கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்-30



கலையில் நன்மதிப்பும் ஞானமும் அருளும் கோயில்!

படைப்புத் தொழில் ஒன்றும் அவ்வளவு சுலபம் இல்லை என்ற பிரம்மனின் பீடிகையைக் கேட்ட காவிரி குழம்பித்தான் போனாள்.
தான், கங்கையை விட அதிக மகத்துவம் பெறுவதற்கான வழியை உபதேசிக்குமாறு கேட்டதற்கும் பிரம்மன் சொல்வதற்கும் சம்பந்தமே இல்லாததால் காவிரி குழம்பியதில் தவறொன்றும் இல்லை.

இருப்பினும் சிருஷ்டிகர்த்தாவான பிரம்மனின் அறிவுரையின் இடையில், ‘‘இதற்கும் நான் கேட்டதற்கும் என்ன சம்பந்தம்?’’ என்று கேட்பது காவிரிக்கு நாகரீகமாகப் படவில்லை. ஆகவே அவள் பொறுமையாக பிரம்மன் சொல்வதைக் கேட்க ஆரம்பித்தாள்.

காவிரியின் இந்த சங்கடத்தை அவள் முகத்தைக் கண்டே பிரம்மன் உணர்ந்திருக்க முடியும். ஆனால், அவர் தன் வாழ்வில் நடந்த உன்னதமான ஒரு சம்பவத்தை விளக்கும் ஆர்வத்தில் தன்னை மறந்திருந்தார். அது அவரது குரலில் அப்பட்டமாகத்தெரிந்தது. அவர் உடல் மட்டும்தான் அங்கிருந்தது. உள்ளம் சம்பவம் நடந்த பசுமையான நாட்களுக்குச் சென்றுவிட்டது.

‘‘ஆம் காவிரி! படைப்புத் தொழில் அவ்வளவு எளிதல்ல. நீங்கள் அனைவரும் இரவில் உறங்குவீர்கள் அல்லவா? அதே போல் எனக்கும் இரவு உண்டு! உறக்கமும் உண்டு! என் இரவுகளில் இந்த உலகம் அழிந்து விடும். நானும் மாலவனின் உந்தித் தாமரையில் ஒடுங்கி விடுவேன். என் இரவு முடிந்ததும் மீண்டும் எழுந்து உலகைப் படைப்பேன்.

அப்படி ஓர் இரவில் நடந்த சம்பவம்தான் இது! எப்படியும் கண்விழித்தபின் மீண்டும் உலகைப் படைக்கத்தானே வேண்டும்? அப்படி படைக்கும் போது அதிக சிரமம் இல்லாமல் இருக்க வேதங்களை ஒரு குடத்தில் இட்டு பாதுகாக்க நினைத்தேன். வேதங்களுக்கு அழிவே இல்லை என்பதை அப்போது நான் உணரவில்லை.

உலகைப் படைக்க பெரும் உதவி செய்யும் வேதங்களைக் காக்கும் குடத்தை செய்ய பூமிக்கு சென்றேன். கண்ணில் மண் பட்ட இடங்களில் எல்லாம் உட்கார்ந்து, குயவனைப்போல சக்கரத்தைச் சுழற்றி பானை செய்து பார்த்தேன். எந்த பானைக்கும் வேதத்தைத் தாங்கும் அளவு சக்தி
யில்லை. உலகையே படைக்கும் நான் வேத மூட்டையை முதுகில் சுமந்தபடி ஒரு பித்தனைப் போல சுற்றித் திரிந்தேன்.

அப்போது திடீரென்று கண்ணையும் கருத்தையும் கவரும் ஓர் அற்புத தலம் கண்ணில் பட்டது. அங்கே என் கால் பட்டவுடன் ‘பிரம்மனே! இந்த தலத்து மண்ணில் பானை செய். நீ நினைத்தது நடக்கும்!’ என்ற மாலவனின் குரல் மட்டும் கேட்டது.நானும் ஏதோ மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவன் போல பானையைச் செய்தேன். அது நான்கு வேதங்களையும் நன்கு தாங்கும் வலிமையோடு இருந்தது. உடன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தேன். அப்போது என் மூளையில் ஒரு பொறி தட்டியது.

