தல புராணம்-குஜிலி பஜாரும் இலக்கியமும்!



பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை சாதாரண எளிய மக்களின் வாழ்க்கை முறைகளையும், சமூக நிகழ்வுகளையும் பாடல்களாகப் பதிவு செய்த முறையே குஜிலி இலக்கியம்.இவை அன்று மெல்லிய தாளில், மலிவான அச்சில், பெரிய எழுத்துகளில் சிறுசிறு நூல்களாக அச்சடிக்கப்பட்டு விற்கப்பட்டன. பெரும்பாலும் எட்டு முதல் பதினாறு பக்கங்கள் கொண்ட நூல்களாக வெளிவந்தன.

இதை, ‘தன்னானே பாடல்கள்’ என்றும், ‘காலணா, அரையணா பாட்டுப் புத்தகங்கள்’ என்றும், ‘பெரிய எழுத்துப் புத்தகங்கள்’ என்றும், ‘தெருப் பாடல்கள்’ என்றும் பலவாறாக அழைத்தனர்.இதில் ‘குஜிலி’ என்ற சொல் மெட்ராஸில் இருந்தே உருவானது. ஒரு காலத்தில் மெட்ராஸில் குஜிலிப் பாடல்கள் சக்கைபோடு போட்டன. மெட்ராஸின் அடித்தட்டு மக்களின் இலக்கியமாக இதுவே இருந்து வந்தது.

பொதுவாக, நம் சமூகம் குஜிலி என்பதைப் பெண்களை பாலியல் ரீதியில் மோசமாகக் குறிப்பிடவே பயன்படுத்தி வருகிறது. அப்படியல்ல என்பதே உண்மை. இன்றைய சென்னையின் மெமோரியல் ஹாலை ஒட்டிச் செல்லும் சாலைக்கு ஈவினிங் பஜார் என்று ெபயர். ஒருகாலத்தில் இதுவே குஜிலி பஜார் என்று அழைக்கப்பட்டது. இன்றும் கூட குஜிலி பஜார் என அழைப்பவர்கள் உள்ளனர்.

இங்கிருந்து வெளியானதாலே இந்தப் பாட்டுப் புத்தகங்களுக்கு குஜிலி நூல்கள் எனப் பெயர் ஏற்பட்டது. இந்தப் பாடல்களில் சிலவற்றை எழுத்தாளர் ஏ.கே.ெசட்டியார், ‘தமிழ்நாட்டுப் பயணக் குறிப்புகள்’ நூலில் தொகுத்துத் தந்துள்ளார். அன்று மெட்ராஸில் ஓடிய டிராம் வண்டி பற்றிய ஓர் அலங்காரக் கும்மி பாடல் இப்படி உள்ளது.

‘‘திருமகளுலவும் சென்னை யெழும்பூர் டிராம் வண்டி சேட்டில் போர்மேனாம்அருமையுள்ள தியாகராய ஆச்சாரிஅர்ப்புத வண்டியின் புதுமையைக் கேள்’’ இதுபோல, கி.பி.1876ல் தமிழகத்தில் ஏற்பட்ட தாது வருட பஞ்சத்தின் கொடுமையை எடுத்துரைக்கும் ‘தாது வருஷத்திய பஞ்சத்தின் கும்மி’ என்னும் நூல் உணவிற்கு வழியில்லாமல் இறந்துபோன மக்களின் நிலையை விவரிக்கிறது.

அதில், பஞ்சத்தின் போது மக்கள் தானியங்கள் கிடைக்காமல் காடுகளில் கிடைத்த கிழங்குகளையும், கீரைகளையும் உண்டதைக் குறிப்பிடுகிறது.

‘‘கொட்டிக்கிழங்கு கிட்டிங்கிழங்கும் கொஞ்சமுங்கூட
அகப்படலேமட்டுப்படாதயிந்தக்
 கருப்பினில் வயிறுவளர்ப்போம் வாங்களடி
முஷ்டக்கீரையும் மின்னக்கீரையும் முருங்கைக்கீரையகப்படலேகஷ்டப்பட்டு நாமும்
 யிந்தக் கருப்பினில் காலங்கழிப்போம் வாங்கள்’’

1886ம் வருடம் பீப்பிள்ஸ் பார்க்கில் ஏற்பட்ட தீ விபத்து பற்றி ‘சென்னை பீபில்ஸ் பார்க்கின் தீக்கோள் சிந்து’ பாடல், எத்தனை பேர் இறந்தனர், அதில், பிள்ளைகள், பெண்கள், ஆண்கள் எத்தனை பேர் என்ற தகவலையும் அளிக்கிறது. இப்படியாக அன்று பல்வேறு நிகழ்வுகளும், செய்திகளும், சம்பவங்களும் பாடல் வடிவில் நூல்களாக மக்களைச் சென்றடைந்தன.  

