பகவான்-48



மர்மம் தொடர்கிறது!

“மரணம் கொண்டாடப்பட வேண்டும். மரணத்தைக் கண்டு அச்சப்படக் கூடாது...” என்றார் ஓஷோ.அவர் காலமாகி முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டாலும், அவரது மரணம் இன்னும் சர்ச்சைகளை கிளப்பிக்கொண்டுதான் இருக்கிறது.

அவருடைய மரணம் இயற்கையானதல்ல. அவரால் திரட்டப்பட்ட பல்லாயிரக்கணக்கான கோடிகளைக் குறிவைத்து நிகழ்ந்தது என்று சொல்லக்கூடிய பக்தர்கள் இன்னும் இருக்கிறார்கள்.அதற்கேற்ப பகவான் உடலை விட்டு விலகியதுமே, பூனே ஆசிரமத்தில் பங்கு பிரிக்கப்படுவதில் மோதல் தொடங்கியது.

ஹாலிவுட் பக்தர்கள் என்று சொல்லப்படக்கூடிய மேற்கத்திய சீடர்களும், ஓஷோவின் இந்திய சீடர்களும் இரு குழுக்களாகப்

பிரிந்து ‘யாருக்கு ஓஷோ சொந்தம்?’ என்று மோதிக்கொள்ளத் தொடங்கினார்கள்.
ஹாலிவுட் பக்தர்களின் கை சற்று ஓங்கியது என்பதே உண்மை. காரணம், யாருக்கு எது சேர வேண்டும் என்று ஓஷோ எழுதி வைத்த உயில்.ஆனால் -பூனேவைச் சேர்ந்த யோகேஷ் தாக்கர் என்கிற ஓஷோவின் சீடர் (அவருடைய துறவறப் பெயர் சுவாமி பிரேம்கீத்), இத்தனை ஆண்டுகளாக ஓஷோ இண்டர்நேஷனல் ஃபவுண்டேஷனுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வருகிறார்.

ஓஷோவின் உயில் என்று உலக சமூகத்துக்கு முன்பாகக் காட்டப்படுவது பொய் என்பது அவரது வாதம்.“இந்தியாவின் ஆன்மீகப் புதையல், வெளிநாட்டுக்காரர்களால் கடத்தப்பட்டு விட்டது...” என்பது அவர் வாதம்.பம்பாய் உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்து, பகவானின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பினார். தன் சந்தேகங்களுக்கு ஆதாரமாக ஓஷோவின் மரணத்துக்கு சான்றிதழ் வழங்கிய டாக்டர் கோகுல் கோகனியின் கருத்துகளை மேற்கோள் இட்டார்.

அன்று மதியம் ஒரு மணிக்கு என்ன நடந்தது?

19 ஜனவரி 1990 மதியம் ஒரு மணிக்கு தன் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த கோகுல் கோகனி அவசர அவசரமாக பூனே ஆசிரமத்துக்கு அழைத்து வரப்பட்டார். கையோடு அவரது மருத்துவ உபகரணங்களையும், லேட்டர்பேடையும் எடுத்துவரச் சொல்லி இருந்தார்கள். ஆசிரமத்தில் இருந்தவர்களிடம், ‘யாருக்காவது உடல்நலக் குறைவா?’ என்று கேட்டார். யாரும் அவருக்கு பதில் சொல்லவில்லை.

சில நிமிடங்களுக்குப் பிறகு சுவாமி அம்ரிதோ (இயற்பெயர் ஜான் ஆண்ட்ரூ) வந்தார். அவர் கோகனியை அணைத்துக் கொண்டு, ‘பகவான் அவரது உடலை விட்டு விலகுகிறார்’ என்றார். கண்ணீர் விட்ட கோகனிக்கு ஆறுதல் சொல்லும் வகையில், ‘பகவானை நாம் வழியனுப்பும் முறை இதுவல்ல’ என்றார்.இதுதான் கோகனி சொல்லியிருந்தது.

