எழுத்தார்வம் என்னை நடக்க வைக்கிறது



நம்மால் முடியும்

“வீழினும் எழுவோம் விடாமுயற்சியோடு” “என் தசைகள்தான் சிதைகிறதே தவிர சிந்தனைகள் அல்ல...” எனத் தன்னுடைய டிரேட் மார்க் சிரிப்போடு பேசத் தொடங்கிய பரமகுரு, தசைச்சிதைவு (Muscular dystrophy) நோயால் பாதிக்கப்பட்ட வீல்சேர் யூசர். தன் பெயருக்கு முன்னால் பாமரன் என்கிற புனைப்பெயரைச் சேர்த்து ‘பாமரன் பரமகுரு’வாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருப்பவர்.

‘சிதையாத சிந்தனைகள்’ எனும் தலைப்பில் பாகம் ஒன்று, பாகம் இரண்டு என இரண்டு புத்தகங்களை கவிஞர் பிறைசூடன் மூலமாக கடந்த ஆண்டு வெளியிட்டிருக்கும் பரமகுரு, தொடர்ந்து புத்தகங்களை எழுதி வெளியிடும் முயற்சியில் இருக்கிறார். அதேநேரம் ‘எதிர்நீச்சல்’ என்னும் அமைப்பை தொடங்கி தசைச்சிதைவு நோய் குறித்த விழிப்புணர்வையும் வழங்கி வருகிறார்.

‘‘சிதம்பரம் அருகே பெரியகுமட்டி என்னும் கிராமம்தான் சொந்த ஊர். நாகப்பன் - தமிழ்ச்செல்வி தம்பதியருக்கு நான் இரண்டாவது மகன். பள்ளிப் படிப்பை என் கிராமத்தில் முடித்துவிட்டு சிதம்பரம் அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்ஸி. விலங்கியல் படித்தேன். தொடர்ந்து யு.பி.எஸ்.ஸி. தேர்வு எழுதும் முயற்சியிலும் இருந்தேன்.

21 வயது வரை நான் நார்மல். கல்லூரி முடித்து இரண்டு ஆண்டுகள் சிஸ்டம் ஆபரேட்டராக ஒரு நிறுவனத்தில் பணியில் இருந்தபோது, என் நடையில் லேசான தடுமாற்றம் ஏற்பட்டது. சில நேரம் கீழே விழும் நிலையும் ஏற்படும். கால்களும் பிடித்துக்கொண்டு இரண்டு மூன்று நாட்கள் நடக்க முடியாத நிலை ஏற்படும்.

மருத்துவர்களைச் சந்தித்தும் பலனில்லை. எனக்கு என்ன நேர்கிறது என்பதை சரியாகச் சொல்ல முடியாத நிலையிலேயே அப்போதைய மருத்துவம் இருந்தது. மாடிப்படிகளிலும், பேருந்தின் படிகளிலும் ஏற சிரமப்பட்டேன். என் உடல் என்னை கொஞ்சம் கொஞ்சமாக இயலாதவனாய் மாற்றிக் கொண்டிருந்தது.

எனது நடையிலும் மாற்றம். என்னை அறியாமலேயே குதிகால்களைத் தூக்கி நடக்கத் தொடங்கினேன். பல நேரங்களில் சுவற்றைப் பிடித்தும் நடக்கும்படி நேர்ந்தது. ஒரு கட்டத்தில் தரையில் உட்கார்ந்தால் எழ முடியவில்லை. பஸ்ஸில் ஏற முடியாமல் சைக்கிளில் வரத் தொடங்கினேன். சைக்கிளில் இருந்தும் தடுமாறி அடிக்கடி கீழே விழுந்தேன்.

இதற்கு மேல் வேலை வேண்டாம் என வேலையை விட முடிவு செய்தேன். அப்போது என் வயது 22. என் பிரச்னை மோசமாகிக் கொண்டே போக... ‘என்னைக் கொன்னுடுங்க...’ என பெற்றோரிடம் கதறினேன்....’’ மன வலியை எச்சரிக்கையுடன் குரலிலோ முகத்திலோ வெளிப்படாதபடி சொல்கிறார் பரமகுரு. ‘‘மருத்துவர்கள் எனக்கு ‘மயோபதி நோய்’ என்று எழுதிக் கொடுத்தார்கள். சுருக்கமாக ‘மெல்லக் கொல்லும் விஷம்’. அதாவது எனக்கு வந்திருப்பது ‘மஸ்குலர் டிஸ்ட்ரோபி’ எனும் தசைச் சிதைவு நோய்.

