பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளை தீர்மானிப்பது இவர்கள்தான்!



பிரதமர் அலுவலகம் A to Z

சுதந்திர இந்தியாவில் எந்த அலுவலகம் சர்வ வல்லமை படைத்தது?

பிரதமர் அலுவலகம்தான்! ஆம். குடியரசுத் தலைவர் அலுவலகத்தைக் காட்டிலும் பிரதமர் அலுவலகமே ஆட்சி நிர்வாகத்தில் சர்வ வல்லமை

படைத்தது!பிரதமரின் முதன்மை செயலாளரால் நிர்வகிக்கப்படும் இந்த அலுவலகத்தின் முதன்மை வளாகம் தில்லி சவுத் பிளாக்கில் உள்ளது.
எனினும் அதன் சில முக்கிய கிளைகள் ரயில் பவன் (ஆர்டிஐ துறை) மற்றும் நாடாளுமன்றத்தில் அமைந்துள்ளன. தவிர ஆர்சிஆரில் உள்ள பிரதமர் வீட்டில் இருந்தும் ‘கேம்ப்’ அலுவலகங்கள் செயல்படுகின்றன.

தற்சமயம் 122 அரசிதழ் பதிவு பெற்ற பதவிகளும், 281 அரசிதழ் பதிவு பெறாத பதவிகளும் பிரதமர் அலுவலகத்தில் உள்ளன.இன்றைய பிரதமர் மோடி 2வது முறையாக ஒற்றை ஆட்சி முறை சித்தாந்த அடிப்படையில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை நடத்தி வருவதால், பிரதமர் அலுவலக ரகசியங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கோ, அவர்களின் ஆதரவு பெற்ற அதிகாரிகள் மூலமாகவோ பெரும்பாலும் ‘லீக்’ ஆவதில்லை.

எல்லாமே கண்காணிப்பு வளையத்துக்குள்தான் நடக்கின்றன. அதிகாரிகளும் ஒற்றை சித்தாந்த ஆட்சிக்கு ஆதரவாளர்களாகவே நியமனம் செய்யப்
படுவதால், ஒவ்வொரு முக்கிய முடிவும் சாமானியர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பதாகவே அமைகிறது.பணமதிப்பிழப்பு தொடங்கி இன்றைய காஷ்மீர் விவகாரம் வரை பல திடீர் அறிவிப்புகள் இப்படிப்பட்டவைதான். மத்திய அரசுடன் நெருக்கமாக இருக்கும் ஊடகப் பிரிவினர்களுக்குக் கூட இவை எதுவும் தெரியாமல் மறைக்கப்பட்டன.

ஒரு பிரபல பத்திரிகை ஆசிரியர் அளித்த பேட்டியில், ‘தினசரி பத்திரிகைக்கான அன்றாட முதல்பக்க தலைப்புகளை இப்பொழுதெல்லாம் பத்திரிகை அலுவலகம் தேர்வு செய்வதில்லை... மாறாக பிரதமர் அலுவலகமே தேர்வு செய்கிறது!’ என்று சொல்லியிருப்பது கவனிக்கத்தக்கது.
இந்தளவுக்கு திட்டமிட்டு, ஊடகத்தின் பார்வையைத் தன்பக்கம் ஈர்த்து, அதற்கேற்ப அறிவிப்புகளை பிரதமர் அலுவலக ‘இரும்புத் திரை’யை விலக்கி வெளியிடப்படுகிறது.

சரி... இதன் பின்னணியில் இருக்கும் அதிகாரிகள் யார்..?

ஒட்டுெமாத்த பிரதமர் அலுவலகத்தையும் கட்டுக்குள் வைத்திருப்பவர் பிரதமரின் முதன்மை செயலாளர் டாக்டர் பி.கே.மிஸ்ரா. இவருக்கு அடுத்த ரேங்கில் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அதற்கடுத்து பிரதமரின் முதன்மை ஆலோசகர் பி.கே.சின்ஹா, பிரதமரின் செயலாளர் பாஸ்கர் குல்பி... இவர்களே முக்கியமான ‘தலைகள்’. இவர்கள்தான், நாட்டின் ஒட்டுமொத்த ஆட்சி நிர்வாகத்தின் மற்றும் ரகசிய முடிவுகளின் காய்களை நகர்த்தும் ஜாம்பவான்கள்.