பகவான் உடலை விட்டு விலகிக் கொண்டிருக்கிறார் என்று அம்ரிதோ சொன்னாரேயானால், அவர் ஏன் கோகனியை விட்டு பகவானைக் காப்பாற்ற முயற்சிக்கவில்லை என்பது யோகேஷ் தாக்கரின் வாதம்.கோகனியை விடுங்கள். ஆசிரமத்தில் அப்போது ஏராளமான மருத்துவர்கள் இருந்தார்கள். அவர்கள் யாரும் பகவானின் உடலை பரிசோதித்ததாக தகவல்கள் இல்லை. மேலும், ஓஷோவை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றும் முயற்சிகளும் நடக்கவில்லை.

ஐந்து மணிக்குத்தான் ஓஷோ காலமானாரா?

பகவானின் மரணத்துக்குப் பிறகு எழுப்பப்பட்ட இந்த கேள்விகளுக்கு ஓஷோ ஃபவுண்டேஷன் சார்பாக தர்க்கரீதியாக ஏற்றுக் கொள்ளும்படியான பதில்கள் தாக்கருக்கு கிடைக்கவில்லை.மாலை ஐந்து மணிக்கு ஓஷோவின் அறைக்குள் அனுமதிக்கப்பட்டார் டாக்டர் கோகனி. அப்போது ஓஷோவின் உடல் அருகே அம்ரிதோவும், ஜெயேஷும் (இயற்பெயர் மைக்கேல் ஓ பிரையன்) இருந்ததாக அவர் சொல்கிறார்.

‘இப்போதுதான் பகவான் உடலை விட்டு விலகினார். நீங்கள்தான் அதற்கு சான்று கொடுக்க வேண்டும்’ என்று அம்ரிதோ, கோகனியைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். பகவானின் பாஸ்போர்ட் வேண்டும், அவருடைய உண்மையான பெயரை இறப்புச் சான்றிதழில் குறிப்பதற்காகவும், உடலில் இருக்கும் மச்சம் உள்ளிட்ட அடையாளங்களைக் குறிப்பிடவும் அது தேவை என்று கோகனி கேட்டிருக்கிறார்.

ஓஷோவின் கையைப் பிடித்து சோதித்திருக்கிறார் கோகனி. உடல் சூடாகவும், மிருதுவாகவும் இருந்திருக்கிறது. எனவே, ஒரு மணி நேரத்துக்குள்ளாகத்
தான் அவர் காலமாகி இருக்க வேண்டும் என்கிற முடிவுக்கு வருகிறார் கோகனி.பகவான் மூச்சை விடும் வரை அந்த அறையிலேயே அம்ரிதோவும், ஜெயேஷும் ஏன் காத்திருக்க வேண்டும்? அங்கேயே அத்தனை மருத்துவர்கள் இருக்க டாக்டர் கோகனியை ஏன் குறிப்பாக இறப்புச் சான்றிதழுக்கு அழைத்தார்கள் என்பதற்கான விளக்கத்தை நிர்வாகிகள் சரியாகத் தரவில்லை என்பது தாக்கரின் குற்றச்சாட்டு.

இறப்புக்கான நிஜமான காரணம் என்ன?

டாக்டர் கோகனி உடலைப் பரிசோதித்தபோது சிறு துளி உணவு அல்லது வாந்தி பகவானின் உடையில் சிந்தியிருந்ததாகக் குறிப்பிடுகிறார். ஓஷோ உணவைச் சிந்தியோ, வாந்தியெடுத்தோ யாரும் அதுவரை கண்டதில்லை என்பதால் அது தனக்கு ஆச்சரியமாக இருந்ததாகவும் அவர் சொன்னார்.
ஓஷோ, மாரடைப்பால் மரணமடைந்ததாக சான்றிதழ் கொடுக்கும்படி அம்ரிதோவும், ஜெயேஷும் வற்புறுத்தி எழுதி வாங்கிக் கொண்டதாக டாக்டர் கோகனி, பத்திரிகைப் பேட்டிகளிலும் சொல்லியிருக்கிறார்.

