்றேன். அப்படி ஒரு கவர்ச்சியான கண்கள் அவங்களுக்கு மட்டுமே இருக்கு. நான் பர்சனலாகவும் அவங்களோட பழகியிருக்கேன். ஸ்மிதாவின் ரியல் நேம் விஜயலட்சுமி. அதனாலேயே அவங்கள விஜினுதான் கூப்பிடுவேன். ரொம்ப ரொம்ப தங்கமான பொண்ணு. யாரைப்பத்தியும் தவறா பேசமாட்டாங்க. யாருக்கும் கெட்டது நினைக்காத நல்ல உள்ளம் படைச்சவங்க. கள்ளம் கபடமில்லாத குழந்தை மனசுக்காரர்.

1984ல முதன்முதலா நான் சென்னை வரும்போது முதலில் பார்த்து வியந்த ஒரு ஸ்டார் அவங்கதான். அன்னிக்கு படப்பிடிப்புத் தளத்துல திடீர்னு பரபரப்பாகுது. ‘மேடம் வர்றாங்க... மேடம் வர்றாங்க...’ குரல்கள் ஒலிக்குது. ஓர் இடத்துல உட்கார ஒரு சேர் போட்டு, அதுமேல டவல் விரிச்சு, சேருக்கு பக்கத்திலேயே ஒரு குட்டி டேபிள் ஃபேன்னு ஒவ்வொண்ணா வைக்கறாங்க.

யார் வர்றாங்கனு விசாரிச்சப்ப சில்க் ஸ்மிதானு சொன்னாங்க. செட்டுக்குள்ள சில்க் என்ட்ரி ஆனாங்க. அவங்க வந்த உடனேயே  கால்மேல கால் போட்டு ஸ்டைலா உட்கார்ந்தாங்க. அவங்ககிட்ட பேசவே பயமா இருந்தது. இத்தனைக்கும் அவங்களுக்கும் எனக்கும் 8 வயசு வித்தியாசம்தான் இருந்திருக்கும். அவங்க கூட நடிக்கிறப்பவும், ஷோஸ் பண்ணும்போதும் பழகற வாய்ப்பு கிடைச்சது. நிஜமாவே சொக்கத்தங்கம்.

ஸ்மிதாவின் டிரெஸ்ஸிங் சென்ஸ் எக்ஸலன்ட்டா இருக்கும். தன் காஸ்ட்யூமை, தானேதான் டிசைன் பண்ணுவாங்க. ஜுவல்லரி டிசைனும் அவங்களேதான். கடைல பெரும்பாலும் வாங்கமாட்டாங்க. தங்கமோ வைரமோ ஸ்கெட்ச் பண்ணி ஜுவல்லர்ஸ்கிட்ட கொடுத்து அதுமாதிரி உருவாக்கச் சொல்வாங்க. சிறந்த கலா ரசிகை!

நீங்கள் கேள்வி கேட்க விரும்பும் வி.ஐ.பி. யார்? அவரிடம் என்ன கேட்பீர்கள்?
- லாவண்யா ராஜேஷ், திண்டுக்கல்.

ரெண்டு பேர் இருக்காங்க. ஒருத்தர் விஜய் சேதுபதி. ‘நீங்க எப்படி அவ்ளோ பிரமாதமா நடிக்கிறீங்க’னு அவர்கிட்ட கேட்க விரும்புறேன். இன்னொருத்தர் கார்த்தி. ‘Why you so cute cake’னு கேட்கணும்!

எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களை சிறப்பாக வளர்க்க ஆலோசனைகள் சொல்லுங்கள்..?
- லதா முருகானந்தம், சென்னை.

ஒவ்வொரு தாய்க்குமே அவங்க பசங்களுக்கு எது நல்லதுனு தெரியும். இன்னொருத்தர் சொல்லித்தான் அவங்க புள்ளைங்கள வளர்க்கணும்னு இல்ல. பத்து மாசம் நீங்க சுமந்திருக்கீங்க. அப்போதிலிருந்தே உங்களுக்கு அவங்கள பத்தித் தெரிஞ்சிருக்கும். நீங்க எதை பேசினா பசங்க எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கனு புரிஞ்சிருப்பீங்க.

குழந்தை வயித்துல இருக்கும் போதே, அதோட விருப்பு வெறுப்புகளை ஒரு தாயால புரிஞ்சுக்க முடியும். என் மக என் வயித்துல
இருக்கும்போது, நான் கத்திப் பேசினா அவளுக்கு பிடிக்காது. வயித்துக்குள்ள இருந்து எட்டி உதைப்பா!
ஆனா ஒண்ணே ஒண்ணுங்க... மத்தவங்க மதிக்கிற அளவுக்கு புள்ளைங்க வளரணும். அப்படி அவங்கள வளர்த்தீங்கன்னாலே போதும்னு நினைக்கறேன்.