இவர்களுக்குக் கீழ் பிரதமரின் கூடுதல் செயலாளர்கள் 2 பேர், பிரதமரின் இணைச் செயலாளர்கள் 5 பேர், பிரதமரின் தனிச் செயலாளர்கள் 2 பேர், இயக்குனர்கள் 4 பேர், துணைச் செயலாளர்கள் 8 பேர், துறை செயலாளர்கள் 7 பேர், செயலாளர் அந்தஸ்தில் மேலும் 7 பேர் மற்றும் அவர்களுக்குக் கீழ் பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் உள்ளனர்.

கடந்த ஆகஸ்டில் பிரதமர் மோடியின் 2வது ஆட்சிக்காலத்திலும் முதன்மை செயலராகப் பணியாற்றி வந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி நிர்பேந்திரா மிஸ்ரா (1967ம் ஆண்டு உத்தரப்பிரதேச ‘கேடர்’ ஐஏஎஸ் அதிகாரி), தன்னை பணியில் இருந்து விடுவிக்குமாறு தனது விருப்பத்தை தெரிவித்தார்.
அவரை, மேலும் 2 வாரம் பணியில் தொடர பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். அதன்பின், நிர்பேந்திரா மிஸ்ரா பணியிலிருந்து ஆகஸ்ட் 30ல் விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக கூடுதல் முதன்மை செயலாளராக இருந்த டாக்டர் பி.கே.மிஸ்ரா (1972ம் ஆண்டு குஜராத் ‘கேடர்’ ஐஏஎஸ் அதிகாரி) பிரதமரின் முதன்மை செயலராக நியமிக்கப்பட்டார்.

இதன் தொடர்ச்சியாக கடந்த சில வாரங்களுக்கு முன், பிரதமரின் முதன்மை ஆலோசகராக பி.கே.சின்ஹா (1977ம் ஆண்டு உத்தரப்பிரதேச ‘கேடர்’ ஐஏஎஸ் அதிகாரி) நியமிக்கப்பட்டார். இவர், பிரதமர் அலுவலக சிறப்பு பணி அதிகாரியாகப் பணியாற்றி உள்ளார்.புதியதாக நியமிக்கப்பட்ட 2 மூத்த அதிகாரிகள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகிய 3 மூத்த அதிகாரிகளுக்கும், அவர்களுக்கான பணி விவரங்களை கடந்த செப்டம்பர் 13ம் ேததி பிரதமர் அலுவலகம் வெளியிட்டது.

அதன்படி, பிரதமரின் முதன்மைச் செயலாளர் பி.கே மிஸ்ராவுக்கு கொள்கைகளில் ஏற்படும் சிக்கல்; அமைச்சரவையின் நியமனக் குழு விவகாரம்; அனைத்து நியமன வேலைகள், செயலக அலுவலகத்தின் பணிகள், அமைச்சரவைக் கூட்டத்திற்கு தேவையான விவரங்கள்; ஊழல் எதிர்ப்பு பிரிவின் நடவடிக்கைகள் போன்றவற்றை கண்காணிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு, தேசிய பாதுகாப்புப் பணிகள், வெளியுறவுத்துறை அமைச்சகம், வெளிநாட்டு இந்திய விவகாரங்கள், பாதுகாப்பு, விண்வெளி, அணு ஆற்றல், நாட்டின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பணிகள், தேசிய பாதுகாப்பு செயலகம், தேசிய ரசாயன ஆயுதங்கள் துறை, நாகாலாந்து தேசிய சோஷலிச அமைப்புடனான பேச்சு வார்த்தைகள் ஆகியவற்றை கண்காணிக்கும் பணி ஒதுக்கப்பட்டது.

