சென்டிமென்ட் காட்சிகளுக்கு குட்பையா?



இன்று சினிமா வேறு நாம் வேறில்லை என்றாகிவிட்டது. கதைகள் சினிமாவாக மாறும்போது அவை இன்னும் நம்மை கவர்ந்து விடுகின்றன.
சொல்லப்போனால் கதையல்ல, கதையின் வசீகரம்! கதையைச் சொல்வதுதான் வசீகரம்! கிட்டத்தட்ட நிஜமும், கனவும் ஒன்று சேர்கிற இடத்திலேயே கதைகள் ஆரம்பிக்கின்றன. அப்படி ஆரம்பித்த இந்திய சினிமாவில், ஏன்... தமிழ் சினிமாவிலும் ஒரு கருத்தைச் சொல்லி அதை மக்களுக்கு புரிய வைக்க முடியும் என நம்பினார்கள்.

அதற்கான முயற்சி எடுத்தவர்களை தமிழ் மக்கள் கொண்டாடிய தருணங்கள் வாய்த்தன. சென்டிமென்ட்களில் மனதை உலுக்கினார்கள். உறங்கிய மனச்சாட்சிக்கு குறுக்கே வந்தார்கள். இப்போது நல்ல சினிமா வருவதற்கும் நாமேதான் தடை. ஆம். வழிவகுப்பதும், வழி அடைப்பதும் நாம்தான். சற்றே திரும்பிப்பார்த்தால், தமிழில் சென்டிமென்ட்டுக்கு விடை கொடுத்தாகி விட்டதோ எனத் தோன்றுகிறது.

காமெடி என்றால் டாஸ்மாக்கில்தான் சீன் ஓப்பன் செய்கிறார்கள். சிந்தனையாக நீங்கள் எதுவும் தந்து நாங்கள் கற்றுக்கொள்கிற பாக்கியம்கூட வேண்டாம். தமிழ்ப்படத்தில் தமிழன் வாழ்க்கையின் சாயலாவது அறிய முடிகிறதா என்ற கேள்விக்கு விடை என்ன? நம்மை கொஞ்சம் காப்பாற்றி வைத்திருக்கிற அற உணர்ச்சிகளை வெளியே காட்டுவதற்கான வழி என்ன? முதல் முதல் சினிமாவாக ‘ராஜா அரிச்சந்திரா’ என்னும் உண்மை பேசும் படத்தை எடுத்துவிட்டு, இப்போது அனைத்தையும் பொய்யாகக் காட்டிக்கொண்டு இருக்கிறோமா என்ற பயம் வருகிறது.

சென்டிமென்ட்டுகளுக்கு தமிழ் சினிமா ‘குட்பை’ சொல்லி விடை கொடுத்துவிட்டதா..? இன்னும் சமூகத்தையும், உறவுகளையும் வைத்து இயக்குகிற இயக்குநர் முத்தையாவிடம் கேட்டால் வெறுத்துப்போய் பேசுகிறார். ‘‘அண்ணே, ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுறது வேற… பந்தியில் சாப்பிடுறது வேறே. இப்ப சினிமா ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி ஆகிப்போனது உண்மை. இப்ப இருக்கிறவங்க தேவைக்கு சாப்பிடுறான். ருசிக்கு சாப்பிடறதில்லை. பசியை ஆத்த மனசார சாப்பிடுறது கிடையாது. குடல் ஒண்ணு இருக்கே, அதுக்கு மட்டும் தீனி போடுறான்.

ஒரு படமா பார்த்தால், திரும்பும்போது முழு திருப்தியோட வரணும். ஒரு செய்தி மனதில் தைக்கிற மாதிரி மறைவாகச் சொல்லியிருக்கணும். ஒருத்தன் தன் மனதுக்குள்ளே இருக்கிற, மறைச்சிருக்கிற மனச்சாட்சியைத் தட்டி விடணும். எவ்வளவு நியாயம் பேசினாலும் பசி வந்திட்டால் உட்கார்ந்து சாப்பிட ஆலாப் பறக்கிற ஆட்கள்தானே நாம?! சுத்தியிருக்கிற மனுஷங்களைக் காட்டிலும் என்ன பெரிய விஷயம் இருக்கு இங்கே! படம் பார்த்தால் சக மனுஷன் மீது அன்பு பெருகணும்ணே! இப்ப அப்படியா படம் வருது!

