குரல்... தெருக்குரல்!தமிழின் முதல்  அரசியல் /சமூக பாப் ஆல்பம்

‘‘ஒன் சைட் லவ், லவ் ஃபெயிலியர், பெண்களுக்கு கலாச்சார வகுப்பு... இதையெல்லாம் மையமா வைச்சுதான் பாட்டு எழுதணுமா..? இதெல்லாம்தான் இப்ப சமூகத்துல இருக்கிற பிரச்னைகளா..?’’ஆவேசமாக இல்லாமல் அதேநேரம் அழுத்தமாக கேட்கிறார்கள் ஹிப்ஹாப், ராப் பாடகர்களும், இசையமைப்பாளர்களும், பாடலாசிரியர்களுமான அறிவும் ஓஃப்ரோவும்.

‘‘எங்களோட ‘தெருக்குரல்’ ஆல்பத்துல ஆறு பாடல்கள் இருக்கு. அத்தனையும் வேற மாதிரி. சொல்லப்போனா தமிழ்ல இந்த ஆல்பம்தான் அரசியல், சமூகப் பிரச்னைகளை பேசற முதல் ஆல்பம்…’’ ஒருமித்த குரலில் சொல்கிறார்கள் அறிவும் ஓஃப்ரோவும்.‘‘நான் அறிவு... பிறந்தது வளர்ந்தது எல்லாம் அரக்கோணத்துல. சின்ன வயசுல இருந்தே இசை, பாடல்கள் எழுதறதுல ஆர்வம் அதிகம். கானா பாட ஆரம்பிச்சேன்.

படிச்சு வேலைக்குப் போகத்தொடங்கினேன். ஆனாலும் உள்ளுக்குள்ள இந்த நெருப்பு எரிஞ்சுகிட்டே இருந்தது. வேலையை விடாம கிடைக்கிற வாய்ப்புகளை பயன்படுத்திகிட்டு இருந்தேன்...’’ என்று சொல்லும் அறிவுக்கு, இந்த நேரத்தில்தான் மிகப்பெரிய சான்ஸ் கிடைத்திருக்கிறது.
‘‘ஆமா. இயக்குநர் பா.இரஞ்சித் மூலமா ‘கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ மேடை ஏறினேன். அவரே ‘காலா’ படத்துல வாய்ப்பு கொடுத்தார். இப்ப ‘ஜிப்ஸி’, ‘குண்டு’ உட்பட சில படங்கள்ல பாடல்கள் எழுதியிருக்கேன்; எழுதிட்டும் வர்றேன்...’’ என அறிவு முடிக்க, ஓஃப்ரோ தொடர்ந்தார்.

‘‘நான் சென்னைக்காரன். பல வருஷங்களுக்கு முன்னாடியே எங்க அப்பா ஃபேமிலி கேரளால இருந்து சென்னை வந்து செட்டிலாகிடுச்சு. நான் பிறந்து, வளர்ந்ததெல்லாம் இங்கதான். குடும்பமே இசைக் குடும்பம். ஹாரிஸ் ஜெயராஜ் சார் கிட்ட வேலை செய்திருக்கேன். ‘என்னை அறிந்தால்’ உட்பட இருபதுக்கும் மேற்பட்ட படங்கள்ல பணிபுரிஞ்சிருக்கேன்.

மொத்தத்துல இந்த சமூகம் எதிர்பார்க்கிற சாதனைகளை நாங்க ரெண்டு பேருமே சாதிச்சிருக்கோம்...’’ என ஓஃப்ரோ சொல்லிவிட்டு அறிவைப் பார்த்துச் சிரித்தார். இருவரும் தங்கள் கைகளை உயர்த்தி தட்டிக் கொண்டார்கள்!‘‘நாங்க ரெண்டு பேரும் இணைஞ்சது ‘கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’லதான்...’’ என கண்சிமிட்டிவிட்டு தொடர்ந்தார் அறிவு.