ஓஷோ, வாந்தி எடுத்தாரா என்பதை கோகனி ஏன் அவர்களிடம் கேட்கவில்லை என்று தெரியவில்லை. உடற்பரிசோதனை நடப்பதைத் தவிர்க்கவே மாரடைப்பு என்று இறப்புச் சான்றிதழில் காரணம் எழுதச் சொன்னார்களா என்கிற கேள்விக்கும் விடையில்லை.
ஏன் அவசர அவசரமாக தகனம்?

ஓஷோவின் உள்வட்டத்தைச் சேர்ந்த 21 சீடர்களிடம், தன்னுடைய உடலை உடனடியாக எரித்துவிடும்படி அவரே சொன்னதாக அம்ரிதோவும், ஜெயேஷும் சொன்னார்கள். புத்தா ஹாலில் பார்வைக்கு வைக்கப்பட்ட பகவானை, குறிப்பிட்ட தூரத்தில் இருந்து தரிசிக்க மட்டுமே சீடர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். ஓஷோவின் மரணம் குறித்து யாரும், யாரிடமும் விவாதிக்க வேண்டாம் என்று உள்வட்ட சீடர்களுக்கு ஆலோசனை சொல்லப்பட்டது.

பகவான் மறைந்துவிட்டார் என்று வெளியுலகுக்கு சம்பிரதாயமான தகவல் தெரிவிக்கப்பட்டு, அதற்கு ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே அவரது உடல் எரிக்கப்பட்டது.உலகம் முழுக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்களைக் கொண்டிருந்த ஓஷோவின் உடல் அவசர அவசரமாக தகனம் செய்யப்பட்டது பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியது.

ஓஷோவின் அம்மா என்ன சொன்னார்?

பகவான் உடலை விட்டு விலகியபிறகு, அவரது அம்மாவிடம் தகவலைச் சொல்லும் பொறுப்பு, ஓஷோவின் செயலரான நீலத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அம்மாவும் ஆசிரமத்தில்தான் இருந்தார்.தகவலைச் சொன்னதுமே, ‘கொன்று விட்டார்கள்’ என்று நீலத்திடம் ஒரே வார்த்தையில் குமுறியிருக்கிறார் ஓஷோவின் அம்மா. எனினும், ‘இத்தகையசூழலில் இப்படியெல்லாம் குற்றம் சாட்டக்கூடாது’ என்று அவரை சமாதானப்படுத்தியதாக பின்னர் நீலம், ஒரு பத்திரிகைப் பேட்டியில் குறிப்பிட்டார்.

ஓஷோவின் உயில் ரகசியம்?
16 ஜூன் 1989ல், அதாவது பகவான் உடலை விட்டு விலகுவதற்கு ஆறு மாதங்கள் முன்பாக உயில் எழுதி வைத்ததாக சொல்கிறார்கள்.
ஆனால் - பகவான், இப்படியொரு உயில் எழுதி வைத்ததாக இத்தனை ஆண்டுகளாக ஆசிரமத்தில் யாரும் சொல்லவில்லை.அமெரிக்காவில் நடந்த ஓஷோ ஃபவுண்டேஷன் தொடர்பான வழக்கின் போதும் கூட இப்படியொரு உயில் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்படவில்லை. திடீரென 2013ல் ஐரோப்பிய கோர்ட் ஒன்றில் இந்த உயில் தாக்கல் செய்யப்பட்டது.

ஓஷோவின் பூனே ஆசிரமம் மட்டுமே ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலே மதிப்புள்ளது. மேலும், ஓஷோவின் சிந்தனைகளுக்கான காப்பிரைட் தொகையே சராசரியாக வருடத்துக்கு 100 கோடி ரூபாய்க்கும் மேலே இத்தனை ஆண்டுகளாக கொட்டித் தந்துகொண்டிருக்கிறது. தவிர்த்து ஐரோப்பாவில் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்கள்.

