கதை திருட்டில் நடப்பது என்ன!



சினிமாவில் கதைத் திருட்டு என்பது வழக்கமான செய்தியாகி விட்டது. அதுவும் உச்ச நடிகர்கள் என்றால் பூதம் கிளம்பி வருவது நிச்சயம்.

‘கத்தி’, ‘96’, ‘போகன்’, ‘லிங்கா’, ‘மெட்ராஸ்’ ஆரம்பித்து இப்போது ‘காப்பான்’ வரைக்கும் கதைத்திருட்டு கோர்ட் படியேறி இருக்கிறது.
ஆரம்பத்தில் ஊரிலிருந்து சினிமா கனவுகளைச் சுமந்துகொண்டு வரும் இளைஞர்கள், வாய்ப்புகளைத் தேடி அலையும் உதவி இயக்குநர்கள் பலரிடம் சகட்டுமேனிக்கு கதையைப் பகிர்ந்து கொள்வதும், ஒன்லைனில் ஆரம்பித்து பேச்சு சுவாரஸ்யத்தில் முழுக்கதையையும் விலாவரியாக சொல்லி விடுவதெல்லாம் கொஞ்ச காலம் முன்பு வரை நாம் பார்க்க நடந்தது.

ஆனால், இதுவரை நடைபெற்ற வழக்குகளிலும் ஏதாவது முடிவோ, திருடப்பட்டதா… கதை உணமையில் யாருடையது என்பது போன்றவை தெளிவுபடுத்தப்படாமலே போயிருக்கிறது.
வெளியே சமரசம்  பேசி முடிக்கப்பட்டுள்ளன. சமாதானமாக தொகைகள் பரிமாறப்பட்டுள்ளன.யாரிடம் கேட்டாலும் கதைக்கு பஞ்சமே இல்லை, நம் மக்கள் தொகைக்கு மேல் கதைகள் இருக்கின்றன என்பாரும் உண்டு. ஆச்சரியமாக முறைப்படி, கொரியன் படங்களை லட்சங்களில் விலை கொடுத்து அனுமதி வாங்கி படமெடுக்கும் அரிதான இயக்குநர்களும் உண்டு.

எல்லாவற்றுக்கும் மேலான காரணமாக எழுத்தாளர்கள் என்ற படைப்பாளிகளை தமிழ் சினிமா மறந்து விட்டதோ  என எண்ணத் தோன்றுகிறது. அவர்களுக்குத் தரவேண்டிய மரியாதையையும், வேண்டிய ஊதியத்தையும் கொடுத்தால் இத்தகைய குற்றச்சாட்டுகள் கணிசமாகக் குறையும். பஞ்சு அருணாசலம், ‘அன்னக்கிளி’ செல்வராஜ், அனந்து, கலைஞானம் போன்ற மிகச்சிறந்த கதையாசிரியர்கள் இருந்த, இருக்கிற இடம் இங்கே குறைந்து விட்டது என்பதே உண்மை.

வெற்றி பெற்ற ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த், கதைத்திருட்டு சம்பந்தமாக சில விஷயங்களை நம்மோடு பகிர்ந்தார்: ‘‘இந்த மாதிரி குற்றச்சாட்டு சின்ன பட்ஜெட் படங்களுக்கு வருவதில்லை. பெரிய ஹீரோக்கள், பெரும் பட நிறுவனங்கள், பெரிய இயக்குநர்கள் என குறிவைத்தே இப்படிப்பட்ட புகார்கள் வருகின்றன.

ஒரு கதை, இன்னொரு படத்தோடு எப்படி ஒத்திருக்கிறது என்பதற்கு பல அடிப்படைகள் உள்ளன. தொடர்ந்து 5 சீன்கள் சேர்ந்தாற் போல் இருக்க வேண்டும் என நிறைய விதிகள் கொண்ட விஷயம் அது. இங்கே அதை எதையும் முறையாகச் செய்வதில்லை. அவர்கள் படம் வரும் நாளை எதிர் நோக்கி காத்திருக்கிறார்கள்.

