பறக்கும் கார்!நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதனால் போக்குவரத்து நெருக்கடி, காற்று மாசுபாடு, விபத்து உள்ளிட்ட பல பிரச்னைகள். இந்நிலையில் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத, போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக்கொள்ளாத ஒரு வாகனம் இருந்தால் எப்படியிருக்கும்? அதுவும் மணிக்கு சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியதாக இருந்தால்..?
கேட்கவே நல்லாயிருக்கிறது அல்லவா?

நம் மைண்ட் வாய்ஸை புரிந்துகொண்ட ஏர்வேஸ் ஸ்டார்ட்- அப் நிறுவனமான ‘அலகா ஐ’ ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் பறக்கும் காரைத் தயாரித்திருக்கிறது!ஹெலிகாப்டர் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பிஎம்டபிள்யூ டிசைன் ஸ்டூடியோவில் இதை பிரத்யேகமாக வடிவமைத்திருக்கிறார்கள். ட்ரோன் வடிவில் இருக்கும் இந்தக் கார்தான் ஹைட்ரஜனில் இயங்கும் உலகின் முதல் பறக்கும் கார்.

‘ஸ்கை’ என்று பெயரிடப்பட்டுள்ள இதில் அதிகபட்சமாக ஐந்து பேர் பயணிக்கலாம். ஒவ்வொரு இருக்கையையும் தகுந்த இடைவெளி விட்டு அழகாகப் பொருத்தியிருக்கிறார்கள். ஒரு முறை டேங்க் முழுவதும் ஹைட்ரஜனை நிரப்பிவிட்டால் போதும்... 650 கிலோ மீட்டர் வரை பறக்கும்!

சுமார் 500 கிலோ எடையுள்ள இந்த காரை நான்கு மணி நேரம் தொடர்ச்சியாக பறக்கவிட்டு சோதனை செய்திருக்கின்றனர். சோதனை வெற்றியடைய, ஜெட் வேகத்தில் பிரபலமாகிவிட்டது பறக்கும் கார். ஆம்புலன்ஸ் போன்ற அவசர வசதிக்காக பயன்படுத்த நிறுவனத்தினர் திட்டமிட்டுள்ளனர். ஹைட்ரஜன் எரிபொருளால் காற்று மாசுபாடு ஏற்படாது என்பது ஹைலைட்.

அதே நேரத்தில் பறந்து செல்வதால் போக்குவரத்து நெருக்கடிக்கும் எந்த வாய்ப்பும் இல்லை. விபத்து நேர்வதற்கான வாய்ப்பும் மிக மிகக் குறைவு. விமானம் ஓட்டத் தெரிந்தவர்களால் மட்டுமே பறக்கும் காரை இயக்க முடியும். இதை அடுத்து, தானாக இயங்கும் பறக்கும் காரை அறிமுகப்படுத்தும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது ‘அலகா ஐ’!

த.சக்திவேல்