பிரதமரின் முதன்மை ஆலோசகர் பி.கே.சின்ஹாவுக்கு அனைத்து அமைச்சகம் மற்றும் துறைகளின் விவகாரங்களை (பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் தனிச்செயலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் அல்லாத) கண்காணிக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

ரைட். இந்த மூன்று அதிகாரிகளின் தனிப்பட்ட பின்னணி என்ன..?  

* பி.கே.மிஸ்ரா: குஜராத் ‘கேடர்’. வேளாண்மை, பேரிடர் நிர்வாகம், மின்சாரத்துறை, அடிப்படைக் கட்டமைப்பு, நிதி, ஒழுங்குமுறை விஷயங்கள் தொடர்பான திட்டங்களின் நிர்வாக அனுபவம் கொண்டவர்.

மேலும் ஆராய்ச்சி, வெளியீடுகள், கொள்கை உருவாக்கம், திட்டமிடல் மற்றும் திட்ட நிர்வாகம், பிரதமரின் கூடுதல் முதன்மைச் செயலாளர், மத்திய அரசின் வேளாண் மற்றும் கூட்டுறவுத்துறை செயலாளர், மாநில மின்சாரத்துறை ஒழுங்குமுறை ஆணையத்தலைவர், பேரிடர் நிர்வாகத்துறை போன்ற முக்கியப் பொறுப்புகளைக் கையாண்ட அனுபவம் இவருக்கு உண்டு.

வேளாண்மை மற்றும் கூட்டுறவுத்துறை செயலாளராக இருந்தபோது, தேசிய வேளாண் மேம்பாட்டுத்திட்டம், தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம் போன்ற தேசிய முன்முயற்சி புதுமைத் திட்டங்களைச் செயல்படுத்தி இருக்கிறார்.

2014 - 2019ல் பிரதமரின் கூடுதல் முதன்மைச் செயலாளராக இருந்தபோது, மனிதவள நிர்வாகத்தில் - குறிப்பாக உயர்நிலைப் பதவிகளுக்கான நியமனங்களில், புதுமையான, வெளிப்படைத்தன்மையான மாற்றங்களைக் கொண்டு வந்தார்.

பிரிட்டனில் உள்ள வளர்ச்சி ஆய்வுகளுக்கான கல்விக் கழகத்தில் 4 ஆண்டுகளுக்குமேல் ஆராய்ச்சி மற்றும் கல்விப்பணி, ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் உலக வங்கித் திட்டங்கள் செயல்படுத்துதல், செமி ஆரிட் ட்ராபிக்ஸ் தொடர்பான சர்வதேச பயிர் ஆராய்ச்சி, கல்விக் கழகத்தின் நிர்வாக வாரிய உறுப்பினர், சர்வதேச கருத்தரங்குகள் பலவற்றில் நிபுணராக பங்கேற்பு உள்ளிட்ட சர்வதேச அனுபவங்களைக் கொண்டவர். பேரிடர் நிர்வாகத்தில், சர்வதேச ரீதியில் மிகவும் கவுரவத்திற்குரிய ஐ.நா.வின் ‘சசகாவா’ விருதை அண்மையில் பெற்றிருக்கிறார்.  

* அஜித் தோவல்: ஆக்ரா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அஜித் தோவல், 1968ம் ஆண்டின் கேரள கேடர் ஐபிஎஸ் அதிகாரி. இந்திய உளவுத்துறை (ஐபி), வெளிநாட்டு உளவுப் பிரிவில் (‘ரா’) பணியாற்றிய இவர், பஞ்சாப் மற்றும் மிசோரம் மாநில தீவிரவாதிகளுக்கு எதிராக மேற்கொண்ட முடிவுகளால் மிசோரம் தேசிய முன்னணி இயக்கத்தைக் கூண்டோடு அழித்தவர். சீனப் பகுதிக்குள் இயங்கிய மிசோ தேசிய ராணுவத்தில் ரகசியமாகச் சேர்ந்து, இந்திய ராணுவத்துக்கு தகவல்களை அனுப்பி வந்தவர்.