அரசியலில் சேரும் ஆர்வம் எப்படி வந்தது?
- கோ.குப்புசாமி, சங்கராபுரம்; மேட்டுப்பாளையம் மனோகர், கோவை - 4; மு.ரா.பாலாஜி, சொர்ணகுப்பம்.

2005ல ஒரு சின்ன பிரச்னை வந்தது. அஞ்சு வருஷங்கள் கோர்ட்டுல வாதாடினேன். 2010லதான் எனக்கு வெற்றி கிடைச்சது. அப்பதான், ஓரளவு சமூக அந்தஸ்தோடு இருக்கற, அதுவும் பணவசதியுள்ள எனக்கே இவ்வளவு கஷ்டங்கள் ஏற்படுதே... மிகப்பெரிய போராட்டத்துக்குப் பிறகு மீள முடியுதே... அப்ப சாதாரண மக்களுக்கு இதுபோன்ற நிலை வந்தா என்ன ஆவாங்க..? சட்ட உரிமைகள் பத்தியே தெரியாதவங்க எவ்வளவு கஷ்டப்படுவாங்க..?
அரசியல்ல ஒரு பிளாட்ஃபார்ம் அமைஞ்சா மக்களுக்கு ஆதரவா குரல் கொடுக்க முடியுமேனு அப்பதான் தோணிச்சு.

அரசியலுக்கு போற என் முடிவை 2007ல வீட்ல சொன்னேன். அப்ப என் கணவர், ‘கேஸு கோர்ட்ல இருக்கு. இப்ப அரசியல் கட்சில சேர்ந்தா நாளைக்கு நீ வழக்குல ஜெயிச்சதும் அரசியல் இன்ஃப்ளூயன்ஸாலதான் வெற்றி பெற்றேனு சொல்லிடுவாங்க. அதனால வழக்கு வெற்றி பெற்ற பிறகு அரசியல்ல இறங்கு’னு சொன்னார்.

அந்த நியாயத்தை ஏத்துகிட்டேன். தனியா போராடி வழக்குல ஜெயிச்சேன். ஆனா, வழக்கு நடந்த காலத்துல அப்ப சி.எம் ஆக இருந்த ஜெயலலிதாவுக்கு சாதகமான சேனல்ல நான் கேம் ஷோவும் சீரியலும் செய்துட்டு இருந்ததால அவங்க கட்சிலதான் நான் சேருவேன்னு பலரும் நினைச்சாங்க.ஆனா, எனக்கு சரினு பட்ட சமூக நீதிக்காக பாடுபடற திமுகல 2010ல சேர்ந்தேன்!

‘நடிகன்’, ‘நாட்டாமை’, ‘சின்ன தம்பி’ என உங்கள் படங்களில் கவுண்டமணியின் காமெடியும் அதிரிபுதிரி ஹிட் ஆகியிருக்கிறதே?
- என்.ரத்னம், பாளையங்கோட்டை; சிவரஞ்சனி, விருதுநகர்.

ஆமா! தங்கத்தலைவன் (அப்படித்தான் கூப்பிடுவோம்) கவுண்டமணியண்ணன் ஒரு ஜீனியஸ். அவரது காமெடி பெண்கள், குழந்தைகள்னு எல்லாரும் ரசிக்கற மாதிரி இருக்கும். ஃபேமிலியா ஒண்ணா உட்கார்ந்து பார்க்கற யாரும் முகம் சுழிச்சிடக்கூடாதுனு கவனமா இருப்பார். வல்காரிட்டி கூடாது என்பதிலும் தெளிவா இருப்பார்.

அவரோடு ஒர்க் பண்ணின நேரத்துல எனக்கு அவ்வளவா தமிழ் புரியாம இருந்தது. அப்படியிருந்தும் காமெடி சீன்ஸ் ஷூட் பண்றப்ப அவரோட பாடிலேங்குவேஜைப் பார்த்து கப்புனு சிரிச்சுடுவேன். இதனால பலமுறை ரீடேக் போயிருக்கு! ‘சின்ன தம்பி’ ஷூட்ல அவர் மெனக்கெட்டு காமெடி பண்றப்ப நானும் பிரபு சாரும் சட்டுனு சிரிச்சிடுவோம். உடனே  கவுண்டமணி அண்ணன், ‘மொதல்ல அவங்க சிரிச்சு முடிக்கட்டும்... அப்புறம் நான் ஷாட்டுக்கு வர்றேன்!’னு சொல்லி கலாய்ப்பார்.

எங்க தங்கத்தலைவன் அவர்தான். ‘நடிகன்’ ஷூட் அப்ப ஸ்பாட்டுல சத்யராஜ் சார், கவுண்டமணியண்ணன், மனோரமா ஆச்சி காம்பினேஷன் எடுக்கும்போது அப்ப அந்த இடமே அதிரும். அப்படி சிரிச்சுட்டிருப்போம். எப்பவும் மறக்க முடியாத தருணங்கள்..!

(பதில்கள் தொடரும்)