இதற்கான மருத்துவ வழிமுறைகளைத் தேடினேன். அப்போது ஒரு நாளிதழில் என் நோய் தொடர்பாக விளம்பரம் ஒன்று வர, இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை நடக்க வைப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

வீல்சேரில் உட்காரும் நிலை வந்தால் இனி உயிரோடு இருக்கக்கூடாது என்ற மனோநிலையில்தான் அங்கு சென்றேன். அங்கு என்னைப்போல் பாதிக்கப்பட்டவர்கள் பலரைப் பார்க்க நேர்ந்தது. வெளி உலகம் தெரியத் தொடங்கியது. என் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். அங்கேயே இருந்து பிஸியோதெரபி சிகிச்சைகளை 4 மாதங்கள் தொடர்ந்து எடுத்தேன்.

இயல்பான மனித உடலில் பழைய செல்கள் அழிந்து புதிய செல்கள் உருவாகும். தசைச்சிதைவு நோய் பாதிக்கப்பட்ட எங்களுக்கு பழையது அழியும். ஆனால், புதிய செல்கள் உருவாகாது. அப்படியே உருவானாலும் மிகக் குறைந்த அளவே இருக்கும். இதனால் எங்கள் உடல் பலவீனமடைகிறது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக நடை தடுமாறி, இயங்க முடியாத நிலை ஏற்படுகிறது.

கால்கள் மட்டுமின்றி, கைகளும் செயலிழக்க, பொருட்களை எடுப்பது, தலை வாருவது, உடை உடுத்துவது, உணவை சாப்பிடுவது போன்ற செயல்களைச் செய்ய முடியாமல் போகிறது. தொடர்ந்து சுவாசப் பிரச்னைகளும் உண்டு. ஒரு கட்டத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் ஓர் அடிகூட நகர முடியாத நிலையும் ஏற்படும்.

இது ஒரு மரபுசார்ந்த பிரச்னை. 80 சதவிகிதம் உறவுக்குள் நடைபெறும்  திருமணத்தில் வருகிறது. ஏழு தலைமுறைக்கு முன்பு ஒருவருக்கு இருந்தாலும் இந்தத் தலைமுறையில் வர வாய்ப்புண்டு. கருவில் இருந்து எந்த வயதிலும் இது வெளிப்படலாம். ஆனாலும் முழுமையான காரணத்தை இதுவரை மருத்துவ உலகம் கண்டறியவில்லை.

மஸ்குலர் டிஸ்ட்ரோபியில் 13 பிரிவுகளும் அதில் சில உட்பிரிவுகளும் உண்டு. எனக்கு இருப்பது பி.எம்.டி. வகை. பல டாக்டர்களைச் சந்தித்த நிலையில், நாட்டு வைத்தியமும் எடுத்தேன். நோயின் தீவிரத்தை தடைப்படுத்த முடியுமே தவிர, தவிர்க்க முடியாது என்பதை அனுபவத்தில் புரிந்து கொண்டேன்.

வாக்கர் பிடித்து நடந்த நிலையில், இப்போது வீல் சேரில் இருக்கிறேன். நிறையவே என்னை பக்குவப்படுத்திக் கொண்டேன். எப்போதும் புத்துணர்வுடன் வாழப் பழகிக் கொண்டேன்...’’ என்கிற பாமரனின் டிரேட் மார்க் அடையாளம், புன்னகை தவழும் அவரின் முகம்தான். பளிச்சென்று சிரித்து நம்பிக்கையை விதைப்பதில் முதன்மையானவர்.

‘‘தசைச்சிதைவு நோய் என்றால் என்ன? இதன் தீவிரம் என்ன? இதற்கு மருந்து இருக்கா இல்லையா? இதைத் தடுக்கமுடியுமா? முறையான சிகிச்சைகள் இருக்கா? இவற்றை அறியவே எனக்கு பத்தாண்டுகள் எடுத்தது. நோய் குறித்த விழிப்புணர்வை வழங்க பாதிக்கப்பட்டவர்களை ஒருங்கிணைத்து, ‘எதிர்நீச்சல்’ என்கிற அமைப்பைத் தொடங்கினேன். அதில் விழிப்புணர்வு முயற்சிகளை முன்னெடுத்தேன்.

