வரலாற்றின் காலடி காட்டும் கீழடிமதுரைக்குத் தென் கிழக்கே 12 கிமீ தொலைவில் உள்ளது கீழடி கிராமம். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இச்சிறு கிராமம் ஒரு நாள் இந்த உலகத்தையே தன் பக்கம் திரும்பிப் பார்க்கவைக்கும் என்று ஆறு வருடங்களுக்கு முன்பு கூட யாரும் நம்பி
யிருக்கமாட்டார்கள்.

இன்று கீழடி உலகம் முழுதும் உள்ள வரலாற்று ஆய்வறிஞர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள், மாணவர்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை அத்தனை பேரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தொல்பொருள் ஆய்வு நிறுவனம் இங்கு அகழாய்வு செய்ததில் கிடைத்த வரலாற்றுப் பொக்கிஷங்கள்தான் கீழடியின் இந்த மவுஸுக்குக் காரணம்.

கீழடியில் உள்ள பள்ளிச்சந்தை திடல் என்ற மேட்டுப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் நிறைய தொல்லியல் தடயங்கள் சாதாரணமாக விவசாயத்துக்கு உழும்போதே கிடைக்கத் தொடங்கியதுதான் ஆரம்பம். மேடான பகுதி என்பதால் மக்கள் அதிகம் புழங்காமல் விட்டிருக்கிறார்கள்.
கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கண்காணிப்பாளர் கி.அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு முதல் கட்ட ஆய்வைத் தொடங்கியது. அப்போது முதல் இதுவரை ஐந்து கட்ட அகழாய்வுகள் நிகழ்ந்துள்ளன.

முதல் கட்ட அகழாய்விலேயே கீழடி, வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்டது என்ற கருத்து உறுதியானது. கீழடியில் கிடைக்கும் தொல் பொருட்களின் காலம் கிமு 3ம் நூற்றாண்டு முதல் கிமு 10ம் நூற்றாண்டு வரை நீளலாம் என்று முதல்கட்டமாகத் தெரிவித்தபோதே வரலாற்று அறிஞர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை அனைவரும் திகைத்தனர்.

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி என்பது வெறும் உயர்வு நவிற்சிப் பாடல்தான்... ஆதாரம் எங்கே... என்று கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு ஆதிச்சநல்லூருக்கு அடுத்த ஆதாரமாக கீழடியும் வந்து நின்றது.வைகை நதிக்கரை நாகரிகம் என்று அறிஞர்கள் வர்ணித்தார்கள். முதல் கட்ட அகழாய்வில் அகழ்ந்தெடுக்கப்பட்டவை கார்பன் டேட்டிங் முறையில் ஆயுளைக் கண்டறிய அனுப்பப்பட்டன.

அதன் முடிவுகள் கடந்த 2017ம் ஆண்டுதான் வந்தன. அதன்படி இங்கு கண்டுபிடிக்கப்பட்டவை 2200 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பது உறுதியானது.ஜனவரி 2016ம் ஆண்டில் இரண்டாம் கட்ட அகழாய்வு தொடங்கியது. இதில் மருத்துவக் குடுவைகள், பழங்கால உறை கிணறுகள், தொழிற்சாலை, அரசு முத்திரை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் கிடைத்தன.

இரண்டாம் கட்ட அகழாய்வின் முடிவில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்தன. இவையும் 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவை என உறுதி செய்யப்பட்டுள்ளது.பிறகு, மூன்றாம் கட்ட அகழாய்வு ஜனவரி, 2017ல் நடைபெற்றது. மூன்றாம் கட்டப் பணியில் 400 சதுர மீட்டர் அளவுக்கு 16 குழிகள் தோண்ட இடம் தேர்வு செய்யப்பட்டு பழம்பொருட்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டன.

நான்காம் கட்ட அகழாய்வு 2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் நடைபெற்றது. இதில் கிடைக்கப்பட்ட ஆறு மாதிரிகள்தான் இன்று மாபெரும் வரலாற்று சர்ச்சையை நிகழ்த்தியுள்ளன. ஆமாம்! இம்மாதிரிகளை அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரின் பீட்டா அனாலிடிக் என்ற நிறுவனத்துக்கு கார்பன் டேட்டிங் செய்ய அனுப்பினார்கள்.

இதன் முடிவில், பதினோரு அடி ஆழத்தில் பெறப்பட்ட ஒரு மாதிரி கிமு 580ம் ஆண்டைச் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டது!இத்தாலியிலுள்ள பைசா பல்கலைக்கழகத்தின் புவி அறிவியல் துறையில், அகழ்ந்தெடுக்கப்பட்ட பானை ஓடுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. மேலும், புனேவிலுள்ள முதுகலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான டெக்கான் கல்லூரியில் எலும்புத் துண்டுகள் பகுப்பாய்வுகள் செய்யப்பட்டுள்ளன.

