சிந்துபாத்கடல் தாண்டிச் சென்ற காதலியை விஜய் சேதுபதி மீட்டாரா ... அதுவே ‘சிந்துபாத்’.தன் குடும்பத்தினர் வாங்கிய கடனுக்காக மலேசியாவிற்குத் தோட்ட வேலைக்குச் செல்லும் அஞ்சலி. விடுமுறைக்கு ஊருக்கு வரும் அவர், ஊரில் சிறு திருட்டு செய்து சலம்பும் விஜய் சேதுபதியின் அன்பில் சிக்குகிறார்.
விடுமுறை முடிந்து ஊருக்குத் திரும்பும் அவசரத்தில் அவருக்கு தாலி கட்டுகிறார் சேதுபதி. ஆனால், அஞ்சலி திசைமாறி தாய்லாந்தின் பாலியல் தொழிலுக்குக் கடத்தப்பட, அவரை மீட்க  அயல்தேசம் புறப்படுகிறார். கடத்தல் கும்பலை இனம் கண்டு மனைவியை மீட்டெடுத்தாரா என்பது க்ளைமேக்ஸ்.

செவித்திறன் குறைந்தவராக விஜய் சேதுபதியும், மகன் சூர்யாவும் கவனம் ஈர்க்கிறார்கள். ஆரம்பக்காட்சிகளில் சேதுபதி செய்யும் அலப்பறைகள் ஒரு சுவாரஸ்யமான கதை நகர்த்தலுக்கு துணை புரிகிறது. அதன் தொடர்ச்சியில் தொய்வு தென்படுவது ஆச்சர்யம். நடிப்புத்திறன் வௌிப்பட அவசியமில்லாத கதையில், அவரை விரும்பி வந்தவர்களுக்கு கொஞ்சமாக ஏமாற்றம்தான்.

ஆரம்பத்தில் சேதுபதி தனது ஹோம் கிரவுண்டான காமெடி ஏரியாவில் அடித்து ஆடியிருக்கிறார். கமர்ஷியல் ஹீரோக்களுக்கே உரிய பில்டப்களோடு அறிமுகமாகி மொக்கை வாங்குவது, உடம்பு நோகாமல் எல்லோரையும் ஏமாற்றி திருட்டுகள் புரிவது என காட்சிக்குக் காட்சி சீனிப்பட்டாசு. பின்பகுதியில் அதிரடியில் ஆக் ஷனில் செம மாஸ் காட்டுகிறார். அப்படியிருந்தும் சேதுபதியிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது வேறு வேறு.

பளீரென பேச்சில், நடிப்பில் அஞ்சலி ஈர்க்கிறார். அதட்டலான உரத்த குரலில் எதிர்த்துப் பேசும்பொழுதெல்லாம் இன்னொரு நல்ல நடிகையைப் பெற்றுவிட்டோம் என்ற நம்பிக்கைக்கீற்று. சிறுமியைத் தேடும் விவேக் பிரசன்னா,  சேதுபதியின் வீட்டை விற்க வைக்க முயற்சி செய்யும் ஜார்ஜ் இயல்பாக கவர்கிறார்கள். ஆரம்பத்தில் தென் தமிழகத்தின் அழகும், பின் பகுதியில் தாய்லாந்து, மலேசியா, கம்போடியா எனவும் காட்சிகளில் மிரட்டல்.

ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் படத்தின் பெரிய சர்ப்ரைஸ். வேகத்திலும் ஆக்‌ஷனினும் புகுந்து ரகளை செய்கிறார். யுவன் ஷங்கரின் பின்னணி இசை அமோகம். முதல் பாதியில் டக்டக் என நகரும் திரைக்கதை அதன்பிறகு ஒரே இடத்தில் சுற்றுகிறது.

அதி பயங்கர வில்லன் வீட்டுக்கு அடிக்கடி பிக்னிக் போவது மாதிரி போகிறார் சேதுபதி. அவரும் சேதுபதியை விட்டு விட்டுப் பிடித்து விளையாட்டுக் காட்டுகிறார்.  இன்னும் கதைக்கு யோசித்திருக்கலாம். இருப்பதாகச் சொல்லப்படும் கதையிலும் லாஜிக் உறுத்தல்கள்.இன்னும் எகிறி அடித்திருந்தால் சிந்துபாத் அசத்திவிட்டான் என மனதார வாழ்த்தியிருக்கலாம்.                   

குங்குமம் விமர்சனக் குழு