இவை சிந்து, ஏசல், கீர்த்தனை, கும்மி, சமயம், சோதிடம், தேசியம், அம்மானை, கொலை, திருட்டு, கைது, காமம், நகைச்சுைவ, நாடகம், ஒப்பாரி எனப் பல்வேறு வகைகளில் பாடல்கள் இயற்றப்பட்டு நூல்களாக வெளியிடப்பட்டன. மெட்ராஸில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் இந்த குஜிலி நூல்கள் பரவலாகப் பரவியிருந்தன. தெருமுனைகளிலும், பேருந்து நிறுத்தங்களிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், கோயில் திருவிழாக்களிலும் பாடல்கள் பாடி இந்த நூல்கள் விற்கப்பட்டன. படிக்காத பாமர மக்கள் இந்தப் பாடல்களைக் கேட்டபடியே நகர்ந்துவிடுவர். சிலர் மட்டுமே காசுக்கு வாங்கிப் படித்தனர்.

இந்த குஜிலி இலக்கியம் பற்றி முதன்முதலாக விரிவான ஆய்வு செய்து ‘முச்சந்தி இலக்கியம்’ என்ற நூலை ‘காலச்சுவடு’ பதிப்பகத்தின் வெளியீடாகக் கொண்டு வந்தவர் பேராசிரியர் ஆ.ரா.வேங்கடாசலபதி. அதில், முதலில் குஜிலி இடப்பெயருக்கான காரணத்தை விளக்கமாக விவரித்துள்ளார்.
‘‘பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிக முக்கிய அகராதியான வின்சுலோ அகராதி, ‘குச்சிலி’ என்பதற்கு ‘An evening bazaar in a town. அந்திக்கடை’ எனப் பொருளுரைக்கிறது. இதனை அடியொற்றியே, ச.வையாபுரிப் பிள்ளையின் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதியும் ‘குஜிலி’ என்பதற்கு ‘காண்க: குஜிலிக் கடை’ எனச் சுட்டி அதற்கு ‘Evening Bazaar; அந்திக்கடை’ என்று பொருள் தருகிறது.

உண்மையில் அது சென்னை நகரின் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பூங்கா நகரில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியிலுள்ள சென்ட்ரலை ஒட்டிச் செல்லும் வால்டாக்ஸ் சாலைக்கும், கந்தசுவாமி கோயிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் சிறு தெருக்களிலும், சந்துகளிலும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக குஜராத்தி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

குஜராத்தி மக்களைத் தமிழில் குச்சரர், குச்சிலியர், குச்சரியர் என்று வழங்குவதுண்டு. இவற்றின் திரிந்த, மருவிய வடிவே ‘குஜிலி’.
குஜிலி, குஜிலிக் கடை என்று பல இடங்களில் குறிப்பிடும் ‘மதிமோச விளக்கம்’ என்ற நூல் ஓரிடத்தில் குஜராத்திப் பேட்டை என்றும் சுட்டுகிறது. இப்பகுதியில் வாழ்ந்து வந்த அல்லது 19ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் குடியேறியிருந்த குஜராத்தி மக்களைக் கொண்டு குஜிலிக் கடை என்ற இடப்பெயர் அமைந்தது என்பது இச்செய்திகளிலிருந்து ெதரிகிறது’’ என்கிறார்.

அன்று இந்த குஜிலிக் கடைத் தெரு மலிவான பொருட்களுக்குப் புகழ்பெற்று இருந்துள்ளது. மாலை நேரத்தில் மக்கள் நெருக்கடி மிகுந்து எப்போதும் பரபரப்பாக இயங்கியுள்ளது.அதுமட்டுமல்லாமல் ஜேப்படி திருடர்களும், பிக்பாக்கெட்டுகளும், முடிச்சவிழ்ப்போரும் மலிந்திருந்ததால் குஜிலிக் கடை, திருட்டு பஜார் என்றே பெயர் பெற்றிருந்தது. திருட்டுப் பட்டம் பெற்றதோடு மட்டுமல்லாமல் ஏமாற்றுக்காரர்கள் நிறைந்த இடமாகவும் குஜிலி இருந்திருக்கிறது.