இவற்றின் முடிவில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகள் கிமு ஆறாம் நூற்றாண்டுக்கும் முற்பட்டது என்று நிரூபணமாகியுள்ளது!
இந்தச் செய்திதான் இப்போது வைரலாகியுள்ளது.இந்தியாவின் வரலாற்றை சிந்து சமவெளி நாகரிகத்தில் தொடங்கி, கங்கைச் சமவெளியின் சமண, பெளத்த, வைதீக நாகரிகங்கள் வழியாக முன்வைப்பதுதான் இதுவரை நடைமுறை.

இந்நிலையில் கீழடி அகழாய்வுகள் தென்னிந்திய வரலாற்றை,குறிப்பாக  தமிழக வரலாற்றை சிந்து சமவெளி வரலாற்றுக்குப் பிறகு அடுத்த நிலையில் வைக்க வேண்டியதாக மாற்றிக்கொண்டிருக்கின்றன என்பதே தமிழ்கூறும் நல்லுலகின் பரவசத்துக்குக் காரணம்.கடந்த ஜூன் முதல் ஐந்தாம் கட்ட அகழாய்வுகள் தொடங்கி நடந்து வருகிறது. இவற்றில் மேலும் முக்கியமான கண்டுபிடிப்புகள் கிடைக்கக்கூடும் என அறிஞர்கள் ஆர்வமாகியுள்ளனர்.

சுமார் ஐம்பது சதுரக் குழிகள் 80 ஏக்கர் பரப்பளவில் மூன்றரை கிமீ சுற்றளவில் அமைந்துள்ள மிகப் பெரிய அகழாய்வு இது. இதில் உறைகிணறுகள், செங்கற் சுவர்கள், கூரை ஓடுகள், மண்பாண்டங்கள், மிளிர்கல் அணிகலன்கள், எலும்புக் கருவிகள், இரும்பு வேல் உட்பட தமிழி எழுத்தில் கீறப்பட்ட மண்பாண்டங்களும் கிடைத்துள்ளன.

இங்கு கிடைத்த மண்பாண்டங்களில் பிராமி எனப்படும் இந்த தமிழி எழுத்துகளில் ஆதன், உதிரன், திசன், சாத்தன் போன்ற பெயர்கள் கீறப்பட்டுள்ளன. புத்தருக்கு சற்று முற்பட்ட காலத்திலேயே நம் தமிழ் எழுத்து வடிவில் இயங்கியிருக்கிறது என்ற செய்தியானது. இதனால் நமது சங்க காலம் என்பது கிமு மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்பு கிடையாது என்ற அசட்டுப் பேச்சுகளை அடக்கியுள்ளது.

கீழடியில் பத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. முழு வளர்ச்சியடைந்த ஒரு நகரமாக இது இருந்திருக்கும் என்பதன் சாட்சி இவை. சங்க காலத்தில் பெருங்கட்டடங்கள் இல்லை என்ற கருத்தும் இதன் மூலம் தகர்கிறது.நீர் வழங்கல், கழிவு நீர் அகற்றல் இரண்டும் ஒரு நகர நாகரிகத்தின் முதிர்ச்சியைச் சொல்வன. கீழடியில் கழிவுநீர்க் கால்வாயுடன் இணைக்கப்பட்ட சுடுமண் குழாய் பொருத்தப்பட்ட கட்டடங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இங்கு பழங்கால சுடுமண் உறைகிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை பட்டினப்பாலை கூறும் ‘உறைகிணற்றுப் புறச்சேரி’ என்ற தொடருக்குச் சான்று சொல்வதாக உள்ளன.அதுபோல வரலாற்றின் தொடக்க காலங்களில் செங்கற் சுவர்கள் கிடைப்பது அரிது என்பார்கள். ஆனால், கீழடியில் செங்கற் சுவர்கள் நிறைந்திருக்கின்றன.

எல்லாவற்றுக்கும் மகுடமாக, தனித்துவமாக இருப்பது இங்கு கிடைக்கும் பானை ஓடுகள்தான்!இங்கு கிடைத்திருக்கும் பானை ஓடுகளில் மிகப் பெரும்பாலானவை கறுப்பு மற்றும் சிவப்பு வண்ணம் கொண்டவை. சிந்து சமவெளியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பானை ஓடுகளும் இதே வண்ணம், அமைப்பு கொண்டவைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் கங்கைச் சமவெளியின் பானைகள் பழுப்பு வண்ணம் கொண்டவை. சிந்து சமவெளி பானைகள், கீழடி எனும் வைகைச் சமவெளிப் பானைகளுக்கு இடையே உள்ள ஒற்றுமை தற்செயலானது அல்ல. இவ்விரு நாகரிகங்களுக்கும் ஏதோ தொடர்புள்ளது என்ற செய்தியை சொல்லாமல் சொல்லி நிற்கின்றன இப்பானைகள்.

புதையலைத் தோண்டப் போய் பூதம் கிளம்பியது என்பார்கள். இங்கு கிளம்பியிருப்பதும் ஒரு பூதம்தான். இந்திய வரலாற்றையே தன்னிடமிருந்து தொடங்கச் சொல்லும் அழகிய தமிழ் பூதம் இது!                   

இளங்கோ கிருஷ்ணன்