எல்லா நதிக்கரைகளிலும் உள்ள மண்ணையும் காஷ்யப முனிவர் மந்திரித்து வைத்துள்ளதாக வேதம் சொல்கிறது. ‘ம்ருத்திகே பிரம்ம தத்தாசி காஷ்யபேனாபி மந்திரிதா...’ காஷ்யபரால் மந்திரிக்கப் பட்ட மணலுக்கு இல்லாத மகிமை இந்த ஊர் மணலுக்கு எப்படி வந்தது? யோசிக்க ஆரம்பித்தேன். சுற்றும் முற்றும் பார்த்து ஏதாவது அதிசயம் அகப்படுகிறதா என்று நோக்கினேன். அப்போதுதான் என் கண்ணில் அந்த கோபுரம் பட்டது.

வானை முட்ட வளர்ந்து நிற்கும் அது, என்னப்பன் கோவிந்தன் ஓங்கி உலகளந்த லீலையை நினைவுபடுத்தியது. உடன் கைகுவித்து அதை வணங்கினேன். கோயிலுக்குள்தான் விஷயம் இருக்கிறது என்று எனக்குத் தோன்றியது. எனவே, உள்ளே சென்று பார்த்தேன்...’’பிரம்மன் எதைக் கண்டார் என்று தெரியாது. தான் கண்டதை வர்ணிக்க முடியாமல் ஆனந்த வெள்ளத்தில் தத்தளித்தார்.

காவிரிக்கு இருப்பு கொள்ளவில்லை. ‘‘கோயிலுக்குள்ளே யாரைக் கண்டீர்கள் நான் முகனே..?’’ என்று கேட்டே விட்டாள்.பிரம்மன் மெல்ல சுதாரித்தார். ‘‘வேதத்தின் சாரத்தை கோயிலில் கண்டேன் காவிரி! ‘பதிம் விஷ்வஸ்ய’ (அனைத்திற்கும் தலைவன்) என்று வேதங்கள் புகழும் தூயவனை, மாயவனைக் கண்டேன்! மாலவனின் அனேக கல்யாண குணங்களை வர்ணிக்க வந்த வேதம், அவனை உள்ளபடி விளக்க முடியாமல் ‘யதோ வாசோ நிவர்தந்தே’ (அவன் வாக்கிற்கும் உணர்ச்சிக்கும் எட்டாதவன்) என்று திணறுகிறது.  

இப்படி வேதத்தையே திணற வைத்த, அந்த வேத விழுப் பொருளைக் கண்டேன். அவனது மகிமையாலேதான் அவன் வாழும் திவ்ய தேசத்தின் மண், வேதத்தை தாங்கும் சக்தி பெற்றது என்று உணர்ந்தேன். வேதங்கள் நான்கையும் சேர்த்துத் தாங்கியதால், அந்தத் திருத்தலம் ‘திருச்சேறை’ என்று அழைக்கப்பட்டது. அதன் தலைவன் சாரநாதன் என்று அழைக்கப்பட்டான்.

இப்படி, என்னுடைய பெருங் கவலையைப் போக்கிய அந்த கண்கண்ட தெய்வம், உன் உள்ளக் குமுறலையும் போக்குவார்! அடுத்த முறை நான் உன்னைக் காணும்போது கங்கையை விட சிறந்தவளாகக் காண்பேன். அது நிச்சயம். உடன் திருச்சேறை எம்பெருமானை நாடு. தவம் புரி. அவன் உன் துயரங்களைத் துடைப்பான்!’’ பிரம்மன் தனது பெரிய உரையை முடித்துக் கொண்டார்.