இதைத் தன்னுடைய ‘முச்சந்தி இலக்கியம்’ நூலில் மேலும் விளக்குகிறார் பேராசிரியர் வேங்கடாசலபதி.‘‘‘சென்னைக் குஜிலியிலும், மூர் மார்க்கெட்டிலும் சிலர் மூக்குக் கண்ணாடி, கத்திரிக்கோல், கிலிட்டுப் பூசியிருக்கிற பொத்தான் முதலியவைகளில் ஏதாவதொன்றை வைத்துக்கொண்டு அதை அடிக்கடி துடைத்துக் கொண்டே திரிந்துகொண்டு, ஏமாந்தவர்களை ஏய்த்துவிடுவார்கள்’ என்று ‘மதிமோச விளக்கம்’ நூல் கூறுகிறது.

மேலும் பரத்தையர், டாபர் நடமாட்டமும் குஜிலியில் இருந்திருக்கிறது. இன்றுவரை சென்னையின் வழக்குத் தமிழில் பரத்தையரை குஜிலி என்று குறிப்பிடக் காண்கிறோம். இவ்வாறு முடிச்சவிழ்ப்போரும், நாணயமற்ற வணிகர்களும், நெறியற்ற முறையில் பூட்டு சாவி செய்வோரும், பரத்தையரும் உலாவும் இடமாக குஜிலி கருதப்பட்டது.

இங்குதான் 19ம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியிலிருந்து 1960கள் வரையும்கூடப் பாட்டுப் புத்தகங்கள், கதைப் பாடல்கள் போன்ற வெகுசன, நாட்டார் இலக்கியங்கள் அச்சிடப்பட்டு விநியோகமும், விற்பனையும் செய்யப்பட்டன. இதனால், இங்கிருந்து வெளியான நூல்களுக்கு குஜிலி என்ற பெயரே ஏற்பட்டுவிட்டது.

20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் எழுச்சி பெற்ற தமிழ் நடுத்தர வர்க்கம், நவீனத்துவ மாற்றங்களின் உடன் நிகழ்வாக, கலை, இலக்கியங்களை வரையறை செய்த காலத்திலே முச்சந்தி இலக்கியத்தை விலக்கி வைத்தது. இவ்வியக்கப் போக்கில் இவ்வகை இலக்கியத்திற்கு குஜிலி இலக்கியம் என்ற பெயர் இடப்பட்டது.

அத்துடன், குஜிலியின் இழித் தன்மைகள் அங்கிருந்து உற்பத்தியான இந்த இலக்கியத்தின்மீதும் ஏற்றப்பட்டன.பிறகு, நடுத்தர வர்க்கம் விரும்பத்தகாதது என்று வரையறுத்த அனைத்தையும் சுட்டும் ஓர் உருவகமாக, குறியீடாக குஜிலி அமைந்துவிட்டது. ஓர் இடப்பெயர் பண்பாட்டு உருவகமாக மாறிய கதை இது...’’ என்கிறார்.

இதனால், இவ்வகை இலக்கியத்திற்கு ஏளன உணர்வே நிறைய இருந்துள்ளது. குறிப்பாக தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், மேட்டிமையினர் போன்றோரிடம் இந்தப் பார்வை அதிகமிருந்தது. ‘‘இத்தகைய நூல்களையும், உரைகளையும் அச்சிட்டு வெளியிடும் அன்பர் பலர் வியாபாரத்திலும், பொருளீட்டுவதிலும் கருத்தைப் பெரிதும் செலுத்துகின்றாரன்றி மொழி மீதும், எழுத்துப் பிழை மீதும் கருத்தைச் செலுத்துகின்றாரில்லை.

காலஞ்சென்ற வித்துவமணிகள் எழுதிய பல உரைகள் சில குஜிலி கடைக்காரர்களிடத்தில் அகப்பட்டு தவிக்கின்றன...’’ என குஜிலி நூல்களைப் பற்றி திரு.வி.க அவருக்கேயுரிய மிகு உணர்ச்சி நடையில் சொல்வதாக நூலில் குறிப்பிடுகிறார் பேராசிரியர் வேங்கடாசலபதி.

இதேபோல, அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கமும் குஜிலி இலக்கியத்தின் மீது தவறான பார்வையே கொண்டிருந்தது. 1867ம் ஆண்டின் நூற்பதிவுச் சட்டத்தின் கீழ் கட்டாயமாகப் பதியப் பெற்று வரவு பெறப்பட்ட நூல்கள் எல்லாம் நூற்பதிவாளர் (Registrar of Books) அலுவலகத்தில் குவியலாயின.1930களில் இவ்வாறு குவிந்த நூல்களைப் பத்திரப்படுத்திப் பேணுவது நூற் பதிவாளருக்குப் பெருந்தொல்லையாக இருந்தது.

