ரோல் மாடல்



அமெரிக்காவின் மெயின் மாகாணத்தில் வீற்றிருக்கும் மரங்களில் ஏறியும், குப்பைகளுக்கு நடுவில் விளையாடியும் வளர்ந்தார் மொரீன் பெக். பனிரெண்டு வயதில் பாறைகளில் ஏறும் விளையாட்டு அவருக்கு அறிமுகமானது. ஆனால், மொரீனுக்கு ஒரேயொரு கை மட்டும் தான் செயல்படும். பள்ளியில் அவரின் ஆர்வத்தை எல்லோரும் உதாசீனப்படுத்த, மொரீனோ உடைந்துபோகாமல் தன் இலக்கில் மட்டுமே கவனம் செலுத்தினார்.

இங்கிலாந்துக்குச் சென்று பாறைகளில் ஏறும் பயிற்சியை மேற்கொண்ட அவர், தினமும் இடைவிடாமல் ஆறு மணி நேரம் பயிற்சியில் ஈடுபட்டார். இன்று ஒரு கையுடன் பாறையில் ஏறும் ஒரே பெண் மொரீன் பெக் தான்.

தவிர, ஊனமுற்றோருக்கான பாறை ஏறும் விளையாட்டில் இரண்டு முறை உலக சாம்பியன் மற்றும் ஐந்து முறை தேசிய சாம்பியன் என பல பட்டங்களுடன் வலம் வருகிறார். பாறை ஏறுதல் தவிர்த்து தோட்டம் மற்றும் செல்லப் பிராணிகள் வளர்ப்பில் ஆர்வமுடைய மொரீன், சாதிக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் ரோல் மாடலாகத் திகழ்கிறார்.

சக்தி