இதை கேட்டுக் கொண்டிருந்த காவிரியின் கண்களில் கண்ணீர் ஆறு போல ஓடியது. ‘‘என்னே மாலவன் மகிமை...’’ அவளது இதழ்கள் அவளையும் அறியாமல் சொன்னது. தனக்கு நல்லதொரு வழி காட்டிய நான்முகனை விழுந்து வணங்கி விடை பெற்றபின், திருச்சேறைக்கு விரைந்தாள் காவிரி.
காவிரி தமிழ்த் திருநாட்டில் உள்ள திருச்சேறைக்கு வந்ததை, தமிழகமே கண்டு அதிசயித்தது.

வராதவர் வந்தால் ஆச்சரியப் படுவது இயல்புதானே? ஆனால், காவிரியின் உருவில்தான் ஏகத்துக்கும் மாற்றம். பட்டு வஸ்திரத்தை விடுத்து மரவுறி தரித்திருந்தாள். பெண்கள் விரும்பி அணியும் ஆபரணங்களையும், அலங்காரங்களையும் துறந்திருந்தாள். ஆனால், நாவில் மட்டும் புதிதாக ஓர் ஆபரணம் சூடியிருந்தாள். ஆம்! அவளது நா, நாராயண நாமத்தை அணியாகக் கொண்டு சதா ஜபித்தபடி இருந்தது.

காலம் காத்திருக்குமா? அது ஓடிக்கொண்டே இருந்தது. ஆனால், காவிரியின் விடாமுயற்சி ஓயவில்லை. பத்மாசனமிட்டு அரமர்ந்திருந்த அவள், இம்மி அளவும் நகராமல் முனிவரைப் போல தவம் செய்து வந்தாள். ‘‘அம்மா! அம்மா...’’  மழலைக் குரல் கேட்டு கண்விழித்த காவிரிக்கு, அதிசயம் காத்திருந்தது.

காவிரியின் மடியில் ஒரு பிஞ்சுக் குழந்தை கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தது. அதன் மோகனப் புன்னகை காவிரியை என்னவோ செய்தது. அதை அள்ளி அணைத்தாள். உச்சி முகர்ந்து கொஞ்சி மகிழ்ந்தாள். அப்போது எதேச்சையாக அதன் கால் சிலம்பொலியை அவள் கேட்க நேர்ந்தது. அது ‘ஜல் ஜல்’ என்று சப்திக்காமல் ‘நாராயண பரம் பிரம்ம தத்வம் நாராயண பர:’ (நாரணனே பரம் பொருள்) என்று வேத கானம் செய்தது!
ஆச்சரியத்தில் விக்கித்துப் போனாள் காவிரி!

அந்த சமயம் பார்த்து அந்தக் குழந்தை கொட்டாவி விட பெரிதாக வாய் திறந்தது. அந்த சின்னஞ்சிறு வாயில் அண்ட சராசரத்தையும் காவிரி கண்டாள்!போதாத குறைக்கு அந்தக் குழந்தையின் மார்பில் ஒரு பெண்ணின் முகம் தெரிந்தது. அவளது முகத்தில் கருணை கரை புரண்டோடியது. அதனுடைய கண்களோ சூரியனைக் கண்டு மலர்ந்த தாமரையைப் போல இருந்தது.

இவை அனைத்தையும் ஒன்றுவிடாமல் கண்டு மகிழ்ந்த காவிரிக்கு, வந்திருப்பது அந்த நாரணனே என்று உணர அதிக நேரம் பிடிக்கவில்லை!
‘‘பிரபோ தீனதயாளா! மறைகளும் முனிவர்களும் தங்களைத்  தேடித் திரிந்தபடி இருக்க, தாங்கள் இந்த பேதையை நாடி வந்த கருணையை எவ்வாறு போற்றுவேன்? தேடி வந்த செல்வத்தை இனி விடமாட்டேன். இனி எனக்கு இந்த சரணங்களே புகல்...’’ காவிரியிடமிருந்து கவிதை ஆறாகப் பெருகியது.
அதிலிருந்த பக்தியில் மயங்கிய மாலவன், அவள் கையிலிருந்து ஒரே துள்ளலாகத் துள்ளி விடுபட்டார்.