புதிய சன்னியாசிகள் இயக்கம் (சுவிட்சர்லாந்தில் பதிவு செய்யப்பட்டு இயங்குகிறது) மட்டுமே ஓஷோவின் சொத்து மற்றும் சிந்தனைகளுக்கு உரிமை கொண்டாடும் வகையில் அந்த உயில் அமைந்திருக்கிறது. அந்த இயக்கத்தின் செயல் தலைவர் சுவாமி ஆனந்த் ஜெயேஷ் என்கிற மைக்கேல் ஓ பிரையன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உயில் ஓஷோவின் மரணத்துக்குப் பிறகு தயாரிக்கப்பட்டது என்பதுதான் யோகேஷ் தாக்கரின் உறுதியான நம்பிக்கை. இதுகுறித்த கேள்விகளை அவர் எழுப்பியதிலிருந்து பூனே ஆசிரமத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டார்.இப்போது வரை பம்பாய் உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து
கொண்டுதான் இருக்கிறது. வழக்கு, கோர்ட்டில் இருப்பதால் இந்த சந்தேகங்கள் குறித்து யார் கேட்டாலும் ஆசிரம நிர்வாகிகள் பதிலளிப்பதில்லை.
உண்மை எதுவோ?பகவானுக்குத்தான் எல்லாம் தெரியும்!

ஓஷோவைக் கொன்றது யார்..?

அபய் வைத்யா என்கிற பத்திரிகையாளர் 80களின் இறுதியிலும், 90களின் தொடக்கத்திலும் பூனே ஆசிரமத்தில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்தார். ஓஷோவின் மரணம் குறித்த சந்தேகங்களை எழுப்பி, ‘Who killed Osho?’ என்கிற நூலை இவர் எழுதி 2017ம் ஆண்டு வெளியிட்டார்.
பகவானின் மரணத்துக்குப் பிறகு 27 ஆண்டுகள் கழித்து வெளியிடப்பட்ட இந்நூல், பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது. ஓஷோ, காலமானபோதும் பூனே ஆசிரமம் தொடர்பான செய்தி சேகரிப்புகளில்தான் ஈடுபட்டிருந்தார் நூலாசிரியர் அபய்வைத்யா.

இப்படியொரு நூலை எழுதி, சந்தேகங்களைக் கிளப்புவதற்கு என்ன காரணமென அவர் சில விஷயங்களைப் பட்டியலிடுகிறார்.
ஓஷோவின் முதல் செயலரான மா யோகலட்சுமி வெளிப்படையாகவே, ’பகவான் கொலை செய்யப்பட்டிருக்கலாம்’ என்று சந்தேகத்தைக் கிளப்பினார். ஓஷோவுக்கு அவர் இறுதி மரியாதை செலுத்துவதற்கு முன்பாகவே தகனம் செய்யப்பட்டு விட்டார். லட்சுமி மட்டுமல்ல, ஓஷோவுக்கு நெருக்கமாக இருந்த பலர் அப்போது மும்பையில்தான் இருந்தனர்.

அவர்கள் மரியாதை செலுத்துவதற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.ஓஷோவின் குடும்பத்தினர் பூனே ஆசிரமத்தில்தான் தங்கியிருந்தனர். அவர்கள் நீண்டகாலமாக ஓஷோவை சந்திக்கவே இல்லை. கடைசி நாட்களிலும்கூட அவர்கள் ஓஷோவை நெருங்க முடியவில்லை.

ஓஷோவின் உற்ற நண்பராகவும், அவரை கவனித்துக் கொள்பவராகவும் நீண்டகாலம் பணியாற்றியவர் மா பிரேம் நிர்வாணோ. மிகச்சரியாக ஓஷோ காலமாவதற்கு 41 நாட்களுக்கு முன்பாக மர்மமான முறையில் நிர்வாணோவும் காலமானார்.ஓஷோவின் மரணத்துக்குப் பிறகு அவருடைய ஆசிரமம், இரும்புக் கோட்டையாக மாறிவிட்டது. ஊடகங்களால் அணுகமுடியாத இடமாக ஆகிவிட்டது.

(தரிசனம் தருவார்)

யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்