ட்ரெண்டிங், ரேட்டிங்ன்னு புதுப்புது வார்த்தைகளை அள்ளி விடுறாங்க. எல்லாத்திலும் சூழ்ச்சி இருக்கு. மொழி, பாரம்பரியம் எல்லாம் கண்ணுக்கு முன்னாடி பறிபோகுது. 100 வருஷத்திற்கு ரசனை எந்த அளவுக்கு உயர்ந்திருக்கணும், ஏன் கீழே போச்சு? இங்கே சினிமாவுல அப்பாவைக்கூட முண்டம்ங்கிறாங்க. அப்பாவை ‘வாடா’ன்னு காமெடியன் கூப்பிட்டா கை தட்டுறாங்க. அப்பாவை அடிக்கிறதை ‘யதார்த்தம்’னு சொல்றாங்க.

சென்டிமென்ட் இல்லை, நல்ல விஷயத்தை சொல்றது இல்லை. எதுவுமே நல்லதா சொல்ல இங்கே சான்ஸ் இல்லைண்ணே. அதிகாரத்தை காட்டி அடையாளத்தை அழிக்கிறாங்க. சென்டிமென்ட்டால் நமக்கு ஒரு புரிதல் கிடைக்குது. ஏதாவது சொல்ல முற்பட்டால் டிராமா பண்றான்னு சொல்லிடறாங்க. எச்சியை துப்பிட்டுப் போறாங்க. பயமா இருக்கு.

சினிமா எதை நோக்கி போகுதுன்னே தெரியலை. எல்லாம் இங்கே சென்டிமென்ட்தான்.  பிள்ளை பெத்துக்கிறது, வளர்றது, படிக்கிறது, ஒரு வேலைக்குப் போறது, கல்யாணம் கட்டிக்கிறது.... இதில ஆயிரம் இன்பம் துன்பம் இருக்கு. அதெல்லாம் சென்டிமென்ட் இல்லாம என்ன... அப்ப பாட்டி, அப்பத்தா கதை சொன்னாங்களே! யாராவது இப்ப கதை கேட்கிறாங்களா! உள்ளூரிலேயே ஹோம்ல அவங்களை ‘சிறை’ வைச்சிட்டோம்.
சென்டிமென்ட்ல கொஞ்சம் மூடநம்பிக்கைகளைத் தவிர்க்கணும். அவ்வளவுதான். இதுக்காக சினிமா இப்படி மாறுவது நல்லதுக்கில்லை...’’ என்கிறார் முத்தையா.

இயக்குநர் கரு.பழனியப்பனின் குரல் துலக்கமாக வேறொரு விதத்தில் வெளிப்படுகிறது. இங்கேயிருக்கிற ஆதாரத்தை கொஞ்சம் அசைத்துப் பார்க்கிறார்.
‘‘சென்டிமென்ட், தமிழ்நாட்டின் ரசிகர்களுக்கு எக்கச்சக்கமாக இருக்கு. ஆனால், அது இப்போ சினிமா எடுக்கிறவன் கிட்டே இல்லை. அவங்ககிட்டே லைஃப் கிடையாது! எடுக்கிறவனும், முதலாளியும் அப்படியே.

ஒரு பிள்ளை, அல்லது இரண்டு பிள்ளையாக வளர்ந்து வர்றாங்க. ஹாஸ்டலில் படிச்சவங்க. காலேஜ் படிக்கும்போதே கார் வாங்கிடறாங்க. இவங்களுக்கு எதுவும் தெரியாது. இங்கிலீஷ் படம் பார்த்திட்டு படம் எடுக்க வர்ற இவங்களுக்கு அதிகம் தெரிய வாய்ப்பில்லை.

ஆனால், அதையும் மீறி தமிழில் சென்டிமென்ட் இருக்கு. அதனால்தான் இந்த ஆண்டின் மாபெரும் வெற்றிப்படமா ‘விஸ்வாசம்’ நிற்குது. டெக்னாலஜி சொல்ற ‘விவேக’த்திற்கு இங்கே வேலையில்லை. மகளின் கண்ணீரைச் சொல்ற ‘விஸ்வாச‘த்தைத்தான் தமிழ் மக்கள் ஓடி ஓடிப் பார்த்தாங்க!
அதனால் சென்டிமென்ட் இங்கே எடுபடுவதில்லை எனச் சொல்வது தவறு என்பது தெளிவு.

சினிமா வியாபாரத்தில் கூட இப்ப சென்டிமென்ட் இல்லை. முன்னாடி முந்தைய படம் தோல்வி அடைஞ்சால் ஹீரோ சம்பளம் வாங்காமல் அடுத்த படம் பண்ணிக்கொடுப்பார். இப்ப என்னடான்னா அதே சம்பளம் வாங்கிட்டு அடுத்த படம் பண்றேன்னு பெருமையாகச் சொல்றாங்க.
முதல் படம் ஃபெயிலியர் பண்ணிட்டு, மறுபடியும் தோல்வி அடைய வைக்கிறதா..! வாழ்வில் மனிதாபிமானம் இல்லை. அதனால் சினிமாவிலும் இருக்காது.