ஊர்ஊராக,கிராமம் கிராமமாக முகாம்களை நடத்தினோம். துண்டறிக்கைகளையும் விநியோகித்தோம். நோயின் அறிகுறிகளை விளக்கினோம். விழிப்புணர்வு விஷயங்களை முன்னெடுத்தோம். சென்னையில் பூங்கா, கடற்கரை போன்ற இடங்களிலும் விளக்கக் கூட்டங்களை நடத்தி, துண்டறிக்கைகள் விநியோகம் செய்தோம்.

இது ஒரு புறமிருக்க, கூடவே எனக்குள் இருந்த எழுத்தார்வம் என்னைத் தொடர்ந்து இயங்கத் தூண்டியது. தினசரிகளில் வரும் குறுக்கெழுத்துப் போட்டி, சின்னச் சின்ன துணுக்குகள், சிறுகதை, கவிதை, ஜோக்ஸ், வார்த்தை விளையாட்டு... என எதையும் விடாமல் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பத் தொடங்கினேன்.

சில படைப்புகள் தினசரி களிலும், வார இதழ்களிலும் பிரசுரமாகின. எனது எழுத்து கவனிக்கப்பட்டது. எனது விமர்சனங்கள் சிலவும் பத்திரிகைகளில் வெளியாகின. எனது எழுத்திற்கான சன்மானங்களும் அவ்வப்போது கிடைத்தன. நான் எதையோ ஒன்றை அழுத்தமாகச் சொல்வதால்தான், எனது படைப்பு வெளியாகி அங்கீகாரம் பெறுகிறது என்கிற எண்ணம், மேலும் என்னை எழுதத் தூண்டியது.

விரல்களால் பேனா பிடிக்க முடியாத நிலையில், கைபேசியில் வார்த்தைகளைக் கட்டமைத்து சின்னச் சின்ன கவிதைகளாக முகநூலில் பதிவேற்றினேன். முகநூலில் இருக்கும் கவிதைக் குழுமங்களிலும் என்னை இணைத்துக் கொண்டேன். என் தேடல், சமூகத்தின் மீதான என் அக்கறை, நடப்பு விஷயங்கள் என சின்னச் சின்ன வரிகளாக எழுதத் தொடங்கினேன்.

நான் எழுதியவற்றைத் தொகுத்து புத்தகமாக வெளியிடும்படி நண்பர்கள் கூறவே, புத்தகம் வெளியிடும் எண்ணமும் வந்தது. தசைதானே சிதைந்தது, சிந்தனைகள் அல்லவே என்பதால் நண்பர்கள் உதவியுடன், ‘சிதையாத சிந்தனைகள்’ என்ற தலைப்பில் என் எழுத்துக்களைச் சின்னச் சின்ன கவிதைகளாகப் புத்தகமாகத் தொகுத்து ‘கவிஞர் பிறைசூடன்’ தலைமையில் இரண்டு பாகமாக வெளியிட்டேன். இதில் ஈரோடு மகேஸ், கவிஞர் சினேகன் போன்றவர்களின் பங்களிப்பும் உண்டு.

புத்தக வெளியீட்டு விழாவில் மாற்றுத் திறனாளிகளை முக்கியமானவர்களாக வைத்து நிகழ்ச்சியினை நடத்தினேன். நிகழ்ச்சி சிறப்பாக நடக்க, மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான உபகரணங்களும் விழாவில் வழங்கப்பட்டது. நான் சார்ந்திருக்கும் எழுத்துத் துறைக்கு இணையம் மிகப் பெரும் வரம். இணையம் இல்லையெனில் என் வாழ்க்கை நான்கு சுவற்றுக்குள்ளேயே முடங்கி இருக்கும். மனநோய் கூட வந்திருக்கலாம்.

காட்சி ஊடகங்கள், எங்களைப் போன்றவர்களுக்கு திரைப் பாடல்கள் மற்றும் ஸ்டாண்ட்அப் காமெடிகளை எழுதும் வாய்ப்பு கொடுத்தால் அது எங்களுக்கான வாழ்வாதாரம் மட்டுமல்ல, எங்களைக் கூர்தீட்டும் வாய்ப்பாகவும் அமையும்...’’ என்று சொல்லும் பரமகுரு, தன் அடுத்த புத்தக வெளியீட்டுக்கான வேலைகளில் மும்முரமாக இருக்கிறார்.‘காற்றும் தன்னை அர்ப்பணிக்ககவனிக்கத்தக்க உருவம் பெற்றனபலூன் பொம்மைகள்’என்ற பாமரன் பரமகுருவின் வரிகள் நினைவில்வர விடை பெற்றோம்.                                           

மகேஸ்வரி

ஆ.வின்சென்ட் பால்