தூண் இல்லை... சிமெண்ட் இல்லை... செங்கல் இல்லை... ஆறு மாதத்தில் வீடு ரெடி!



பெங்களூர் புறநகர் பகுதியான கெம்பேகெளடாவில் அமைந்திருக்கிறது சரவணனின் வீடு.

அவர் வீட்டை கண்டுபிடிப்பது மிகவும் சுலபம். யாரைக்கேட்டாலும், ‘அதோ அங்க மொட்டை மாடில ‘விண்ட் மில்’ வெச்சிருக்கே, அந்த வீடுதான்...’ என்று சரியாகச் சொல்லிவிடுவார்கள். சரவணனின் வீடு சிமெண்ட், செங்கல்லில் கட்டிய வீடு இல்லை! நிலத்திலிருந்து தோண்டிய மண், ஜல்லி மண், இயற்கையான களிமண் கொண்டு, சுண்ணாம்பும் கலந்து கட்டிய வீடு!

சரவணன் குடும்பத்தில் மொத்தம் ஒன்பது பேர். அவர் தந்தை, சகோதரரின் குடும்பத்துடன் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வசிக்கிறார்.

பெங்களூரிலிருந்து 20 கி.மீ தூரத்தில் நிலம் வாங்கி 6 வருடத்திலேயே, வீடு கட்டும் முயற்சியில் சரவணனின் குடும்பம் இறங்கியுள்ளது.
பொறியாளரான சரவணன், வீடு கட்ட வேண்டும் என்று ஆசை வந்ததுமே அது சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காத இகோ - ஃப்ரெண்ட்லி வீடாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார். சிமெண்ட், செங்கல் கொண்டு கட்டும் காண்க்ரீட் வீடுகள்தான் உலகத்திலேயே அதிகப்படியான கார்பன்டைஆக்சைட் வெளியேற்றும் காரணியாக இரண்டாம் இடத்தில் இருக்கின்றன.

அதனால் செங்கல்லுக்குபதில் மண்ணில் செய்த Mud Blocksஐ தேர்ந்தெடுத்துள்ளார். இவை சராசரியான செங்கல் செலவை விட 15 சதவீதம் குறைவாகவும், சுற்றுச்சூழலுக்கு 12.5 மடங்கு கம்மியான கார்பன் வெளியேற்றத்தையும் தந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிசெய்திருக்கிறது.  ‘‘எங்கள் பூர்வீகம் தமிழ்நாடுதான். ஆனால், பெங்களூரில்தான் பிறந்து வளர்ந்தது எல்லாம். புதிதாக நிலம் வாங்கியதும் அதைச் சுற்றி நிறைய காலி இடங்கள் இருந்தன. அதனால் அந்த இடத்திலேயே ‘Mud Blocks’ தயாரித்துவிடலாம் என்று தோன்றியது.

நான் கட்டியது சாதாரண மண் வீடு கிடையாது. இது காண்க்ரீட் வீட்டிற்கு நிகரான உறுதியுடையது! அதற்கான தக்க சான்றிதழ்களும் என்னிடம் உள்ளன. ஆனால், பலர் மண் வீடு என்றதும் பயந்து ‘அது எப்படி சாத்தியம், மழை பெய்து வெள்ளம் வந்தால், பூகம்பம் வந்தால் என்ன ஆகும்...’ என்று பயப்படுகின்றனர்.

உண்மையில், ஒரு ‘Mud Block’ செய்ய 11.5 கிலோ மண் தேவைப்படும் என்றால், அதற்கு நல்ல அழுத்தம் கொடுத்து 8.5 கிலோவாகும் வரை உறுதிப்படுத்துவோம். பின், சூரிய வெளியில் ஈரப்பதம் குறைய காயவைப்போம். இறுதியாக Mud Blockகின் உறுதித்தன்மை சரிபார்க்கப்பட்டு, வீடு கட்ட பயன்படுத்தப்படும். இதற்காகவே Mud Blocks தயாரிக்கும் நிபுணர்களை அழைத்து இவற்றைத் தயாரித்தோம்....’’ என்று சொல்லும் சரவணன், மாடர்னாக வீடு வேண்டும் என்று கட்டி அதனாலேயே பலரும் பல சிக்கல்களைச் சந்திக்கின்றர் என்கிறார்.

