டூமாங் கோலி!



கொஞ்சம் மொறுமொறு... கொஞ்சம் துறுதுறு... சேர்ந்த கலவையே கஷ்மீரா பர்தேஸி. ‘சிவப்பு மஞ்சள் பச்சை’யில் ஜி.வி.பிரகாஷின் டூமாங்கோலியாக
ரங்கோலி ஆடிய லட்டு.

அக்‌ஷய் குமாரின் ‘மிஷன் மங்கல்’ இந்திப் படத்தில் வித்யாபாலனின் க்யூட் மகளாக ஸ்கோர்  செய்த இவர், மராத்தியிலிருந்து ஹைதராபாத் வழியாக கோலிவுட் வந்திருக்கிறார். தமிழில் தற்சமயம் கஷ்மீராவுக்கு தெரிந்த ஒரே வார்த்தை, ‘வணக்கம்!’ ‘‘அப்பா போலீஸ் இன்ஸ்பெக்டர். புனேல பிறந்து வளர்ந்தேன். ஒரே தம்பி. சின்ன வயசுல இருந்து ஃபேஷன் டிசைன்ல ஆர்வம். அதனாலயே மும்பைல இருக்கிற நிஃப்ட்ல டிசைனிங் கோர்ஸ் முடிச்சேன்.

ஃபைனல் படிக்கிறப்ப மாடலிங் செய்ய ஆரம்பிச்சேன். படிப்பிலும் கில்லி! சினிமால நடிக்கப் போறேன்னு சொன்னதும் வீட்ல ஷாக். அப்புறம் என்னை நிரூபிக்க ஒரு வருஷம் டைம் கொடுத்தாங்க. உடனே மும்பைக்கு போய் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டானேன். சினிமா சான்ஸ் தேடி வரல. வீட்ல விதிச்ச கெடு நெருங்கினதால ஊருக்கு திரும்ப முடிவு செய்தேன்.

அப்பதான் மராத்தில ‘ராம்பாட்’ பட வாய்ப்பு வந்தது. அப்புறம் தெலுங்குல ‘நர்த்தனசாலா’. டோலிவுட்ல என் முதல்படமே ஹிட். இந்தப் படத்தைப் பார்த்துட்டு ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ சான்ஸ் கிடைச்சது...’’ பயோடேட்டாவை சுருக்கமாக சொல்லும் கஷ்மீராவுக்கு தமிழில் தொடர்ந்து படங்கள் செய்ய ஆசையாம்.

‘‘சசி சார் பிரில்லியண்ட் டைரக்டர். தமிழ்ல என் முதல் படமே சித்தார்த், ஜி.வி.பிரகாஷ்னு நல்ல ஹீரோக்கள் காம்பினேஷன்ல அமைஞ்சது வரம். ஜி.வி. பிரகாஷ் ரொம்ப ஃப்ரெண்ட்லியா பழகினார். இப்ப தெலுங்கு ஓரளவு புரிஞ்சுக்கறேன். சீக்கிரத்துல தமிழ்லயும் சரளமா பேசுவேன்னு நம்பறேன்...’’ நம்பிக்கையுடன் சொல்லும் கஷ்மீராவுக்கு டிராவலிங் பிடிக்குமாம்.

‘‘பெயிண்டிங்கும். நேரம் கிடைக்கிறப்ப நிறைய வரைவேன். வீட்ல இருந்தா என் செல்ல நாய்க்குட்டி ஷிரோவை கொஞ்சுவேன். ட்ரை ஃபுரூட்ஸ்னா இஷ்டம்.  ஷூட்டிங் டைம்ல அதான் என் பிரேக்ஃபாஸ்ட்! ஹேண்ட்பேக்ல எப்பவும் ஒரு சின்ன டைரி இருக்கும். அப்பப்ப அதுல எழுதுவேன். என்னனு கேட்காதீங்க. பர்சனல்! நாவல்கள் படிக்க பிடிக்கும். வீட்ல பெரிய நாவல் கலெக்‌ஷன் இருக்கு!’’யார் கண்டது... நாளை கஷ்மீரா, நாவலும் எழுதலாம்!
                     

மை.பாரதிராஜா