‘‘இந்தியாவுல மட்டும்தான் சினிமால என்ட்ரி ஆனதுமே அந்த இசை, பெரிய சாதனைபடைச்ச மாதிரி கொண்டாடப்படுது. ஆனா, மேற்கத்திய நாடுகள்ல அப்படியில்ல. மைக்கேல் ஜாக்சன் பெயரும் புகழும் வாங்கினது சினிமாவாலா..? ஜெனிஃபர் லோபஸ், ஷாகிரா, ஜஸ்டின் பீபர் எல்லாம் புகழ் பெற சினிமாவா காரணம்?

இல்ல! சுதந்திர இசை, பாப் பாடல்கள்! இந்த கல்ச்சர் இந்தியாவுல இன்னும் குழந்தைப் பருவத்துலதான் இருக்கு. ‘கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ல நாங்க நூற்றுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களை, எழுத்தாளர்களை, பாடலாசிரியர்களை சந்திச்சோம். இதுக்கு முன்னாடி எத்தனை சுதந்திரக் கலைஞர்கள் இருந்திருப்பாங்க..? அடையாளம் தெரியாம, மேடை கிடைக்காம, தங்கள் திறமையை நிரூபிக்க முடியாம அவங்க அப்படியே மறைஞ்சிருப்பாங்க இல்லையா..?

அப்படி இந்தத் தலைமுறையைச் சேர்ந்த இசை வல்லுனர்கள் தொலைஞ்சு போகக் கூடாதுனு முடிவெடுத்தோம். அதே மாதிரி இதுக்கு முன்னாடி இருந்த கலைஞர்கள் எதையெல்லாம் அடிப்படையா வைச்சு பாடல்கள் எழுதினாங்களோ அதையெல்லாம் தொடக் கூடாதுனு தீர்மானிச்சோம். முக்கியமா சினிமா பாடல்கள்ல இருக்கற டெம்ப்ளேட்ஸ் எங்க பாடல்கள்ல வரவே கூடாதுனு உறுதி எடுத்தோம்...’’ என அறிவு சொல்லிக் கொண்டிருந்தபோது ஓஃப்ரோ குறுக்கிட்டார்.

‘‘சினிமா பாடல்கள் எப்பவும் ஒரே டெம்ப்ளேட்தான். ஒரு நபரை புகழ்ந்து பாடணும், டூயட் பாடணும் அல்லது சோகத்துல உருகணும்.ஆனா, ராப், பாப் எல்லாம் அப்படியில்ல. அதுக்கு எந்த வட்டமும் எல்லைகளும் கிடையாது. எதைப் பத்தியும் நீங்க பாடலாம், கேள்வி கேட்கலாம்.ஆப்பிரிக்கால பாப் பாடல்கள் அரசியல் சட்டத்தையே கேள்வி கேட்குது!

அந்தமாதிரி இல்லைனாலும் எங்களைச் சுத்தி நடக்கும் பிரச்னைகளைப் பத்தியாவது நாங்க பேசணும்னு தீர்மானிச்சு பாடல்கள் எழுதறோம்.அதுக்காக சினிமா பாடல்களை நாங்க குறை சொல்றோம்னு அர்த்தமில்ல. அது எல்லைகளுக்கு உட்பட்டதுனுதான் சொல்ல வர்றோம். சினிமா பாடல்கள் மிகப்பெரிய ப்ளாட்ஃபார்ம். அதையும் அவசியம் பயன்படுத்தணும்...’’ என ஓஃப்ரோ முடிக்க, ‘தெருக்குரல்’ என்ன செய்யப்போகிறது என அறிவு பகிர்ந்தார்.

‘‘ஆறு பாடல்கள்ல தென்மாவும் ரோஷனும் ஒரு பாடல் பாடியிருக்காங்க. தென்மா சார் எங்களுக்கு சப்போர்ட்டா இருக்கார். இந்த தமிழ் ஆல்பத்துல ஓர் ஆங்கிலப் பாடலும் உண்டு! கென் ராய்சன் சார் விஷுவலா இயக்கியிருக்கார். பா.இரஞ்சித் சார் ‘கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ வழியா இந்த ஆல்பத்தை ரிலீஸ் செய்யறார். மனிதத்தைப்பத்தி இந்த ஆல்பம் பேசுது...’’ அழுத்தமாகச் சொல்கிறார்கள்.தமிழில் ஓர் இசைப்புரட்சி தொடங்கியிருக்கிறது!          
ஷாலினி நியூட்டன்