‘‘இன்று பெரும்பாலானவர்களுக்கு மூட்டு வலி, குதிகால் வலி வரக் காரணமே ஆயிரக்கணக்கில் செலவு செய்து வீட்டில் பதிக்கும் டைல்ஸ்தான்!
அவ்வளவு செலவு செய்து போட்ட டைல்ஸில் நடக்க முடியாமல், வீட்டுக்குள்ளும் செருப்பு அணிந்தே நடக்கின்றனர். காரணம், குளிர் காலங்களில் டைல்ஸ் தரைகளில் காலை வைக்க முடியாத அளவு ‘சில்’லென்று இருக்கும்.

இந்தத் தொல்லைகள் எல்லாம் வேண்டாம் என்று நேராக ஆத்தங்குடி சென்று அங்குள்ள தரைக் கற்களை வாங்கி வந்தேன். ஆத்தங்குடி டைல்ஸ், பருவநிலைக்கு ஏற்றது. குளிர் காலத்தில் வெதுவெதுப்பையும், கோடை காலத்தில் குளிர்ச்சியையும் தரும். தவிர நம் உடல் நலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும், பட்ஜெட்டிற்கும் கச்சிதமான சாய்ஸ்!’’ கண்சிமிட்டும் சரவணன், சோலாருக்கு பதில் காற்று மூலம் மின்சாரம் தயாரிக்க விண்ட் மில் பொருத்தியிருக்கிறார்.

‘‘காற்றோட்டமான பகுதியில் நாங்கள் வசிக்கிறோம். பக்கத்தில் பெரிய கட்டடங்கள் எதுவும் கிடையாது. சுற்றிலும் விவசாய நிலம் என்பதால், அதில் யாரும் பெரிய கட்டடங்கள் கட்டப் போவதும் இல்லை. அதனால்தான் இந்த விண்ட் மில் பொருத்தும் ஐடியா வந்தது!

இதனால் என்ன பயன் தெரியுமா? 9 பேர் இருக்கும் எங்கள் குடும்பத்துக்கான கரன்ட் பில் பொதுவாக நான்காயிரம் வர வேண்டும். ஆனால், ஐநூறு ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் சென்றதில்லை!’’ பெருமையாகச் சொல்லும் சரவணன், ஆறே மாதங்களில் இந்த வீட்டைக்கட்டி முடித்திருக்கிறார். ‘‘இது கட்டுவதற்காக எடுத்துக் கொண்ட கால அவகாசம்ஆறு மாதம்தான்.

ஆனால், இதற்கான முன் தயாரிப்புக்காக பல மாதங்கள் செலவிட்டேன். முதல் வீடு, சொந்த வீடு என்பதால், எந்த குறையும் இருக்கக் கூடாது, எல்லோருக்கும் பிடித்திருக்க வேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்தினோம்...’’ என்ற சரவணனிடம் மண் வீடு என்றால் பூச்சிகள் வருமே என்றோம்.

‘‘இப்படித்தான் பலரும் தவறாக நினைக்கிறார்கள்! வீடு கட்டும்போதே அதில் வேப்பம் அல்லது நீலகிரி எண்ணெயைக் கலந்து பூசி கட்டினால்  பூச்சிகள் எதுவும் அண்டாது!இந்த வீட்டில் தூண்களும் கிடையாது! இது எப்படிச் சாத்தியமாகும்... என்ன பைத்தியக்காரத்தனம் இது... என்றெல்லாம் சொல்லி இதைத் தடுக்க பலரும் முற்பட்டனர்.

ஆனால், நான் உண்மைத் தகவல்களைச் சேகரித்து, பல வீடுகளுக்கும், கோயில்களுக்கும் சென்று கண்கூடாகப் பார்த்த பின்னரே இப்படிச் செய்தேன். தூண் இல்லாமல் கட்டப்பட்ட வீடு 90 ஆண்டுகள் வரை நீடித்து நிற்கும்!’’ அடித்துச் சொல்லும் சரவணனின் வீட்டில் பல சுவாரஸ்யங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

காலிங் பெல்லுக்கு பதில் கோயில் மணி, வேப்பமரத்தில் செய்த ஜன்னல்கள், இரட்டை கதவு வாசலுடன் விளக்கு ஏற்ற முக்கோண இடம், கழிவு நீரிலிருந்து மீத்தேன் எடுத்து அதை சமையல் எரிவாயுவாக பயன்படுத்துதல்... என அடுக்கிக் கொண்டே போகலாம்!இந்த மூன்றடுக்கு வீடு கட்ட, விண்ட் மில் உட்பட எல்லாம் சேர்த்து சரவணனுக்கு ரூ.30 லட்சம்தான் ஆகியிருக்கிறது என்பதுதான் ஹைலைட்!   

ஸ்வேதா கண்ணன்