இந்தியர்கள் ஏன் பொதுவெளியில் மலம் கழிக்கிறார்கள்..?



டாய்லெட் பயன்படுத்தாமல்

‘ஸ்வாச் பாரத்’ தோல்விக்கு அரசு அல்ல, சமூகமே காரணம்!

கடந்த ஆட்சியின்போது மோடி ஆா்ப்பாட்டமாக அறிவித்த திட்டங்களில் ஒன்று ‘ஸ்வாச் பாரத்’ (swaach bharat).2014ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் முக்கியமான அம்சமாக சொல்லப்பட்டது, ‘திறந்த வெளி மலம் கழித்தல் அற்ற நாடாக இந்தியாவை மாற்றுவோம்’ என்பதே. இதை, Open Defecation Free (ODF) என்பார்கள். தியேட்டர்களில் படம் போடும் முன் ‘நல்ல வேலை கிடைச்ச அண்ணே... இன்னுமா பொது வெளியை கழிப்பிடமா பயன்படுத்தறீங்க?’ என்ற விளம்பரத்தைப் பலர் பார்த்திருப்பீர்கள்.

இந்த விளம்பரம் ஸ்வாச் பாரத்தின் அங்கம்தான். மோடியின் தேர்தல் பிரசாரத்தின்போது நாடெங்கும் பல லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டிருக்கின்றன என்று பெருமையாக சொல்லிக் கொண்டார்கள். ஓட்டும் வாங்கினார்கள். ஆனால், நடைமுறையில் இன்று அந்த கழிப்பறைகள் எல்லாம் எப்படி இருக்கின்றன? அந்தக் கழிப்பறைகளை மக்கள் பயன்படுத்துகிறார்களா? இல்லை எனில் ஏன் இல்லை?

இந்தக் கேள்விகளுக்குப் பதில் தேடிப் போனால் சில அதிர்ச்சிகரமான, அவமானகரமான உண்மைகளை நாம் கண்டடைய வேண்டியிருக்கும்.கடந்த மார்ச் மாதம் கிராமங்களுக்கான தூய்மை இந்தியா திட்டத்தின் பத்திரிகை வெளியீடு நிகழ்ந்தது.

அது, கடந்த 2018 நவம்பரில் தொடங்கி இவ்வருடம் பிப்ரவரியில் நடத்தப்பட்ட தேசிய வருடாந்திர ஊரக சுகாதாரக் கணக்கெடுப்பின்படி 93 சதவீத வீடுகளில் கழிப்பறைகள் உள்ளதாகவும், 96.4% வீடுகளில் கழிவறை வசதி இருந்தால் அதைக் கட்டாயம் பயன்படுத்துவதாகவும் சொல்கிறது. மேலும் இந்திய கிராமங்களில் தொண்ணூறு சதவீதத்துக்கு மேல் கழிவறை வசதி உள்ளவை என்றும் அவ்வறிக்கை சொல்கிறது.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள 6136 கிராமங்களின் 92,040 வீடுகளை மாதிரியாகக் கொண்டு இந்தத் தகவல் வெளியிடப்படுவதாகவும் சொல்லப்பட்டது.இந்தத் தகவல் நிஜம்தானா? இதை எந்த அளவுக்கு நம்புவது...?உலக வங்கியின் தரவுகளின் படி கடந்த 2000ம் ஆண்டில் திறந்தவெளியில் மலம் கழிப்போரின் சதவீதம் 65.97 என்று இருந்தது. 2005ல் 51.61 என்று சரிந்த இது 2010ல் 48.49% ஆக மேலும் சரிந்து 2015ல் 39.84 சதவிகிதம் என்று மாறியுள்ளது.

அதாவது, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் திறந்தவெளியில் மலம் கழிப்போர் எண்ணிகை வீழ்ந்து வருவது என்னவோ உண்மைதான்.

ஆனால், இதில் இன்னொரு சிக்கல் அடையாளம் காணப்பட்டுள்ளது.இந்த அறிக்கைகள் கழிப்பறைகள் கட்டப்பட்டதை மட்டுமே அடிப்படியாகக் கொண்டு கணக்கீடுகளைச் செய்கின்றன. ஆனால், பல கிராமங்களில் கள நிலவரங்கள் வேறு மாதிரியாக உள்ளன.

இந்தியா முழுதுமே கடந்த ஆட்சியின்போது கழிப்பறைகள் கட்டப்பட்டன. அப்போது வட மாநிலங்களில், குறிப்பாக பீகார், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் கிராம மக்கள் கிட்டத்தட்ட வலுக்கட்டாயமாகவே கழிப்பறையை பயன்படுத்த நிர்ப்பந்தப்படுத்தப்பட்டனர் என்கிறார்கள்.அதாவது, பொதுவெளியில் மலம் கழிப்பவர்களை அவமானப்படுத்துவது, மிரட்டுவது, அவர்களுக்கு ரேஷன் உள்ளிட்ட பொருட்களை வழங்காமல் இழுத்தடிப்பது என்று பலவகைகளிலும் இதைச் செய்திருக்கிறார்கள்.

ஸ்வாச் பாரத் திட்டத்தின் வெற்றியை பறைசாற்ற வேண்டும் என்றே இப்படியான அழுத்தங்கள் அந்த கிராம மக்கள் மீது கொடுக்கப்பட்டிருக்கின்றன.
சரி, அரசுதான் கழிப்பறை கட்டிக் கொடுத்திருக்கிறது. வசதியாகவும் இருக்கிறது. ஆனாலும் ஏன் மக்கள் பொதுவெளிக்கே ஓடுகிறார்கள்..?இந்தக் கேள்விக்கு பதிலாகத்தான் இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகால அசுத்தத்தைச் சொல்கிறார்கள். அதன் பெயர் சாதி.

ஆமாம்! கழிப்பறைகளை பயன்படுத்தத் தொடங்கினால் அதை சுத்தம் செய்ய வேண்டும். நல்ல சாதியில் பிறந்த, தான் அதை சுத்தம் செய்வதா என்ற வறட்டு கவுரவம். இல்லாவிடில், தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மனிதர்களைப் பயன்படுத்த வேண்டும். இதுவரை தங்கள் வீதிகளிலேயே அனுமதிக்காத அவர்களை தங்கள் வீடு வரை அனுமதிப்பதா என்ற வீறாப்பு.

இதனால்தான் பல கோடி மக்கள் கழிப்பறையையே பயன்படுத்தாமல் பொதுவெளிக்கு ஓடுகிறார்களாம். எவ்வளவு வெட்கம்..? மேற்சொன்ன இந்த நான்கு மாநிலத்தின் கிராமங்களையும் பார்த்தால் புரியும். வறுமையானவர்கள்.

அன்றாட வாழ்க்கை நடத்தவே திண்டாடுபவர்கள். ஆனால், உண்பதற்கு வழி இருக்கிறதோ இல்லையோ, ஒவ்வொருவருக்குமே சாதிவெறி மட்டும் அத்தனை உள்ளது!இந்த உண்மையைத்தான் ஸ்வாச் பாரத் நம்மிடம் மறைமுகமாகச் சொல்கிறது. நம் சமூகம் இன்னமும் கடக்க வேண்டிய தூரங்கள் அதிகம் என்பதையே இந்தப் புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன!

என்.யுவதி