வெளியாக 20 நாட்கள் இருக்கும்போது களத்தில் இறங்கி படத்திற்கு தடையுத்தரவு, படத்தை நிறுத்த முயற்சிக்கிறார்கள்.
குறிப்பிட்ட ஒருத்தர், ‘இந்த விஷயத்தை வெளியே செட்டில் செய்து கொள்ளலாம்...’ என நமக்கு மிகவும் வேண்டப்பட்டவர் போலவும், கரிசனத்தோடும் போனில் பேசுவார். ஆக இது எல்லாமே பணத்திற்காக.

‘காப்பான்’ படத்தின் 70 விநாடி டீசரில் 5 செகண்டில் ஒரு டயலாக் வருகிறது. ‘இயற்கையாக வருகிற நதியை யாரும் சொந்தம் கொண்டாட உரிமை இல்லை’ என. சுப்ரீம் கோர்ட்டில் சொன்ன தீர்ப்பின் ஒரு சிறு இடம் இது. இதை சூர்யா சொல்கிற மாதிரி காட்சிப்படுத்தியிருக்கிறேன்.
அவ்வளவுதான். இதை நீதிபதி பார்த்து விட்டு தள்ளுபடி செய்து விட்டார். நான் இந்தக் கதையை 2012ல் பட்டுக்கோட்டை பிரபாகரோடு எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறேன். 2017ல் வந்து கதையை சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

புகார் சொல்லியிருப்பவர் எழுதியிருப்பது நதிகள் இணைப்பு பற்றிய கதை. ‘காப்பான்’ பிரதமருக்கு அரணாக செயல்படும் பாதுகாப்புப்படை பற்றிய படம். இது மாதிரி போலி ஆட்களுக்கு மத்தியில் உண்மையான கதைத்திருட்டுக்கு போராடுபவர்கள், பாதிக்கப்படுபவர்கள் சோர்ந்து போகிறார்கள்...’’ என வருத்தப்படுகிறார் கே.வி.ஆனந்த்.

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர் வசந்தபாலன் தன் தரப்பை முன்வைக்கிறார்: ‘‘கதை என்பது ஒரு விதைதான். ‘தலை இல்லாமல் முண்டமாக ஒருத்தன் வந்தான். அவனை நான் பார்த்தேன்’ என ஒருவன் ஆரம்பித்தால் அதன் விதை தலையில்லாத முண்டம்தான். கதை வெளிப்படுவது எல்லாமே புனைவுதான்.

நாம் எல்லோரும் கதை சொல்லிகள்தான். இதில் யாரும் விதிவிலக்கில்லை. ஒரு விதையை யார் கண்டடைகிறார்களோ அவர்களே அதைத் தொடர்கிறார்கள். திருடர்கள் எல்லா இடத்திலும், எல்லாத்துறையிலும் இருக்கிறார்கள். கதைத்திருடர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்று தனித்துச் சொல்ல முடியாது.

எல்லா கதாசிரியர்களும் வாழ்விலிருந்தே எடுக்கிறார்கள். தெருவிலிருந்தோ, காண்பது, கேட்டது, அறிந்தது… எல்லாவற்றிலும் கதை எடுக்கலாம்.
‘லாரன்ஸ் ஆஃப் அரேபியா’ பார்த்துவிட்டு அதைப்போல் சிவாஜியை வைத்து எடுக்க வேண்டும் என பாரதிராஜா ஆசைப்பட்டார். ஆனால், அவரால் பெரியவரான சிவாஜியை வைத்து ‘முதல் மரியாதை’தான் எடுக்க முடிந்தது. இதில் ‘லாரன்ஸ் ஆஃப் அரேபியா’ எங்கே இருக்கு? ஆக… இதிலும் ‘லாரன்ஸ் ஆஃப் அரேபியா’தான் விதை. இதை இப்படித்தான் பார்க்க வேண்டும்.