இதனால், சில குறிப்பிட்ட நூல்களை அழித்துவிடலாம் என அரசுக்கு அவர் பரிந்துரைத்தார். அதில், ‘‘பஜார் புத்தகங்களை - அதாவது பொதுவிடங்களிலும் சந்தைகளிலும் தெருக்களிலும் விற்கப்படும் மோசமான அச்சில் அமைந்த, மோசமான தாளில், மோசமான முறையில், அச்சுப் பிழைகள் மலிந்து, கீழான மொழியில் அமைந்த நூல்களையே இங்கு நான் சுட்டுகிறேன்- நாம் அழித்துவிடலாம். எந்தவொரு நூலகத்திற்கும் இவை மானக்கேடேயாகும். நல்லதங்காள், அல்லியரசாணி, கள்ளன் பாட்டு…

முதலானவற்றையே நான் குறிப்பிடுகிறேன்...’’ என்றுள்ளார்.‘‘இவ்வாறு தமிழ் நடுத்தர வர்க்க அறிவாளர்கள் முச்சந்தி இலக்கியத்தை மிகக் கீழாகக் கருதி ஏளனம் செய்தனர். இழிவுப்படுத்தினர். இப்பார்வை இன்றளவும் கூட நிலவுகிறது...’’ என்கிறார் பேராசிரியர் வேங்கடாசலபதி.  

மெட்ராஸில் குஜிலி பஜாரைத் தவிர அருகிலுள்ள மூர்மார்க்கெட், சூளை, ஜார்ஜ் டவுன் பகுதிகளில் குஜிலி நூல்கள் விற்பனையாகி உள்ளன. சூளை ஒரு முக்கிய இடமாகவே இருந்துள்ளது.

சரி, குஜிலி இலக்கியம் ஏன் வீழ்ச்சி கண்டது?
இதற்கான காரணங்களை ‘குஜிலிப் பனுவல்கள்’ நூலில் குறிப்பிடுகிறார் க.விஜயராஜ்.‘‘அன்றாட நிகழ்ச்சிகளைச் சுவையான பாடல்களாகப் பாடி விற்பனை செய்து வந்த குஜிலி நூல்களுக்கு எதிராக ‘சுதேசமித்திரன்’ போன்ற சில நாளிதழ்கள் தோன்றின. இவை தினசரி நடவடிக்கைகளைச் செய்திகளாக வெளியிட்டதால் குஜிலி இலக்கிய மரபு தேயத் தொடங்கியது. இந்நாளிதழ்கள் எளிதில் கிடைத்ததால் மக்கள் குஜிலி நூல்கள் வாங்குவதைத் தவிர்த்தனர்.

இதனால் பரபரப்பான செய்திகளையும், அன்றாட நிகழ்வுகளையும் பாடலாகப் பாடி வந்த குஜிலிப் பாட்டுப் புத்தகங்களின் தேவையானது குறைந்து போனது. இத்துடன் சினிமா, கேளிக்கை சாதனங்கள், பொழுதுபோக்கு போன்றவையும் மக்களின் பார்வையினை குஜிலி இலக்கியத்திலிருந்து பிரித்தன. தவிர, குஜிலிப் பனுவல்களை வாசகர்கள் முறையாகப் பாதுகாக்கத் தவறினர். பிரிட்டிஷ் அரசும் குஜிலி நூல்களை இழிவெனக் கருதி அழித்துவிட்டது...’’ என்கிறார் க.விஜயராஜ்.

ஆனால், பேராசிரியர் வேங்கடாசலபதி, குஜிலி இலக்கிய உற்பத்தி அருகிவிட்டாலும், முற்றிலும் அழிந்துவிடவில்லை என்கிறார். ‘‘ஒருவகையில் குஜிலிப் பாடல் புத்தகங்கள், சினிமா பாட்டுப் புத்தகங்களாக உருமாற்றம் அடைந்தன என்று சொல்லலாம். இவ்விரண்டு வகைபாட்டுப் புத்தகங்களின் விநியோக முறையிலும் பல ஒற்றுமைகள் உள்ளன...’’ என்கிறவர், சில உதாரணங்களைச் சுட்டிக்காட்டி, ‘‘இந்திய சமூகத்தில் எந்த மரபும் பூண்டோடு அழிந்துவிடுவதில்லை’’ என்கிறார்!                                        
                          

பேராச்சி கண்ணன்