ஓத்த செருப்பு



தமிழ் சினிமா பெருமைப்பட்டுக்கொள்ள ஒரு படம் ‘ஒத்த செருப்பு - சைஸ் 7’.எளிய மனிதர்களின் பிரியங்களை அதிகாரமும், வக்கிரமும் எப்படி குதறிப் போடுகின்றன என்பதை வீரியமாக விதைத்ததற்காக பார்த்திபனுக்கு வணக்கங்கள்.முழுக்க முழுக்க பார்த்திபன் ராஜ்ஜியம்தான். சொல்லப் போனால் அதுதான் படத்தின் நம்பகத்தன்மைக்கான நங்கூரம்.

வழக்கமான பார்த்திபன் இல்லை இது.  அவரது மகனை கொடூரமான நோயின் தாக்கம் ஒவ்வொரு பக்கமாக செயல் இழக்க வைக்கிறது. அருகிருந்து அழகு பார்த்த மனைவியை கூட இருப்பவர்களே சிதைக்க… வாழ்க்கை திசை மாறுகிறது. குற்றவாளியாக திசை திரும்பியவனுக்கு விசாரணை நடக்கிறது. இன்னும் நாம் திரும்பிப் பார்க்காத இடம், மனிதர்கள் நிறைய இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறார் பார்த்திபன்.

தமிழ் சினிமாவில் மனிதர்களின் புற உலகமும், மகிழ்ச்சிக் கணங்களும்தான் மிகவும் சித்தரிக்கப்படுகின்றன. பாவப்பட்ட மனிதர்களின் வேதனைகள், இடர்கள், உறவுச் சிக்கல்களை அதிகம் எடுத்துக் கொள்வதேயில்லை. துக்கத்தின் வேர்களைச் சென்றடைகிற பார்த்திபனின் பயணத்திற்கு நல்வாழ்த்துகள்.

கொலை செய்ததற்கான வழக்கின் விசாரணையில் தொடங்குகிறது கதை. கைதாகி இருக்கும் பார்த்திபனை காவல் அதிகாரிகள் குழு விசாரிக்கத் தொடங்க, உண்மைகள் வெளிப்படுகின்றன. அவர் வாழ்க்கையின் இருண்ட பக்கங்களை ‘இதோ இதோ’ என திறந்து காட்டுகிறார்.

பொறுக்க முடியாத வறுமைக்கு நடுவிலும் காமெடியும் கலகலப்புமாகப் போகும் வாழ்க்கையில் பலர் குறுக்கிட வேறொரு இடத்திற்குப் போகிறது படம்.

பார்த்திபன் மனம் புரிபட, பிழிபட பேசுகிறார். வெறும் பார்வையாளனாகச் சென்ற நம்மை அவரைப் போன்ற கலைஞன் ஆக்குகிறார். நாமும் பங்கு பெறுவதால் இது நமக்கான சினிமாவாகிறது.

பல இடங்களில் மகனின் உடல் நலக்குறைவைச்சொல்லும்போது, மனைவியோடு இருந்த காதல் நாட்களைப் பகிரும்போது பார்த்திபனின் அப்பாவித்தனமும், ஆதங்கமும் அழகு. உடன் வெளியே கேட்கும் பறவையின் சத்தம், பூனையின் வருகை என அத்தனை பாத்திரத்திலும் ஜீவன் ததும்புகிறது.

சற்றே மனச்சரிவுக்கு ஆளானவர் போல் தோன்றிப் பேசுவதிலும் அத்தனை நுணுக்கம். அதிகாரம் வறியவர்களுக்கு கிடுக்கிப்பிடி போடுவதும், செல்வந்தர் வழி செல்வதும் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகின்றன. அந்த உடல் சரியில்லாத மகனைப் பார்க்கவும், ஆறுதல்படுத்தவும் நாமும் தயாராகி விடுகிறோம்.

மனவருத்தத்திற்கு உள்ளாகும் மனைவியின் இன்னொரு பக்கம் அறியாமல் போவது வருத்தமே! ஒரே அறையில் பயணிக்க நேர்ந்தாலும், ராம்ஜியின் கேமிரா பக்கத்து வீட்டில் பார்ப்பது போன்ற நெருக்க உணர்வைத் தருகிறது. பின்னணி இசையை சி.சத்யா கவனித்து முன்னிலைப்படுத்தியிருக்கிறார். ரசூல் பூக்குட்டியின் ஒலியெல்லாம் உயர்ந்த தரம்.எளிய இதயங்களின் மேல் பேரன்பை விதைக்கிறது.

குங்குமம் விமர்சனக் குழு