ஆக, எதில் வேண்டுமானாலும் உங்க கதாநாயகனைத் தேடலாம். எல்லாம் உங்களைப் பொறுத்துத்தான் இருக்கு. பையனை அம்மணமாக்கி தண்டித்த தகப்பனை விருதுநகரில் என் பக்கத்துத் தெருவில் பார்த்தேன். அதை நான் கண்டடைந்து சொன்னேன். மக்கள் வரவேற்றார்கள்.
காப்பிரைட்டில் இருக்கிற விதிகள் படைப்பாளிகள் பலருக்குத் தெரியாது. அதெல்லாம் சட்டம் படித்தவர்களின் வேலை என உண்மையான படைப்பாளிகள் சும்மா இருந்து விடுகிறார்கள். அந்த இடத்தில் ஆரம்பிக்கிறது போலி படைப்பாளிகளின் உள்ளடி வேலை.

ஆக, எம்ஜிஆர் ஒரு பாட்டில் பாடியதுதான். திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...’’ புன்னகைக்கிறார் வசந்தபாலன்.
கரு.பழனியப்பன் சொல்வது சிந்தனைக்குரியதாக இருக்கிறது: ‘‘ஜெயகாந்தன் இதையே அலட்சியமாக ‘இல்லாதவன் இருக்கிறவன் கிட்டேயிருந்து எடுத்துக்கிறான்’ என்பார்.

இந்த மாதிரி கதைத்திருட்டுக்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. நான் சொல்ல ஆரம்பித்தால் நீங்கள் எழுதித் தீர்க்கவும் முடியாது... நான் பேசித் தீர்க்கவும் முடியாது. இங்கே காப்புரிமைச் சட்டம் பலவீனமாக இருக்கிறது. ஆகப்பழைய சட்டம். இப்போது புதிய வகையில் ஏமாற்றுவதற்கு தக்கவாறு புதுப்பிக்கப்படவில்லை. வெளிநாடுகளில் ஓவியர்கள், தங்கள் ஓவியங்களின் கடுமையான காப்புரிமைகளின் மூலம் செல்வச் செழிப்புடன் இருக்கிறார்கள். இங்கே அப்படியிருக்கிற ஓவியர்கள் யாராவது உண்டா!

சிந்தனையில் சேர்ந்து இருந்த இயக்குநர்கள் உண்டு. பாக்யராஜ், பாரதிராஜா, பாலச்சந்தர் போன்ற இயக்குநர்கள் அடுத்தடுத்த சிறு இடைவெளியில் ‘சின்ன வீடு’, ‘முதல் மரியாதை’, ‘சிந்து பைரவி’ தந்தார்கள். பெரும் வெற்றி பெற்ற படங்கள். ஆனால், அவை மனைவியைவிட்டு விலகியிருக்கிற கணவன்களை மையமாகக் கொண்ட கதைகள். இதெல்லாம் யதேச்சையாக நடந்தது. இதில் கதைத்திருட்டுக்கு இடமில்லை.

வேறுபட்ட சிறந்த படைப்பாளிகள், ஒரே மையத்தில், ஒரே சமயம் சிந்தித்தார்கள். மற்றபடி கதைத் திருட்டு என்பது காலம்காலமாக தொடர்கிறது. ஆனால், பெருந்தன்மையாக அதை சுட்டிக்காட்டுவதோடு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை...’’ என்கிறார் கரு. பழனியப்பன்.தொடரும் கதைத்திருட்டுக்கு தடை செய்ய எல்லோரும் கூடிச் சேர்ந்து யோசிக்கலாம். காப்புரிமை சட்டத்தை வலுவாக்கலாம். இதனால் உண்மையான படைப்பாளிகள் பலன் அடைகிற காலத்தை எதிர்பார்ப்போம்.

நா.கதிர்வேலன்