சங்கு சக்கர கதாதாரியாக, தேவி, பூ தேவி, நீலாதேவி, சார நாயகி, மகாலட்சுமி சமேதராக, சேவை சாதித்தார்!அவரது அற்புதக் கோலத்தைக் கண்ட காவிரி, உள்ளம் பூரித்துப்போயிருக்கும் தருணம்... கோவிந்தன் வாய் மலர்ந்தார். ‘‘ஏழு நதிகளுள், நானே விரும்பி உன்னை என் தாயாக வரித்தேன்! இந்த ஒரு பெருமையே போதும், நீ கங்கையை விட ஆயிரம் மடங்கு சிறந்தவள் என்று நிரூபிக்க! அதுமட்டுமல்ல காவிரி...

இந்த உலகைப்படைத்து, காத்து, அருளி, மறைத்து, அழிக்கும் எனது சக்திகளோடு என்னை தரிசனம் செய்தது நீ ஒருத்தியே! அதற்குக் காரணம் உன்னுடைய அசாத்திய பக்தி.உனக்காக காட்சி தந்த நான், இனி காலம்தோறும் என்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டியதெல்லாம் தரும் கற்பக விருட்சமாக கோயில் கொள்ளப் போகிறேன்! மகிழ்ச்சிதானே..?’’காவிரி வேரற்ற மரம் போல கேசவன் பாதங்களில் சரிந்தாள்.‘‘நம்ம காவிரியை எப்படி கங்கையை விட உயர்த்திட்டார் பார்த்தியா!’’ நெகிழ்ந்தபடி சொன்ன நாகராஜன், கண்களை மூடி அந்தப் பெருமானை நினைத்து ‘‘சாரநாதா...’’ என்று பெருமூச்சு விட்டார்.

நமது தமிழ்த் திருநாட்டை செழிக்கச் செய்யும் காவிரிக்கு இவ்வளவு மகத்துவம் இருக்கும் என்பதை நினைத்துக்கூடப் பார்க்காத கண்ணன் ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தான். ‘‘கண்ணா! இப்ப இந்த உலகமே போட்டிமயமா போயிருச்சு. உண்மையான திறமை இருக்கும் பலபேர் வாய்ப்பும், ஆதரவும் இல்லாம வருத்தப்படறாங்க. அவங்க அத்தனை பேருக்கும் இந்த சாரநாதன்தான் ஒரே கதி!

காவிரிக்கு தகுதி இருந்தும் உரிய மரியாதை மறுக்கப்பட்டப்ப அந்த திருச்சேறை சார நாத பெருமாள்தான் அவளுக்கு உரிய உயரிய அந்தஸ்தைக் கொடுத்தார்! ஆக, எல்லாத் துறையிலயும் வெற்றியையும், உயர்ந்த பதவியையும் பெறணும்னா அவர் பாதத்துல சரணாகதி அடைஞ்சா போதும்! சரணாகதி அடைந்தவங்களுக்குள்ள இருக்கிற கலைத் திறமை மேலும் மேலும் வளர அருள் புரிவார்... பிரம்மாவுக்கு அருள் செய்தா மாதிரி...

காவிரிக்கு அருளினா மாதிரி குழந்தை வரமும் தருவார்!’’ ஆனந்தவல்லி தன் பங்குக்கு திருச்சேறை சார நாத பெருமானின் புகழைப் பாடினாள். ‘‘அதுமட்டுமில்ல கண்ணா... நரச பூபதிக்காக சுவாமி செய்த மாயாஜாலம் இருக்கே... அதையும் சொல்றேன் கேளு!’’ என்றபடி நாகராஜன் சொல்லத் தொடங்கினார்...

(கஷ்டங்கள் தீரும்)

ஜி.மகேஷ்

ஓவியம்: ஸ்யாம்