அதிநுட்பம் வாய்ந்த அஜித் தோவல், 1999ல் நடந்த கந்தகார் விமானக் கடத்தல் சம்பவத்தில் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியவர். ஒருகட்டத்தில் பாகிஸ்தானில் `ரா’ உளவாளியாக 7 ஆண்டுகள் பணியாற்றி `இந்தியாவின் ஜேம்ஸ்பாண்ட்’ என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்.

பாகிஸ்தானில் உளவுப் பணியை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய தோவலுக்கு, காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் கொடுக்கப்பட்டது.
அதிலெல்லாம் பல சாதனைகளை செய்த தோவலுக்கு, தேசத்துக்கு ஆற்றிய பல சிறப்பான சேவைக்கான `கீர்த்தி சக்ரா’ விருது மற்றும் போலீஸ் விருது வழங்கப்பட்டது.

2014 மே மாதம் மோடி பிரதமராகப் பதவியேற்ற சில தினங்களிலேயே, தோவல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அது, இன்று வரை தொடர்கிறது. 2016ல் உரி என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் எதிர்வினையாக `சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ பதிலடி தொடங்கி இன்று, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் அதன்பின் அங்குள்ள மக்களோடு சேர்ந்து தெருவோரக் கடைகளில் ரொட்டி சாப்பிட்டது வரை, இவரது பங்கு அலாதி.

அதேநேரத்தில், பணி வரம்பை மீறி சிபிஐ உட்பட மத்திய அரசின் பல துறைகளில் தோவல் மூக்கை நுழைப்பதாக குற்றச்சாட்டும் உண்டு. அஜித் தோவலின் மகன் சவுரியா தோவல் நடத்தும் `இந்தியா ஃபவுண்டேஷன்’ நிறுவனம் மீதான சர்ச்சைகளும் தோவலின் மறுபக்கத்தில் உள்ளன. ஆனாலும், இன்றும் பிரதமர் மோடியின் செல்லப்பிள்ளையாக அதிகார மையத்தின் கழுகாக வலம் வருகிறார்.

* பி.கே.சின்ஹா: பிரதமரின் முதன்மை ஆலோசகரான இவர், 2015 ஜூன் முதல் 2019 ஆகஸ்ட் 30 வரை அமைச்சரவை செயலாளராக பணியாற்றியவர். 1977ம் ஆண்டின் உத்தரப்பிரதேச ஐஏஎஸ் கேடரான இவர், மின்சாரம் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகங்களில் செயலாளர்; பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் சிறப்பு செயலாளராக பணிபுரிந்துள்ளார். எரிசக்தி, அடிப்படைக் கட்டமைப்பு, நிதி ஆகிய துறைகளில் தனித்திறன் வாய்ந்தவர்.

தில்லிப் பல்கலைக்கழகத்தின் செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியிலிருந்து பொருளாதாரப் பட்டம் பெற்றவர்.பணியில் இருந்த காலத்தில் பொது நிர்வாகத்தில் முதுநிலைப் பட்டயமும், சமூக அறிவியலில் எம்.பில் பட்டமும் பெற்றுள்ளார்.ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த காலத்தில் உத்தரப்பிரதேச மாநில அரசிலும், மத்திய அரசிலும் பல பொறுப்புகளில் பணியாற்றி உள்ளார்.

மாநில அரசு நிலையில், ஜான்பூர், ஆக்ரா ஆகியவற்றின் மாவட்ட ஆட்சித்தலைவர்; வாரணாசியின் ஆணையர், செயலாளர் (திட்டமிடல்), முதன்மைச் செயலாளர் (நீர்ப்பாசனம்) போன்ற பல்வேறு பதவிகளில் பணியாற்றி உள்ளார்.             

செ.அமிர்தலிங்கம்