யூத், சென்டிமென்ட்ஸ் பார்க்க மாட்டாங்கன்னு சொல்றாங்க. அப்புறம் எப்படி ‘விஸ்வாசம்’ ஓடுச்சு? ஆறு மாதமாக ‘கண்ணான கண்ணே...’ பாட்டை எடுக்காமல் காலர் ட்யூனாக வைச்சுக்கிட்டு திரியுறாங்க! எல்லாம் சென்டிமென்ட்தாங்க. சினிமாவில் சமூகப் பங்களிப்பு, தனிமனித பங்களிப்பு எல்லாமே இருக்கு...’’ என படபடவென பேசுகிறார் கரு.பழனியப்பன்.

சீனியர் இயக்குநர் எஸ்.பி.முத்துராமனிடமிருந்து பதில் அமைதியாக வருகிறது. ‘‘முன்னாடி இருந்த பாசம், நேசம், அன்பு எல்லாமே இப்போது நிலை குலைஞ்சு போச்சு. பெரும் குடும்பமாக இருந்தோம். சுமைகளைப் பிரிச்சுக்கிட்டோம். உறவினர்கள், நண்பர்கள் வந்து போனாங்க. பெரும் குடும்பமாக இருக்கிறது பார்க்க, குழந்தைகளை வளர்த்தெடுக்க அவ்வளவு உதவியா இருந்தது. தாத்தா, பாட்டி, சித்தப்பா, அண்ணா, தம்பின்னு பார்க்க அழகா இருக்கும்.

இப்ப புருஷன் பொண்டாட்டி சேர்ந்து இருக்கிறதையே ‘ஜாயின்ட் ஃபேமிலி‘ங்கறாங்க. கடிதத்தொடர்பு போச்சு. யாரையும் நேரே போய்ப் பார்க்கிறதில்லை.நான் பெண்களுக்காகவே ‘பெத்த மனம் பித்து’, ‘எங்கேயோ கேட்ட குரல்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’ படங்கள் எடுத்தேன்.

பிணக்குகள் சரியாகி, உறவுகள் ஒண்ணு மண்ணா ஆனாங்க. எங்கேயாவது என்னைப் பார்த்தால் பிடிச்சு வைச்சு ‘ரெம்ப நன்றிய்யா’ன்னு சொல்வாங்க.
ஆனால், இங்கே எது நல்லாயிருக்குன்னு சினிமா கெட்டுப்போச்சு, சென்டிமென்ட் இல்லைன்னு சொல்ல வர்றீங்க!  

டிவியை திறங்க. நாளும் கெட்ட செய்திகள். சின்னஞ்சிறு சிறுமிகளைக்கூட விட்டு வைக்காத பாவிகள் ஆகிட்டாங்க. எந்த நாட்டில சண்டை இல்லை. பச்சைப்புள்ளை தலையை குப்புற வைச்சிகிட்டு கடற்கரையில செத்துப்போய் கிடக்கு. என்னத்தைச் சொல்ல... எல்லாம் சரியில்லாமல் இருந்தால், சினிமாவும் சரியில்லாமல்தான் போகும். முன்னாடி ‘டப்பாங்குத்து’னு வைச்சோம். அதுக்குன்னு சில ஆர்ட்டிஸ்ட் ஆடிட்டு போவாங்க. மக்கள் அதை ஓரமா ரசிச்சிட்டு கதைக்குள் வந்திடுவாங்க.

இப்ப ஹீரோயின் அதைவிட ஆடுது. எல்லாத்தையும துண்டிச்சு, இப்ப கதையை ரெடிமேட் உணவு மாதிரி ஆக்கிட்டோம். கடந்த காலத்தைத்தான் சந்தோஷமாகத் தூக்கிட்டு திரிய வேண்டியிருக்கு...’’ எனப் பேசி சாந்தமாகிறார் எஸ்.பி.முத்துராமன்.

ஆக, தமிழ் சினிமாவின் நிலை இப்படித்தான் இருக்கிறது. இதற்கான மாற்றத்தின் அறிகுறி சிறிது தெரிந்தாலும் வரவேற்போம். யாராவது. மாற்றமாக முன்னெடுத்து வரலாம். வரட்டும், அந்த நியாயமான கோபத்திற்குக் காத்திருப்போம். கொஞ்சம் வியாபாரம், அதிக நேர்மை, உன்னதம் பற்றிய அக்கறையை இளையவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதில் தவறொன்றும் இல்லையே?

நா.கதிர்வேலன்